அம்மாவின் மௌனம்

Tokyo Tower: Mom and Me, and Sometimes Dad என்ற ஜப்பானியப் படத்தை பார்த்தேன், நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதைப் பாரமேறச்செய்துவிட்ட அற்புதமான படமிது, அம்மாவிற்கும் மகனுக்குமான உறவைப் பற்றி எவ்வளவோ படங்கள் வெளியாகியிருக்கின்றன, அம்மாவைப் பற்றி ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு உணர்ச்சி ததும்பும் பிம்பம் இருக்கிறது, இலக்கியத்திலும் அம்மாவின் அன்பும் பிரியமும் பற்றி நிறையவே எழுதப்பட்டிருக்கிறது, அநேகமாக உணர்ச்சிவசப்பட வைக்கும் பெரும்பான்மைக் கதைகள். கவிதைகள் அம்மாவின் நினைவு குறித்து எழுதப்பட்டவையே.

பால்யவயதில் எப்போது நாம் பெரிய ஆள் ஆவோம் என்று தான் மனது நாட்டம் கொண்டிருந்தது, பெரியவர்களின் உடைகள். செருப்பு. பேச்சு, பாவனை. ஒப்பனை என்று  ஏதேதோ செய்து எப்படியாவது ஒரே நாளில்  பெரியவர்களின் உலகை அடைந்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் அதிகமாக இருந்தது,

அப்படி நடக்காத போது எரிச்சலும் கசப்புமாக நாட்கள் கழிந்தன, ஆனால் வயது வளர வளர சிறுவயதிற்குத் திரும்பிப் போக முடியாதா என்ற ஏக்கமும் பால்யத்தின் ஒவ்வொரு துளியும்  எவ்வளவு தித்திப்பாக இருந்தது  என்பது போன்ற மயக்கமும் ஏற்படுகிறது  

உண்மையில் பால்யம் என்பது ஒரு கானல் தான் போலும், அது ஒரு தோற்றமயக்கம் மட்டும் தானா,

பால்யத்தைப் பற்றி பேசும் யாவரும் உண்மையில் பேச விரும்புவது, இன்று அந்த மனநிலையைக் காப்பாற்றிக் கொள்ளமுடியாமல் போனதை பற்றித் தான், அதைச் சொல்லத் தெரியாமல் ஏதேதோ சொல்கிறோம், பால்யம் என்பது ஒரு தொடுபுள்ளி போல  தொலைவில் மினுங்கி கொண்டிருக்கிறது.

பால்யவயதின் வறுமையும் நெருக்கடியும். ஏமாற்றங்களும் வாழ்வில் எவ்வளவு உயர்ந்து போனாலும் மறக்கவே முடியாதவை, அவை ஒரு துர்கனவைப் போல நமக்குள் இருந்து நாம் அறியாத தருணத்தில் பீறிடுகின்றன. 

அதே நேரம்  வீட்டில் உள்ள வசதி வாய்ப்புகளை விட தன்னைத் தனியாக உணர்வதும், தான் கண்டுகொள்ளப்படாமல் போகிறோம் என்ற ஆதங்கமும் எளிய ஆசைகள் கூட பொய்த்து போவதும் உடலோடு ஒட்டிய ஆறாத வடுக்களாக மாறிவிடுகின்றன,

பால்யத்தின் மீது குறை சொல்லாத மனிதனுமில்லை, பால்யத்தின் ருசியை கொண்டாடாத மனிதனுமில்லை, நினைவு கொள்ளுதல் என்ற செயல்பாடு தான் இன்றைய வாழ்வை அளவிடும் ஒரே கருவி, நமது சுக துக்கங்கள் யாவும் அந்த அளவுகோலால் தான் அளவிடப்படுகின்றன,

எல்லாச் சந்தோஷமான குடும்பங்களின் கதையும் ஒன்றுபோலிருக்கிறது, ஒவ்வொரு துயரமான குடும்பத்தின் வாழ்க்கையும் அதனதன் வலியோடு தனித்துவமாக இருக்கிறது என்ற டால்ஸ்டாயின் வரி தான் என்றும் உண்மையானது.

கண்ணீரின் கறைபடியாத வீடு இந்த உலகில் எங்காவது உள்ளதா என்ன.? கன்னத்தில் அறை வாங்காத அம்மா யாராவது இருக்கிறார்களா ? பெண்களின் அழுகை வலியால் உருவாவதில்லை, நினைவால்  தான் உருவாகிறது, அந்த அழுகையின் கனம் தாங்கிக் கொள்ள முடியாதது,

நீருற்று பொங்கி வழியும் தண்ணீரைத் தனக்குள்ளாகவே  சுழற்றிக் கொண்டேயிருப்பதை போல வாழ்வின் வலியை எல்லா அம்மாக்களும் தனக்குள்ளாகவே கொப்பளிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள், பிள்ளைகள் ஏமாற்றங்களைத் தான் பரிசுகளாக தருகிறார்கள் என்ற போதும் அவர்கள் முகம் சுழிப்பதேயில்லை,  விளக்கின் சுடர் தரும் வெளிச்சம் போல அம்மாவின் இருப்பு ஒளியும் கதகதப்பும் கொண்டது, அதுவும் நெருப்பு தான், ஆனால் அதனிடம் உக்கிரமில்லை, அது தன்னை ஒடுக்கிக் கொண்டிருக்கிறது.

மனிதனை முன்னிழுத்துச் செல்லும் ஒரே விசை பசி தான், அதன் ஆயிரம் கைகள் பற்றிக் கொண்டு மூச்சுத்திணறடிப்பதால் அதனை எதிர் கொள்ளமுடியாமல் மனிதன் சகல கீழ்மைகளுக்கும் ஆளாகிறான், பசியை ஆற்றுவது தான் எல்லா அம்மாக்களின் முதல்வேலை, அல்லது பசியை ஆற்றுகின்றவர்கள் அம்மாவாகி விடுகிறார்கள்.

உறங்கும் குழந்தையின் மேல் வாடைக்காற்று அடிக்கிறது என்று அதன் கனவு கலைந்து போகாமல்  போர்வையைப் போர்த்திவிடுவது தான் அம்மாவின் அன்பு என்று  ஒரு வரியை கோகல் எழுதியிருக்கிறார், அந்த அக்கறையை பிள்ளைகள் புரிந்து கொள்வதில்லை என்பது தான் நடப்புலகின் நிஜம்

இந்தப் படமும் அது போன்ற ஒரு கதையே, ஆனால் இது வழக்கமான , அம்மாவைப் பற்றிய உணர்ச்சிவசப்படும் கதையில்லை , மாறாக அம்மாவின் மௌனத்தைப் பற்றிய படம், பிள்ளைகளோடு பகிர்ந்து கொள்ளாத அம்மாவின் அந்தரங்க வலியும் மௌனமும் பற்றியதே இதன்கதை, படம் முடியும் போது அம்மா ஒளிரும் புத்தனை போல நமக்குள் மாறிவிடுகிறாள் என்பதே இதன் தனித்துவம்,

Joji Matsuoka   இயக்கிய இப்படம் Lily Franky என்ற ஜப்பானிய எழுத்தாளரின் புகழ்பெற்ற நாவலின் திரைவடிவம், 2006ல் வெளியான இந்நாவல் இருபது லட்சம் பிரதி விற்றிருக்கிறது,கடந்த பத்து ஆண்டுகளில் ஜப்பானில் அதிகம் விற்பனையான நாவல் இதுவே, லிலி பிராங்கியின் சுயசரிதை போலவே இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது,

எய்கோ என்ற வயதான தாய் புற்றுநோய் சிகிட்சைக்காக டோக்கியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறாள், அவளது மகன் மசாயா அம்மாவைக் கவனித்துக் கொள்ள மருத்துவமனையில் துணைக்கு இருக்கிறான், அவனது குரலில் கதை விவரிக்கபடுகிறது, இடைவெட்டாக கடந்த காலச் சம்பவங்களும் நிகழ்கால மருத்துவமனைச் செயல்பாடுகளும் வந்து போவதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது,

கடந்த காலத்தை நினைவுகூர்ந்தல் என்பது இலக்கியத்தின் ஆதார உத்தி, அதன்வழியே கதை பின்னோக்கி நகர்கிறது, ஒவியனான எய்கோவின் கணவன் மிதமிஞ்சிக் குடித்துவிட்டு வந்து மகனை மிரட்டுவதோடு மனைவியின் மீதே வாந்தி எடுத்துவிடுகிறான், தொடர்ந்து கணவனின் மோசமான நடத்தைகளைத் தாங்கி கொள்ள முடியாத எய்கோ, ஐந்து வயது மகனை அழைத்துக் கொண்டு டோக்கியோவை விட்டுத் தனது சொந்த ஊரான சிகுகோ என்ற சிறிய நகருக்குப் பயணமாகிறாள், இது 1960களில் நடக்கிறது

சிகுகோ சுரங்கத் தொழில்சார்ந்த நகரம், அங்கே எய்கோவின் அம்மா தள்ளுவண்டியில் காய்கறிகள் மற்றும் மீன்விற்பவள். அவளைச் சார்ந்து கொண்டு தன் மகனை வளர்க்க முயற்சிக்கிறாள் எய்கோ,

அப்பா இல்லாத சிறுவனாக, வறுமையான சூழலில் மசாயா, சிறிய, அழுக்கான நகரில் வசிக்கிறான், அவனது பால்யம் முழுவதும் தனிமையும் ஏமாற்றங்களுமே நிரம்பியிருக்கின்றன, அம்மா மட்டும் அவன் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறாள், அவள் சமையல் மற்றும் சேவைப்பணிகள் செய்து கடுமையாக உழைத்து மகனை நகருக்குப் படிக்க அனுப்பி வைக்கிறாள், அவனும் ஒவியம் படிப்பதாகச் சொல்லி அம்மா உழைத்துச் சம்பாதித்து அனுப்பிய பணத்தை குடித்து, புகைத்து, அழகான சுகப்பெண்களுடன் கூடிச் செலவிடுகிறான், படிப்பை விடவும் கேளிக்கைகளிலே மசாயாவின் மனது அலைபாய்கிறது,

அம்மா மகனுக்காக உழைத்து உழைத்து பணம் அனுப்பி கொண்டேயிருக்கிறாள், அவனோ படிக்காமல் நகரில் சூதாடிக் கடனாளியாக அலைகிறான், ஒவியம் மட்டுமே அவனது ஒரே ஆர்வமாக இருக்கிறது, அதைக் கொண்டு கிடைக்கும் சொற்ப வேலைகள செய்து சிறுசம்பாத்தியம் பெற்றுக் கொண்டு வாழ்கிறான்,

ஊருக்குப் போய் அம்மாவைப் பார்க்க கூட அவனுக்கு விருப்பமில்லை, ஒற்றை அறையில் படுத்தபடியே தனது இயலாமையை நினைத்து சுயவருத்தம் கொள்கிறான் மசாயா சிறுநகரில் வாழும் அம்மா அவனை எதற்காகவும் குற்றம் சொல்வதேயில்லை, அவன் பல நேரங்களில் அம்மாவின் பணத்தை இப்படி ஊதாரியாகச் செலவு செய்கிறோமே என்று குற்றவுணர்ச்சி கொள்கிறான், ஆனாலும் நகரவாழ்க்கையின் கவர்ச்சி அவனை விடுவதாகயில்லை,

ஒவியப் படிப்பை முடிக்காமல் கிடைத்த வேலைகளை செய்து சம்பாதிக்கும் மகன் ஒரு நாள் அம்மாவிற்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்து அம்மாவைத் தன்னோடு சேர்ந்து வாழும்படியாக டோக்கியோவிற்கு அழைக்கிறான்,

வயதான அம்மா மறுபடி டோக்கியோ வந்து சேர்கிறாள், மகனோடு தங்குகிறான், மகனின் காதலியை நேசிக்கிறாள், மகனின் நண்பர்களுக்கு விதவிதமாக உணவு தயாரித்துத் தருகிறாள், மசாயா வாழ்க்கையில் எதையும் பெரிதாகச் சாதிக்கவில்லை ஆனாலும் அவன் மீதான அம்மாவின் அன்பு குறையவேயில்லை, மகன் இதை உணர்ந்து தன்னைத் திருத்திக் கொள்ள முயற்சிக்கிறான், ஒவியம் எழுத்து என இரண்டு துறைகளிலும் முன்னேறி ஒரு எழுத்தாளனாக வெற்றியடைகிறான், அம்மா அதற்காகப் பெருமைப்படுகிறாள்,

நோய் அம்மாவை முடக்குகிறது, மருத்துவமனையில் அம்மா அவதிப்படுகிறாள், மிச்சமிருக்கும் நாட்களில் அம்மாவை முடிந்த அளவு கதகதப்பாக வைத்துக் கொள்ள மகன் போராடுகிறான், அம்மா தான் இறந்து போக இருப்பதை மனதளவில் ஏற்றுக் கொண்டு மகனுக்காக ஒரு பரிசு தருகிறாள்,   இதை தன் இறப்பின் பிறகு பிரித்து பார் என்கிறாள் , அம்மாவின் மரணம் மகனை நிலைகுலையச் செய்கிறது, மகன் அந்த வேதனையின் உச்சத்தில் அம்மாவின் பல ஆண்டுகால மௌனத்தினை முழுமையாக உணர்ந்து கொள்கிறான், அம்மாவின் உன்னத நினைவுகளோடு படம் நிறைவுறுகிறது

கதையை விட காட்சிகளாக விரியும் சில தருணங்கள் மறக்கவே முடியாதவை, குறிப்பாக எய்கோ முதன்முறையாக சிகுகோவிற்கு மசாயாவை ரயில்வே தண்டவாளத்தின் வழியே அழைத்து வரும் காட்சி, அதில் இருவருமே குழந்தைகள் போலிருக்கிறார்கள். வியப்பும் தயக்கமும் புதிய சூழலின் அந்நியமுமாக சிறுவன் செல்லும் காட்சியும் அதன் பின்ணணி இசையும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது

படத்தில் இளவயது எய்கோவாகவும் முதிய எய்கோவாகவும் , Kirin Kiki, Uchida Yayako என்ற இரண்டு நடிகைகள் நடித்திருக்கிறார்கள், அவர்கள் நிஜவாழ்வில் தாயும் மகளுமே ஆவார் ,

எய்கோ கணவனைப் பிரிந்த நாளில் இருந்து தனது சொந்த விருப்பங்களை விலக்கி விடுகிறாள், வேலை, வேலை என்று ஒய்வில்லாமல் தன் மகனுக்காக உழைத்துக் கொண்டேயிருக்கிறாள், படம் முழுவதும் எய்கோ அதிகம் பேசுவதேயில்லை, அவளது மௌனத்தை மகன் உணரும் தருணங்கள் மிக அழகானவை,

குறிப்பாக சிறுவயதில் வீட்டைப் பிரிந்து பயணம் செய்து படிக்க போகின்ற மசாயா ரயிலில் அம்மாவின் கடிதம் ஒன்றைப் படிக்கும் காட்சி. கைக்காசை செலவு செய்துவிட்டு அம்மாவிடம் தயங்கித் தயங்கி போனில் பணம் கேட்கும் போது அம்மா மறுப்பின்றி அனுப்பி வைப்பதாக சொல்லும் போது ஏற்படும் தலைகுனிவுக் காட்சி, அம்மா போனில் உணர்ச்சி வசமாகப் பேசும் போது மசாயா யாரோ ஒரு பெண்ணோடு படுக்கையில் புரண்டபடியே குற்றவுணர்ச்சியோடு அம்மாவிடம் உரையாடுவது. மருத்துவமனையில் அம்மா சிகைத்திருத்தம் செய்து கொள்வது, மரணத்தின் பிறகு அம்மாவின் நாட்குறிப்பை மசாயா வாசிப்பது என்று மனம் நழுவும் காட்சிகள் நிறைய உள்ளன

டோக்கியோ நகருக்கு வரும் அம்மா ஒரு சாலையைக் கடக்கும் போது மசாயாவின்  கையை பிடித்து கொள்கிறாள், மகனின் மனக்குரல் சொல்கிறது, நீண்ட நாட்களுக்கு பிறகு அம்மாவின் கைகளைப் பிடித்திருக்கிறேன், இது ஒரு அபூர்வமான தருணம் என்று,

பிள்ளைகள் வளர வளர தாயின் கையிலிருந்து விடுபட்டுத் தூரமாறிவிடுகிறார்கள், சொற்கள் தான் உறவை நெருக்கமாக விடமால் தடுக்கின்றன, ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வதே போதும் என்று நினைக்கிறோம், சொல் தீண்ட முடியாத நெருக்கம் எப்போதுமே தேவையானதாக இருக்கிறது

அம்மா நகரில் உள்ள மகனின் புதிய வீட்டிற்கு வந்த போது  இன்னும் பல ஆண்டுகாலம் நீ உயிரோடு இருப்பாய் கவலைப்படாதே அம்மா என்கிறான் மிசாயோ, அவ்வளவு காலம் என்னைச் சரியாகப் பராமரிக்கும் கஷ்டத்தை உனக்கு கொடுக்கப் போகிறேனா என்று கேட்கிறாள் அம்மா,

நகரவாழ்விலும் அம்மா இயல்பு மாறாமலிருக்கிறாள், மகனை நேசிப்பது போலவே மகன் காதலிக்கும் பெண்ணை, அவனது நண்பர்களை நேசிக்கிறாள், அவளுக்கு வாய்விட்டுப் பேசத்தெரியாது, ஆகவே தனது சந்தோஷத்தை அவள் விதவிதமான உணவாக சமைத்து தன் மகனுக்கும் நண்பர்களுக்கும் தருகிறாள், அவர்கள் சேர்ந்து உண்பதை மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கிறாள்

படம் அம்மா மகன் உறவின் வழியே காலமாற்றத்தையும் சமூகத்தில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தையும் கூடவே படம் விவரிக்கிறது, மசாயாவின் காதலியும் அவனது அம்மாவும் மாறுபட்ட காலத்தின் பிரதிநிதிகளாகவே இருக்கிறார்கள், கூடவே நகர்மயமாதல். குடியால் அழிந்த குடும்பங்கள். பிழைப்பிற்காக மேற்கொள்ளப்படும் போலித்தனங்கள் யாவும் படத்தில் சித்தரிக்கப்படுகின்றன

குடிகாராகவே வாழ்ந்து தோற்றுப்போன அப்பாவின் இயல்பை மசாயா ஒரு நாள் உணர்ந்து கொள்கிறான், தன் வாழ்நாளில் எதற்கும் கலங்காத அப்பா எய்கோவின் மரணத்தில் கண்ணீர் விடும் காட்சியும் அவரது முடிக்கப்படாத புத்தரின் ஒவியமும் மனதிலே நிற்கின்ற்ன, அந்த புத்த ஒவியத்தின் மிச்சம் போலவே அம்மா இருக்கிறாள்

திருமண வாழ்க்கை சரியாக அமையாத  ஒரு பெண்ணின் வாழ்வில் எவ்வளவு சிரமங்கள். போராட்டங்கள் நடந்து விடுகின்றன, அவள் அவமானத்திலும் புறக்கணிப்பிலுமே வாழ்கிறாள், அவளது ஒரே பற்றுக்கோல் பிள்ளை மட்டுமே, அவனை உருவாக்குவது ஒன்றே அவளது வாழ்வின் லட்சியமாகிவிடுகிறது, படத்தில் தனது புற்றுநோயைக் கூட அம்மா சிறிய தொந்தரவு என்று தான்  சொல்கிறாள்

மசாயா அம்மாவைப் புரிந்து கொள்கிறான், ஆனால் அவன் அம்மா விரும்பிய  கௌரவமான வேலையை அடைய முடியவில்லை, அம்மாவின் ஆசைகளை நிர்மூலம் செய்த குற்றவுணர்ச்சி அவனை வாட்டுகிறது, அப்பாவைப் போலவே தானும் நடந்து கொண்டுவிட்டதாக உணர்கிறான்,  அம்மா தன் கவலைகளை ஒரு போதும் நேரடியாக வெளிப்படுத்துவதேயில்லை, அவள் சுவையான கனிகளும் மணமுள்ள பூக்களும் கொண்டாடப்படும் போது அதற்குக் காரணமாக உள்ள மரத்தின் வேர் எப்படி எந்த வெகுமதியும் அடையாளமும் அற்று மண்ணிற்குள் புதைந்து போயிருக்கிறதோ அப்படியே தன்னை உணர்கிறாள்

நாடகத்தனமேயில்லாமல் காட்சிகள் இயல்பாகச் செல்கின்றன, முப்பது ஆண்டுகளுக்கு மேலாக  ஒரு கதாபாத்திரத்தின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்து போலவே இருக்கிறது, இறுதிக் காட்சியில் அம்மாவின் நினைவு நகரின் மீது ஒளிர்கிறது, அதை காண்கையில்  துக்கமேறித் தொண்டை வலிக்கிறது,

எளிய. நேரடியான வாழ்வியல் நிகழ்வுகளின் கதை. அதிக ஒப்பனையில்லாத இயல்பான கதாபாத்திரங்கள். நாடகத்தனமில்லாத திரைக்கதை. மிகையற்ற நடிப்பு. தேர்ந்த இசையும் ஒளிப்பதிவும் என்று இப்படம் ஒரு முழுமையான அனுபவத்தைத் தருகிறது, ஜப்பானிய அகாதமியின் ஐந்து முக்கிய விருதுகளை வென்றதோடு உலகத் திரைப்பட விழாக்களில் பத்திற்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறது

வழக்கொழிந்து போனவை என்று நாம் ஒதுக்கி வைத்திருக்கும் அம்மா, மகன் உறவு பற்றிய திரைப்படவகையை இவ்வளவு ஈரத்துடன் ஒரு படமாக உருவாக்க முடிந்திருப்பது பெரிய சாதனையே.

***

 

0Shares
0