அருவிக்காக காத்திருப்பது


இந்த நகரமே அருவிக்காக காத்திருக்கிறது. கடந்த சில நாட்களாகவே குற்றாலத்திலிருக்கிறேன்.

அடர்ந்து மணக்கும் பகல் வெளிச்சம்.. அருவி வழியும் பாறையில் சப்தமில்லாமல் வழிந்து போகிறது வெயில். பொங்கி சீறும் அருவியை காண்பது போலவே அருவி இல்லாத வெறுமையை கடந்து செல்லும் கண்கள் ஏக்கத்துடன் பார்த்து போகின்றன.

அருவி உருவாக்கிய ஊர் என்பது எவ்வளவு பெரிய விசித்திரம். நகரின் வீதிகள், வீடுகள் சாலைகள் மரங்கள் மலை உள்ளிட்ட அத்தனையும் அருவியோட்டத்தால் உருக் கொண்டவை. இந்த நகரின் நினைவில் அருவியோசை தீராமல் படிந்திருக்கிறது. ஒரு ஆண்டில் எத்தனை விதவிதமான மனிதர்கள் வந்து போகிறார்கள். அருவி எவரிடமும் பேதம் காட்டுவதில்லை. அருவியின் முன்னால் யாவரது வயதும் கரைந்து போய்விடுகிறது 

அருவியின் பெருச்சப்தம் கேட்டு வளர்ந்த விருட்சங்கள் இன்று மௌனமாக காத்திருக்கின்றன. சீசன் இல்லாத காலம் என்றார்கள். 

பகலிரவாக தண்ணீர் வழிந்தோடியபடி இருக்கும் அருவிக்கரை சாலையில் ஆட்களே இல்லை. அடைத்து சாத்தபட்ட கடைகள். காலியான வீடுகள். படுதா தொங்கும் பழக்கடைகள். வெறித்த பாறைகள். காலி செய்யப்பட்டுவிட்ட நகரம் ஒன்றின் மிச்சம் போலவே இருக்கிறது. ஒரேயொரு குரங்கு கடந்த கால நினைவுகளின் மிச்சம் போல சாலையை வெறித்தபடியே பார்த்து கொண்டிருக்கிறது. அதன் இயல்பு மீறிய நிதானம் கவலை கொள்ள வைக்கிறது

குரங்கின் நினைவில் பெருகியோடும் அருவியும் எண்ணிக்கையற்ற உணவுபண்டங்களும் ஒளிரக்கூடும். எங்கிருந்தோ ஒரு பறவை குரல் தருகிறது. அந்த குரல் ஏக்கமானதாகவே இருக்கிறது. இவ்வளவு உலர்ந்த தரையை வேறு எங்கும் நான் கண்டதில்லை. 

உணவகங்கள் மூடப்பட்டிருக்கின்றன. விடுதிகளின் காலி அறைகள் உறைந்து ஒன்று போலிருக்கின்றன. விளையாட்டு பூங்காங்களில் எவருமேயில்லை. பெரிய நிலக்காட்சி ஒவியம் ஒன்றின் உள்ளே புகுந்துவிட்டது போல தனிமையை சந்திக்கிறேன். கடந்து செல்லும் வாகனங்களின் சப்தம் மட்டுமே இது நிஜம் என்று நம்ப வைக்கிறது. அதுவும் இல்லாமல் போயிருந்தால் கனவில் கண்டு கொண்டிருக்கிறேன் என்றே நினைத்திருப்பேன். வளைந்த சாலைகள் தனிமையை முணுமுணுக்கிறது.

ஒரேயொரு குருவி மட்டும்வெயிலை பார்த்து கத்திக் கொண்டிருக்கிறது.  

கோவிலில் கூட்டமேயில்லை. தாயார் செண்பக குழல்வாய் மொழி அம்மை. அந்த பெயர் மயக்க கூடியது. சாரலில் நனைந்து குளிர்ச்சி கொண்ட கண்கள். கோவில் தூண்களில் லகூட அருவியின் ஒசை ஒளிந்திருக்கும். பிரகாரத்தில் யாருமில்லை. ஒற்றை வெளிச்சம் உள்ளே சுடர்விடுகிறது. பண்டாரங்கள், பக்தர்கள், ஈர வேஷ்டி சரசரக்க கடந்து செல்லும் ஆட்கள், நீர் சொட்டும் கூந்தலுடன் தரிசனம் செய்யும் பெண்கள் எவருமில்லை. எல்லாமும் ஒரு கைவீச்சில் மறைந்து போன மாயம் போலிருக்கிறது. யாவும் திரும்ப வரக்கூடும்.

மேஜிக் செய்பவனின் விரல்கள் அசைந்து பொருட்கள் ஆகாசத்திலிருந்து முளைப்பது போல அருவி இந்த நகரை மீண்டும் உயிர்துடிப்போடு இயங்க வைக்கும். நீண்ட உறக்கம் கலைத்து அதை செயல் கொள்ள வைக்கும். யார் யார் கனவிலோ புகுந்து தன்னை தேடி வரும்படி அழைக்கும்.

அருவி ஒரு மாபெரும் சிரிப்பு. அதன் விரிந்த புன்னகையை போல உலகில் வசீகரம் வேறு எதுவுமில்லை.

சாலையோரம் உள்ள மரம் ஒன்றில் பலாக்காய்கள் காய்த்து தொங்குகின்றன. பழுத்து உதிர்ந்த இலைகளை காற்று புரட்டுகிறது. வானில் மழை மேகங்கள் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கின்றன.மழைக்காக காத்திருக்கிறது நகரம்.

அருவி இல்லாத பெரும்நிசப்தம் என்னவோ செய்கிறது.  

முன்னெப்போதோ ஒரு காலத்தில் இந்த ஊர் அடர்ந்த காடாக இருந்திருக்க கூடும். இங்கே யானைகள் நடந்தலைந்திருக்கும். வனவேடர்கள் கண்ணி வைத்து காத்திருந்திருப்பார்கள். காட்டுபூனையும் மிலாவும் முயல்களும் மானும் வாழ்ந்து மகிழ்ந்த இடமாக இருக்கும். இன்று அதன் அடையாளங்கே இல்லை

மெல்ல நடந்து சித்திர சபைக்கு சென்றேன். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத ஒவியங்கள் அவை. குற்றாலத்தில் அவசியம் காண வேண்டிய ஒன்று. ஐந்தருவி செல்லும் பாதையில் உள்ளது. சிவனின் முக்கிய சபைகளில் ஒன்று. ரதம் ஒன்று தகர கொட்டகையினுள் நிற்கிறது. நெல்லிமரத்தின் நிழலில் ஒரு கோழி எதையோ கிளறிக் கொண்டிருக்கிறது. செண்பக மலர்களை காணவில்லை. முன்பு பார்த்த நிறத்தை மனது நினைத்து கொள்கிறது.

அறைக்கு திரும்பி கணிப்பொறியில் இருந்த குற்றால குறவஞ்சி பாடல்களை தேடி எடுத்து வாசிக்க துவங்கினேன்.

வசந்தவல்லி தோழிகளுடன் பந்தாடுகிறாள்.

செங்கையில் வண்டு கலின்கலினென்று செயஞ்செயம்

என்றாட இடை சங்கதெமன்று சிலம்பு புலம்பொடு தண்டை

கலந்தாட இரு கொங்கை கொடும்பகை வென்றனமென்று குழைந்தது

குழைந்தாட மலர் பைங்கொடி நங்கை வசந்த வசுந்தரிபந்து பயின்றாளே

என்ற பாடலை வாசிக்க வாசிக்க நாவில் தேன் தடவியது போன்ற ருசி மிகுகிறது.

குற்றாலக்குறவஞ்சியை யாராது இசை அமைத்து பாடி தேர்ந்த குறுந்தகடாக வெளியிடலாம். அவ்வளவு அற்புதமான இசைத்தன்மையும் சிருங்காரமும் உள்ளது. படிக்க படிக்க தித்திக்கிறது.

சிங்கனும் சிங்கியும் உற்சாக மிகுதியில் ஆடிப்பாடுகிறார்கள். நடனமாடுகிறார்கள். வசந்தவல்லி தோழிகளுடன் பந்தாடுகிறாள். புராதன குற்றாலம் ஒன்று கண்விழித்து கொள்கிறது. சிங்கன் சிங்கியின் காதல் வரிகள் மனதில் ரீங்காரமிடுகின்றன. வானரங்கள் கனிகளை பாதி தின்று வீசுகின்றன. மலைத்தேனின் ருசி நாவில் படிகிறது.

குற்றாலம் எத்தனை வியப்பான நகரம் என்று கண்ணில் படும் ஒவ்வொரு காட்சியும் சொல்லிக் கொண்டேயிருக்கிறது

ஆகாசத்தின் அடிவயிற்றில் மழை மேகங்கள் ஒளிந்திருக்கின்றன. இன்னும் சில நாட்களில் மழை பொழிய கூடும் என்கிறார்கள். மழை பெய்தால் நகரம் குளுமை கொண்டுவிடும். சாரல்காற்றில் நனைந்தபடியே வீதிகளில் அலைவதன் ஆனந்தம் இப்போதே ஆசையை தூண்டுகிறது. 

நானும் அருவிக்காக காத்திருக்கிறேன்.


0Shares
0