The Birdcatcher’s Son திரைப்படம் 2019ல் வெளியானது. 18ம் நூற்றாண்டில் ஃபாரோ தீவில் நடக்கும் கதையிது. இந்தத் தீவின் சட்டப்படி ஆண் வாரிசு இல்லாதவர் தங்கள் குத்தகை நிலம் மற்றும் வீட்டிற்கு உரிமை கொண்டாட முடியாது பறவைகளைப் பிடித்து விற்கும் எஸ்மர் குடியிருக்கும் வீடு மற்றும் நிலத்தை அதன் உரிமையாளர் காலி செய்யச் சொல்கிறார்.
அவனோ தன் மனைவி கர்ப்பிணியாக இருக்கிறாள். இந்த முறை நிச்சயம் தனக்கு ஆண் பிள்ளை பிறக்கும் ஆகவே நிலத்தின் குத்தகை அடுத்த 36 ஆண்டுகள் நீடிக்கப்பட வேண்டும் என்கிறான். அது நடக்காத விஷயம். உன்னுடைய மனைவி பெண்பிள்ளைகளைத் தான் இதுவரை பெற்றுவந்திருக்கிறாள் உனக்கு ஆண்வாரிசு பிறக்காது என்கிறான் நில உரிமையாளன்.
ஆனால் எஸ்மர் ஓராண்டிற்குள் தனக்கு ஆண்பிள்ளை பிறக்காவிட்டால் தான் நிலத்தை விட்டுத் தருவதாகச் சவால் விடுகிறான்
இந்த நிலையில் எஸ்மரின் மனைவி ஜோஹன்னா பெண்பிள்ளையைப் பெறுகிறாள். இது எஸ்மரை ஏமாற்றம் அடையச் செய்கிறது. நிலம் தன் கையை விட்டுப் போய்விடாமலிருக்க என்ன செய்வது என்று குழப்பமடைகிறான்.
அந்தத் தீவில் மதுவிடுதி நடத்தி வரும் லிவியா தான் மருத்துவ நூல் ஒன்றினை படித்துள்ளதாகச் சொல்லி மகிழ்ச்சியில்லாத தம்பதிகளுக்கு ஆண் அல்லது பெண்பிள்ளைகள் மட்டுமே பிறக்கும். அவர்கள் விரும்பும் குழந்தை பிறக்காது என்கிறாள். இதற்கு என்ன தீர்வு எனக்கேட்க அவள் எஸ்மரோ அல்லது ஜோஹன்னாவோ வேறு ஒருவர் வழி குழந்தை பெற்றுக் கொள்வது தான் என்கிறாள்.
இந்த ஆலோசனையை எஸ்மரால் ஏற்க முடியவில்லை. அவனுக்கு வேறு பெண் வழியே குழந்தை பெற விருப்பமில்லை. ஆகவே ஜோஹன்னா ஒப்புதலுடன் வேறு ஒருவரை அவளுடன் உறவு கொள்ளச் செய்து குழந்தை பிறக்க முடிவு செய்கிறான்
இதற்காக லிவியாவின் காதலனும் கப்பல் தலைவனுமான அர்மண்டைத் தேர்வு செய்கிறார்கள். அவன் வழியே ஜோஹன்னா கர்ப்பம் அடைகிறாள். ஆண் குழந்தை பிறக்கிறது.
எஸ்மர் நினைத்தது போல நிலம் அவன் வசமாகுகிறது. அந்தப் பையனை எஸ்மர் தனது மகன் போலவே வளர்க்கிறான். இந்த உண்மை உலகம் அறியாமல் புதைத்து வைக்கப்படுகிறது. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு தீவிற்குத் திரும்பி வரும் கேப்டன் தனது மகனைக் காண விரும்புகிறான். இது எஸ்மர் குடும்பத்தை நிலை குலையச் செய்கிறது.
மகாபாரதக் கதையை நினைவுபடுத்தும் இந்த ஃபாரோ தீவின் நாட்டார் கதையை மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள். உயரமான பாறைகளில் ஏறி எஸ்மர் பறவைகளைப் பிடிப்பது. அதை விற்பனைக்காகத் தள்ளுவண்டியில் கொண்டு செல்வது. தீவின் மதுவிடுதி. லிவியாவின் காதல் வாழ்க்கை. தீவில் நடைபெறும் படகுப்போட்டி. கேப்டன் திரும்பி வந்து பையனைச் சந்திப்பது என அழகான காட்சிகள்.
பிடிபட்ட பறவையைப் போலவே ஜோஹன்னா நடந்து கொள்கிறாள். தனது தோழி லிவியா சொன்ன ஆலோசனையை அவளே எஸ்மரிடம் தெரிவிக்காமல் நேரடியாகக் கேட்டுவரும்படி அனுப்பிவைக்கிறாள்.
எஸ்மர் லிவியா தேடிச் செல்லும் போது அவள் தன் காதலனுடன் சந்தோஷமாக இருப்பதைக் காணுகிறான். அதன்பிறகே அவள் மருத்துவ நூலைப் புரட்டி உண்மையை எடுத்துச் சொல்கிறாள். எஸ்மருக்கு வேறு வழியில்லை. இன்னொருவன் தன் மனைவியோடு உறவு கொள்வதை ஏற்க முடியாமல் அவன் போதையில் வீடு திரும்பும் போது புலம்பிக் கொண்டே வருகிறான். அவனுக்கு விருப்பமில்லை என்றால் வீட்டையும் நிலத்தையும் காலி செய்து ஒப்படைத்துவிடுவோம் என்கிறாள் ஜோஹன்னா, ஆனால் அதை எஸ்மரால் ஏற்க முடியவில்லை.
கேப்டன் வழியாகப் பிறந்த பையனைத் தனது சொந்த மகன் போலவே எஸ்மர் நடத்துகிறான். அவனைக் கேப்டனுடன் அனுப்பிவைக்க அவனுக்கு மனமில்லை.
நிலத்தின் மீதான உரிமையை இழக்கவிரும்பாத எஸ்மர் மனைவியின் மீதான உரிமையை இழக்கிறான். மகாபாரத காலம் தொட்டு இன்று வரை தொடரும் பிரச்சனையது. ‘என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா பொன்னகரம்! என்று புதுமைபித்தன் தனது கதையில் சொல்கிறார். இந்த வரிகள் இக்கதைக்கும் பொருந்தக்கூடியதே.
ஜோஹன்னா படம் முழுவதும் எஸ்மரை சந்தோஷப்படுத்துவதை மட்டுமே வாழ்க்கையாக நினைக்கிறாள். இந்தப் பிரச்சனையில் உண்மையாக மாட்டிக் கொள்வது அந்தப் பையன் மட்டுமே. கதை அவனைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்தால் முற்றிலும் புதிய அனுபவத்தை உருவாக்கியிருக்கும்.
நில உரிமையாளர் ஜோஹன்னாவை அடைய வேண்டும் என்று ஆசை கொண்டவர். அதற்காக எதையும் செய்யத் தயராக இருக்கிறார். அந்த நினைப்பை வெல்ல வேண்டும் என்பதற்காகவே ஜோஹன்னா எதையும் செய்யத் தயாராக இருக்கிறாள்.
லிவியா தான் கதையின் திறவுகோல். அவள் இந்த ஆலோசனையைச் சொல்லாமல் போயிருந்தால் எஸ்மரின் வாழ்க்கை வேறாக இருந்திருக்கும். சிறிய நிகழ்வுகள் தான் பெரிய திருப்பங்களை ஏற்படுத்துகின்றன
•••