டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, ஆன்டன் செகாவ் போல மாக்சிம் கார்க்கியின் வாழ்க்கை வரலாறு இன்றுவரை விரிவாக எழுதப்படவில்லை. ரஷ்ய மொழியில் வெளியாகியுள்ள அவரது வாழ்க்கை வரலாறு சுருக்கமானது. ஸ்டாலின் அரசோடு அவருக்கு ஏற்பட்ட மோதல்கள், நெருக்கடிகள் பற்றி அதில் எதுவுமில்லை. Henri Troyat எழுதிய Gorky: A Biography கூட முழுமையானதில்லை.

MAXIM GORKY : A POLITICAL BIOGRAPHY என்ற T. YEDLAN புத்தகத்தில் அவரது வாழ்க்கையின் கடைசிப்பகுதி விவரிக்கப்படுகிறது. தனது பால்ய வயது துவங்கி இளைஞனான வரையான அனுபவங்களை மாக்சிம் கார்க்கியே தனிப் புத்தகங்களாக எழுதியிருக்கிறார். அது திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. ஆனால் லெனினோடு அவருக்கு இருந்த நட்பு. அவர்களுக்கு இடையில் எழுதப்பட்ட கடிதங்கள். நீண்டகால நண்பரான ரோமன் ரோலண்ட் உடனான நெருக்கம், இத்தாலியில் உருவான காதல், எச்.ஜி.வெல்ஸ் உடனான நட்பு பற்றி விரிவாக எழுதப்படவில்லை.
ரோமன் ரோலண்ட் கார்க்கியின் அழைப்பின் பேரில் ஒருமுறை ரஷ்யாவிற்குச் சென்று தங்கிவந்திருக்கிறார். கார்க்கி மறைவிற்கு அவர் எழுதிய அஞ்சலிக்குறிப்பு முக்கியமானது
1906 முதல் 1913 வரை, கார்க்கி தெற்கு இத்தாலியில் உள்ள கேப்ரி தீவில் வாழ்ந்து வந்தார். ரஷ்யாவில் அதிகரித்து வரும் அடக்குமுறையிலிருந்து தப்பிக்கவே அவர் இத்தாலியில் வாழ்ந்து வந்தார்.

இந்த நாட்களில் அவரது இலக்கியப் பார்வை மாறியதோடு சர்வதேச அளவில் பல்வேறு எழுத்தாளர்களுடன் நெருக்கமாக நட்பைக் கொண்டிருந்தார். அவர் மீண்டும் ரஷ்ய திரும்பும்படியாக ஸ்டாலின் அரசு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் கூடத் தயக்கத்துடன் தாயகம் திரும்பினார். அதன்பிறகு அவர் நாட்டை விட்டு வெளியேற முடியாதபடியான சூழல் உருவானது. அவரது வெளிநாட்டு விசா ரத்து செய்யப்பட்டது. தங்கக் கூண்டில் அடைக்கப்பட்ட கிளியைப் போலவே அவர் நடத்தப்பட்டார்
1906 ஆம் ஆண்டில், மார்க் ட்வைன் மற்றும் பிற எழுத்தாளர்களின் அழைப்பின் பேரில் மாக்சிம் கார்க்கி மேற்கொண்ட அமெரிக்கப் பயணத்தில் அவர் அலைக்கழிக்கப்பட்டார். அமெரிக்கப் பத்திரிக்கைகள் அவரை மிக மோசமாக விமர்சித்து எழுதின.
கார்க்கியின் விருப்பத்திற்கு மாறாக அவரது பெயர்கள் ஸ்டாலின் அரசால் நாடக அரங்குகளுக்கு வைக்கப்பட்டன. அவரது பிறந்தநாளைத் தேசமே கொண்டியது. அது ஒரு நாடகம் எனக் கார்க்கிக்குப் புரிந்திருந்தது. உலகின் மிகச்சிறந்த புத்தகங்களை ரஷ்ய மொழியில் கொண்டுவர வேண்டும் என்று கார்க்கி விரும்பினார். இதற்கான திட்டம் உருவானது. ஆயிரம் புத்தகங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதே அவரது கனவு. ஆனால் நூறு புத்தகங்கள் மட்டுமே அவரது வாழ்நாளில் வெளியாகின.
கார்க்கியின் மகன் இறந்து போனது கூட மர்மமானதாகவே கருதப்படுகிறது. இந்த மரணம் கார்க்கியின் மனநிலையைப் பாதித்தது. உடல் அளவிலும் அவர் மிகவும் தளர்ந்து போனார். அவரது இறுதி நாட்களில் நடந்த நிகழ்வுகளும் அதன் பின்னுள்ள காரணங்களும் அதிர்ச்சிகரமானவை.
The Life of Klim Samgin என்ற அவரது இறுதி நாவல் மிக முக்கியமானது. நான்கு தொகுதிகள் கொண்டது.கிளிம்மின் நாற்பது வருட கால வாழ்வை விவரிக்கும் இந்த பெரு நாவலின் இரண்டு பாகங்கள் வெளிவந்த போது நோபல் பரிசிற்கு கார்க்கி பரிந்துரைக்கபட்டார்.
ரஷ்ய எழுத்தாளர்களிலே கார்க்கியைப் போல வாழ்நாள் முழுவதும் பயணம் செய்தவர் எவருமில்லை. தனது சமகால எழுத்தாளர்களுடன் நட்பு பாராட்டியவரும் எவருமில்லை. காரணமின்றிக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட எழுத்தாளர்கள் பலரை அவர் காப்பாற்றியிருக்கிறார். கடைசி நாட்களில் அவரே வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்தார் என்பது கசப்பான உண்மை.
••