அறியப்படாத நட்பு

2022ல் வெளியான Turn Every Page — The Adventures of Robert Caro and Robert Gottlieb என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன்.

புலிட்சர் பரிசு பெற்ற எழுத்தாளர் ராபர்ட் காரோ மற்றும் அவரது எடிட்டர் ராபர்ட் காட்லீப்பிற்குமான ஐம்பது ஆண்டுகால நட்பை விவரிக்கிறது.

படத்தை இயக்கியிருப்பவர் ராபர்ட் காட்லீப்பின் மகள் லிசி. இப்போது ராபர்ட் காரோவுக்கு வயது 86. காட்லீப்பிற்கு வயது 91

க்னாஃப் (Alfred A. Knopf )பதிப்பகத்தின் தலைமை பொறுப்பு வகித்த காட்லீப் டோனி மோரிசன், ரே பிராட்பரி, சல்மான் ருஷ்டி வி.எஸ். நைபால் உள்ளிட்ட பல்வேறு முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளைத் திருத்திப் பதிப்பித்திருக்கிறார். இப்படம் காட்லீப் எப்படிப் பதிப்பகப் பணிக்கு வந்து சேர்ந்தார். அவரது குடும்பச் சூழல், தீவிர வாசிப்பு மற்றும் தனித்துவமான செம்மைப்படுத்தும் முறைகளை விவரிக்கிறது.

ராபர்ட் காட்லீப் மற்றும் காரோ ஐம்பது ஆண்டுகள் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். காரோவின் புகழ்பெற்ற புத்தகங்களை எடிட் செய்வதற்குக் காட்லீப் மேற்கொண்ட திருத்தங்கள். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, கைப்பிரதியில் செய்த மாற்றங்கள் பற்றிப் படம் விரிவாகப் பதிவு செய்திருக்கிறது.

அரைப்புள்ளி, கால்புள்ளி துவங்கி சொற்தேர்வு, வாக்கிய அமைப்பு, தகவல்கள் சரிபார்த்தல், பத்திகள் ,விவரிப்புகள் வரை எவ்வளவு கவனமாகக் காட்லீப் எடிட் செய்கிறார். அதற்காக வாதிடுகிறார் என்பதைப் படம் அழகாகச் சித்தரித்துள்ளது.

ராபர்ட் மோசஸின் வாழ்வினை விவரிக்கும் “தி பவர் ப்ரோக்கர்” என்ற நூலின் கையெழுத்துப்பிரதி பல ஆயிரம் பக்கங்களைக் கொண்டிருந்தது. அதை வாசித்துத் திருத்தி காட்லீப் எப்படி ஒரே நூலாகக் கொண்டுவந்தார் என்பது வியப்பளிக்கிறது

படத்தின் துவக்கக் காட்சியில் காரோ இந்த ஆவணப்படத்தில் பேசுவதற்கு ஒத்துக் கொண்ட போதும் தானும் காட்லீப்பும் ஒன்றாக அமர்ந்து பேச விரும்பவில்லை என்கிறார். இது தான் ஐம்பது ஆண்டுகள் ஒன்றாகப் பணியாற்றிய போதும் ஒரு படைப்பாளிக்கும் அதன் எடிட்டருக்குமான உறவு.

ஆவணப்படத்தில் இருவரும் தனித்தனியே தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பரஸ்பரம் பாராட்டுகிறார்கள். நன்றி சொல்கிறார்கள்.

காட்லீப் ஒரு காட்சியில் எழுத்தைச் செம்மைப்படுத்தும் தனக்குப் படைப்பாளியை விடவும் ஈகோ அதிகம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுடன் சண்டையிட்டுத் திருத்தம் செய்ய முடியாது என்கிறார்.

இந்தச் சண்டை புத்தகம் சிறப்பாக வர வேண்டும் என்பதற்கானது மட்டுமே என இருவரும் ஒத்துக் கொள்கிறார்கள்.

ஆவணப்படத்தின் ஒரு காட்சியில் தனது பேரனுடன் புத்தகக் கடைக்குச் செல்லும் காட்லீப் அங்கே தான் எடிட் செய்த பல்வேறு புத்தகங்களை எடுத்துக் காட்டி தனது நினைவுகளை விவரிக்கிறார். அழகான காட்சியது. அதில் புகழ்பெற்ற கேட்ச் 22 நாவலுக்கு முதலில் கேட்ச் 18 என்ற தலைப்பே வைக்கப்பட்டிருந்தது. தான் அதை “கேட்ச் -22” என மாற்றும்படி ஜோசப் ஹெல்லரிடம் சொன்னதை நினைவு கொள்கிறார்.

ராபர்ட் காட்லீட்பின் ரசனை வித்தியாசமானது. பதிப்பகத்தின் எடிட்டராக உள்ள அவர் பாலே நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார். நியூயார்க் பாலே நடன மையத்தின் ஆலோசகராக நீண்டகாலம் செயல்பட்டிருக்கிறார்.

ராபர்ட் காரோ எப்படி எழுதுகிறார். ஆய்வு செய்கிறார் என்பதை மிகவும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அவரது ஆய்வுப்பணியில் மனைவி இனாவுடன் இணைந்து கள ஆய்வு செய்வது, புள்ளிவிவரங்கள் மற்றும் துல்லியமாகத் தகவல்களைத் திரட்டுவது என அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் இளம் படைப்பாளிக்குப் பாடம் போலிருக்கின்றன

காரோ இப்போதும் தட்டச்சுப்பொறியிலே எழுதுகிறார். அதுவும் கார்பன் நகல் வைத்து இரண்டு பிரதிகளை உருவாக்கிக் கொள்கிறார். தினசரி எவ்வளவு பக்கங்கள் எழுதினேன் என்பதைக் குறித்து வைத்துக் கொள்கிறார். அபுனைவு நூல்களுக்கும் புனைவு போலச் சுவாரஸ்யமாக, கச்சிதமாக, துல்லியமாக மொழியைக் கையாள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

ராபர்ட் காரோ ஹோமரையும் லியோ டால்ஸ்டாயினையும் தனது வழிகாட்டிகளாகக் குறிப்பிடுகிறார். இருவரையும் ஆழ்ந்து படித்திருக்கிறார்

அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி ஜான்சன் வாழ்க்கை வரலாற்றை ஐந்து தொகுதிகளாக எழுதத் திட்டமிடுகிறார் காரோ. அந்தப் பெரும்பணியில் அவருடன் இணைந்து செயல்படுகிறார் காட்லீப். ஐந்தாவது தொகுதி இன்னும் வெளியாகவில்லை. தாங்கள் இறப்பதற்கு முன்பு இறுதிப் புத்தகத்தை ஒன்றாக முடித்துவிடுவோம் என்ற காரோவும் காட்லீப் சொல்லும் தருணத்தில் கருத்துவேறுபாடுகளைத் தாண்டி அவர்களின் ஐம்பது ஆண்டுகால நட்பு அபூர்வமானது என்பது புரிகிறது.

••

0Shares
0