அலர் மரங்களும் ஆலாப்பறவைகளும்

தனிமையின் துயரத்தையும் , பிரிவின் ஏக்கத்தையும், காதலின்வலியையும் , பொருந்திக் கொள்ளமுடியாத தினசரி வாழ்வின் மீதான சலிப்பையும் பேசுபவை உமா வரதராஜனின் சிறுகதைகள்.

பேருந்து நிலையத்தின் பரபரப்பிற்கு ஊடாகத் திடீரெனக் கேட்கும் புல்லாங்குழல் நம்மை ஈர்ப்பது போல இக்கதைகள் வாழ்வின் நெருக்கடிகளுக்கு இடையே அன்பின் பாடலை ஒலிக்கின்றன..

உமா வரதராஜனின் அரசனின் வருகை சிறுகதை எனக்கு மிகவும் பிடித்தமானது. ஈழச்சிறுகதை வரலாற்றில் அதற்குத் தனியிடம் உண்டு.

அவரது சிறுகதைகள் சிலவற்றைத் தனியே வாசித்திருந்த போதும் மொத்தமாக அவரது 16 சிறுகதைகளை ஒருசேர வாசிக்கும் போது அவரது எளிய கதையுலகமும் அதன் தனித்துவ வடிவ அழகும் உருகும் பனிபோன்ற மிருதுவான எழுத்துமுறையும், அவர் மிகச்சிறந்த சிறுகதையாசிரியர் என்பதற்குச் சான்றாக உள்ளன.

••

கிழக்கிலங்கையின் பாண்டிருப்பில் வாழும் உமா வரதராஜன் அதிகம் எழுதுகிறவரில்லை. 1976ல் முதற்கதை பிரசுரமாகியிருக்கிறது. இதுவரை 16 சிறுகதைகளே எழுதியிருக்கிறார்.

எழுத்தாளர் ந.முத்துசாமியின் சிறுகதைகளுக்குத் தனி இயல்பு உண்டு. அவர் நிலக்காட்சிகளை விரித்துக்கொண்டு போய்ச் சிறு சம்பவம் ஒன்றை அதில் பொருத்திவிடுவார். கதையின் பின்புலத்தை அவரைப் போல யாரும் துல்லியமாக விவரிக்கமுடியாது. சில நேரங்களில் அந்த நிலக்காட்சிகளின் வசீகரத்தாலே கதை எழுந்து நிற்கவும் செய்யும். அது போன்றதொரு எழுத்துமுறை கொண்டதே உமா வரதராஜனின் கதைகள். நிகழ்வை துல்லியமாக விவரிப்பதுடன் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்தே கதை சொல்கிறார் உமா வரதராஜன். அதுவே இவரது சிறப்பு

இவருக்கும் வண்ணதாசனுக்கும் நிறைய ஒப்புமைகள் இருக்கின்றன. இருவரும் தனிமையைப் பேசுகிறவர்கள். அன்பின் சிறுதுயரைப் பாடுகிறவர்கள். இருவரது கதைகளிலும் இடம்பெற்றுள்ள ஆண்களும் பெண்களும் நினைவின் தாழ்வாரத்தில் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

வாழ்வின் நெருக்கடி மனிதர்களைத் தனது வாழ்விடத்திலிருந்து துரத்தியடிப்பதை இருவரும் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

வண்ணதாசன் நீர்வண்ண ஒவியங்களைப் போலச் சிறுகதைகளை உருவாக்குபவர் என்றால் உமா வரதராஜன் கோட்டோவியம் போலச் சிறுகதைகளை எழுதிக்காட்டுகிறார். வண்ணதாசனின் தனுமை சிறுகதையும் உமா வரதராஜனின் ஜெனீ கதையும் ஒன்றாக வாசித்துப்பாருங்கள். தனுவும் ஜெனீயும் சகோதரிகள் போலவே இருக்கிறார்கள்

மெல்லிய பகடியும் எள்ளலும் கொண்டவை இவரது சிறுகதைகள்.  சில வரிகளைக் கடக்கும் போது நம்மை மீறி  சிரிக்க வைப்பதே அதன் தனித்துவம்.

தொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரம் கதையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஊர் திரும்புகிறவன் தான் பிறந்து வளர்ந்த ஊரை புதிதாகப் பார்க்கிறான். அவன் வீடு திரும்பும் காட்சி பாலுமகேந்திரா படத்தில் வருவது போல மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

குறிப்பாக வீட்டுக் கதவை யார் திறப்பார்கள் என அவன் நினைப்பது நிஜமான உணர்வு. நான் இதைப் பலமுறை உணர்ந்திருக்கிறேன். வீட்டில் அவன் இல்லாத நாட்கள் பற்றி நினைத்துக் கொண்டே அவன் குளிக்கிறான். சாப்பிடுகிறான். பழைய சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊர் சுற்ற கிளம்புகிறான். அவன் மீது சுமத்தபட்ட பழிகளைக் காலம் அழித்துவிடுகிறது. இப்போது அவன் புதிய மனிதன். அது தான் அவனைச் சீட்டியடிக்க வைக்கிறதோ என்னவோ.

கதையின் முடிவில் அவன் அடிக்கும் சீட்டி வாசகனின் காதில் ஒலிக்கிறது. வாசகனும் இணைந்து சீட்டியடிக்க ஆரம்பிக்கிறான். அதுவே இதன் வெற்றி.

சின்னச் சின்னச் சந்தோஷங்களை எதிர்பார்க்கும் ஆண்களே இவரது கதைகளில் அதிகம்.

குறிப்பாகச் சினிமா பாடல்களும், அலர் மரங்களும் ஆலாப்பறவைகளும் மழையும், கடந்து செல்லும் இளம்பெண்களுமே இவர்களுக்கான சந்தோஷத்தை வழங்குகிறார்கள்.

இளவெயிலின் மென்சூடு ஒரு குழந்தையின் நாக்காக முகத்தை நக்கும்(பக் 27).

மாலை நேரத்துக் காகங்கள் போல நிலையம் நோக்கிப் பறந்து கொண்டிருந்த பஸ் வண்டிகள் (பக் 39)

அணைக்கட்டு பொத்தல் வழியாகப் பீறீடும் தண்ணியென எதையெதிர் பார்த்து இவற்றைச் சொல்கிறேன் ( பக் 57)

கடலில் புகுந்த ஒரு இலையாகியிருந்தேன். (பக் 148)

எனக் கதையின் ஊடாக ஒளிரும்  கவித்துவமான வரிகள் வாசிப்பைப் புரட்டிப்போடுகின்றன

திலீப் குமார் எழுதிய தீர்வு, அசோகமித்திரன் எழுதிய எலி- உமா வரதராஜனின் எலியம் மூன்றுமே எலியை பற்றிய கதைகளே. இதில் அசோகமித்ரன் கதையும் உமா வரதராஜன் கதையும் எலியை கொல்வதைப்பற்றியது. ஆனால் எழுத்துமுறையிலும் பகடியிலும் இருவரும் மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். எலியம் கதையில் எலி என்பது குறீயீடாகவும் அர்த்தம் தருகிறது. எலியை வேட்டையாட முயன்றவன் தன்னைக் காத்துக் கொள்ள முற்படுவதில் கதை முடிகிறது.

அரசனின் வருகை சிறுகதை 1994ல் இந்தியா டுடே மலரில் வெளியானது. (அதே மலரில் நானும் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன்.) யுத்தத்தில் இடிந்து போன கோயிலைக் கட்டும் பணிகளை ஆரம்பித்து வைக்க அரசன் வருவதாக அறிவிக்கபடுகிறது. நீதி கேட்கும் குரல்கள் தன்னைத் துரத்த ஊமையன் அவரை எதிர்கொள்கிறான். ஊமையனின் கனவில் வந்த அரசன் சாந்த சொரூபனாய் புன்னகையுடன் இருக்கிறான். போரை விரும்பும் அரசன் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறான். முடிவில் பெரும்மின்னல்வெட்டுகிறது. அரசன் மாயமாக மறைந்து போய்விடுகிறான். ஊமையன், அரசன் இருவருமே குறியீட்டுப் பாத்திரங்கள். கதைசொல்லும் முறை அபாரமாகயிருக்கிறது.

தனது சுயஅனுபவத்திலிருந்தே கதைகளை உருவாக்குகிறார் உமாவரதராஜன். தனது இலக்கிய ஈடுபாட்டினை, சினிமா ரசனையினை. மழையை, கடலை ரசிக்கிற மனதையே கதாபாத்திரங்களுக்கும் பூசிவிடுகிறார். இருண்மையான, மூர்க்கமான கதாபாத்திரங்கள் எதுவும் இவரது கதையுலகில் இல்லை. தன்னைச் சுற்றிய இலக்கியச்சூழல் குறித்த பகடியும் கோபமும் கொண்ட சிறுகதைகள் இத்தொகுப்பின் பலவீனமாகத் தெரிகின்றன.

நினைவுகளால் அலைக்கழிக்கபடுகிற மனிதன், இலக்கியம், சினிமா, பயணம், உணவு, நட்பு என எது எதிலோ தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயலுகிறான். அதுவே உமா வரதராஜன் கதைகளின் உலகம். தனது இழந்த காதலின் துயரத்தை நினைவுகள் மீட்டிக் கொண்டேயிருக்கின்றன. அதை எதிர்கொள்வதும் கண்ணீர் விடுவதையும் தவிர வேறு வழியில்லை என அவரே கூறுகிறார்.

வயது செல்ல செல்ல உடம்பு சௌகரியங்களையும் ஆனந்ததையும் எதிர்பார்க்கிறதா என அவன் எண்ணினான் என வெயிலும் வெறுமையும் சிறு கதையில் ஒரு வரி இடம்பெற்றுள்ளது. இதுவே இந்தத் தொகுப்பின் ஆதாரக்குரல்.

உமா வரதராஜனின் சிறுகதைகள் கடற்கரையோர சிற்றூரின் வாழ்வை இயல்பாகப் பேசுவதாலே என்னைப் பெரிதும் வசீகரிக்கின்றன.

அவர் நிறைய எழுத வேண்டும் என்பதே எனது விருப்பம்

••

•••

0Shares
0