ஹெர்மன் ஹெஸ்ஸே தனது இலக்கில்லாத நடைபயணங்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். Wandering என்ற அந்தப் புத்தகத்தில் அவரது கவிதைகளும் கோட்டோவியங்களும் இடம்பெற்றுள்ளன. இயற்கையைப் பற்றிய அவரது புரிதலும் நெருக்கமும் வியப்பூட்டுகின்றன.

13 சின்னஞ்சிறிய கட்டுரைகள். ஒரு பதிவில் நாடோடி விவசாயிக்கு முற்பட்டவன். அவன் எதையும் தனக்கெனச் சொந்தம் கொண்டாடுவதில்லை. அவன் பாதையின் பாடலைக் கேட்டபடி நடந்து கொண்டிருக்கிறான். தானும் அவ்விதமான நாடோடியே என்கிறார் ஹெஸ்ஸே. அதே நேரம் நாடோடி சிற்றின்பத்தில், நாட்டம் கொண்டவன். எவரையும் பொய் சொல்லி எளிதாக நம்பவைத்து விடுபவன் என்றும் குறிப்பிடுகிறார்
அவரது தாத்தா கேரளாவில் மதப்பிரசங்கம் செய்தவர். மலையாள அகராதி உருவாக்கத்தில் பணியாற்றியிருக்கிறார். ஹெஸ்ஸேயின் தந்தையும் தாயும் இந்தியாவை நன்கு அறிந்தவர்கள். அவரது வீட்டு நூலகத்தில் நிறையச் சமஸ்கிருத நூல்கள் இருந்தன.

அவருக்குப் பௌத்தம் தொடர்பான நாட்டம் உருவான போது தனது நண்பருடன் இந்தியாவை நோக்கிய பயணம் ஒன்றைத் துவங்கினார். அந்தப் பயணத்தில் ஜாவா சுமத்ரா சென்றுவிட்டு இலங்கையில் சில நாட்கள் தங்கியிருக்கிறார். நிறையப் பௌத்த விகாரைகளைக் கண்டிருக்கிறார். உடல் நலக்குறைவு காரணமாக இந்தியா வரவில்லை. ஆனால் இந்தியாவை மையமாகக் கொண்டு சித்தார்த்தா என்ற நாவலை எழுதினார். அதில் வரும் காட்சிகள் இலங்கையில் அவர் கண்டதன் மறு உருவாக்கமாகும்.
இந்தியாவை நோக்கிய அவரது பயணத்திற்கு முன்பு அவரது குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் ஏற்பட்டன. தனது மனைவியை விவாகரத்துச் செய்திருந்தார். ஹெஸ்ஸேயால் வீட்டுப் பொறுப்புகளைக் கடைப்பிடிக்க முடியவில்லை ஆகவே கொதிப்பான தனது மனநிலையை ஆற்றுப்படுத்த வேண்டியே இந்தப் பயணத்தை மேற்கொண்டார்.

wandering தொகுப்பிலுள்ள ஹெஸ்ஸேயின் ஓவியங்கள் அவரது வேலைத்திறமையைக் காட்டுகின்றன. தெற்கு ஜெர்மனிக்கும் வடக்கு இத்தாலிக்கும் இடையே ஏற்பட்ட நடைப்பயணத்தின் எண்ணங்களை விவரிக்கின்றன –

அலைந்து திரிவது என்பது ஒரு வகைச் சுதந்திரம், நாட்டம். அது தன்னிலையின் ஆழமான வெளிப்பாடு , நிலையான மற்றும் தீவிரமான சமூக வாழ்க்கைக்கு எதிராகப் போராடுவதாகும் என்று ஹெஸ்ஸே காட்டுகிறார்.
இன்னொரு கட்டுரையில் அழகான கிராமப்புறமும் அதன் சாலைகள் ஏற்படுத்தும் உணர்வுகளும் கவித்துவமாகச் சித்தரிக்கப்படுகின்றன.
போரின் விளைவுகள் பற்றிய பிரதிபலிப்புகள் பாலம் என்ற அத்தியாயத்தில் வெளிப்படுத்துகிறார். அதே பாலத்தைப் போர்க்காலத்தில் கடந்த நினைவையும் இன்றுள்ள அதன் அமைதியினையும் விவரிக்கிறார்
மரங்கள் பற்றிய அத்தியாயம் மிகச்சிறப்பானது. அதில் மரம் துறவியைப் போன்றது என்கிறார். மரம் வெட்டப்படும் போது அதன் அடிவட்டில் காலம் வரைந்த கோடுகள் இருப்பதை உணர்த்துகிறார்.
மழையையும் மடாலயத்துறவினையும் தனிமை இரவுகளையும் தனது கவித்துவமான மொழியில் வெளிப்படுத்தியிருக்கிறார் ஹெஸ்ஸே. கவிதை, ஓவியம் சிறிய கட்டுரைகள் என மூன்று இணைந்த அழகான தொகுப்பாக உள்ளது.

பாஷோ துவங்கி முக்கியமான ஜென் கவிஞர்கள் இப்படி நீண்ட பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பயணத்திற்கும் ஹெஸ்ஸேயின் பயணத்திற்குமான வேறுபாடாக நான் காணுவது அவர் இயற்கையை உணரும் விதமே. ஜென் கவிகள் இயற்கையை பிரித்துப் பார்ப்பதில்லை. தனித்து பெயர் சுட்டி புல், மரம் நிலவு குளம் என்று சொன்னாலும் உணர்வுரீதியாக ஒன்றாகவே நினைக்கிறார்கள். தண்ணீரில் உப்பு கரைந்து போய்விடுவதைப் போல இயற்கையோடு கரைந்துவிடுகிறார்கள். அதனால் தான் ஒரு நத்தை ஊர்ந்து செல்லும் சப்தம் கூட அவர்களுக்குக் கேட்கிறது. ஹெஸ்ஸே இயற்கையை விடுபடலின் புகலிடமாக நினைக்கிறார். பரபரப்பான நகர வாழ்க்கை மற்றும் பொருளாதார நெருக்கடிகளை விலக்கி தேவைகள் இல்லாத ஒருவனாக அலைய முற்படுகிறவனுக்கு இயற்கை அடைக்கலம் தருகிறது என நம்புகிறார். இயற்கையை பற்றிய அவரது பார்வையில் தான் வேறு என்ற நிலை துல்லியமாக வெளிப்படுகிறது.
சென்ற நூற்றாண்டில் கவிஞர்கள் ஒன்று கூடி நீண்ட தூரம் நடந்திருக்கிறார்கள். இரவு நடையை மேற்கொண்டிருக்கிறார்கள். கவிஞர் வேர்ட்ஸ்வொர்த் தனது நண்பர்களுடன் நடந்த சாலைகளை இடங்களைப் பதிவு செய்திருக்கிறார். பிரான்சின் புகழ்பெற்ற இலக்கியவாதிகள் அனைவரும் நடைப்பிரியர்களே.

இந்த நூலில் ஹெஸ்ஸே தனியே நடக்கிறார். கிறிஸ்துவ மடாலயத்தின் ஜன்னல் வழியே யாரோ தன்னை காணுகிறார்கள் என்று சொல்கிறார். பறவைகளும் மரங்களும் அவரை வசீகரிக்கின்றன. ஜென் கவிகளின் பயணத்தை வாசிக்கும் போது நாம் தண்ணீர் செல்வது போல அவர்கள் நடந்து போவதை உணருகிறோம். அந்த மௌனம். நிதானம். லயப்பு தனித்துவமானது. ஹெஸ்ஸேயிடம் இருபது வயது இளைஞனின் மனதே பிரதானமாக வெளிப்படுகிறது.
பயண வழியில் காணும் வீடு எதையெல்லாம் நினைவுபடுத்துகிறது என யோசிக்கும் ஹெஸ்ஸே ஒரு வீட்டிடமிருந்து எப்படி விடைபெறுவது என்று கேட்கிறார். அது கவிஞனின் பார்வை
கோட்டோவியங்கள் போல அழுத்தமாக, துல்லியமாக தனது பதிவுகளை செய்திருக்கிறார் ஹெஸ்ஸே