அவமானத்தின் முன் மண்டியிடல்எல்லா புனைவுகளையும் விடவும் விசித்திரமானது தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை. துயரத்தின் சாற்றை மட்டுமே பருகி வாழ்ந்த அவரது வாழ்வின் ஊடாகவே அவரது படைப்புகள் உருக்கொண்டிருக்கின்றன. எழுதுவதை தவிர வேறு எந்த வழியிலும் தன்னை ஆறுதல்படுத்திக் கொள்ள முடியாத ஒரு மனிதனின் வெளிப்பாடுகள் தான் தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்துக்கள்.

தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்தைப் புரிந்து கொள்வதற்கு முன்பாக அவரைப் புரிந்து கொள்வது மிக அவசியம். தான் வாழ்ந்த காலம் முழுவதும் தொடர்ந்து துஷிக்கபட்டும் கடுமையான வசைகளும் ஏளனத்திற்கும்,
நெருக்கடிக்கும் உள்ளான ஒரு எழுத்தாளன் அவர்.


நெருக்கமான மனிதர்களின் மரணமும் வறுமையும் நோயும் நிழலைப் போல அவரது வாழ்வில் பின்தொடர்ந்தன.  


புறக்கணிப்பு, அவமானம்ஏமாற்றம் என்ற சொற்கள் ஈக்களை போல அவர் செல்லுமிடமெல்லாம் சுற்றி வந்து கொண்டேயிருந்தன. வாழ்வு ஒரு கொடை என்று அவரது உலர்ந்த உதடுகள் முணுமுணுக்கும் போது கைகள் பயத்தில் நடுங்கிக் கொண்டுதானிருந்தன. காற்றில் மிதந்து செல்லும் உதிர்ந்த இலையை போல காலம் அவரை தன் இஷ்டம் போல வீசியடித்து விளையாடியது.  ஆனால் இவை யாவும் மீறி எல்லா துயரங்களையும் எழுத்தாக்கி விடும் விந்தை தஸ்தாயெவ்ஸ்கிக்கு கை கூடியிருந்தது 


பல நுற்றாண்டுகளாக இருள் மூடிக்கிடந்த மனித மனதின் இருட்டறைகளுக்குள் பிரவேசித்த முதல் நபர் தஸ்தாயெவ்ஸ்கி தான். அவரது எழுத்தின் வழியாக மட்டுமே அது வரை ரகசியம், ஆபாசம், என்று பூட்டி வைக்கபட்டு துருவேறியிருந்த மனக்குகையின் தாழ்ப்பாள்கள் திறக்கபட்டன. தஸ்தாயெவ்ஸ்கியை போல தனிமையும் துயரும் பீடிக்கப்பட்ட மனிதனை இலக்கிய உலகம் இன்று வரை காணவேயில்லை. அவர் வாழ்வின் மீதான நம்பிக்கையை மட்டுமே கையில் ஏந்தியபடியே உலகின் இருண்ட தாழ்வாரங்களில் எதையோ புலம்பியபடியே நடந்து திரிந்திருக்கிறார்.  


தனிமை சாவோடு முடிந்து விடக்கூடியதில்லை. சாவு தனிமை உறுதிப்படும் இடம் எனும் தஸ்தாயெவ்ஸ்கி, கரமசோவ் சகோதரர்கள் நாவலில்  அல்யூஷா தான் இறந்து போய் புதைக்கபடும் போது புதைமேட்டில் ஒரு ரொட்டிதுண்டை வைக்குமாறு கேட்டுக் கொள்கிறான். அதற்கு காரணம். அந்த ரொட்டித்துண்டை தின்பதற்காக குருவிகள் வந்து சேரும். அவை இரைச்சலிட்டபடியே அந்த ரொட்டிதுண்டை கொத்தி தின்னும் சப்தத்தை நான் புதைகுழியிலிருந்தபடியே கேட்பேன். சாவிற்கு பிறகான எனது தனிமைக்கு அது ஒன்றே ஆறுதல் என்கிறான். தனிமையின் உக்கிரம் பீடித்த கண்களுடன் வாழ்ந்து பழகிய மனிதனை தவிர வேறு யாரால் இந்த வாசகங்களை எழுதி விட முடியும்.


தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளை தனக்குதானே பேசிக் கொள்ளும் பழக்கம் கொண்ட ஒரு மனிதனின் பகல்கனவுகள் அல்லது நிறைவேறாத ஏக்கங்கள் கொண்ட ஒருவரின் நாட்குறிப்புகள் என்று கூட  வகைப்படுத்தி விடலாம். ஆனால் தனக்கு தானே பேசிக் கொள்வது எவ்வளவு துயரமான நிலை என்று நம்மால் புரிந்து கொள்ள முடியுமானால் அது கடவுளுக்கு மட்டுமே சாத்தியமான ஒரு நிலை என்று உணரமுடியும். 


தஸ்தாயெவ்ஸ்கி கதைகளின் வழியாக ஒரு தேடலை மேற்கொள்கிறார். இந்த தேடல் ஒரே நேரத்தில் மெய்த்தேடலாகவும் மறுபக்கம் மனித துயரத்திற்கான ஆதார விதைகளை தேடுவதாகவும் அமைந்திருக்கிறது. நுற்றாண்டுகளாக மனிதர்கள் திகைத்து நின்ற சில அடிப்படை கேள்விகளுக்கு கதைகளின் வழியாக பதில்  சொல்ல முயன்றிருக்கிறார். இந்த கேள்விகளுக்கு மதமும் தத்துவமும் தந்த பதில்கள் திருப்பதியற்று போன ஒரு மனதிற்கு தஸ்தாயெவ்ஸ்கியின் பதில்கள் மிக நெருக்கமாக உள்ளன. குறிப்பாக அறம் மற்றும் பொது ஒழக்கம், வறுமை சார்ந்து தஸ்தாயெவ்ஸ்கி எழுப்பிய கேள்விகளும் அழ்ற்கான அவரது மறுமொழியும் ஒரு தீர்க்கதரிசியின் செயல்பாடுகளுக்கு நிகரானது.தஸ்தாயெவ்ஸ்கியின் மனிதவாழ்வு குறித்த கேள்விகளை அணுகும் போது அதை தனித்த ஒரு நிகழ்வாக ஒரு போதும் கருதுவதில்லை. மாறாக அதை உலகின் பிரிக்கமுடியாத மாபெரும் நிகழ்வின் ஒரு சிறிய பகுதியாகவே கருதுகிறார். ஒரு மனிதனின் இருப்பு ஒரு நட்சத்திரத்தின் ஒளிர்தலோடு ஏதோ ஒரு மர்மமான வகையில் தொடர்பு கொண்டுள்ளது.  


மனிதர்கள் தாங்கள் வாழ்வதன் வழியாக தங்களது சுயவிருப்பு வெறுப்புகளை மட்டுமே நிறைவேற்றி கொள்வதில்லை மாறாக மாபெரும் இயக்கம் ஒன்றின் பகுதியாக அதன் நித்யகடமைகளையும் நிறைவேற்றுகிறார்கள். அந்த செயல்கள் குறித்த தேடுதல்களும் தன்னறிதலும் மிக குறுகிய அளவே மனிதனால் கண்டுபிடிக்கபட்டுள்ளது.  


வேதனைகளை கணக்கிடும் மனிதன் சந்தோஷங்களை ஒரு போதும் கணக்கிடுவதேயில்லை. ஒரு வேளை சந்தோஷங்களை ஒரு பக்கமும் வேதனைகளை மறுபக்கமும் பட்டியலிடுவோமாயின் அந்த பட்டியிலில் எப்போதும் சந்தோஷத்தின் எண்ணிக்கைகளே அதிகமாக இருக்கும். இந்த முடிவை தன் எழுத்தில் தீவிரமாக நம்பி செயல்பட்டவர் தஸ்தாயெவ்ஸ்கி.  


தஸ்தாயெவ்ஸ்கியை எனக்கு பிடித்திருப்பதற்கான காரணம். அவரது படைப்புகளை அணுகும் போது ஒரு சரித்திர ஆசிரியரிடம் காணப்படும் உண்மை குறித்த தீவிரமும் விஞ்ஞானியிடம் காணப்படும் பகுத்தாயும் தன்மையும் , கணிதவியலாளரிடம் காணப்படும் அடிப்படை அறியும் முனைப்பும், தத்துவவாதியிடம் உள்ள தர்க்கமும், குழந்தையிடம் உள்ள கற்பனையும், கடவுளிடம் உள்ள கருணையும் ஒருங்கே காணமுடிகிறது என்பதே.  


தஸ்தாயெவ்ஸ்கியை அறிதல் என்பது ஒரு  தொடர் இயக்கம் அல்லது ஒரு முடிவற்ற செயல்பாடு. அது அவரது படைப்புகளில் இருந்து துவங்குகிறது. ஆனால் அதன் எல்லைகள் படைப்புகளுக்குள் முடிந்து விடுவதில்லை. மாறாக அது நம்மை சுற்றிய உலகை, மனிதர்களை, கடந்த காலத்தை, கடவுளை புரிந்து கொள்வதற்கான சாத்தியங்களை திரும்ப திரும்ப உருவாக்குகின்றன.  


குற்றமும் தண்டனையும் நாவலை பெரும்பான்மையினர் கொலை மற்றும் அது சார்ந்த விசாரணை குறித்த நாவல் என்றே பொதுவில் வகைப்படுத்துகிறார்கள். இது அந்த நாவலுக்கு செயல் மாபெரும் துரோகம் என்றே தோணுகிறது. இந்த நாவலில் ஒரு கொலை நடக்கிறது. கொலை செய்கின்றவன் நாவலின் கதாநாயகன் ரஸ்கோல்நிகோவ். ஆனால் கொலை மட்டுமே நாவலின் மையமல்ல. நாவலின் போக்கினை திசைமாற்றம் செய்யும் ஒரு முக்கிய நிகழ்வாகவே குற்றம் நிகழ்கிறது. இன்னும் சொல்வதாகயிருந்தால் குற்றம் ஒரு மனிதனின் அக செயல்பாடுகளை ஆராய்வதற்கான சாதனமாக அமைந்து விடுகிறது 


புனித நுற்களாக வகைப்படுத்தபடும் பைபிள் மற்றும் இந்திய வேதங்கள் யாவும் கூட  கொலை மற்றும் அது சார்ந்து எதிர்வினைகளால் நிரம்பியே இருக்கின்றன. குருர மரணம் இல்லாத புனித நுற்களே இல்லை என்று கூட சொல்லலாம். ஆனால் இந்த மரணம் மீட்பிற்கான வழியை நோக்கிய விசாரணையை முன்னெடுத்து செல்கின்றதே அன்றி குற்றத்தை ஒரு கேளிக்கையாக ஒரு போதும் முன்வைப்பதில்லை. 


பொதுவான குற்றவகை நாவல்கள் கொலை மற்றும் திருட்டை கேளிக்கை சார்ந்த சாகசமாகவே முன்வைக்கின்றன. குற்றவாளியின் மனவுலகை அது ஆராய்வதில்லை. மாறாக குற்றம் சார்ந்து உருவாகும் புதிரை இறுக்குவதிலும் அவிழ்ப்பதிலுமே தன்னை பெரிதாக ஈடுபடுத்திக் கொள்கிறது. இந்த வகையை சாராமல் குற்றத்தினை ஆராய முடியும் என்பதையே தீவிர இலக்கியவாதிகள் நெடும்காலமாக முயற்சி செய்து வருகிறார்கள். இந்த வகை இலக்கியத்திற்கு முன்னோடி ஷேக்ஸ்பியர்.  


அவரது ஹாம்லெட். மேக்பத், ஒத்தல்லோ போன்ற சாகசநாயகர்கள் யாவரும் குற்றத்தின் வழியாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ஷேக்ஸ்பியர் குற்றத்தை ஆசையின் குக்ஷ்ந்தையாகவே கருதுகிறார். எல்லா குற்றங்களும் அடிப்படையில் ஏதோவொரு நிறைவேறாத ஆசையின் வெளிப்பாடகவே இருக்கின்றன என்பது ஷேக்ஸ்பியரை வாசிக்கும் எவராலும் அறிந்து கொள்ள முடியும்.  


ஷேக்ஸ்பியரில் துவங்கிய இந்த மரபுதொன்றுதொட்டு நாட்டார் மரபிலும் உலகம் எங்கும் காணப்படுகிறது. இதன் தொடர்ச்சி பத்தொன்பதாம் நுற்றாண்டின் பிரெஞ்சு இலக்கியத்தில் தீவிரமாக எதிரொலித்தது. பால்சாக்கில் துவங்கி மாபசான், பிளாபெர்ட், க்யூகோ என்று பிரெஞ்சிலக்கியவாதிகளின் முக்கிய கருப்பொருளாக குற்றமும் அதன் பின்உள்ள கதையுமே அமைந்திருந்தன. 


தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களில் இடம்பெற்றுள்ள குற்றங்கள் பெரும்பாலும் சலிப்பில் உருவானவையே. குற்றமும் தண்டனை நாவலில் அடகுகடை நடத்தும் பெண்ணை கொலை செய்யும் ரஸ்கோல்னிகோவ் அதற்கு காரணமாக கூறுவது சாதாரண மனிதர்கள் தாண்டப்பயப்படும்  எல்லைகளை கடக்க தன்னால் முடியும் என்பதை  நிரூபிப்பதற்காகவே கொலையை தேர்வு செய்ததாக சொல்கிறான். இந்த சலிப்பிற்கு காரணம் வாழ்வில் தனக்கென தனியான எந்த அடையாளமும் இல்லாமல் போயிருப்பதேயாகும்.  


உண்மையில் தஸ்தாயெவ்ஸ்கியின் கழ்நாயகர்கள் யாவரும் தங்களது சுய அடையளாம் குறித்தே பேச விரும்புகிறார்கள். அதை நேரடியாக பேசிக் கொள்ள துணிவுன்றி அதற்கு ஒரு ஊடு திரை போல குற்றத்தை முன்வைக்கிறார்கள். குற்றமும் தண்டனை நாவலும் கூட இது போல கொலைக்கு முன்பு உள்ள ரஸ்கோல்நிகோவ்வின் உலகமும், கொலைக்கு பிறகான ரஸ்கோல்னிகோவின் உலகமுமாக இரண்டாகவே பிரிந்திருக்கிறது.


தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகள் திரும்ப திரும்ப வாசகனிடம் யாசிப்பது வாழ்வினை அதன் சகல அபத்தங்களோடும் கொண்டாட வேண்டும் என்பதே. வாழ்வின் நெருக்கடிகள் ஏற்படுத்திய வலியில் இருந்து எழுத்து பிறந்த போதும், படைப்பெங்கும் கருணையும் நேசமும் எல்லையில்லாத மனித அக்கறையும் தஸ்தாயெவ்ஸ்கியிடம் நிரம்பியிருக்கிறது. 


தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களில் மிக சிறந்ததாக நான் கருதுவது 1) Crime and Punishment 2) The Idiot 3) The Brothers Karamazov அது போலவே அவரது சிறுகதைகளில் மிக சிறப்பானது 1) White Nights, 2) A Weak Heart,  3) The Dream of a Ridiculous Man 4)  The Eternal Husband 5) “An Honest Thief.  


குற்றமும் தண்டனையும்  (Crime and Punishment) நாவல்  1866ம் ஆண்டு ரஷ்யன் மெசஞ்சர் என்ற இதழில் தொடர்கதையாக பனிரெண்டு பகுதிகளில் வெளியிடப்பட்டது. தஸ்தாயெவ்ஸ்கி இதற்கு முன்னதாகவே ருஷ்ய இலக்கியத்தில் தனித்துவமான எழுத்தாளராக இலக்கிய உலகில் அறியப்பட்டிருந்தார். இந்த நாவல் அவரது ஐரோப்பிய பயணத்திற்கு பிறகு எழுதப்பட்டதோடு சமகால வாழ்வின் நெருக்கடியை பிரதிபலித்தது என்பதற்காக மிக சிறப்பான வஜ்வேற்பை பெற்றது. நுற்றாண்டுகளை கடந்த பிறகு இன்றும் இந்த நாவல் தன்னளவில் முழுமையானதாகவும் விவாதத்திற்கு உரியழ்கவுமே இருக்கிறது.


எல்லா குற்றங்களுக்கும் அடிப்படை காரணமாக இருப்பது மனிதன் நேசிக்கபடாமல் போனதே என்று ஒரு இடத்தில் தஸ்தாயெவ்ஸ்கி தெரியப்படுத்துகிறார். அது தான் அவரது கண்டுபிடிப்பின் முக்கிய செய்தி. கடவுளை தவிர வேறு எவரையும் எல்லா நேரத்திலும் நேசிக்க முடியவில்லை அது தான் மனிதனின் மகத்தான பலவீனம் என்று சொல்லும் தஸ்தாயெவ்ஸ்கி, கடவுளின் முதுகிற்கு பின்னால் நடக்கும் காரியங்களுக்கு கடவுள் எவ்விதமான மறுப்பும் தெரிவிப்பதேயில்லை. அந்த செயல்களின் ஊடாக பிரவேசித்து உண்மையை அறிவதே ஒரு எழுத்தாளனாக தன்னுடைய வேலை என்று கூறுகிறார். அவரது குற்றமும் தண்டனை நாவலும் இத்தகைய முயற்சியே. 


குற்றமும் தண்டனை நாவல் பீட்டர்ஸ்பெர்க்கில் நகரில் ஒரு தனியறையில் வசிக்கும் ரஸ்கோல்னிகோவ் என்ற மாணவனின் வாழ்வில் நடந்த ஒன்பது தினங்களை பற்றியது. (பின் இணைப்பாக உள்ள ஒரு அத்யாயத்தை தவிர்த்து ) . இந்த ஒன்பது நாட்களில் அவன் வாழ்வில் ஒரு  சூறாவளி வீசுகிறது. அவன் அந்த சுழிக்காற்றிற்கு தெரிந்தே தன்னை ஒப்புக் கொடுக்கிறான் 


நாவல் துவங்கும் போது பீட்டர்ஸ்பெர்க் நகரின் நெருக்கடியான வாழ்வும் அங்கு காணப்படும் வறுமையும், நோயும், மிதமிஞ்சிய குடியும் இருளும் வர்ணிக்கபடுகின்றன. ஒரு கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ரஸ்கோல்னிகோவ் என்ற இளைஞன் தனது அறையில் இருந்து வெளியே வருகிறான். அந்த எண்ணம் தவறு என்று அவனுக்கு நன்றாக தெரிகிறது.  


இந்த எண்ணத்தை எப்படியாவது மனதை விட்டு துரத்த வேண்டும் என்று நிஜமாகவே அவன் விரும்புகிறான். ஆனால் அவன் உள்மனது குற்றத்தின் மீது ருசி கொள்ள துவங்கியிருக்கிறது. ஆகவே அவன் கால்கள் நேரடியாக அவன் யாரை கொல்ல நினைக்கிறானோ அந்த அடகுகடை நடத்தும்  அல்யோனா இவானோவா என்ற பெண்ணின் இருப்பிடத்தை நோக்கி செல்கிறான் 


ரஸ்கோல்னிகோவ் வறுமையில் பீடிக்கபட்டிருக்கிறான். அவனது படிப்பு இதனால் பாதியில் ஊசலாடுகிறது.  சகமாணவன் ஒருவனால் அறிமுகம் செய்து வைக்கபட்ட அடகுகடை நடத்தும் பெண்ணிடம் முன்னதாக அவன் மோதிரம் மற்றும் வெள்ளி பொருட்களை அடமானம் வைத்து அந்த பணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். சில மாதங்களாகவே வீட்டுவாடகை கொடுக்க முடியவில்லை. ஆகவே வீட்டுக்கார பெண் அவன் மீது போலீசில் புகார் கொடுக்க போவதாக சொல்லிக் கொண்டிருக்கிறாள்  


ரஸ்கோல்னிகோவின் தாயும் தங்கையும் வேறு ஊரில் வசிக்கிறார்கள். அங்கே தங்கை சிறிய வேலையில் இருக்கிறாள். அவள் தன் அண்ணனின் நலனிற்காக ஒரு வசதியான ஆளை திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதிக்கிறாள். ஆனால் அந்த திருமணம் நடக்க கூடாது அதை எப்படியாவது தான் தடுத்துவிட வேண்டும் என்று ரஸ்கோல்னிகோவ் கருதுகிறான்.


இன்னொரு பக்கம் அடகுகடை நடத்தும் பெண் அநியாயமான வட்டி வாங்கி கொண்டு மாணவர்களை ஏன்ற்றுகிறாள். அவளிடம் மாட்டிக் கொண்டு ஏழைகளும் மாணவர்களும் அவதிப்படுகிறார்கள். அவளை யாராவது கொன்று அவளது வீட்டில் உள்ள செல்வத்தை ஆயிரம் பேர் நன்றாக வாழ்வதற்கு உபயோகபடுத்தலாம் என்று வெளிப்படையாகவே மாணவர்கள் பேசிக் கொள்கிறார்கள்


ரஸ்கோல்னிகோவ் அவளை  கொலை செய்வதாக முடிவு செய்கிறான். அந்த கொலையின் வழியாக அவன் தனது கடனை அடைத்துவிட முடியும் என்பதோடு தான் மற்றவர்கள் செய்ய முடியாத ஒரு செயலை செய்து காட்ட முடியும் ,தான் நெப்போலியனை போல சாகசக்காரன் என்ற எண்ணம் அவனுக்கு இருக்கிறது. 


ஆகவே கொலை செய்வதற்கான முன் ஏற்பாடுகளை உருவாக்குகிறான். இதற்காக அடகுகடை நடத்தும் பெண்ணின் வீட்டினை நோட்டம் விடுகிறான். அந்த வீட்டில் அல்யோனாவுடன் அவளது சகோதரி லிசாவெதா வசிப்பதை அறிகிறான். லிசாவெதா உயரமான அழகான பெண். ஆனால் அக்காவிற்கு பஸ்ந்தவள். அக்கா அவளை ஒரு வேலைக்காரி போலவே நடத்தகிறாள். கோபம் வந்தால் அடித்து உதைக்கிறாள். யாவையும் தாங்கி கொண்டு அக்காவை சார்ந்தே வாழ்கிறாள்.  


எந்த நேரத்தில் அல்யோனா தனியாக இருப்பாள் என்பதை அறிந்து கொண்டு சரியாக அந்த நேரத்தில் அவளது வீட்டிற்குள் பிரவேசிக்கிறான். அடகுகடைக்காரி முழ்ல்பார்வையிலே அவனது நோக்கதை புரிந்து கொண்டு விட்டவளை போல ஏறிட்டு பார்க்கிறாள். வியர்த்து வழிகிறது. கைகள் நடுங்குகின்றன. தனக்கு காய்ச்சல் கண்டிருப்பதகா சொல்லியபடியே தான் அடமானம் வைக்க வந்ததாக சொல்கிறான். அறையில் ஜன்னல் கதவுகள் மூடப்பட்டிருக்கின்றன. அவள் அடமானம் வைக்க வந்த பொருளை பார்வையிடுகிறாள்.  


அதற்குள் தன் ஆடைக்குள் மறைத்து வைத்து எடுத்து வந்திருந்த கட்டாரியால் அவளை வீழ்த்துகிறாள். ஒரே வெட்டில் மண்டை பிளக்கிறது. அவள் சரிந்து விழுகிறாள். ஒடிப்போய் பணப்பெட்டியை திறக்கிறான். ஒருவேளை அவள் சாகாமல் வந்துவிட்டால் என்ன செய்வது என்று  சந்தேகம் வந்துவிடுகிறது. ஒடிப்போய் மறுமுறையும் வெட்டுகிறான். அவள் இறந்து கிடக்கிறாள். கையில் கிடைத்த தங்கம் வெள்ளி பொருட்களை எடுத்து கொண்டிருக்கும் போது வெளியே யாரோ வரும் சப்தம் கேட்கிறது. அறைக்குள் லிசாவெதா வருகிறாள்.  


கண் இமைக்கும் நேரத்திற்குள் அவளையும் கொலை செய்கிறான் ரஸ்கோல்னிகோவ். பிறகு அடமானம் வைக்கபட்டிருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை அள்ளி எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு போய்விடுகிறான். தனது குற்றத்திற்கு எந்த சாட்சியுமில்லை என்றபடியே நிம்மதியாக உறங்குகிறான் 


ஆனால் மறுநாள் காலை அவனை காவல்நிலையத்திற்கு அழைத்துவரும்படியாக ஒரு போலீஸ்காரன் வந்து நிற்கிறான். தனது குற்றம் கண்டுபிடிக்கபட்டு விட்டதோ என்ற பயப்படுகிறான் ரஸ்கோல். காவல் நிலையம் செல்கிறான். அங்கே வாடகை கொடுக்காமல் ஏன் ஏன்ற்றுகிறான் என்று விசாரிக்கபடுகிறான். தான் வாடகை பணத்தை தருவதாக பத்திரத்தில் எழுதி கையெப்பம் இட்டு வெளியேறுகிறான்.


அப்போது அடகுகடைக்காரியின் கொலையை பற்றி காவலர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்து அவன் தன்னை குற்றவாளி என்று பலரும் கருதுகிறார்கள் என்று தானாக கற்பனை செய்து கொள்கிறான். அதனால் உறக்கமின்றி அவதிபடுகிறான். பயம் அவனை ஆட்டி வைக்கிறது. குழப்பமும் பதட்டமும் கொள்கிறான். கொலை நடந்த விசயம் தொடர்பாக அவன் தன் நண்பர்களோடு விவாதிக்கிறான்.


கொலைக்கு காரணமாக அந்த கட்டிடத்தில் வேலை செய்த ஒரு பெயிண்டர் கைது செய்யபட்டிருக்கிறான் என்று தெரிய வந்தவுடன் அவன் கொலை செய்ததற்கு என்ன சாட்சி இருக்கிறது என்று ஆதங்கபடுகிறான். ஒரு நாள் அவனே போலீஸ் இன்ஸ்பெக்டரை தேடிச் சென்று அந்த கொலை பற்றி விசாரிக்கிறான். அதை ஏன் தான்  செய்திருக்க கூடாது என்று கேட்கிறான். இன்ஸ்பெக்டர் அவனை துரத்துகிறார் , ஆனால் அவனால் குற்றவுணர்ச்சியில் இருந்து தப்ப முடியவில்லை.  


அடகுகடைக்காரியை கொன்றதை விடவும் அவளது சகோதரியை கொன்றது மாபெரும் குற்றம் என்று அவன் மனது வாட்டி வதைக்கிறது. தனக்கு தான பிதற்றுகிறான். தன்னை யாரோ உற்று நோக்குவதாக கற்பனை செய்து கொள்கிறான். குற்றம் திரும்ப திரும்ப அவன் மனதில் நிகழ்த்தபட்டுக் கொண்டேயிருக்கிறது. அவனால் அந்த அக நெருக்கடியில் இருந்து விடுபட முடியவேயில்லை 


ஆகவே அதில் இருந்து விடுபடுவதற்காக தற்கொலை செய்து கொள்வது என்று முயற்சிக்கிறான். அப்போது குடிகாரனான மர்மிலாதேவ்வை சந்திக்கிறான். முன்னதாகவே ஒரு முறை அவனை சந்தித்து பண உதவி செய்திருக்கிறான். இப்போது மர்மிலேதவ் மிதமிஞ்சி குடித்துவிட்டு வீட்டிற்கு போக முடியாமல் தடுமாறி சாலையில் விழுந்துகிடப்பதை காண்கிறான். அவனை வீட்டிற்கு துக்கி செல்கிறான். வீட்டில் மர்மிலேதவ் இறந்து போய்விடவே வறுமையில் வாடும் அந்த குடும்பத்திற்கு தன்னிடம் உள்ள பொருட்களை எல்லாம் தந்து விடுகிறான்.  


மர்மிலேதவின் மகள் சோனியா வறுமையின் காரணமாக விபச்சாரத்தில் ஈடுபடுகிறாள். அவளோடு ரஸ்கோல்னிகோவிற்கு நட்பு உருவாகிறது. இதற்கிடையில் ஊரில் இருந்து தன்னை தேடி வந்த அம்மா மற்றும் சகோதரியை தன் நண்பனிடம் ஒப்படைக்கிறான். துனியா மீது நண்பன் ரஸ்மிஹினுக்கு முழ்ல்பார்வையிலே ஈர்ப்பு உருவாகிறது. அவன் அவர்களை பராமரிக்கிறான்.  


மனவேதனை தாங்க முடியாத ஒரு நாளில் சோனியாவிடம் தனது குற்றத்தை ஒப்புக் கொள்கிறான். அவளிடம் மண்டியிட்டு தான் அவள் முன்பாக அல்ல மனித சமுகத்தின் அத்தனை வேதனைகளின் முன்பாகவும் மண்டியிட்டு தனது குற்றத்தை ஒப்புக் கொள்வதாக சொல்கிறான்.  


அவள் காவல்நிலையத்தில் சென்று குற்றத்தை ஒத்துக் கொள்ளுமாறு வலியுறுத்கிறாள். முடிவில் தானே அந்த கொலையை செய்ததாக ஒப்பு கொண்டு சைபீரிய சிறைச்சாலைக்கு அனுப்படுகிறான். சோனியா தானும் சைபீரியாவிற்கு பயணம் செய்து சிறைக்கைதிக்கு சேவை செய்கிறாள். சிறையில் ரஸ்கோல் தொடர்ந்து பைபிளை வாசிக்கிறான். அவன் மனம் மாறுகிறது. முடிவில் சோனியாவின் அன்பால் மனம் திருந்தி சிறையில் இருந்து புத்துயிர்ப்பு பெற்றவனாக விடுதலையாகிறான் ரஸ்கோல்னிகோவ்.


நாவல் என்ற அளவில் ஒற்றை கதையாடலை கொண்டிராமல் இந்த நாவல் நான்கைந்து சரடுகளின் வழியாக பின்னப்பட்டிருக்கிறது. கதாநாயகனே கதையை சொல்கிறான். அவனது மனக்குரலின் வழியாக கதை முன்பின்னாக நகர்கிறது. ரஸ்கோல்னிகோவ் என்ற கதாபாத்திரம் இன்றளவும் இலக்கியத்தில் சாகாவரம் பெற்ற ஒரு பாத்திரற்டைப்பாகும்.


ரஸ்கோல்னிகோவ் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவன். அவனது பிரச்சனை வறுமையும் தனிமையுமே. இந்த உலகில் தன்னை நேசிக்ககூடியவர்கள் எவருமில்லை என்று அவன் நம்புகிறான். தனக்காக தாயும் சகோதரியும் கஷ்டபடுவது அவனுக்கு குற்றவுவ்ர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால் தான் மற்றவர்களை விட வேறுபட்டவன். யுநப்போலியனை போல உலகை வெல்ல புறப்பட்டவன் என்று அவனது உள்மனது திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருக்கிறது. அவன் தன் இருப்பை வெளிப்படுத்திக் கொள்வதற்காகவே அந்த கொலை மேற்கொள்கிறான். 


தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களை பற்றி ஆராய்ந்த மிகையில் பக்தின் என்ற விமர்சகர் தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள் பாலிபோனி என்ற பல்குரல் தன்மை கொண்டது என்று குறிப்பிடுகிறார். அப்படிபட்ட பல்குரல்தன்மைக்கு சரியான எடுத்துக் காட்டு குற்றமும் தண்டனையும். இந்த நாவல்கதையை வளர்த்து செல்வதில் மட்டும் முக்கியத்துவம் காட்டவில்லை மாறாக சமகால பிரச்சனைகளாக கருதும் பல விசயங்கள் குறித்து தீவிரமான கேள்வியும் விவாதத்தையும் முன்வைக்கிறது.  


நாவலின் ஊடாகவே அடித்தட்டு மக்கள் படும் கஷ்டமும் மாணவர்கள் படிப்பதற்காக எந்த அளவு கஷ்டபடுகிறார்கள் என்பதும் பெண்கள் குடும்பத்தின் வறுமை காரணமாக வேசை தொழில் ஈடுபடுகிறார்கள் என்பதும் அப்பட்டமாக வெளிப்படுத்தபட்டுள்ளது.  


மாலேர் என்ற மாபெரும் இசைக்கலைஞரின் சிம்பனிக்கு நிகரானது குற்றமும்தண்டனையும் நாவல் என்று குறிப்பிடும் காப்கா இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் அதீத மனநிலையில் இருப்பதை போன்று தோன்றினாலும் உண்மையில் அவர்கள் இயல்பானவர்களே. அதீதமான நிலை என்பது அவர்கள் தங்களது அகசிக்கல்களை வெளிப்படுத்தும் தருணங்கள் மட்டுமே என்று கூறுகிறார். 


இருபத்தியோறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு லட்சக்கணக்கான பிரதிகள் விற்று தீர்ந்துள்ள குற்றமும் தண்டனையும் நாவலின் பாதிப்பு உலக இலக்கியம் முழுவதுமே காணப்படுகிறது. பதினாறு முறை படமாக்கபட்ட இந்த நாவல் தொலைக்காட்சி தொடராகவும், காமிக்ஸ் புத்தகமாகவும் கூட வெளியிடப்பட்டிருக்கிறது.


இதில் 1935ல் Peter Lorre நடித்து Josef von Sternberg  இயக்கிய படமும் 1969 ருஷ்ய மொழியில் K.Voinov    இயக்கிய Crime & Punishment திரைப்படமும் மிக சிறப்பானவை 


ரஸ்கோல்னிகோவ்வினை குற்றத்திற்கு துண்டுவது எது? முதற்காரணமாக இருப்பது பீட்டர்ஸ்பெர்க் நகரம் தான்.  நாவலின் முக்கிய கதாபாத்திரம் போலவே எங்கும் இழையோடியிருக்கிறது இந்த நகரம். பீட்டர்பெர்க் சக்கரவர்த்தி பீட்டரால் உண்டாக்கபட்ட நகரம். ஆகவே அந்த நகரம் ஐரோப்பிய கலாச்சாரத்தோடு நெருக்கமான தொடர்பு கொண்டது. அந்த நகரின் வறுமையும் நோயும் பீடிக்க அடித்தட்டு மக்கள் நெருக்கடியான வாழ்வை மேற்கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் செல்வமும் கேளிக்கையும் நிரம்பிய பணம் படைத்தவர்கள் வாழ்கிறார்கள். நகரம் ரஸ்கோல்னிகோவை கேலி செய்கிறது. நகரின் இருள் அவனுக்கு பயத்தை உருவாக்குகிறது. இந்த நகரம் ஒருபோதும் துக்கத்திற்கு தன்னை முழுமையாக ஒப்புக் கொடுப்பதில்லை என்று ரஸ்கோல்னிகோவ் உணர்கிறான். வெயிலின் பாதம் படாத தெருக்கள், கசடுகளும் குப்பைகளும் நிரம்பிய தெருவோர குடியிருப்புகள், மலிவான வேசைகள், ரொட்டித்துண்டிற்காக கொலை செய்பவர்கள், பெண் தரகர்கள் என்று அந்த நகரின் உள்தோற்றமே அவனை கொலை வெறி கொள்ள செய்கிறது


மற்றொரு காரணம் கடவுள். ரஸ்கோல்னிகோவ் தனது சொந்த வாழ்வின் நெருக்கடிகள் யாவிற்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பை ஆராய்கிறான். அவனுக்கு ஒரு கடவுள் தேவைப்படுகிறார். ஆனால் அவர் நம்பும் படியாக இல்லை. ஆகவே அவன் தனது கடவுள் குறித்த சந்தேகங்களை திரும்ப திரும்ப தனக்கு தானே கேட்டுக் கொள்கிறார். அவனுக்கு கடவுள் தேவைப்படுவது அன்பு செலுத்துவதற்கு மட்டுமே. காரணம் உலகில் அன்பு மிகவும் மலிமான சொல்லாக மட்டுமே நின்று போய்விட்டது. எல்லா குற்றங்களுக்கும் அன்பின் வழியாக கலைந்து எறியப்பட்டுவிட முடியும் என்று நம்புகிறான். 


இந்த இரண்டு காரணங்களோடு அவன் கொண்டிருந்த லட்சியவாதமும் அறிவாளி என்ற பிம்பமும் அவனை கொலைக்கு துண்டுகின்றன. கொலை அவனுக்குள் ஏற்படுத்தும் மாறுதல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவனை அவனுக்கே புரிய வைக்கின்றன. மண்பாண்டம் உடைந்து சிதறுவது போல அவனது லட்சிய உலகம் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து சிதறுகிறது. ஏதோவொரு நிமிசத்தில் எல்லையில்லாத கருணையும் அன்பும் மட்டுமே வாழ்வின் ஆழ்ரங்கள். ஒரு மரம் சாலையோரம் நிற்பதை காணும் போது மனிதன் உள்ளுக்குள் ஆனந்தம் கொள்கிறான். அந்த ஆனந்தம் போல வாழ்வில் சிறியதும் பெரியதுமான ஆனந்தங்கள் எல்லையற்று சிதறிக்கிடக்கின்றன. அதை நாம் லட்சியம் செய்வதேயில்லை என்று கூறுகிறான் 


இத்தனை வலிமையாகவும் திரும்ப திரும்பவும் அன்பை தஸ்தாயெவ்ஸ்கி யாசிப்பதற்கு காரணம் அவரது சொந்த வாழ்வு அதன் துயரம் மிக்க நாட்களுமே. 1821ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ம் தேதி மாஸ்கோவில் உள்ள ஏழைக்களுக்கான இலவச மருத்துவனையில் தஸ்தாயெவ்ஸ்கி பிறந்தார். இவரது அப்பா ஒரு மருத்துவர். இவரோடு பிறந்தவர்கள் ஏழு பேர்.  அப்பா ராணுவத்தில் பணியாற்றிவர். முன்கோபி மற்றும் குடிகாரர்.  அம்மாவை அவர் எப்போதுமே சந்தேகப்பட்டு அடித்து உதைக்கிறார். நோயாளியான அம்மா கணவனின் அன்பிற்காக ஏங்குவதை உடன் இருந்து காண்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி. ஆனால் அம்மாவை அப்பா கடைசிவரை புரிந்து கொள்ளவேயில்லை. 1837ல் அம்மா இறந்து போனதும் உலகில் தாங்கள் அநாதைகளாக்கபட்டதாகவே அவரும் சகோதரர்களும் நினைக்கிறார்கள். அப்பா அவர்கள் மீது அதிக அக்கறை காட்டவேயில்லை. சிறிய தேவைகளை கூட புறம் ஒதுக்குகிறார்.  1838ல் தஸ்தாயெவ்ஸ்கி பொறியியல் படிப்பிற்காக ராணுவ பயிற்சியகத்தில் சேர்க்கபடுகிறார். அங்கே முறையான காலணி கூட இன்றி படிக்கிறார். புத்தகங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள ஒரு டிரங்க் பெட்டி தேவை என்று அப்பாவிற்கு கடிதம் எழுதுகிறார். அப்பா அதற்கு கூட பணம் அனுப்பவேயில்லை. வறுமையும் கண்ணீரும் பயமும் மட்டுமே துணையாக உள்ளன.  இந்த நிலையில் 1839ல் தஸ்தாயெவ்ஸ்கியின் அப்பாவை சில கிராமத்து ஆட்கள் பச்சை சாராயத்தை வாயில் ஊற்றி கொலை செய்துவிடுகிறார்கள். அப்பாவின் மரணச் செய்தி அறிந்தவுடன் தஸ்தாயெவ்ஸ்கிக்கு காக்காய்வலிப்பு வருகிறது. அன்றிலிருந்து  அவர் தன் வாழ்நாள் முழுவதுமே வலிப்பு நோய்க்கு உள்ளாகி பெரும் அஹ்ஸ்தை பட்டு வந்தார் 


 அப்பா வீட்டில் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்த காரணத்தால் இலக்கியத்தின் அறிமுகம் சிறுவயதிலே ஏற்பட்டிருந்தது. ஆகவே பொறியியல் படிப்பு  முடிந்தவுடன் அவர் சிறிய மொழிபெயர்ப்பு பணிகளில் ஈடுபட துவங்கினார். பால்சாக்கின் நாவலையும் எட்கர் ஆஷ்ன் போவையும் மொழியாக்கம் செய்தார். இதன் தொடர்ச்சியாக இவர் 1844ல்  Poor Folk  என்ற சிறிய நாவலை எழுதி நெக்ரசோவ் என்ற இலக்கிய விமர்சகரிடம் தந்தார். அந்த நாவல் அவருக்கு மிகவும் பிடித்து போகவே அதை கோகலின் எழுத்திற்கு இணையானது என்று பாராட்டி  The Contemporary இதழில் வெளியிட்டார். இலக்கிய உலகில் மிக சிறப்பான வரவேற்பை பெற்றது.


தனது 24 வயதில் எழுத்தாளராக உருவாகிய தஸ்தாயெவ்ஸ்கி அடிநிலை மக்களின் வாழ்வினை பிரதானப்படுத்தி எழுதினார். குற்றாவளிகள், குடிகாரர்கள், வறுமையில் கஷ்டபடுகின்றவர்கள். வேசைகள், அப்பாவிகள், சாலையோரவாசிகள் இவர்கள் தான் அவரது கதைஉலகின் பிரஜைகள். ஆரம்ப கதைகளில் மிக குறைவான பெண் பாத்திரங்களே இடம் பெற்றிருந்தார்கள். முழுக்க முழுக்க ஆண்களின் உலகமாக விளங்கிய அவரது கதைகள் மெல்ல உருமாறின. குழந்தைகளை அதிகமாக கதைகளில் சித்தரித்தவர் தஸ்தாயெவ்ஸ்கி. அவரது முக்கிய படைப்புகள் யாவிலும் குழந்தைகள் காணப்படுகிறார்கள். அவரது கதாநாயகிகள் மிக அழகானவர்கள் ஆனால் எவரும் சந்தோஷமானவர்கள் இல்லை.    


1949ல் பெலின்ஸ்கி என்ற அரசியல்வழிகாட்டியை ஆதரித்து கட்டுரை வெளியிட்டதற்காக தஸ்தாயெவ்ஸ்கி ராஜதுரோக குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை அறிவிக்கபடுகிறார். அழ்ற்கான நாளும் குறிக்கபடுகிறது. கழுத்தில் கறுப்பு துணி அணிந்து துப்பாக்கியால் சுடப்படுவதற்காக வரிசையில் நிறுத்தபடுகிறார். 


கடைசி நிமிசத்தில் மன்னர் அவர்களுக்கு கருணையளித்து மரணதண்டனையில் இருந்து விடுவிக்கபட்டு சைபீரியாவிற்கு கைதியாக அனுப்பபடுவதாக தகவல் கிடைக்கிறது. சாவின் உதட்டை கவ்வியிருந்த தஸ்தாயெவ்ஸ்கியின் உதடுகள் விடுதலையாகின்றன. பயமும் சந்தோஷமும் ஒரே நேரத்தில் உடலில் கொப்பளிக்கின்றது. இந்த தகவலை கேட்டு சில கைதிகள் செய்வது அறியாமல் பிதற்றுகிறார்கள்.   


வாழ்வது ஒரு கொடை என்று அந்த நிமிசத்தில் தஸ்தாயெவ்ஸ்கிக்கு தோன்றுகிறது. இதயம் நடுங்க பிரார்த்தனை செய்கிறார். இனி வாழ்வை அப்படியே ஏற்றுக் கொள்ள போவதாக கடவுளுக்கு நன்றி தெரிவித்தபடியே அவர் சைபீரிய சிறைக்கு செல்கிறார். அங்கே நான்கு ஆண்டுகள் குற்றவாளிகளுடன் சிறையில் வாழ்கிறார். பைபிள் ஒன்றே துணை. சிறைச்சாலை நினைவுகளை ஒரு நுலாக பதிவு செய்கிறார். சிறையில் இருந்து விடுவிக்கபட்டு வந்தவுடன்  மரியா என்ற விதவை திருமணம் செய்து கொள்கிறார்.  ஆனால் அந்த திருமணம் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. கடனும் வறுமையும் அதிகமாகிறது.கடன் கொடுத்தவர்கள் தந்த நெருக்கடிக்காக தனது எழுத்தை பணயம் வைக்கிறார்.   


இந்த நேரத்தில் சகோதரனும் மனைவியும் ஒரே ஆண்டில் அத்தடுத்து இறந்து போகிறார்கள். துயரத்தில் இருந்து மீள முடியாமல் வீட்டிற்குள்ளாகவே ஒடுங்கி கிடக்கிறார். அப்போது கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக 26 நாட்களில் ஒரு நாவலை எழுதி முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதற்காக ஒரு பெண் உதவியாளரை ஏற்பாடு செய்கிறார். அப்படி அவர் வாழ்நாளில் வந்த அன்னா கிரிகோரிவ்னா பின்னாளில் அவரது மனைவியாகிறாள். ( ஆச்சரியப்படத்தக்க ஒற்றுமை என்னவென்றால் அவளது பிறந்தநாள் தஸ்தாயெவ்ஸ்கியின் பிறந்தநாளான அதே அக்டோபர் 30 . ஆனால் தஸ்தாயெவ்ஸ்கியை விட 25 வயது சிறியவள். )


அவளது காதல் தஸ்தாயெவ்ஸ்கியின் துயரத்தை மட்டுபடுத்துகிறது. அவர் குற்றமும் தண்டனை நாவலை வெளியிடுகிறார். அது மிக சிறப்பான வஜ்வேற்பை பெறுகிறது. அதன் பிறகு தன் மனைவியோடு அவர் ஐரோப்பிய பயணம் மேற்கொள்கிறார். அங்கே நான்கு வருடங்கள் வாழ்கிறார். அந்த நாட்களில் சூதாடி பணத்தை இழக்கிறார். குழந்தைகள் பிறந்து இறந்து போகிறார்கள். கர்ப்பிணியான மனைவியோடு கையில் அறுபது ருபிள் பணத்தோடு ருஷ்ய வந்து சேர்கிறார். 


திரும்பவும் கடன்காரர்கள் சுற்றிக் கொள்கிறார்கள். தனது சகோதரன் வாங்கிய கடனுக்காக அவர் பிரச்சனைக்கு உள்ளாகிறார். வாழ்நாளில் அவர் முழுமையாக சந்தோஷமானத்தை ஒரு போதும் அனுபவிக்கவேயில்லை. கரமசோவ் சகோதரர்கள் என்ற நாவல் அவரது தகப்பனின் தோற்றத்தை நினைவுபடுத்தும் கரமசோவ் என்ற மனிதனை முன்வைத்தது. அதில் தஸ்தாயெவ்ஸ்கியின் சகோதரர்கள் மூவர் இடம் பெற்றிருந்தார்கள். அந்த நாவல் மகத்தான வெற்றி பெற்றது. 


இளைஞர்கள் தஸ்தாயெவ்ஸ்கியை கொண்டாடினார்கள். தனது 57வயதில் நுரையீரல் பாதிப்பின் காரணமாக தஸ்தாயெவ்ஸ்கி மரணம் அடைந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் முப்பதாயிரம் பேர் கலந்து கொண்டார்கள். புஷ்கினுக்கு பிறகு தஸ்தாயெவ்ஸ்கியை ருஷ்ய இலக்கிய உலகம் தங்களது சக்கரவர்த்தியாக கொண்டாட துவங்கியது. டால்ஸ்டாய், லெர்மன்தேவ் போன்றவர்கள் ருஷ்ய இலக்கியத்தில் மிக உன்னத இடம்பெற்ற போதும் அடிநிலை மக்கள் தங்களது எழுத்தாளனாக எப்போதுமே தஸ்தாயெவ்ஸ்கியை அடையாளம் கண்டு கொண்டார்கள். 


டால்ஸ்டாய் வசதி படைத்த பிரபுவாக, திடகாத்திரமான மனிதராக, செல்வத்தோடு வாழ்ந்தபடியே கதைகள் எழுதினார். ஒரு நாவலை ஆறு முறை திருந்தி எழுதியிருக்கிறார். ஆனால் தஸ்தாயெவ்ஸ்கியோ வறுமையும் வலிப்பு நோயும் சாவும் துயரமும் பீடிக்க தனது எழுதப்படாத நாவல்களுக்கு கூட முன்பணம் வாங்கி கொண்டு கிடைத்த நேரத்தில் எவ்விதமான திருத்தங்களுக்கும் இடமின்றி கதைகளை எழுதியிருக்கிறார். டால்ஸ்டாயிடம் உள்ள அமைதியும் பிரார்த்தனையும் தஸ்தாயெவ்ஸ்கியிடம் இல்லை. தஸ்தாயெவ்ஸ்கியின் ரத்தம் எப்போதும் சூடேறியது. கொதிப்பு மிக்கது. அவரது இதயம் பயத்தாலும் துயரத்தாலும் பீடிக்கபட்டது. அது எளிமையானது. பனியை போல சுத்தமானது. 


தஸ்தாயெவ்ஸ்கி ஷேக்ஸ்பியரை போல இருள் உலகினையும், பித்தேறிய ரத்த வேகத்தையும் தனது சொந்தமாக்கி கொண்டவர். சந்தோஷத்தை போலவே வேதனையும் மனிதனை சுத்தப்படுத்துகிறது என்று நம்பியவர். இதனால் தானோ என்னவோ சார்பியல் தத்துவத்தை ஆராய்ந்த  ஐன்ஸ்டீன்தஸ்தாயெவ்ஸ்கி என்ற மகத்தான கலைஞர் ஒருவரிடம் மட்டுமே தனக்கு  கற்று கொள்ள நிறைய இருப்பதாக தெரிவிக்கிறார். அவர் மட்டுமின்றி காப்கா, நீட்ஷே, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், போர்ஹே, அகிரா குரசோவா, விஸ்கான்டி, மணிகௌல், கூட்ஸி என உலகின் சிறந்த  திரைப்பட இயக்குனர்கள், இலக்கியவாதிகள், விஞ்ஞானிகள், கவிஞர்கள் பலரும் தஸ்தாயெவ்ஸ்கியை கொண்டாடுகிறார்கள். 


தஸ்தாயெவ்ஸ்கியின் மரணவீட்டின் குறிப்புகளில் பலகாலமாக தனிமை சிறையில் அடைக்கப்பட்ட ஒருவன் தனது அன்றாட நிகழ்வுகளை சிறைச்சாலை சுவரில் இருக்கும் ஒரு சிலந்தியோடு பகிர்ந்து கொள்கிறான். அந்த சிலந்தி ஒரு கடவுளை போல எல்லா கோரிக்கைககளையும் மௌனமாக கேட்டுக் கொண்டிருக்கிறது. தான் தனியாக இல்லை தன்னோடு ஒரு சிலந்தி கூட இருக்கிறது என்ற உறவு மட்டுமே தன்னை வாழ வைத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறான். இப்படி தான் இருக்கிறது நமது சமகாலத்தைய வாழ்வும். 


மனிதனிடம் உள்ள விலைமதிப்பில்லாத பொருள் சுதந்திரம் மட்டுமே, அதை இழக்க துவங்கும் போது தான் எல்லா துயரங்களும் ஆரம்பிக்கின்றன என்று தஸ்தாயெவ்ஸ்கி குறிப்பிடுகிறார். இது தான் எல்லா காலத்திலும் இலக்கியத்திற்கான ஆதார புள்ளி.0Shares
0