அஷ்டமூர்த்தியின் கடைசி சிற்பம்

அஷ்டமூர்த்தி மலையாளத்தின் மிக முக்கியமான சிறுகதையாசிரியர். எழுத்தாளர். இவரது கடைசி சிற்பம் என்ற சிறுகதைத் தொகுப்பு தமிழில் சிதம்பரம் ரவிச்சந்திரன் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. புதுப்புனல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

பஷீர் துவங்கி அசோகன் செருவில் வரை மலையாளத்தின் முக்கிய சிறுகதையாசிரியர்கள் பலரும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கென வாசகர் வட்டமே தமிழில் உருவாகியுள்ளது. சமகால மலையாள சிறுகதைகளின் போக்கினையும் எழுத்துமுறையையும் அறிந்து கொள்வதில் தமிழ் எழுத்தாளர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்.

அஷ்டமூர்த்தியின் கதைகள் தமிழுக்குப் புதுவரவாக உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அஷ்டமூர்த்தியின் கதைகளை மொழிபெயர்த்துள்ள சிதம்பரம் ரவிச்சந்திரன் கண்பார்வையற்றவர். நண்பர்களின் உதவியோடு இக்கதைகளை வாசித்து மொழிபெயர்ப்பு செய்துவருகிறார். நிறைய மலையாளச் சிறுகதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்

இந்த சிறுகதைத் தொகுப்பில் பனிரெண்டு சிறுகதைகள் உள்ளன. அஷ்டமூர்த்தியின் கதைகளை வாசித்த போது அசோகமித்ரனின் சிறுகதைகளைப் போல எழுதப்பட்டிருப்பதாக உணர்ந்தேன். ஆனால் அசோகமித்ரனின் கதைகளில் காணப்படாத கொந்தளிப்பு இவரது கதைகளில் வெளிப்படுகிறது. இயல்பான சம்பவங்களின் வழியே நகர்ந்து செல்லும் சிறுகதை சட்டெனப் பருந்து விண்ணில் பறப்பது போல வேறு தளத்திற்கு உயர்ந்துவிடுகிறது.

ஜலசமாதி என்ற சிறுகதையில் இரவில் போக்கிடம் இல்லாமல் தவிக்கும் இளம்பெண்ணைப் பற்றிய நிகழ்வு சுவாரஸ்யமாகவே துவங்குகிறது. ஆனால் கதை இளம்பெண்ணை மையப்படுத்தவில்லை. செபி என்ற அபூர்வமான மனிதனை அடையாளப்படுத்தத் துவங்குகிறது.  ஒவ்வொரு ஊரிலும் ஒரு செபி இருப்பான். அது தான் உலகநியதி. செபியால் எப்படி இந்த உலகை இவ்வளவு எளிதாக கையாள முடிகிறது. எதிர் கொள்ள முடிகிறது.  கதையின் முடிவில் செபியே ஒரு கதையாக உருமாறுகிறான். அது தான் வாழ்வின் எதிர்பாராத நிலை. சட்டெனத் துயரம் கவிந்துவிடும் இக்கதையின் முடிவானது அதை அசோகமித்ரன் கதைகளில் இருந்து மாறுபடுத்திக் காட்டுகிறது.

கடைசிப்பாட்டு என்ற சிறுகதை மேடைக்கச்சேரியில் பாடும் இளம் பாடகி ஒருத்தியைப் பற்றியது. அதுவும் முந்தைய கதை போலவே கதை துவங்கப்பட்ட தளத்திற்கும் முடியும்  தளத்திற்கும் இடையே பெரிய தாண்டுதலை மேற்கொண்டுள்ளது.

இந்த தொகுப்பின் மிகச்சிறந்த கதையாக நான் கருதுவது கடைசி சிற்பமே. அக்கதை சமகால மலையாளச்சிறுகதைகளில் மிக முக்கியமானது என்றே சொல்வேன்.

இக்கதையில் வரும் அப்பா அபூர்வமான மனிதர். அவர் ஆரம்ப காலத்தில் வயல்வேலைகளில் தான் அதிக கவனம் கொண்டவராக இருக்கிறார். இரவில் புத்தகம் படிக்க அவருக்குப் பிடிக்கிறது. ஆனால்  திடீரென அவர் கொட்டாங்குச்சியில் சிற்பம் செய்ய ஆரம்பிக்கிறார். பின்பு யானை தந்தத்தில் உருவம் செய்கிறார். அதுவும் மாசேதுங்கின் உருவம். அது அவரது கனவின் வெளிப்பாடு போலவே அமைகிறது. பின்பு மனித உருவங்களைச் செய்வதை அவர் நிறுத்திவிடுகிறார். வெற்றிலைப் பெட்டி, பூக்கூடை கண்ணாடிக்கூடு என உபயோகமான விஷயங்களாக செய்கிறார்.

வீட்டு மனிதர்கள் முற்றத்தில் இருந்த பலாவை விற்ற நேரத்தில் வெட்டப்பட்ட மரத்தின் வேரைக் கொண்டு அவர் சிற்பம் ஒன்றை செதுக்குகிறார். அதை தீவிரமாகவும் மூச்சுவிட கஷ்டப்படும் உடலுடன் செய்கிறார். பாதி வேலையில் மயங்கி விழுகிறார். நினைவு தடுமாறுகிறது.

இந்நிலையில் அந்த ஊருக்கு வரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஈஎம்எஸ் நம்பூதிரிபாடு அப்பாவைக் காண வீடு தேடி வருகிறார், அது தான் கதையின் மிகச்சிறப்பான இடம். ஈஎம்எஸ் எவ்வளவு எளிமையான மனிதர். தோழர்களை நேசிக்க கூடியவர் என்பதைக் கதை மிக அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

ஈஎம்எஸ் அவர்கள் வீட்டுப்படி ஏறி வரும் காட்சியை நம்மால் கண்ணில் காண முடிகிறது. நினைவு தப்பிய அப்பாவை தூக்கிக் கொண்டு வருகிறார்கள்.அவருடன் ஈஎம்எஸ் மெல்லிய குரலில் பேசுகிறார். அன்புடன் நலன் விசாரிக்கிறார். குறிப்பாக செதுக்குகின்ற வேலை இப்போதும் நடக்கிறதா எனக் கேட்கிறார். அது அப்பாவிற்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.

ஈஎம்எஸ் வந்திருப்பதைக் காண தெருவே வீட்டின் வெளியே கூடி நிற்கிறது.  தன் படைப்பு தான் விரும்பியது மாதிரி வரவில்லை என அப்பா ஆதங்கப்படுகிறார். சிற்பத்தைச் செய்து முடித்தபிறகு ஈஎம்எஸ் வந்து பார்க்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார். இருட்டுவதற்கு முன்பு ஈஎம்எஸ் தன் சகாக்களுடன் புறப்படுகிறார்.

தான் விரும்பியதை செய்ய முடியவில்லை என்று அப்பா சொல்வது சிற்பத்தைப் பற்றியது மட்டும் தானா. இல்லை ஈஎம்எஸ் ஆட்சிக்கும் கம்யூனிச கனவுகளுக்கும் அது பொருந்தக்கூடியது தானா. தனது உயரிய கனவை நனைவாக்க உயிரைத் துறப்பது அப்பா மட்டுமில்லை ஈஎம்எஸ்சிற்கும் அப்படி தானே நடந்தது.

அரசியலும் அரசியல் மாற்றங்களும் தனிமனிதர்களின் வாழ்வோடு எவ்வளவு பிணைந்தவை என்பதற்கு இக்கதை ஒரு சாட்சி. அஷ்டமூர்த்தி மிக அழகாக, செறிவாக  கதையை எழுதியிருக்கிறார்.

கிருஷ்ணப்பனுடைய பயணங்கள் கதைகளில் வரும் சிறுவன் சிற்றப்பாவோடு ஒரு ரயில் பயணத்தின் வழியே புதிய உலகை காணச் செல்கிறான். ஒன்றையடுத்து மற்றொன்று என இடம் மாறிப் போய்க் கொண்டேயிருக்கிறார் சிற்றப்பா. முடிவில் ராதாவின் வீட்டிற்கு போகும் போது புது உறவை அவன் அறிந்து கொள்கிறான். ராதா தரும் கஞ்சியை குடித்துவிட்டு அசதியில் உறங்க முற்படும் போது சிற்றப்பாவின் மறுபக்கத்தை அவன் அறிந்து கொள்கிறான். ராதாவின் வீடும் சமையலும் அந்த  இரவும் மறக்கமுடியாத காட்சிகளாகக் கதையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

ஒரு பேப்பர் ஏஜெண்டின் கதை என்ற சிறுகதை போல ஒன்றை நான் வாசித்ததேயில்லை. வீடு வீடாகப்போய் பேப்பர் போடுகிற ஒரு ஆளின் கண்ணோட்டத்தில் பேப்பர் படிக்கிறவர்களின்  மனவுலகை அழகாகப் பதிவு செய்திருக்கிறார் அஷ்டமூர்த்தி.

அஷ்டமூர்த்தி அன்றாட வாழ்விலிருந்தே தனது படைப்புகளை உருவாக்குகிறார். ஆனால் அறியப்படாத மனிதர்களை, துயரங்களை அடையாளப்படுத்துகிறார்.  அலங்காரங்கள், மிகை எதுவும் இல்லாத எழுத்து. கூர்மையான உரையாடல்கள். புறச்சூழலை விவரிப்பதில் ஒவியரைப் போன்ற தனித்துவம். உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்து கொண்டு செல்லும் எழுத்துமுறை என  அஷ்டமூர்த்தியின் கதைகள் தனித்துவமிக்கவை.

இந்த தொகுப்பினை வாசித்து முடிக்கையில் இவரது வேறு புத்தகங்களையும் வாசிக்க வேண்டும் என்ற ஆசை உருவாகிறது., அது தான் அஷ்டமூர்த்தி எழுத்தின் வெற்றி.

••

0Shares
0