அ.கி.கோபாலன்

முனைவர் மு.வளர்மதி எழுதிய தமிழ் மொழிபெயர்ப்பு முன்னோடிகள் நூலில் அரிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. இந்த நூல் இணையத்தில் தரவிறக்கம் செய்யக் கிடைக்கிறது

••

வங்க மொழிப் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்தவர்களில் முக்கியமானவர் அ.கி.ஜெயராமன் . இவர் சரத்சந்திரரின் நூல்களை முழுவதுமாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

1941 ல் அ.கி. ஜெயராமன்  தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுக் கைதாகி சென்னையில் சிறையில் அடைக்கப்பட்ட போதும் சரத் சந்திரரின் நாவலை மொழிபெயர்த்துக் கொண்டிருந்திருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது.

அ.கி. ஜெயராமனின் உடன் பிறந்த சகோதரர் அ.கி.கோபாலன் . இவர் நோபல் பரிசு பெற்ற படைப்புகளைத் தமிழில் வெளியிடுவதற்கென்று ஒரு பதிப்பகத்தைத் தொடங்கி நடத்தினார்,  அதன் பெயர் தமிழ்ச்சுடர் நிலையம்

அ.கி. ஜெயராமன் முதலில் சென்னைக்கு வந்து உணவகம் ஒன்றில் சர்வராகச் சேர்ந்து பணியாற்றினார். டி.எஸ். சொக்கலிங்கத்தின் நட்பால் நிறைய நூல்களையும் , இதழ்களையும் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றார் . இவருடைய சகோதரரான அ.கி.கோபாலனும் சில காலம் உணவகம் ஒன்றில் பணியாற்றிய பிறகு நவயுகப் பிரசுராலாயத்தின் புத்தகங்களை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டார் .

1942 ஆம் ஆண்டின் இறுதியில் திருவல்லிக்கேணியில் ஜோதி புக் ஸ்டால் தொடங்கினார் அங்கே பல்வேறு இலக்கிய இதழ்கள் விற்கப்பட்டன. அதை வாங்க வரும் எழுத்தாளர்களுடன் கோபாலனுக்கு நெருக்கமான நட்பு ஏற்படவே, ஜோதி புக் ஸ்டால் இலக்கிய மையமாக உருமாறியது.. இந்த நட்பே பின்னாளில் அவர் பதிப்பகம் தொடங்கி நடத்தக் காரணமாக அமைந்தது

ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் தேதி 1947 நள்ளிரவு 12 மணிக்கு நாடு சுதந்திரமடைந்தபோது , தமிழ்ச்சுடர் நிலையம் பதிப்பகம் துவங்கப்பட்டது.

சர்வதேசக் கதைகள் எனும் தலைப்பில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாட்டின் புகழ்பெற்ற கதைகள் அல்லது நோபல் பரிசு பெற்ற நாவலைத் தமிழில் மொழிபெயர்த்து ஜோதி நிலைய வெளியீடாக வெளியிட்டு வந்தார்கள்.

இந்தப் பதிப்பு முயற்சிகளைப் பற்றிக் கோபாலன் இப்படிக் கூறுகிறார்.

“புத்தகங்கள் பதிப்பிக்கும் போது கடன் வாங்கித்தான் பப்ளிஷ் செய்தேன் . பேப்பர் வாங்குமிடத்தில், அச்சடிக்கும் அச்சகத்தில் கடன் .. பிராட்வேயில் இருக்கும் தாம்ஸன்பிரஸ்ஸில் தான் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன. மொழிபெயர்ப்பு நாவல்கள் நிறையப் போட்டேன் . குறிப்பாக நோபல் பரிசு பெற்ற நாவல்கள் . இதற்கெல்லாம் காரணமானவர் க.நா.சு. சிறந்த வெளிநாட்டு இலக்கியங்கள் எடுத்துச் சொன்னவர் அவர்தான் . இருவருமாகச் சேர்ந்து ஹிக்கின்பாதம்ஸ் செல்வோம் வருஷத்திற்கு மூன்று முறை தான் அங்கு நோபல் பரிசு நாவல்கள் பார்சலில் வரும் . எங்களுக்கு வேண்டிய புத்தகங்களை வாங்கிக் கொண்டு வருவோம்

ஒரு பக்கம் மொழிபெயர்ப்புச் செய்து கொடுத்தால் ஒரு ரூபாய் என்று பேசிக் கொண்டு மொழிபெயர்ப்புப் பணிகளைத் துவங்கினோம் . க,நா.சு . வெ. சந்தானம் , ரத்தினம் ஆகியோரும் த.நா.குமாரசாமி , த.நா. சேனாபதி- தி.ஜானகிராமன் போன்றோரும் மொழிபெயர்ப்புச் செய்து கொடுத்தார்கள்.

அந்தக் காலத்தில் அன்னாகரீனா நாவலை பரிசுப்பதிப்பாக வெளியிட்டோம். அன்னா கரீனா 800 பக்கங்கள் . விலை ஏழு ரூபாய் , எட்டணா. பரிசுப்பதிப்பு இரண்டு தனி வால்யூம்கள் சேர்ந்து விலை ரூ 12.க்கு விற்கப்பட்டது.

நார்வே நாட்டு நாவலான ‘நிலவளம் ‘, அன்பு வழி ( ஸ்வீடிஷ் ), தபால்காரன் , தாசியும் , தபசியும் (பிரஞ்சு), அன்னாகரீனா, புத்துயிர் , ரோம் நகரப் பெண் ( இத்தாலி அன்னை (ருஷ்யா ), சித்தார்த்தன் ( ஜெர்மன் ), கடலும் கிழவனும் , திமிங்கில வேட்டை , அவமானச் சின்னம் ( அமெரிக்கா)….போன்ற மொழிபெயர்ப்பு நாவல்களை வெளியிட்டிருக்கிறோம்.

‘இறவாத புகழுடைய நூல்களும் நோபல் பரிசு நாவல்களும் ‘ என்று விளம்பரம் செய்வோம்…

பெரிய பெரிய வால்யூம்களாகப் புத்தகம் இருக்கும் . ஆனால் தூக்கிப் பார்த்தால் கனமாக இருக்காது . ஆன்டிக்’ பேப்பர் அல்லது ஃபெதர் பேப்பர் என்று சொல்வார்கள் . அந்த மெல்லிய தாளில் அச்சிட்டேன்“. என்று கோபாலன் குறிப்பிடுகிறார்.

••

இத்தனை அரிய நூல்களைத் தமிழுக்குக் கொண்டு வந்த அ.கி.கோபாலனின் சிறிய புகைப்படம் கூடக் கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஏதாவது பழைய இலக்கிய இதழ்களில் அவரது புகைப்படம் கிடைத்தால் அதை இணையத்தில் பகிர வேண்டுகிறேன்.

நன்றி

தமிழ் மொழிபெயர்ப்பு முன்னோடிகள்

முனைவர் மு.வளர்மதி

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

0Shares
0