ஆகஸ்ட் மாதக் காதல்

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் புதிய நாவல் Until August யை வாசித்தேன், அவர் மறைந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்பு வெளியாகியுள்ளது.

2002ல், மார்க்வெஸிற்கு டிமென்ஷியா இருப்பது கண்டறியப்பட்டது. நினைவு மறத்தலுக்கு ஆளான மார்க்வெஸால் அதன்பிறகு எதையும் எழுத இயலவில்லை. அவரது கடைசி நாட்களில் குடும்ப உறுப்பினர்களையே அடையாளம் கண்டு கொள்ள முடியாதவராக இருந்தார் என்கிறார்கள்.

எழுத்தாளனின் ஒரே சொத்து நினைவுகள் தான். அது மறையத்துவங்கும் போது அவன் இறக்கத் துவங்குகிறான். மறதியோடு நடக்கும் போராட்டம் தான் எழுத்து.

மார்க்வெஸ் 1999 ஆம் ஆண்டு இந்த நாவலை எழுத துவங்கினார். 2003ல் இந்த நாவலின் முதல் அத்தியாயம் பத்திரிக்கையில் வெளியானது. பின்பு நாவல் சரியாக வரவில்லை என்று அவரே வெளியிட மறுத்துவிட்டார்.

2012ல் உடல் நலிவுற்று மரணப்படுக்கையில் இருந்த போது நாவலை ஒரு போதும் வெளியிடக்கூடாது என்றே குடும்பத்தினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் இன்று அவரது இரண்டு மகன்களும் நாவலை வெளியிட்டுள்ளார்கள். நாவலை வெளியிட வேண்டாம் என்று மார்க்வெஸ் எடுத்த முடிவு சரியே. அவரது மகன்கள் துரோகம் செய்துவிட்டார்கள் என்று மார்க்வெஸின் தீவிர வாசகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்

இது குறித்து நாவலின் முன்னுரையில் அவரது இரண்டு மகன்களும் விளக்கம் அளித்திருக்கிறார்கள். அத்தோடு தந்தையிடம் நாவலை வெளியிட்டதற்காக மன்னிப்பும் கேட்டிருக்கிறார்கள்.

பாவம் மார்க்வெஸ். இறந்தவரால் என்ன செய்துவிட முடியும். ஒருவேளை அவரது மனைவி உயிரோடு இருந்திருந்தால் இதனை அனுமதித்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது

அவரது தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலைத் திரைப்படமாக்க அமெரிக்க தயாரிப்பாளர்கள் முன்வந்த போது பெரும்பணம் கிடைக்கும் என்றாலும் வாசகர் மனதில் நாவல் ஏற்படுத்திய சித்திரத்தை மாற்ற விரும்பவில்லை என்று மார்க்வெஸ் மறுத்துவிட்டார். அது போன்றதே இந்த நாவல் வெளியாக வேண்டாம் என்பதற்கான காரணமும்.

ஒரு எழுத்தாளன் வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்தவற்றை அவன் மறைவிற்குப் பின்பு வெளியிடலாமா என்பது குறித்து வாதப்பிரதிவாதங்கள் நடந்து வருகின்றன. இரண்டு பக்கமும் நிறைய உதாரணங்களைக் காட்டுகிறார்கள்.

பதிப்பாளர்கள் தங்களுக்குச் சாதகமாகக் காஃப்காவை சொல்கிறார்கள். அவர் தனது மறைவிற்குப் பின்பு தனது கையெழுத்துபிரதிகள் யாவற்றையும் எரித்துவிடும்படி நண்பர் மாக்ஸ் பிராடிடம் சொல்லியிருந்தார். ஆனால் அதை மாக்ஸ் பிராட்  காப்பாற்றவில்லை. அவரது படைப்புகள் அச்சாக்கபட்டு உலகின் கவனத்தைப் பெற்றதோடு காஃப்காவிற்கு அழியாப் புகழைத் தேடிக் கொடுத்தன. இது போல நபகோவ். டிக்கன்ஸ் எனப் பலரது படைப்புகள் அவரது மறைவிற்குப் பின்பும் வெளியாகியுள்ளன. படைப்பை வாசகர்கள் முடிவு செய்யட்டும். நாம் தடுக்க வேண்டாம் என்கிறார்கள் பதிப்பு துறையினர்..

காஃப்கா வெளியிட வேண்டாம் என்ற காரணமும் மார்க்வெஸ் வேண்டாம் என்று சொன்ன காரணமும் ஒன்றில்லை.

பொதுவாக நாவலாசிரியர்கள் எல்லோரிடமும் ஒன்றிரண்டு முடிக்கபடாத நாவல்கள் கைவசமிருக்கும். தான் விரும்பி எழுதிய படைப்பு என்ற போதும் ஒரு கட்டத்தில் பிடிக்காமல் போய்விடும் அல்லது முடித்தபிறகு திருப்தியின்மை ஏற்படும். அது போன்ற தருணங்களில் அவற்றை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்துவிடுவார்கள். கடைசிவரை அதனை வெளியிடக் கூடாது என்பதிலும் கறாராக இருப்பார்கள்.

மார்க்வெஸ் உயிரோடு இருந்த வரை இந்த நாவலும் அப்படி உலகம் அறியாமல் தானிருந்தது. அவர் 2012ல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நாட்களில் ஸ்பானிய பத்திரிக்கைகள் புதிய நாவல் வெளியாகப் போவதாகச் செய்தி வெளியிட்டுப் பரபரப்பு ஏற்படுத்தின. ஆனால் மார்க்வெஸ் நலமடைந்து வீடு திரும்பியதும் அதை மறுத்துவிட்டார்.

மார்க்வெஸின் மறைவிற்குப் பிறகு அவரது கடிதங்கள், நாட்குறிப்புகள். புகைப்படங்கள், கையெழுத்துப்பிரதிகள் யாவும் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தால் கையகப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மார்க்வெஸ் வெளியிட வேண்டாம் என்று சொன்ன நாவலை ஏன் இப்போது வெளியிட்டிருக்கிறாகள்.

உலகெங்கும் உள்ள மார்க்வெஸின் தீவிர வாசகர்களின் விருப்பத்திற்காக என்று பதிப்பகம் சொல்கிறது அது உண்மையில்லை. புத்தகச் சந்தையில் இன்றும் மார்க்வெஸ் நட்சத்திர எழுத்தாளர். அவரது மறைவிற்குப் பிறகு இப்படி ஒரு நாவலை வெளியிடுவதன் மூலம் பெரும்பணம் சம்பாதித்துவிட முடியும். அதையே அவரது இரண்டு மகன்களும் செய்திருக்கிறார்கள்.

முழுமை அடையாத நாவல் என்பதைப் படித்தவுடன் உணர்ந்துவிடுகிறோம். பொதுவாகத் தனது நாவல்களை மார்க்வெஸ் நாலைந்து முறை திருத்தம் செய்வது வழக்கம். அது போலவே ஒரு நாவலை எழுதி முடிக்கப் பல ஆண்டுகளும் எடுத்துக் கொள்வார். இந்த நாவலில் அப்படியான திருத்தங்கள் நடக்கவில்லை.

மார்க்வெஸின் மொழி நடை மாறியுள்ளது. அவருக்கே உரித்தான சில கவித்துவ வாக்கியங்களும், தனித்துவமான நிகழ்வுகளையும் தவிர்த்தால் இந்த நாவல் ஒரு சராசரியான படைப்பே.

இதனைக் குறுநாவல் என்றே சொல்ல வேண்டும். ஆறே அத்தியாயங்கள். 46 வயதுள்ள அனா மக்தலேனா பாக் என்ற பெண்ணை மையமாகக் கொண்டே நாவல் எழுதப்பட்டிருக்கிறது. நாவலில் அவளது குடும்பமே இசையில் ஆர்வம் கொண்டது. இசைக்கலைஞர்களைக் கொண்டது- ஆகவே மார்க்வெஸ் இசைமேதை செபாஸ்டியன் பாக்கின் மனைவி பெயரை அவளுக்கு வைத்திருக்கிறார். பாடகி அனா மக்தலேனா பாக் தான் உண்மையில் பாக்கின் இசைக்கோர்வைகளை உருவாக்கினாள் என்றொரு சர்ச்சையும் நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆகவே அந்தப் பெயர் புனைவின் சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது.

ஒரு பெண் கதாபாத்திரத்தை முதன்மைப்படுத்தி மார்க்வெஸ் நாவல் எதையும் எழுதியதில்லை. மார்க்வெஸ் சிறுகதைகளில் ஒன்றாகவே இதனை வகைப்படுத்த முடியும். அதிலும் ஒரு சிக்கல். இதே போன்று கல்லறைத் தோட்டத்திற்கு அஞ்சலி செலுத்த வரும் பெண்ணைப் பற்றி முன்பே எழுதியிருக்கிறார். வெளிப்படையான பாலுறவு நிகழ்வுகள் இதுவரை அவர் எழுதாதது.

கி.ராஜநாராயணன் தனது 98 வயதில் எழுதிய அண்டரெண்டப் பட்சி நாவலும் போன்று காமவேட்கையைத் தான் பேசுகிறது. உயிரினங்களின் காம வேட்கை எப்படி உருவானது என்பதையே கிரா விவரிக்கிறார்.  

மார்க்வெஸின் முந்தைய நாவல்களில் இல்லாத சிறப்பு அம்சமாக இதில் நான் காணுவது அனா மக்தலேனா பாக் படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள். அவள் ஒரு இடத்தில் டிராகுலா நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறாள். இன்னொரு அத்தியாயத்தில் ஹெமிங்வே படிக்கிறாள். வேறு ஒரு இடத்தில் டேனியல் டீபோ படிக்கிறாள். மீமாயப்புனைவுகளை வாசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறாள். யதார்த்த வாழ்க்கை அவளுக்குப் போதவில்லை. அதிலிருந்து விடுபட விரும்புகிறாள். நாவலும் அதையே பேசுகிறது

நாவலை வாசித்தவுடன் மூன்று படைப்புகள் என் நினைவில் வந்து போயின. ஒன்று லூயி புனுவலின் Belle de Jour திரைப்படம். அதில் வரும் கதாநாயகி செவரினைப் போலவே அனா மக்தலேனா இருக்கிறாள். நடந்து கொள்கிறாள். இரண்டவாது ஆன்டன் செகாவின் (The Lady with the Dog )நாய்காரச் சீமாட்டி கதை. அதில் திருமண வாழ்வில் மகிழ்ச்சியற்ற அன்னா செர்ஜியேவ்னா யால்டாவிற்கு வருகிறாள். அங்கே டிமிட்டி குரோவ் என்ற முன்பின் அறியாத ஆணுடன் பழகுகிறாள். அவளது மனநிலையின் வெளிப்பாட்டினையும் அனா மக்தலேனாவிடம் காண முடிகிறது. மூன்றாவது யாசுனாரி கவபத்தாவின் Snow Country, இதில் வரும் சுகப்பெண்களைப் போலவே அனா உறவு கொள்ளும் ஆண்களுக்குப் பெயர் கிடையாது. இந்த மூன்றும் மார்க்வெஸிற்கு நெருக்கமான படைப்புகள். அவற்றின் மறைமுகப் பாதிப்பை நாவலில் உணர முடிகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி அனா மக்தலேனா தனது அன்னையின் கல்லறையில் மலர்கள் வைப்பதற்காகக் கரீபியத் தீவிற்கு ஒரு பயணத்தை மேற்கொள்கிறாள். அதில் தான் நாவல் துவங்குகிறது. அதே நாள் அதே படகு. அதே பூக்கடை அதே சூரியன் என எதுவும் மாறாது. தீவில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது அன்னையின் கடைசி ஆசை.

அப்படி ஒரு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு ஆணைச் சந்திக்கிறாள்.  உரையாடுகிறாள். முடிவில் அவனுடன் உடலுறவு கொள்கிறாள். அந்த அனுபவம் அவளது உடலை விழித்துக் கொள்ள வைக்கிறது. ஊர் திரும்பிய பின்பும் அந்த நினைவுகளை மறக்க முடியவில்லை. இதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஒரு ஆணைத் தேடி உறவு கொள்ளத் துவங்குகிறாள். இந்த வேட்கையின் பயணத்தையே சிறுநாவலாக மார்க்வெஸ் எழுதியிருக்கிறார்.

நாவலில் வரும் அனாவின் கணவன். மகள் இருவரும் முழுமை பெறவில்லை. அன்னைக்கு செய்யப்படும் நினைவஞ்சலி என்பது இறந்தவருடன் நடக்கும் உரையாடல் என்றே மார்க்வெஸ் குறிப்பிடுகிறார். மரணத்தின் முன்னால் சொல்லப்பட்ட காதல்கதை என்றே இதனையும் சொல்வேன். ஆகஸ்ட் மாதம் என்பது இருவேறு பருவநிலைகள் ஒன்று கலந்த காலம். அதன் குறீயீடு போலவே அனா இருக்கிறாள்.

அவரது மாய யதார்த்தக் கூறுகள் எதுவும் நாவலில் கிடையாது. கவபத்தாவின் நாவலை நினைவுபடுத்தும் மொழிநடை. மார்க்வெஸின் முந்தைய நாவலான Memories of My Melancholy Whores வரும் முதியவரின் மறுஉருவாக்கம் போலவே அனா மக்தலேனா உருவாக்கபட்டிருக்கிறாள். மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வின் சலிப்பு ஆண் பெண்ணை என்ன செய்கிறது என்பதைப் பற்றி ஆன்டன் செகாவ் நிறையச் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அது போன்ற ஒரு முயற்சியாகவே இந்த நாவலைச் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16 அன்று புதிய ஆண் ஒருவனைத் தேடிக் கண்டுபிடித்து அவனுடன் உறங்கும் அனாவின் பயணம் ஒருவகையில் டிராகுலாவின் தேடலே. டிராகுலா தீண்டும் பெண்கள் நித்யமாகிவிடுகிறார்கள், டிராகுலாவின் காதல் பொய்யானதில்லை.

நாவலை வாசித்து முடிக்கும் போது கவபத்தாவின் உறங்கும் அழகிகள் இல்லம் நாவலில் வரும் ஒரு பெண்ணின் கதையை தான் மார்க்வெஸ் வேறுவகையில் எழுதியிருப்பதாகவே உணர்ந்தேன்.

மார்க்வெஸ் இந்த நாவலில் வேறு என்ன எழுத விரும்பினார் என்று தெரியவில்லை. வழக்கமாக அவரது நாவல்களில் காணப்படும் விநோத நிகழ்வுகள், அபூர்வமான கதாபாத்திரங்கள், கவித்துவ தருணங்கள் எதுவும் இதில் கிடையாது. ஒருவேளை அவற்றை எழுத முடியாமல் மறதி அவரை வென்றுவிட்டதோ என்னவோ.

.

0Shares
0