ஆசிய சினிமா இதழ்.

வீட்டில் ஏதோ புத்தகம் ஒன்றைத் தேடும் போது வாங்கிப்படித்து பாதுகாத்து வைத்திருந்த Cinemaya இதழ்கள் கையில் கிடைத்தன.

எனது கல்லூரி நாட்களில் விரும்பி வாசித்த சினிமா இதழ் Cinemaya.

டெல்லியிலிருந்து காலாண்டிதழாக வெளியானது. இந்த இதழை வாங்குவதற்காகவே திருவனந்தபுரம் போய் வருவேன். விருதுநகரிலிருந்து பாசஞ்சர் ரயில் மூலம் திருவனந்தபுரம் செல்வது பிடித்தமானது. மாதம் இரண்டு முறையாவது சென்றுவிடுவேன். நாலரை மணி நேரப்பயணம். மழைக்காலத்தில் பயணம் செல்லும் போது வழியெங்கும் பசுமை ததும்பி வழிய சிலுசிலுவெனக் காற்று வீசும். பெரும்பாலும் அந்த ரயிலில் கூட்டமிருக்காது.

திருவனந்தபுரத்திலுள்ள புத்தகக் கடைகளுக்குப் போவதுடன் எழுத்தாளர் நகுலன் வீட்டிற்குச் சென்று அவரைப் பார்ப்பதும் உண்டு.

ஆசிய சினிமாவிற்காக உருவாக்கப்பட்ட இதழ் Cinemaya. வெகு நேர்த்தியான வடிவமைப்பு. தீவிரமான கட்டுரைகள். சினிமா இயக்குநர்களின் விரிவான நேர்காணல்கள் என அந்தப் பழைய இதழ்களைப் புரட்டிப் பார்க்கையில் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள் என்று பாராட்டத் தோன்றுகிறது.

அருணா வாசுதேவ் அதன் ஆசிரியராக இருந்தார் 1988 ஆம் ஆண்டில் Cinemaya. வெளியிடப்பட்டது. ஆசிய சினிமா குறித்துச் சர்வதேச அளவில் கவனம் பெற வைப்பதே இந்த இதழின் முக்கிய நோக்கம். அவர்களே பின்பு ஆசிய சினிமாவிற்கான திரைப்படவிழாவையும் ஒருங்கிணைத்தார்கள்.

ஈரானிய சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் பற்றி இந்த இதழில் தான் விரிவாக அறிந்து கொண்டேன். இது போலச் சீன, ஜப்பானிய சமகாலத் திரைப்படங்கள் பற்றியும் இந்தியாவில் மாற்றுசினிமாவை உருவாக்க முயன்ற திரைப்பட இயக்குநர்கள் குறித்தும் சினிமயா தான் அறிமுகம் செய்து வைத்தது.

அப்போது சர்வதேச திரைப்பட விழா ஆண்டுக்கு ஒரு மாநிலத்தில் நடைபெறுவது வழக்கம். இதனால். ஹைதராபாத், திருவனந்தபுரம், பெங்களூர், மும்பை, கல்கத்தா, டெல்லி எனப் பயணம் செய்து உலகத் திரைப்படங்களைப் பார்த்து வருவேன்.

திரைப்படவிழா அரங்கில் சினிமயா இதழ்கள் விற்பனைக்குக் கிடைக்கும். தவறவிட்ட இதழ்களை அங்கே வாங்கியிருக்கிறேன். 15 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இதழ் வெளியானது.

இந்த இதழில் வெளியான சிறந்த கட்டுரைகளைத் தொகுத்து Asian Film Journeys எனத் தனி நூலாகவும் வெளியிட்டிருக்கிறார்கள்.

••

0Shares
0