ஆசையின் மலர்கள்

டேவிட் லீன் இயக்கிய Brief Encounter ஒரு அழகான காதல் கதை. காதலிக்கும் இருவரும் நடுத்தரவயதைச் சேர்ந்தவர்கள். தற்செயலாக ஏற்படும் நட்பு காதலாக மாறுகிறது. ஒரு ரயில் நிலையத்தின் பின்புலத்தில் இப்படி ஒரு அழகான காதல்கதையை உருவாக்கியிருப்பது எழுத்தாளர் நோயல் கோவர்ட்டின் தனித்துவம். ரஷ்ய நாவல் ஒன்றைப் படிப்பது போலவே இருக்கிறது.

மில்ஃபோர்ட் செல்வதற்காக லாரா ரயில் நிலையத்தில் காத்திருப்பதில் படம் துவங்குகிறது. அப்போது நாம் காணும் காட்சி படத்தின் பிற்பகுதியில் மறுபடியும் இடம்பெறுகிறது. ஆரம்பக் காட்சியின் முக்கியத்துவத்தை அப்போது தான் முழுமையாக உணருகிறோம்.

மில்ஃபோர்டில் வசிக்கும் லாரா திருமணமானவள். கணவன் குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழுகிறாள். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்காக அருகிலுள்ள நகருக்குச் செல்கிறாள், தேவையான ஷாப்பிங்கை முடித்துவிட்டு ரயில் நிலையத்திற்குத் திரும்பி வந்து அங்குள்ள சிற்றுண்டி  நிலையத்தில்  காத்திருப்பது வழக்கம்.

ஒரு நாள் தற்செயலாகப் பிளாட்பாரத்தில் காத்திருக்கும் போது ரயிலின் கரித்தூள் கண்ணில் விழுந்துவிடுகிறது. தண்ணீர் வைத்துச் சுத்தம் செய்தாலும் போகவில்லை. தற்செயலாக அங்கே வரும் டாக்டர் அலெக் ஹார்வி, அவள் கண்ணில் விழுந்த கரித்துகளை அகற்றி உதவுகிறார். அவர்களுக்குள் நட்பு உருவாகிறது

அலெக் ஹார்விக்கும் மனைவி பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர் நகர மருத்துவமனை ஒன்றில் பணியாற்றுகிறார். தற்செயலாக லாராவுடன் ஏற்பட்ட நட்பினை அவர் தொடர விரும்புகிறார். மறுபடியும் அவளைச் சந்திக்கும் போது இருவரும் ஒன்றாகத் திரைப்படம் காணப்போகிறார்கள். சேர்ந்து மதிய உணவிற்குச் செல்கிறார்கள். இரவு ஒன்றாக ரயில் நிலையம் திரும்புகிறார்கள்

ரயில்வே சிற்றுண்டி நிலையத்தினை நடத்தும் பெண். உதவி செய்யும் சிறுமி.  அங்கு வரும் டிக்கெட் பரிசோதகர். காவலர்கள். நடைபெறும் எனச் சின்னஞ்சிறு நிகழ்வுகள் அழகாகப் பின்னப்பட்டிருக்கின்றன

 அலெக் ஹார்வி, போக வேண்டிய ரயில் வரும்வரை அவளுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அவளுக்கும் அலெக் ஹார்வியின் பேச்சும் நடத்தையும் பிடித்துப் போகிறது. இந்த நட்பை அவளது கணவன் மற்றும் பிள்ளைகள் அறிவதில்லை. உலகம் அறியாமல் மறைத்துக் கொண்டுவிடுகிறாள்

அதன்பிறகு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். ஒன்றாகப் பொழுதைச் செலவு செய்கிறார்கள். ஒருவர் மீது மற்றவர் காதல் கொண்டிருப்பதை உணருகிறார்கள். ஒருநாள் அலெக் ஹார்வி, தன் காதலை வெளிப்படுத்துகிறான். அவளும் அதை ஏற்றுக் கொள்கிறாள்.

நல்ல கணவன், அழகான குழந்தைகள் இருந்த போதும் லாரா காதலை விரும்புகிறாள். காதலை வெளிப்படுத்துகிறாள். டாக்டரும் அப்படியே.  மருத்துவமனையில் இருந்து அவளைச் சந்திக்க டாக்டர் ஒடோடி வரும் காட்சி மனதில் உறைந்துவிட்டது. எவ்வளவு சந்தோஷம். எத்தனை எதிர்பார்ப்பு.

இருவருக்குமே தங்கள் உறவால் குடும்பம் பாதிக்கப்படும் என்று அறிந்திருக்கிறார்கள். ஆனால் அதற்காக  காதலை விலக்கிக் கொள்ள முடியவில்லை. அலெக் ஹார்வி ஒரு நாள் காரில் லாராவை அழைத்துக் கொண்டு கிராமப்புறத்தை நோக்கிப் போகிறான். ஒரு பாலத்தில் நின்றபடியே இருவரும் பேசிக் கொள்கிறார்கள். அந்தக் காட்சியில் இளம் தம்பதிகள் போலவே நடந்து கொள்கிறார்கள். மிக அழகான காட்சியது

ஒரு நாள் அவர்கள் அலெக்கின் நண்பரும் சக மருத்துவருமான ஸ்டீபனுக்குச் சொந்தமான ஒரு பிளாட்டுக்குச் செல்கிறார்கள், ஆசையோடு கட்டி அணைத்துக் கொள்கிறார்கள். எதிர்பாராத விதமாக ஸ்டீபன் வந்துவிடவே . அவமானமும் வெட்கமும் கொண்ட லாரா, பின் படிக்கட்டு வழியே தப்பி ஒடுகிறாள்.  கோபமும் ஆத்திரமுமாக தெருக்களிலும் ஓடுகிறாள். தனியே ஒரு இடத்தில் அமர்ந்து புகைபிடிக்கிறாள். போலீஸ்காரன் அவளை விசாரிக்கிறான். குழப்பத்துடன் அவள் ரயில் நிலையம் திரும்பிப் போகிறாள். கடைசி ரயில் பிடித்து வீடு போய்ச் சேருகிறாள். அவளது தடுமாற்றம் மிகச்சிறப்பாக விவரிக்கபடுகிறது.

இவர்களின் காதல் உறவு என்னவானது என்பதைப் படத்தின் பிற்பகுதி விவரிக்கிறது

படத்தின் பெரும்பகுதிக் காட்சிகள் ரயில் நிலையத்தின் சிற்றுண்டிச் சாலையிலே நடக்கிறது. இருவரின் குடும்பத்திலும் பிரச்சனைகள் இல்லை. மகிழ்ச்சியான வாழ்க்கையே நடக்கிறது. ஆனாலும் அவர்கள் எதிர்பாராத தருணத்தில் சந்தித்துக் காதல் கொள்கிறார்கள். அதை நினைத்து ஏங்குகிறார்கள்.

டேவிட் லீன் படத்தை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்.. மேடை நாடகமாக நிகழ்த்தப்பட்டபோது நேர்கோட்டில் தான் கதை செல்கிறது. ஆனால் திரைப்படத்திற்கெனக் கதையின் முடிவில் படத்தைத் தொடங்கிக் கடந்தகாலத்தினைப் பின்னோக்கிக் கொண்டு சென்றது இயக்குநரின் தனித்துவம்

இது போலவே ரயில் நிலையக்காட்சிகள் அபாரமாக படமாக்கபட்டுள்ளன. குறிப்பாக பிளாட்பாரத்தில் தற்கொலை எண்ணத்துடன் வந்து நிற்கும் லாராவின் முகத்தில் படும் இருளும் வெளிச்சமுமான காட்சி சிறப்பானது. நிழலான சுரங்கப்பாதையில் அவர்கள் முத்தமிட்டுக் கொள்வது, கடைசி ரயிலில் அவள் தனியே செல்வது போன்றவை அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன.

செலியா ஜான்சன் மற்றும் ட்ரெவர் ஹோவர்ட் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

தண்டவாளங்கள் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்வது போலவே அவர்களின் காதலும் நடக்கிறது. லாரா அந்த உறவைப் பற்றிக் கற்பனை செய்கிறாள். அவளுக்கே தனது எண்ணங்களும் செயல்களும் புரியவில்லை. இழந்துவிட்ட இளமையை மறுபடி அடைவது தான் அவளது நோக்கமோ என்னமோ. அவள் மீது தீராத காதல் கொண்டிருந்தபோதும் டாக்டர் தான் பிரிவை முன்மொழிகிறார். அவர் விடைபெறும் காட்சி மறக்கமுடியாதது.

குளத்தில் எறிப்படும் கல் சலனங்களை ஏற்படுத்துவது போலப் புதிய நட்பு அவளுக்குள் நிறையக் கனவுகளை ஏற்படுத்துகிறது. அந்தக் கனவுகளை இதுவரை அவள் தன் கணவருடன் பகிர்ந்து கொண்டதில்லை. அவளுக்குள் இப்படியெல்லாம் ஆசையிருக்கிறது என்பதை அவளது குடும்பம் அறிந்திருக்கவில்லை . ஆனால் டாக்டரை சந்தித்த பிறகு அந்த ஆசையின் மலர்கள் அரும்புவதை அவள் உணருகிறாள். வசந்தகாலம் வந்தவுடன் மலர்கள் தானே அரும்புவதைப் போல இயற்கையான செயலாகக் கருதுகிறாள். லாரா தன் தோழியிடம் பொய் சொல்லும்படி போனில் கேட்கும் ஒரு காட்சியில் தான் குற்றவுணர்வு கொள்கிறாள். வேறு எங்கும் அவளிடம் குற்றவுணர்வு வெளிப்படுவதேயில்லை.

டாக்டரின் மனைவி மற்றும் பிள்ளைகள் படத்தில் காட்டப்படுவதில்லை. அவர்களை விட்டு விலகிப்போக டாக்டர் விரும்பவேயில்லை. ஆனால் இந்த இனிமையான விபத்து அவரை ஆசையின் பாதையில் செல்ல தூண்டுகிறது.

டாக்டரின் நண்பர் ஸ்டீபன் தன் அறையில் டாக்டருடன் பேசும் காட்சி மிக முக்கியமானது. தான் அவரது செய்கையால் ஏமாற்றம் அடைந்தேன் என்று ஸ்டீபன் சொல்வது பொருத்தமானது

மேடம் பவாரி, அன்னாகரீனினா போன்ற நாயகிகள் இதே பாதையில் நடந்து சென்றவர்கள். அவர்கள் காதலின் பொருட்டுக் குடும்பத்தை விட்டு விலகிப் போகிறார்கள். ஆனால் லாரா விலகிப்போகவில்லை.

தன்னைவிட்டு அவள் நீண்டதூரம் போய்விட்டதாக உணர்வதாக உணரும் லாராவின் கணவன் அவள் இப்போது திரும்பி வந்துவிட்டதாகச் சொல்லி அவளை அணைத்துக் கொள்கிறான்.

அவள் பயணித்த நாட்களும் காதல் நிகழ்வுகளும் உலகம் அறியாதவை. இனி வாழ்நாள் முழுவதும் அந்த நினைவுகள் ரகசியப் பெட்டகத்தினுள் பூட்டப்பட்டுவிடும். தனித்திருக்கும் பொழுதுகளில் அதை அவள் நினைவு கொண்டு கண்ணீர் சிந்தக்கூடும்.

••

0Shares
0