செசானின் நிலக்காட்சி ஓவியங்களைத் தியானம் என்று அழைத்தால் ரூசோவின் வனவாழ்வைச் சித்தரிக்கும் ஓவியங்களை மௌனவிழிப்புணர்வு என்று அழைக்கலாம்.

கையில் ஆரஞ்சு பழங்களுடன் உள்ள குரங்குகளை ஹென்றி ரூசோ மிக அழகாக வரைந்திருக்கிறார். ஆரஞ்சு தோட்டத்திலுள்ள அந்தக் குரங்குகளின் ஒளிரும் கண்களும் விநோத முகபாவமும் கனவுலகின் காட்சி போல உணரச் செய்கின்றன.
சுயமாக ஓவியம் வரையக் கற்றுக் கொண்டவர் ரூசோ. ஒவியப்பள்ளிகளில் பயிலாத ஓவியர்களைப் பிரெஞ்சு அகாதமி ஒதுக்கி வைத்திருந்த காலமது. ஆகவே ரூசோவின் ஓவியங்களை அகாதமி அங்கீகரிக்கவில்லை. இதனால் ரூசோ மனவருத்தம் கொண்டிருந்தார். அவரது கால கட்ட ஓவியர்களில் பிகாசோ போன்ற சிலரே அவரது மேதைமையை உணர்ந்து பாராட்டினார்கள். மற்றவர்கள் அவரை Sunday painter எனக் கேலி செய்தார்கள். ஆகவே அன்றைய முக்கிய ஓவியர்களை விட்டு விலகி தனியே வறுமையான சூழலில் ரூசோ ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தார்.
அவரது ஓவியங்களில் காணப்படும் இயற்கை நாம் கண்ணால் காணும் இயற்கையிலிருந்து மாறுபட்டது. கனவில் வெளிப்படும் இயற்கை போல விநோதமானது. குறிப்பாக மரங்களின் இலைகளைப் பாருங்கள். கூர்மையான, துல்லியமான அதன் தோற்றம் இப்போது தான் விழிப்படைந்தவை போலிருக்கின்றன.

அடர் பச்சை நிறத்தினையும் இளம் பச்சை நிறத்தினையும் அவர் சுடர் போல ஒளிரும்படியாகக் கையாண்டிருக்கிறார். ஓவியத்தில் நாம் காணும் மக்காக் குரங்குகள் சாதுவாக, தியானத்திலிருப்பது போலக் காட்சி தருகின்றன. குரங்கு என்றாலே சேஷ்டை என்று நம் நினைவில் பதிந்துள்ள பிம்பம் மாறிவிடுகிறது. இந்தக் குரங்குகள் இயற்கையின் பேரழகில் மயங்கி நிற்கின்றன. எதற்கோ ஏக்கம் கொண்டிருக்கின்றன.
பௌத்த ஓவியங்களில் இது போன்ற குரங்குகளைக் கண்டிருக்கிறேன். அவை போதிசத்துவரின் வடிவமாகச் சித்தரிக்கப்பட்டவை. ஹென்றி ரூசோவின் குரங்குகள் ஊசி இலைகளுக்கும் வெள்ளை மலர்களுக்கும் இடையில் அமர்ந்திருக்கின்றன. ஊசலாடுகின்றன. வெள்ளை மலர்களுடன் உள்ள மக்காக் குரங்குகளையும் பாருங்கள். கற்பனையும் யதார்த்தமும் ஒன்று கலந்த காட்சியாகத் தோற்றம் தருகின்றன.

வனவாழ்வை வியப்பூட்டும் விதமாகச் சித்தரித்தவர் ரூசோ. இதற்காக அவர் எந்தக் காட்டிற்கும் செல்லவில்லை. பாரீஸின் புற நகரக் காட்சிகளையும் மிருக காட்சி சாலையிலுள்ள விலங்குகளையும் அவதானித்தே ஓவியங்கள் வரைந்திருக்கிறார். அவரது காடுகள் ஒரு நகரவாசியின் கனவுகளாகும், ஆகவே கனவு நிலையை மையமாகக் கொண்ட ஓவியங்களை முன்னெடுத்த சர்ரியலிஸ்டுகள் அவரைக் கொண்டாடினார்கள். குறிப்பாக உறங்கும் ஜிப்சி பெண் ஓவியம் இன்று வரை மிகச்சிறந்த கனவுக்காட்சியாகக் கொண்டாடப்படுகிறது..
ரூசோவின் குரங்குகள் மனிதப் பண்புகளைக் கொண்டிருக்கின்றன. காதலுற்ற மனிதனைப் போலவே அவை ஆரஞ்சு பழத்துடன் காட்சிதருகின்றன. குரங்கும் ஆரஞ்சு பழங்களும் என்பதே கவித்துவமான உருவகம் தானே. ரூசோ தனது கலைக்கூடத்தில் வனவிலங்குகள் பற்றி ஆல்பம் ஒன்றை வைத்திருந்தார். Galeries Lafayette. அங்காடியால் வெளியிடப்பட்ட அந்த தொகுப்பின் துணை கொண்டே விலங்குகளை வரைந்திருக்கிறார்.
ரூசோ சுங்க இலாக்காவில் வேலை செய்தவர். ஆகவே ஓய்வு நேரத்தில் மட்டுமே ஓவியம் வரைந்தார். அவரது மேலதிகாரிகளில் சிலர் இதற்காக வேலை நெருக்கடியில்லாத சுங்கச்சாவடிகளை அவருக்கு அளித்தார்கள். அப்படியும் அவரால் தொடர்ந்து வேலை செய்ய இயலவில்லை. ஆயிரம் பிராங்குகள் ஓய்வூதியம் கிடைக்கும் என்பதால் வேலையிலிருந்து விடுபட்டு முழுநேரமாக ஓவியம் வரையத் துவங்கினார்.

இந்த நாட்களில் அவர் ஓவியம் வரைவதற்கான வண்ணங்களைக் கூடக் கடனாகவே வாங்க வேண்டியிருந்தது. மகனுடன் சிறிய ஒற்றை அறையில் வசித்து வந்தார். அங்கே ஒரேயொரு படுக்கை மட்டுமே இருந்தது. 1897 இல் அவரது மகனின் மரணத்திற்குப் பிறகு விதவையான ஜோசபின் நூரியை மணந்தார். அவரும் ஏழை. அவர்கள் முறையாகத் திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை.
வறுமை முற்றிய நிலையில் பணம் சம்பாதிக்க வேண்டி The Revenge of a Russian Orphan என்ற நாடகத்தை எழுதினார், நகராட்சி நடத்திய ஓவியப்போட்டியில் பங்குபெற்றார். சிறுவர்களுக்கு வயலின் கற்றுக் கொடுத்தார். அப்படியும் போதுமான பணத்தைச் சம்பாதிக்க இயலவில்லை. ஜோசபின் ஒரு ஸ்டேஷனரி கடையைத் திறந்தார், அங்கு ரூசோவின் ஓவியங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒரு வேளை உணவு கிடைக்கக் கூடும் என்பதற்காகச் சாலையோரம் அவர் வயலின் வாசிப்பதைத் தான் கண்டுள்ளதாக ரெமி டி கோர்மான்ட் எழுதியிருக்கிறார்.
நீண்டகாலப் போராட்டத்தின் பிறகே அவருக்கான அங்கீகாரம் கிடைத்தது. அவரது ஓவியங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன. விற்பனையாகின. பிகாசோ அதற்கு முக்கியக் காரணியாக இருந்தார்.
ரூசோவின் கடைசி நாட்கள் மிகத்துயரமானவை. அவர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வலியோடு போராடிக்கொண்டிருந்தார். தனது படுக்கையைச் சுற்றும் ஈக்களைத் துரத்துவதற்குக் கூட அவரிடம் வலிமையில்லை.
அவர் 1910, செப்டம்பர் 4 அன்று நினைவு தப்பிய நிலையில் மருத்துவமனை வார்டில் இறந்தார். ஏழைகளைப் புதைப்பதற்காகப் பாக்னியூக்ஸ் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். மூன்று வருடங்களுக்குப் பின்பு அவரது பெருமையை அறிந்தவர்கள் அவருக்காகப் புதிய கல்லறை ஒன்றை உருவாக்கினார்கள். அங்கே அவரது உடல் மாற்றப்பட்டது.
வறுமையும் நெருக்கடியுமான வாழ்விலிருந்து ரூசோ எப்படி இத்தனை கனவு பூர்வமான, அசாத்தியமான கலை அழகுடன் கூடிய ஓவியங்களை வரைந்தார் என்பது புதிராக இருக்கிறது
கலைமனம் நெருக்கடிகளைத் தாண்டி செயல்படக்கூடியது. புற உலகின் பிரச்சனைகள் அதிகமாகும் போது அது கற்பனையில் சஞ்சரிக்கத் துவங்குகிறது. ஆழ்ந்த கனவு நிலையைத் தொடுகிறது. படைப்பாற்றலின் உச்சம் வெளிப்படுகிறது.

ரூசோவின் வாழ்க்கையை அறிந்து கொள்ளும் போது ஆரஞ்சு பழங்களைக் கையில் ஏந்தி நிற்கும் குரங்கு அவரது மாற்று உருவம் போலத் தோன்றுகிறது.
ரூசோ தனது 64 வது வயதில் லியோனி என்ற 55 பெண்ணைக் காதலித்தார். அவளுக்குக் காதல் கடிதங்களை எழுதினார். அவள் கண்டுகொள்ளவேயில்லை. இந்தப் புறக்கணிப்பு அவரை வருத்தியது. இந்தக் காலகட்டத்தில் அவர் வரைந்த ஓவியங்களில் காணப்படும் வனவிலங்குகள் சாந்தமாக, ஏக்கமானதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன
நகரத்திற்குக் கானகத்திற்குமான முக்கிய வேறுபாடு நகரம் பாதுகாப்பானது. பரபரப்பானது. புதுமைகள் நிறைந்தது. ஆனால் கானகம் என்பது பாதுகாப்பற்றது. பயம் தரக்கூடியது. வெறி கொண்ட விலங்குகள் வாழக்கூடியது என்றே பொதுப்புத்தியில் உருவாகியிருந்தது. இந்த எதிர்நிலைகளை ரூசோ தனது ஓவியங்களில் மாற்றியமைக்கிறார். அவரது கானகம் அச்சமற்றது. வசீகரமானது. அமைதியும் பேரழகும் கொண்டது. நகரமோ கானகமோ அதை இயக்குவது சமநிலையற்ற போராட்டம் தான் என்பதை ரூசோ சுட்டிக்காட்டுகிறார்.
மிருக காட்சி சாலையின் கூண்டிற்குள் அவர் கண்ட விலங்குகள் அவரது ஓவியத்தில் சுதந்திர வெளியில் உலவுகின்றன. விலங்குகளின் கண்களை அவர் மிகவும் தீர்க்கமாக வரைந்திருக்கிறார்.
ரூசோ இசைக்கலைஞர் என்பதால் இயற்கையை வயலினிலிருந்து கசியும் இசையைப் போல தூயதாக உருவாக்கியிருக்கிறார். அதன் காரணமாகவே விநோத மலர்களும் விழிப்புற்ற இலைகளும் மெய்மறந்த குரங்குகளும் பசித்த புலியும், நிசப்தமான பறவைகளும் கொண்டதாக அவரது வனவுலகம் உருவாகியிருக்கிறது.
இந்த ஓவியங்களை ஆழ்ந்து அவதானிக்கும் போது நாம் கேட்பது ரூசோவின் இசையைத் தான். அந்த இசை தான் வண்ணங்களாக உருமாறியிருக்கிறது.
••