டிசம்பர் இசைக்கச்சேரிகளில் எனக்குப் பிடித்தமான சில கச்சேரிகளுக்குச் செல்வது வழக்கம். என் மனைவி பெரும்பான்மை கச்சேரிகளுக்குப் போய் விடுவார். நாங்கள் நேற்று அருணா சாய்ராம் அவர்களின் கச்சேரி கேட்பதற்காகக் காமராஜர் அரங்கம் சென்றிருந்தோம்.
சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி அங்கே நடைபெறுகிறது. அரங்கினுள் நுழைய முடியாதபடி பெருந்திரளான கூட்டம். முன்பதிவு செய்திருந்த இருக்கைக்குப் போக முடியவில்லை. ஒரே தள்ளுமுள்ளு. நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமண் ஸ்ருதியினர் ஒழுங்காக எந்த ஏற்பாடும் செய்யவில்லை. நுழைவாயிலில் நின்ற காவலர்கள் ஆட்களைப் பிடித்துத் தள்ளிவிடவே பலரும் கீழே விழுந்தார்கள். அதில் ஒரு பெண்மணிக்கு எழுபது வயது. அவர் தரையில் விழுந்துகிடப்பதை நிர்வாகிகள் பொருட்படுத்தவில்லை.
அதைவிட மோசம் கிடைத்த இருக்கைகளில் ஆட்கள் அமர்ந்து கொண்டார்கள். ஒதுக்கப்பட்ட இருக்கை கொண்டவர்கள் நிகழ்ச்சி முழுவதும் சண்டை போட்டுக் கொண்டு நின்றபடியே இருந்தார்கள். நிர்வாகிகள் ஒருவரும் உதவிக்கு வரவில்லை.
என் வாழ்நாளில் முதன்முறையாக மேடையில் பாடகரைச் சுற்றி பார்வையாளர்களைத் திரளாக உட்கார வைக்கப்பட்டதைக் கண்டேன்.
அருணா சாய்ராம் மடியில் ஒரு குழந்தையை உட்கார வைக்கவில்லை. அது ஒன்று தான் குறை.
இந்தக் குளறுபடிகள் போதாது என்று மோசமான ஒலிபெருக்கி. அருணா சாய்ராம் பாடினால் இரண்டு குரலாக ஒலிக்கிறது. அவரே இதைச் சகிக்க முடியாமல் ஆடியோவை சரி செய்யுங்கள் என்று மன்றாடினார். ஆனால் நிகழ்ச்சி முடியும் வரை ஒன்றும் நடக்கவில்லை.
இரண்டு குரல்களில் அருணா சாய்ராம் பாடுவதைத் தான் பொதுமக்கள் கேட்டார்கள். ஆவிகள் ஒன்று கூடிப் பாடுவது போலவேயிருந்தது.
இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை நடத்துகிறவர்கள் இத்தனை மோசமான ஆடியோ அமைப்புகள் வைத்திருப்பது அராஜகம். தொழில்நுட்ப வசதிகள் மிக நவீனமாகியுள்ள சூழலில் இன்றும் யாரோ ஒரு மைக்செட் அமைப்பவர் உட்கார்ந்து கொண்டு ஒலியளவைக் கூட்டுவதும் குறைப்பதும் மோசமான ஸ்பீக்கர்களைக் கொண்டு ஒலிபரப்புச் செய்வதும் மட்டமான விஷயம்.
கச்சேரியில் ஒரு பாடலைக் கூட ஒழுங்காகக் கேட்கமுடியவில்லை. அரங்கினுள் அத்தனை கூச்சல். சண்டை. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ஒருவர் கூட இதைக் கண்டு கொள்ளவில்லை.
உணவுத்திருவிழா என்ற பெயரில் மகா மட்டமான உணவைத் தருகிறார்கள். படுமோசமான காபி.
இசைக்கச்சேரிகளை சந்தைக்கடை போலாக்கிவிட்டார்கள்.
இனி சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டேன். அருணா சாய்ராமை சிடியில் கேட்டுக் கொள்ள வேண்டியது தான்.
•••