இசைக்குப் பின்னால்

கோ.புண்ணியவான் – மலேசியா

சஞ்சாரம் நாவல் வாசிப்பனுபவம்

நாவல் வடிவில் யாரும் எழுதிராத நாதஸ்வர தவில் கலைஞர்களின் கதையை ‘சஞ்சாரம்’ சொல்லிச் செல்கிறது. அச்சமூகத்தின் இந்த நூற்றாண்டின் வளர்சிதை மாற்றங்களை நேர்த்தியாகக் காட்சிப்படுத்திக்கொண்டே போகிறது நாவல். தற்காலக் கலைஞர்கள் எவ்வாறு நலிந்த சமூகமாகத் தள்ளிவைத்துப் பார்க்கப்பட்டார்கள் என்பதைத் தன் நுணுக்கமான கதைப்பின்னலால் சிக்கலில்லாமல் விவரித்துக்கொண்டே செல்கிறா எஸ் ரா. உண்மையிலேயே, பூ வேலைப்பாடு நன்கு தெரிந்த ஒரு பெண்ணின் கலைக் கைகள் நடத்துகின்ற பின்னல் நடனத்தை அழகு குறையாமல் செய்துகாட்டுதுபோல இந்நாவலிலும் அதன் சித்திரத்தை வரைந்து காட்டியிருக்கிறார் எஸ் ரா. முன்னும் பின்னுமாக நடந்த சம்பவங்களைக் கோர்த்துப் புனையும்போது வாசகனின் ஆர்வத்தை விடமால பற்றிக்கொள்கிறது.

ரெத்தினமும் பக்கிரியும் நாவலை நிகழ்த்திச் செல்லும் மையப் பாத்திரமாக வருகிறார்கள். ஒரு ஊருக்கு நாதஸ்வரம் வாசிக்க அழைக்கபட்ட இருவரையும் சாதியின் பொருட்டுத் தரங்குறைவாக நடத்துகிறார்கள். தன் இனத்தை மோசமாக நடத்தும்போதெல்லாம் பக்கிரி எதிர்த்துக் கேட்கிறான். அதனால் பக்கிரியையும் ரெத்தினத்தையும் அடித்து நொறுக்கி அந்த இரவு முழுதும் பட்டினி கிடக்கவைத்து கயிற்றால் கட்டிப்போட்டு விடுகிறார்கள் அவூர்க் காரர்கள். பக்கிரியும் ரெத்தினமும் கோயில் பூசாரியின் உதவியால் அங்கிருந்து தப்பித்து ஓடிவிடுகிறார்கள். தப்பி ஓடுவதற்கு முன்னர்ப் பக்கிரி திருவிழா கூடாரத்திற்குத் தீ வைத்துவிடுகிறான். பின்னர் அங்கிருந்து நடந்தே கிளம்பிவிடுகிறார்கள். கதை அந்த முதல் அத்தியாயத்திலேயே சூடு பிடிக்கத் துவங்கி இறுதி அத்தியாயம் வரை அதன் கனப்புத் தீராமல் வளர்கிறது.

தாங்கள் வாழ்நாளில் சம்பந்தப்பட்ட ஒவ்வோர் ஊராகச் சுற்றி அலைந்துகொண்டே இருக்கிறார்கள். அதற்கிடையே தீயிடப்பட்ட ஊரில் கலவரம் உண்டாகி போலிஸ் விசாரனைக்கு உட்படுகிறது. போலிஸ் பக்கிரியையும் ரெத்தினத்தையும் வலைபோட்டுத் தேடத் துவங்குகிறது. அவ்வாறு ஒவ்வொரு ஊராக அலையும்போது தங்களுக்கு முன்னர் வாழ்ந்த நாதஸ்வர இசைச் சமூகம் எவ்வாறு சமூக மதிப்போடும் கௌரவத்தோடும் வாழ்ந்தது என்று அவர்கள் தெரிந்துகொள்கிறார்கள். முன்னர்க் கொடுத்த மரியாதையும் மதிப்பும் ஏன் தற்காலத்தில் தற்காலச் சமூகத்துக்கு நீட்சிகாணவில்லை என்று ஒப்பிட்டு ஏங்குகிறார்கள். நாதஸ்வர் கலைஞர்கள் கொண்டாடப்பட்டதன் காரணமாகக் கர்வத்தோடு இருந்த நிலை தொழில்நுட்ப வளர்ச்சியாலும். சினிமா வருகையாலும், சினிமாப்பாடல்களின் கவர்ச்சியாலும் இச்சமூகப் பின்னடைவுக்குக் காரணமாக இருப்பதைச் சஞ்சாரம் மிக நேர்த்தியாக வரைந்து காட்டுகிறது. தன் இசையால் உலகை மயக்கிய தன்னாசி என்ற நாதஸ்வரக் கலைஞனின் கர்வம் பிறரைத் துன்புறுத்துவதாக இருந்தாலும் அதனை ஒரு பொருட்டாக மதியாத சமூகம் தன்னாசியைக் கொண்டாடி மகிழ்கிறது. தன்னாசி ஒரு மாபெரும் இசை வல்லுனன் என்பதால் அவரின் கொடுங்குணம் மன்னித்து ஏற்றுக்கொள்ளப்படுவதாக நாவல் ஊடாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

தற்கால நாதஸ்வரக் கலைஞர்களின் நலிந்த நிலையை விலாவாரியாகச் சித்தரிக்கப்பட்டாலும் நாதஸ்வரக் கலையின் மாண்பு குறையாமல் செதுக்கப்பட்ட சித்திரம் ‘சஞ்சாரம்’

••

நன்றி

கோ.புண்ணியவான்.

0Shares
0