கிரில் செரிப்ரெனிகோவ் எழுதி இயக்கிய TCHAIKOVSKY’S WIFE 2022ல் வெளியானது.
இப்படம் புகழ்பெற்ற ரஷ்ய இசைக்கலைஞர் சைகோவ்ஸ்கியின் திருமண வாழ்க்கையைப் பற்றியது. 1893 ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் படம் துவங்குகிறது,

அன்டோனினா தனது கணவர் சைகோவ்ஸ்கியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறார் – நெரிசல் நிறைந்த மாளிகையின் இரண்டாவது மாடிக்குத் தடுமாறிச் செல்கிறாள். அங்கிருந்தவர்களால் அதிர்ச்சியுடனும் வெறுப்புடனும் பார்க்கப்படுகிறாள்.
அங்கே இறந்த கிடந்த சைகோவ்ஸ்கி எழுந்துவந்து அவள் மீது கோபம் கொண்டு வெளியே துரத்துவதாகக் கற்பனை செய்கிறாள். அந்த அளவிற்கு அவர்களுக்குள் என்ன நடந்தது. ஏன் அவளைச் சைக்கோவ்ஸ்கி வெறுக்கிறார் என்பதையே படம் விவரிக்கிறது.

இளம்பெண்ணான அன்டோனினா பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவள். பாடகி அனஸ்தேசியா குவோஸ்டோவா வீட்டில் நடைபெறும் ஒரு விருந்தில் அவள் ரஷ்யாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞரான சைகோவ்ஸ்கியை முதன்முறையாகச் சந்திக்கிறாள். அவரது இசை மற்றும் அழகில் மயங்கிக் காதலிக்கத் துவங்குகிறாள். சைகோவ்ஸ்கியிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறாள். ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை
விடாப்பிடியாக அன்டோனினா அவரைப் பின்தொடருகிறாள். சைகோவ்ஸ்கி நடத்தும் இசைப்பள்ளியில் இணைந்து இசை கற்கிறாள் அதற்கு ஒரே காரணம் அவரது அருகில் இருக்க முடியும் என்பதே.

கடன் தொல்லையில் அவதிப்படும் சைகோவ்ஸ்கி அதிலிருந்து மீளுவதற்காக அவளைத் திருமணம் செய்து கொள்கிறார். மாஸ்கோவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் திருமணம் செய்து கொள்கிறார்கள். விருப்பமில்லாத அந்தத் திருமண வாழ்க்கை கசப்பாகிறது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் பிரிந்துவிடுகிறார்கள்.
புதுமணத் தம்பதிகள் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் போதே அவர்களுக்கு இடையிலுள்ள இடைவெளி துல்லியமாகத் தெரிந்துவிடுகிறது. அழகான காட்சியது.
அன்டோனினா தனது தேனிலவுக்குச் செல்லும் ரயிலில் எதிர்பாராமல் ரஷ்ய இளவரசரைச் சந்திக்கிறாள். அவர் சைகோவ்ஸ்கியின் நண்பர் என்பதால் என்ன செய்து சைகோவ்ஸ்கியை மயக்கினாய். எப்படித் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார் என்று அன்டோனினாவிடம் வியப்புடன் கேட்கிறார்.

அவர்களுக்குத் தெரிந்த ஒரு உண்மை அப்போது அன்டோனினாவிற்குத் தெரியவில்லை. சைகோவ்ஸ்கி அவளைப் புறக்கணிப்பதற்கான உண்மைக்காரணம் அவர் ஒரினசேர்க்கையாளர் என்பதைப் பின்னர் அறிந்து கொள்கிறாள்..இம்பீரியல் ரஷ்யாவில் விவாகரத்து பெற வேண்டும் என்றால் மன்னரின் ஒப்புதல் பெற வேண்டும். ஆகவே சைகோவ்ஸ்கியால் அவளை விவாகரத்துச் செய்ய இயலவில்லை. மேலும் கள்ளத்தொடர்பு இருக்கிறது என்று சாட்சியங்களுடன் நிரூபணம் செய்தால் மட்டுமே விவாகரத்து கிடைக்கும் என்ற நிலை இருந்தது- ஆகவே சைகோவ்ஸ்கி அவளை விவாகரத்துச் செய்யாமல் தனித்து வாழத் துவங்கினார். சைகோவ்ஸ்கிக்கு நரம்பு தளர்ச்சி இருப்பதால் அவளுடன் சேர்ந்து வாழவோ மீண்டும் அவளைப் பார்க்கவோ வேண்டாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறினார்கள். அவர் தனது வாழ்நாள் முழுவதும் தனது மனைவிக்கு ஜீவனாம்சம் அளித்து வந்தார்.

சைகோவ்ஸ்கியை விட்டு விலகி தனியே வாழ்ந்த அன்டோனினா வழக்கறிஞரான அலெக்ஸாண்ட்ரோவிச் ஷ்லிகோவ் என்பவருடன் பழகி மூன்று குழந்தைகளைப் பெற்றிருக்கிறார். அப்போது சைகோவ்ஸ்கிக்கு விவாகரத்துக்கான சட்டப்பூர்வமான காரணங்கள் இருந்தாலும், அவர் அதை விரும்பவில்லை..
வாழ்நாள் முழுவதும் அவமதிப்பைச் சந்தித்து வந்த அன்டோனினா வாழ்நாளின் கடைசி இருபது வருடங்களை மனநலக் காப்பகத்தில் கழித்திருக்கிறார். படத்தில் அன்டோனினாவின் தனிமை மிகவும் நேர்த்தியாக வெளிப்படுத்தப்படுகிறது.
சைகோவ்ஸ்கி தனது மனைவியை ஒருபோதும் காதலிக்கவில்லை, தனது ஓரினச்சேர்க்கையை மறைக்க அவளை ஒரு கவசமாகப் பயன்படுத்திக் கொண்டார் என்கிறார்கள்
இதே உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு 1971ல் தி மியூசிக் லவர்ஸ் என்றொரு படம் வெளியாகியுள்ளது
சைகோவ்ஸ்கியின் இசையுடன் இணைந்து அலைபாய்கிறது கேமிரா. 19ம் நூற்றாண்டு ரஷ்ய வாழ்க்கையைக் கலைநயத்துடன் காட்சிகள் சித்தரிக்கின்றன

இப்படம் உண்மைக்கு மாறாக அன்டோனினாவை சித்தரிக்கிறது. சைகோவ்ஸ்கியின் சகோதரர் அனடோலி எழுதிய நாட்குறிப்புகள் வேறுவிதமாக உள்ளன என்கின்றன ரஷ்யப் பத்திரிக்கைகள்.
சைகோவ்ஸ்கியின் வாழ்வில் நடந்த வேதனைகளின் சிறுசாயல் கூட அவரது இசையில் வெளிப்படவில்லை. சைகோவ்ஸ்கியின் இசையை நிறையவே கேட்டிருக்கிறேன். மனதை உற்சாகம் கொள்ள வைக்கும் உன்னத சங்கீதமது.
சைகோவ்ஸ்கியின் மனைவி திரைப்படம் ஆன்டன் செகாவின் சிறுகதையைப் போலிருக்கிறது. அன்டோனினா போன்ற பெண்களைச் செகாவ் கதையில் காண முடியும். சில வேளைகளில் பெர்க்மென் திரைப்படம் போலவும் உணர முடிகிறது. ரஷ்ய இலக்கியம் அதிகம் பொருந்தாத திருமண வாழ்க்கையைப் பற்றியே பேசுகிறது. இப்படமும் அந்த வரிசையில் தான் சேருகிறது.