இசையால் வென்றவர்.

நெருக்கமானவர்களின் மரணம். வழிகாட்டியாக இருந்தவர்களின் மரணம் எனத் தொடர்ந்து மரணச்செய்திகளைக் கேட்டுக் கேட்டு மனம் துக்கத்திலே துவண்டு போயிருக்கிறது.

நேற்று முழுவதும் நண்பர்கள் பலரும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவிற்கான துக்கத்தையும் அவரது இனிமையான பாடல்களைக் கேட்ட நாட்களையும்  பகிர்ந்து கொண்டேயிருந்தார்கள்.

நான் அதிகம் சினிமா பாடல்களைக் கேட்பவனில்லை. ஆனாலும் என் கல்லூரி நாட்களில் நண்பர்கள் கூடி நிறையப் பாடல்களைக் கேட்டிருக்கிறோம். பாடல்களுக்காகவே ஒரு படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறோம்.

அந்த நாட்களில் கேசட்டில் சினிமா பாடல் பதிவு செய்யக்கொடுத்துப் பதிவு செய்து கேட்கும் வழக்கம் இருந்தது. அதில் ராதாகிருஷ்ணன் என்ற நண்பன் எஸ்.பி.பி அவர்களின் தீவிர ரசிகன். கேசட்டில் முழுமையாக எஸ்பிபிபாடல்களை மட்டுமே பதிவு செய்து கொள்வான். அவன் வீட்டிற்குப் போனால் எப்போதும் இளையராஜா இசையில் எஸ்.பி..பிபாடல் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.  சின்னஞ்சிறிய கிராமத்தில் ஒரு காரைவீட்டின் வேப்பிலைகள் உதிர்ந்துகிடக்கும் மாடியில் அமர்ந்து எஸ்பி.பிபாடலை கேட்கையில் சிறகை விரித்து பறந்து செல்வது போலவே இருக்கும்.

எத்தனையோ பேரின் காதல் கனவுகளுக்கு எஸ்.பி. பாலசுப்ரமணியம் துணையாக இருந்திருக்கிறார். சிலரின் காதல் தோல்விக்கும் அந்தத் துணையே ஆறுதலாக இருந்தது.

என் வீட்டில் எனது சித்திகள் இருவரும் சினிமா பாடல்களை விரும்பிக் கேட்பார்கள். ரேடியோவில் பாட்டு ஒலிபரப்பாகும் முன்பே பாட ஆரம்பித்து விடுவார்கள். அவர்களின் விருப்பத்திற்குரிய பாடகராக எஸ்.பி.பி இருந்தார். ஆயிரம் நிலவே வா, இயற்கை என்னும் இளைய கன்னி, கம்பன் ஏமாந்தான் என்று எத்தனை எத்தனை சிறந்தபாடல்கள்.

சந்தோஷம் கொப்பளிக்க அவர் பாடுவதைக் கேட்க அத்தனை இனிமையாக இருக்கும். குறிப்பாகப் பாடலின் நடுவில் அவர் சிரிப்பது மயக்கமூட்டக்கூடியது. எஸ்.பி..பாலசுப்ரமணியம் பாடல்கள் எப்போதும் இளமையின் துள்ளலைக் கொண்டேயிருந்தது. எத்தனை விதமான பாடல்கள் எத்தனை லட்சம் மக்களைச் சந்தோஷப்படுத்தியிருக்கிறார். இசைபட வாழ்ந்த அவரது வாழ்க்கை பெருமைக்குரியது.

சங்கராபரணம் திரைப்படம் மதுரையில் நீண்டநாட்கள் ஓடியது. ஒரு தெலுங்குப்படத்தை மக்கள் இத்தனை ரசித்துப் பார்த்தது அதன் பாடல்களுக்காகவே

அதுவும் எஸ்பிபி பாடும் ராகம் தானம் பல்லவி, தொராகுன இதுவந்தி சேவா போன்ற பாடல்கள் டீக்கடைகளில் நாள் முழுவதும் ஒலித்தபடியே இருந்தது.

அது போலவே ஏக் துஜே கேலியே வெளியான நாட்களில் பைபாஸ் சாலையிலுள்ள உணவகங்களில் எப்போதும் இந்தப்படத்தின் பாடல்கள் ஒலித்தபடியே இருக்கும். டீ மாஸ்டரும் பாடலின் கூடவே பாடுவார். அத்தனை ஈர்ப்பான பாடல்கள்.

கல்லூரி ஆண்டுவிழாவில் “தேரே மேரே பீச் மெய்ன்” பாடலை ஒரு மாணவன் பாடிப் பெற்ற வரவேற்பு மறக்கமுடியாதது.

நான்குமுறை எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களைச் சந்தித்திருக்கிறேன்.. உரையாடியிருக்கிறேன். நெருக்கமான நண்பரைப் போலவே பழகுவார். ஒரு முறை இயக்குநர் கே. பாலச்சந்தர் அவர்களுடன் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களைப் பாடல் பதிவு ஒன்றின் போது சந்தித்துப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. எஸ்.பி. பாலசுப்ரமணியம் மீது கே.பாலசந்தர் கொண்டிருந்த அன்பும் நட்பும் மறக்கமுடியாதது.

தலைமுறைகளைத் தாண்டி தமிழ்மக்களின் மனதை ஆற்றுப்படுத்தியவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

அவரது பாடல் ஒலிக்காத வீடேயில்லை.

அவரின் மறைவிற்கு என் இதயப்பூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

0Shares
0