எத்தனை முறை பார்த்தாலும் வியப்புக் குறையாத படம் சத்யஜித்ரேயின் ஜல்சாகர் (Jalsaghar) . அவரது திரை இதிகாசமாகவே இப் படத்தைக் கருதுகிறேன்.
ஜல்சாகரில் வரும் இசைக்கூடத்தில் தொங்கும் சரவிளக்குகள் நிலப்பிரபுத்துவத்தின் கடைசி அடையாளமாக விளங்குகின்றன. பணியாளர்களில் ஒருவரான அனந்தா அந்த விளக்குகளைச் சுத்தம் செய்து ஏற்றுவதை விருப்பத்துடன் செய்கிறார். அவரது சிரிப்பு அலாதியானது.
ஜமீன்தார் பிஸ்வாம்பரர் இசையினையும் வெளிச்சத்தையும் விரும்புகிறார். இசைக்கூடத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டவுடன் அது வீட்டின் பகுதியாக இல்லாமல் கலையரங்கமாக மாறிவிடுகிறது. இசைகேட்பதற்காக வரும் பார்வையாளர்கள் அந்த அறைக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த அறைக்குள் மட்டுமே பிஸ்வாம்பரர் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். அவர் கையில் மல்லிகைப்பூ சுற்றியிருக்கிறார். வெண்ணிற உடை. கருவளையம் கொண்ட கண்கள். யோசனை படிந்த முகம்.
ஜமீன்தார்களின் வீடுகளிலிருந்த இசை அறையைப் போல நமக்குள்ளும் ஒரு இசையறை இருக்கிறது. நமது விருப்பம் தான் அந்த அறையின் சரவிளக்கு. நமக்கு விருப்பமான இசையைக் கண்ணை மூடிக் கொண்டு கேட்கும் போது நாம் அந்த அறையில் தானிருக்கிறோம். நான் அதை முழுமையாக உணர்ந்திருக்கிறேன்.
19 ஆம் நூற்றாண்டு வங்காளத்தில் செழித்தோங்கிய நிலப்பிரபுக்களின் வரிசையில் கடைசியாக இருந்தவர் பிஸ்வாம்பரர்;ஜமீன் என்பது பாரசீக மொழிச் சொல்லாகும். முகலாயர்கள் மூலம் அது இந்தியாவில் அறிமுகமானது.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த ஜமீன்தார்களை நில உரிமையாளர்களாக மாற்றியதோடு வரி வசூல் செய்து ஒப்படைக்கும் பொறுப்பினையும் வழங்கியது.
17 ஆம் நூற்றாண்டில் கிழக்கு வங்காளத்தில் பன்னிரண்டு ஜமீன்தார் குடும்பங்களின் கூட்டமைப்பு செயல்பட்டு வந்தது. அதில் முஸ்லிம் மற்றும் இந்து ஜமீன்தார் குடும்பங்கள் அடங்கும். வங்காளத்தின் ஜமீன்தார்கள் கலைகளின் சிறந்த புரவலர்களாக விளங்கினார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் பல நூலகங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் ஜமீன்தார்களால் நிறுவப்பட்டன. ஆனால் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர்களின் அதிகாரம் குறைக்கப்பட்டது. நேரடி நிர்வாக முறை அறிமுகமானதால் ஜமீன்தார்களின் வருவாய் மற்றும் வாழ்க்கை நிலை மாறியது..
ஜமீன்தார்களின் ஆடம்பரமான வாழ்க்கையும் அதிகாரமும் மறைந்து வருவதைப் பிஸ்வாம்பரர் நன்றாக உணர்ந்திருக்கிறார். அவர் தனது பொருளாதார வீழ்ச்சியைப் பெரிதாக நினைக்கவில்லை. மாறாகத் தனது ரசனையும் விருப்பங்களும் அதனால் பாதிக்கப்படுவதை ஏற்க மறுக்கிறார்
கையிருப்பிலிருந்த கடைசிப்பணத்தையும் அவர் இசைக்காகச் செலவு செய்கிறார். கடனாளியாக இருப்பதைப் பற்றி அவர் கவலை கொள்வதில்லை. இசை நிகழ்ச்சியின் போது அவர் மனம் உருக ரசிக்கிறார்.
இசை நிகழ்ச்சி முடிந்தபிறகு அவர் தனது மனைவியோடு உரையாடும் காட்சியில் அவரது முகத்தில் இசைகேட்ட மயக்கம் படர்ந்திருக்கிறது. அவரது கண்களில் அதைக் காணமுடிகிறது.பத்மா நதிக்கரையை ஒட்டிய சிற்றூரில் ஜமீன்தார் வசிக்கிறார். அந்த உலகம் நகர வாழ்விலிருந்து துண்டிக்கப்பட்டது. மதுபானங்களை நகரிலிருந்து வரவழைக்கிறார்கள். வெளியிலிருந்து வரும் டிரக் ஒன்றைத் தவிரப் புற உலகின் அடையாளமே அங்கில்லை. மாளிகையின் பெரிய தூண்கள் நம் நினைவில் மாறாத பிம்பமாகப் பதிந்து போகின்றன.
படத்தின் துவக்க காட்சியில் வயதான ஜமீன்தார் பிஸ்வம்பர் ராய் தனது அரண்மனையின் மேற்கூரையில் மரநாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவரது பார்வை எங்கோ நிலைகுத்தியுள்ளது. அவருடைய வேலைக்காரன் அனந்தா சர்பத் கொண்டு வருகிறான். அதைத் தனது ஹூக்காவுக்கு அருகில் வைக்கிறார்.
‘இது எந்த மாதம்?’ என்று ராய் கேட்கிறார். அந்தக் கேள்வி அவர் தன்னைக் கடந்து செல்லும் நாட்களைக் கவனம் கொள்வதில்லை என்பதைச் சுட்டவில்லை. மாறாக வெளியே கேட்கும் ஷெனாய் இசை விழாக்காலம் துவங்கிவிட்டதை நினைவூட்டுவது போல அவருக்குத் தோன்றுகிறது. அதிலிருந்தே அக்கேள்வி பிறக்கிறது. அந்த இசை புதுப்பணக்காரன் மஹின் வீட்டில் நடக்கும் விசேசத்தில் வாசிக்கபடுவதை அறியும் போது அவருக்குத் தனது சொந்த மகனின் நினைவு வருகிறது
பிஸ்வம்பரின் நினைவுகளின் வழியே அவரது ஆடம்பரமான கடந்த காலம் காட்டப்படுகிறது. பிரம்மாண்டமான வானவேடிக்கைக்குப் பிறகு, கம்பீரமான, தூண்கள் கொண்ட இசை அறையில் இசை ஒரு பெண் இனிமையாகப் பாடுகிறாள். அந்த இசையினைத் தன்னை மறந்து ரசிக்கிறார். அவருக்கு இசை இல்லாத நாள் என்பது விளக்கு ஏற்றப்படாத இரவு போன்றதே
இசைக் கூடத்தில் உள்ள அவரது மூதாதையர்களின் படங்கள் அலங்காரத்திற்காக மட்டும் மாட்டப்படவில்லை. அவர் யார் என்பதை அவருக்கு நினைவூட்டுவதற்காகவே மாட்டப்பட்டிருக்கின்றன. இசைக்கூடத்திற்குள் வந்த பிறகு அவர் ஜமீன்தாரில்லை. இசைரசிகர் மட்டுமே அதுவும் தேர்ந்த ரசிகர்.
ஜல்சாகர் தாராசங்கர் பந்தோபாத்யாய எழுதிய சிறுகதை. அவரும் ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர். ஜமீன்களின் வீழ்ச்சிக்குப் பின்னால் கல்கத்தாவிற்குக் குடியேறி வாழ்ந்தவர். ஆகவே தான் பிஸ்வாம்பர்ரின் இசைரசனையை மனப்போக்கினை சிறப்பாக எழுத முடிந்திருக்கிறது.
புதுப்பணக்காரனான மஹிம் கங்குலி அவரை விடத் தேர்ந்த இசை ரசிகன் போலக் காட்டிக் கொள்கிறான். அந்தப் போலித்தனத்தை அவர் விரும்பவில்லை. ஆகவே தான் அவனது அழைப்பை நிராகரிக்கிறார்.
மஹிம் முன்னால் அவனை விடச் சிறந்த இசை ரசிகன் எனக் காட்டிக் கொள்ள வேண்டியே இசை அறையை மீண்டும் திறக்கிறார். அவர்களுக்குள் நடக்கும் உரையாடல் அதில் வெளிப்படும் பிஸ்வாம்பரரின் முகபாவங்கள் அபாரம். மஹிம் பொய்யான பணிவுடன் நடந்து கொள்கிறான். தற்பெருமை பேசுகிறான். அவன் புதிதாக வாங்கிய மின்சார ஜெனரேட்டரின் சத்தம் அவரை எரிச்சல் படுத்துகிறது.
பிஸ்வாம்பரர் வீட்டில் மின்சாரமில்லை. சரவிளக்குகளே எரிகின்றன. அவர் காரில் பயணம் செய்வதில்லை. குதிரையில் தான் செல்கிறார். ஒரு காட்சியில் யானையைக் கடந்து செல்லும் டிரக் புழுதி எழுப்பியபடி செல்வதைப் பிஸ்வாம்பர்ர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் விரும்பாத மாற்றம் அவரைக் கடந்து செல்கிறது.
படத்தில் மூன்று இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதன் உச்சமான நிகழ்வே கதக் நடனம்
கதக் நிகழ்வின் போது இசைக்கலைஞருக்கு முதல் சன்மானம் தருவது தனது உரிமை என்று பிஸ்வாம்பரர் சொல்வது முக்கியமானது கடைசிப் பொற்காசுகளை அவர் தரும் போது மஹிமை வென்றுவிட்டதாகவே உணருகிறார்.
அவரது இசைரசனையை வீட்டின் பணியாளர்கள் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் இசைஅறையின் பதுமைகளே. வேலைக்காரன் அனந்தா அபூர்வமான கதாபாத்திரம்.
பிஸ்வாம்பரரின் பிரச்சனை இரவுகள். அதுவும் இது போல இசையும் மதுவும் மகிழ்ச்சியும் நிரம்பிய இரவுகள் அவரைவிட்டுப் போய்விட்டன. ஆகவே அவர் வெறுமையான பகலில் தனித்திருக்கிறார். பகல் அவரது தோல்வியைச் சுட்டிக்காட்டுகிறது வெறுமையைப் புரிய வைக்கிறது. ஆகவே விடியும் வரை அவர் இசைகேட்க விரும்புகிறார். . இரவில் அவர் தான் தோற்றுப்போனவனில்லை என்பதை நிரூபணம் செய்கிறாஅவரிடம் இப்போது எஞ்சியிருப்பது இரண்டு விசுவாசமான வேலைக்காரர்கள், பாழடைந்த அரண்மனை மற்றும் நினைவில் சுடராக ஒளிர்ந்து கொண்டிருக்கும் இசைக்கூடம். அவரது மனைவியும் மகனும் இறந்துவிட்டார்கள். பெண்கள் இல்லாத அந்த வீட்டில் இசை தான் பெண்ணின் அன்பை, அரவணைப்பை அவருக்கு அளிக்கிறது
தனது மகனை அரண்மனையின் வாரிசு என்பதை விடவும் இசையின் வாரிசு என்றே பிஸ்வாம்பரர் உணருகிறார். அவனுக்கு இசை கற்றுத்தரும் காட்சியே அதற்குச் சாட்சி. மனைவியும் மகனும் ஊருக்குப் புறப்படும் நேரத்தில் கூட அவர் இசைக்கருவியை வாசித்தபடியே தானிருக்கிறார். மனைவி அவருக்கு அறிவுரை சொல்லும் காட்சி அழகானது.
ஒரு காட்சியில் குடிபோதையில், அவர் தனது சொந்த உருவப்படத்தில் ஒரு சிலந்தி ஊர்ந்து செல்வதைப் பார்க்கும் போது பதற்றமாகிறார். அந்தச் சிலந்தி ஒரு குறியீடு.
இசை அறையில் மூதாதையர்களின் உருவப்படங்களுக்கு நடுவே இரவு முழுவதும் மது அருந்துகிறார், அப்போது மெழுகுவர்த்தியின் சுடர்கள் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கி அணையப்போவது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதைக் காப்பாற்ற நினைக்கிறார்.
பொழுது விடிந்துவிட்டதாகவும், அதனால் மெழுகுவர்த்திகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்று வேலைக்காரன் சொல்கிறான்.
அது மெழுகுவர்த்தியின் சுடர்களில்லை. அவரது ஆசையின் கடைசிச் சுடர்கள். அவை அணைந்து போவதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. படத்தின் மிக உன்னதமான காட்சியது.
விருந்தினர்கள் அனைவரும் சென்ற பிறகு, வெறிச்சோடிய இசை அறையில் அவர் தனது கடந்தகாலத்துடன் உரையாடுகிறார். இறந்து போன மூதாதையர்களுடன் தனது மதுக்கோப்பையை உயர்த்துகிறார். மற்ற சித்திரங்களைப் போல அவரும் ஒரு நிழல் உருவம் தானா. விடிகாலை வந்துவிட்டதெனப் பணியாளர் திரைச்சீலைகளை இழுக்கிறார். அதை அவரால் ஏற்க முடியவில்லை. பிஸ்வாம்பரராகச் சபி பிஸ்வாஸின் நடிப்பு நிகரற்றது. அலங்கார உடையில் அவர் கண்ணாடி முன்பாக நிற்கும் பார்க்கும் காட்சி அபாரம்.
இசைக்கூடம் தயாராகும் விதம் முக்கியமானது. அங்குள்ள ஆள் உயரக் கண்ணாடி, அதில் தெரியும் காட்சிகள். இசைக்கூடத்தை ரே மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக அங்கே விரிக்கபடும் கம்பளம். மதுபான வகைகள். ஹூக்கா குழாய்கள். பார்வையாளர்களின் முகபாவங்கள், மஹிமின் போலியான ரசனை. பிஸ்வாம்பரர் இசைக்கூடத்திற்குக் கம்பீரமாக நடந்து வருவது. இசைக்கருவிகளை வாசிப்பவர்களின் அபூர்வ முகபாவங்கள். இசை தரும் எழுச்சி, சரவிளக்கின் மாயவெளிச்சம் என அந்த இசைக்கூடம் பேரழகுடன் சித்தரிக்கப்படுகிறது. சொந்த வாழ்வின் துயரங்களிலிருந்து அவரை இசை மீட்கிறது. தன்னைக் கடந்து செல்லும் காலமாற்றத்துடன் விரும்பிக் கைகுலுக்க வைக்கிறது. இசையிடம் அவர் சரணடைகிறார்.
கடைசி நிகழ்ச்சியில் சுழன்றாடும் கதக் நடனக்காரியின் பாதங்கள் நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.
பிஸ்வாம்பரர் கடைசியில் தனது குதிரையின் மீது ஏறி பயங்கரமான வேகத்தில் சவாரி செய்யத் தொடங்கி எதிர்பாராமல் தடுமாறி விழுகிறார். அவரது முடிவை அவரே தேடிக் கொள்கிறார்.
சுப்ரதா மித்ராவின் நிகரில்லாத ஒளிப்பதிவு, விலாயத் கானின் சிறந்த இசை. துலால் தத்தாவின் சிறந்த படத்தொகுப்பு, பன்சி சந்திர குப்தாவின் கலை உருவாக்கம், ரேயின் மேதமையான இயக்கம் என இந்திய சினிமாவின் என்றைக்குமான பெருமைகளில் ஒன்றாக விளங்குகிறது ஜல்சாகர்.
பிஸ்வாரம்பர் தான் அந்த மாளிகையின் இசையாக விளங்குகிறார். அவரது வாழ்க்கை என்பது இசைக்கூடத்தில் எரியும் சரவிளக்கின் வெளிச்சமே.