இடக்கை – நீதிமுறையின் அரசியல்

-மணி செந்தில்

தமிழ் மொழியின் நாவல் வரலாறு மிக நீண்ட பாரம்பரிய பெருமைகள் கொண்டது. தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் 1879 ஆம் ஆண்டு வெளியானது. அதன் ஆசிரியர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவரிலிருந்து தொடங்கி இன்னும் செழுமையாக நீண்டு கொண்டிருக்கும் எண்ணற்ற எழுத்தாளர்கள் தமிழ் மொழியின் நவீன நாவல் வகைமையை தரம் குறையாமல் தங்கள் எழுத்துக்களால் பெருமை சேர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவ்வகையில் சமகால எழுத்தாளர்களில் மிக முக்கிய எழுத்தாளராக எஸ்.ராமகிருஷ்ணன் விளங்குகிறார். அவரது சமீபத்திய நாவலான இடக்கை தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தகுந்த அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏனெனில் இடக்கை சட்டென கடந்து போகக் கூடிய சாதாரண படைப்பல்ல. மிக ஆழமான உள்ளீடுகள் நிரம்பிய, ஆத்ம விசாரணைகள் நிரம்பிய தமிழின் மிக முக்கிய படைப்பு. இதுவரை தமிழ் இலக்கிய உலகம் கடக்காத, பேசாத ஒரு பெருவெளியை இடக்கை பேசுகிறது.

கால நதி இழுத்துச் செல்லும் திசைகளில் எல்லாம் பயணிக்கும் மானுட வாழ்க்கை இலக்கற்றது. எதிரே நேர் வந்து நிற்கும் பாடுகளில் எல்லாம் தன்னை ஒப்புக் கொடுத்து .. அலைகழியும் மானுட வாழ்வின் திசை வழி புதிரானது. இருண்மையும், நிச்சயமின்மையும் நிறைந்த அந்த திசை வழியில் அமைதி கொள்வதற்கான நிழலை மனித மனம் யாசித்துக் கொண்டே திரிவதைதான் இத்தனை ஆண்டுகால இலக்கியங்கள் கதையாடல்களாக, பெரும் பாடல்களாக, இதிகாசங்களாக , பிரதிகளாகிக் கொண்டே இருக்கின்றன. அவ்வளவு சுகமானதில்லை மனித வாழ்க்கை. மனித வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவினையும் அதிகாரத்தின் நாவுகள் ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கின்றன. எளிய மனிதர்களும், அவர்களது வாழ்க்கையும் என்றுமே சர்வாதிகாரம் என்கிற மாபெரும் பூதத்தின் பிடியில் சிக்கி ,விளையாடப்படும் பொம்மைகளாக இருக்கின்றன.

The King can do no wrong என்கிற சட்ட முதுமொழி ஒன்று உண்டு. மன்னராட்சி காலத்தில் மன்னர் மொழிகளே சட்டம். எழுதப்படாத, எழுத்து முறைகளில் இல்லாத ஆட்சியாளர்களின் சொற்களே பண்டைய அரசாட்சி முறைமைகளின் சட்டங்களாக இருந்தன. இன்றளவும் இங்கிலாந்தின் அரசியலைப்பு சட்டம் எழுதப்படாத ஒன்றே. அப்படி போகிற போக்கில் அரசர்கள் உதிர்க்கிற சொற்களின் கூட்டம் நிரபராதிகளை துரத்தி துரத்தி வேட்டையாடி இருப்பதை வரலாறு தனது பக்கங்களில் ரத்த எழுத்துகளால் பதிவு செய்து வைத்திருக்கிறது.

சாதாரண எளிய விளிம்பு நிலை மக்கள் மீதான ஒடுக்குமுறைகளின் வரலாறு இப்பெரு நிலத்தில் இதுவரை சரியாகப் பதிவு செய்யப்படவில்லை . மன்னர்களின் வாழ்க்கை பதிவு செய்யப்பட்ட அளவிற்கு மக்களின் வாழ்க்கை வரலாற்றின் ஏடுகளில் இடம் பெற்றதில்லை. அப்படி விளிம்பு நிலை மக்கள் மீது அதிகாரத்தின் கரங்கள் செலுத்துகிற அடக்குமுறைகளைப் பற்றியும், மன்னராட்சி காலத்தின் விசித்திர ஒழுங்குகள் குறித்தும் தனது இடக்கை நாவலில் எஸ்.ரா தனக்கே உரிய குறியீட்டு உத்திகளுடன் பதிவு செய்கிறார்.

தூமகேது என்ற ஆட்டுத்தோல் விற்கும் எளிய தொழில் செய்கிற வியாபாரியின் வாழ்க்கையையும், மாமன்னர் அவுரங்கசீப்பின் அந்தப்புர மஹல்தாராக இருந்த அஜ்யா பேகத்தின் வாழ்வியலையும் சற்றே ஏறக்குறைய அடுக்குகளாக கால வரிசை முறையை கலைத்துப் போட்டு ஒன்றின் பின் ஒன்றாக இறந்தகாலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் ஊசலாடுகிற வாழ்வியல் சித்திரங்களாக இடக்கை என்கிற இந்த நவீன நாவல் உருவாகி இருக்கிறது.

இந்திய பெருநிலத்தில் மத்திய இந்தியாவை கதைக் களனாக கொண்டு இயங்கும் தமிழ் நாவல்கள் எம்.வி.வெங்கட்ராம் எழுதிய ஒரு பெண் போராடுகிறாள் போன்ற மிகச் சிலவற்றையே காண முடிகிறது. வரலாற்றின் உண்மை நிகழ்வுகளின் மூலமாக புனைவிலக்கியம் தருகிற அத்தனை சாத்தியங்களையும் பயன்படுத்தி ..ஒரு மேம்பட்ட நவீன இலக்கிய பிரதி ஒன்றை எஸ்.ரா இந்த இடக்கை நாவல் மூலம் வழங்கியுள்ளார்.

சாமர் என்கிற விளிம்பு நிலை சாதியை சேர்ந்த தூமகேதும், அவரது முன்னோர்களும் ஆதிக்க அரசாதிகாரத்தின் முன்னால் எவ்வாறெல்லாம் அலைகழித்து வீழ்த்தப்படுகிறார்கள் என்று இந்நாவல் அணு அணுவாய் விவரிக்கிறது.

இந்திய பெருநிலத்தின் சாதீய அடுக்குகள் விசித்திரமானவை மட்டுமல்ல, மனித தன்மைகளுக்கு எதிரானது. பிறப்பின் வழியே ஒருவன் தாழ்ந்தவனாக அடையாளம் காட்டப்படுவதும், இன்னொருவன் உயர்ந்தவனாக கொண்டாடப்படுவதும் மானுட அறத்திற்கு முரணாவை. அகமண முறைகளால் நாளது தேதிவரை மிகக் கவனமாக பாதுகாக்கப் படும் சாதீய அடுக்குகளில் கீழ் நிலையை சேர்ந்தவன் தான் இடக்கை நாவலின் தூமகேது. பொய் வழக்கொன்றில் சிறையில் அடைக்கப்படும் தூமகேது சிறைச்சாலைக்குள்ளாக வாயில் மலம் திணிக்கப்பட்டு சாதீய வன் கொடுமைகளுக்கு உள்ளாவது எந்த காலத்திலும் சாதீய வடிவங்கள் மாறாமல் தான் இருக்கின்றன என்பதை உணர வைக்கிறது.

நாவல் முழுக்க உரையாடல்கள்.தத்துவ விசாரணைகள். நீதிமுறை சார்ந்த கருத்துக்கள் என வாசக சிந்தனைக்கு நிறைய வேலை அளித்திருக்கிறார் எஸ்.ரா. வரலாறு என்பதே நீண்ட உரையாடல்களின் கதை வடிவமோ என்று நம்மை சிந்திக்க வைக்கிறார். அஜ்யா பேகம் தன்னை திருநங்கையாக உணரும் தருணங்கள் கவித்துவமாக வடிக்கப்பட்டுள்ளன. சாதாரண திருநங்கை எப்படி மாமன்னரின் அந்தப்புர மஹல் தாராக பதவி உயர் பெற்றார் என்பதை நாவல் தனது போக்கில் விவரிக்கிறது. ஒரு கட்டத்தில் ஒளரங்கசீப் அஜ்மாவை மகளே என அழைக்கும் காட்சி நெகிழ வைக்கிறது.

நாவல் முழுக்க எண்ணற்ற பாத்திரங்கள். நிரம்பி வழியும் நுட்ப குறிப்புகள். ஒரு மாமன்னரின் அரண்மனை எவ்வாறு இருக்கும், அந்தப்புரம் என்றால் எப்படிப்பட்டது, பணியாளர்கள், எத்தனை பேர் இருப்பார்கள், யார் யார் இருப்பார்கள் என்பது போன்ற நுட்ப விவரணைகள் நாவலை மெருகூட்டிய வண்ணம் இருக்கின்றன.
ஒரு மாமன்னரின் இறுதி இரவில் இருந்து தொடங்குகிற நாவல் மானுட அறத்தின் வீழ்ச்சியையும், எளிய மனிதர்களின் பாடுகளையும் ஒரு தனிமை பயணி ஒருவரின் பார்வையில் அணுகுகிறது. தன் தொப்பியை தானே நெய்து பயன்படுத்திய ஒளரங்கசீப்பின் எளிமையையும், குரங்கினையும் ஒரு பெண்ணையும் திருமணம் செய்து வைத்த பிசாடன் போன்ற மன்னனின் கோமாளித்தனத்தையும், தூமகேதுவின் அப்பாவித்தனத்தையும், அஜ்யாவின் மாசற்ற அன்புணர்ச்சியையும் ஒரே நாவலின் வெவ்வேறு பக்கங்களில் எதிர்கொள்கிற வாசகன் அடைகிற வாசிப்பு அனுபவங்கள் அற்புதமானவை.

நீண்ட காலமாக இந்திய பெருநிலத்தின் நீதிமுறை வல்லான் வகுத்தாகவே இருந்து வருகிறது. உதிர்ந்த கனி யொன்றினை மரத்தில் ஒட்ட வைக்க முயன்ற சிறிய ஒளரங்கசீப்பின் குறும்பு முதல், கருப்பு யானைக்கு வெள்ளை வண்ணம் பூசி வேடிக்கை பார்த்த சிறு வயது பிசாடனின் கோமாளித்தனம் வரை… அதிகாரத்தில் உள்ளோர் பகடைகாய்களாக எளிய மனிதர்களை உருட்டி விளையாடி வருவது வரலாற்றின் வீதிகளிலே தொடர்ந்துக் கொண்டுதான் வருகிறது.
செய்யாத குற்றத்திற்காக சிறை புகும் தூம கேதுவின் கதாபாத்திரம் சம காலத்தில் செய்யாத குற்றமொன்றிக்காக 25 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும் தமிழர்களை நமக்கு நினைவூட்டுகிறது. நீதி இப்படிப்பட்டது தானா.. நீதி என்ற ஒன்று அவரவர்களுக்கானதா. ..இல்லையேல் நீதி என்ற ஒன்றே கற்பனையானதா.. என்றெல்லாம் நீதிமுறை சார்ந்து நம்மை சிந்திக்க வைப்பது இந்நாவலின் முக்கிய வெற்றி.

நாவல் முழுக்க அக்கால நீதி பரிபாலன முறை விரிவாக பேசப்படுகின்றது. மாமன்னர்களின் உதடுகளில் இருந்து பிறக்கும் நீதி எத்தகைய தன்மை உடையது…? அவை யாருக்கானது..? நீதி என்ற ஒன்று கால தேச தூரங்களை கடந்த மாறா வடிவம் கொண்டதா ..? என்றெல்லாம் இந்நாவலை படிக்கிற வாசகன் நிச்சயம் தனக்குள்ளாக ஒரு உரையாடலை நிகழ்த்த முயல்வான்.
நாவல் சமூகத்தின் இடது கையாக , இடப்புறமாக ஒடுக்கப்படுகின்ற விளிம்பு நிலை மக்கள், திருநங்கைகள், பிச்சைக்காரர்கள், ஆகியோரைப்பற்றி விரிவாக பேசுகிறது. மனித உடலில் ஒரே அளவிலான , வண்ணத்திலான, வடிவத்திலான இரு கைகள் இருக்கின்றன. ஆனால் வலது கைக்கு தருகிற முக்கியத்துவம், வலது கைக்கு கிடைக்கிற மரியாதை, சமூக அங்கீகாரம் எதுவும் இடக்கைக்கு கிடைப்பதில்லை. இதில் இடக்கை எந்த தவறையும் செய்வதில்லை. ஆனால் வலக்கையோ தவறாக அடையாளம் காட்டுகிறது. கொலை செய்கிறது. லஞ்சம் வாங்குகிறது. எல்லா தவறுகளையும் செய்கிற வலது கை தான் மானுட வாழ்வின் பிரதானமாக விளங்குகிறது. அரசியலில் கூட வலது தான் அதிகாரம் செய்கிறது. இடது எளியவர்களுக்காக போராடிக் கொண்டே இருக்கிறது.
தீண்ட தகாத சாதியாக கருதப்பட்ட சாமர்கள் ஏன் வலக்கை பயன்படுத்துவதில்லை என்பதற்கு கூட புராண கதையாடல் ஒன்று இந்நாவலில் காணப்படுகிறது. எனவே நாவல் முழுக்க சமூகத்தில் இடது புறத்தில் இருந்து எழும்பும் குரல்கள் ஒலிப்பதால் இடக்கை என பெயர் சூட்டப்பட்டிருப்பது மிக பொருத்தம்.

எஸ்.ராவின் வாசகர்கள் மிகுந்த பசியுடையவர்கள். எந்த எழுத்தாளராலும் எஸ்.ராவின் வாசகனை திருப்தி செய்ய இயலாது. நெடுங்குருதி, உப பாண்டவம், யாமம், உறுபசி,துயில், சஞ்சாரம் என பெரும் விருந்துகளுக்கென தங்களை தயார் படுத்தி வைத்திருப்பவர்கள் அவர்கள். பெரும் பசி கொண்ட அவர்களின் பசியாற்ற எஸ்.ராவால் மட்டுமே முடியும். அவ்வாறாகவே அவர் தன் வாசகர்களை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் அவரது நூல்களுக்காக அவரது வாசகர்கள் காத்திருக்கிறார்கள். பெரும் உழைப்பினை கோரும் அவரது படைப்புகள் மூலமாகவே அவரது வாசகர்கள் திருப்தியுறுகிறார்கள்.

அந்நிலையில் இடக்கையும் அவ்வாறனதே. நாவலில் உட்பொருளும், அது பேசும் அரசியலும் சம கால அரசியல் காட்சிகளை நமக்கு நினைவூட்டுகின்றன.
எக்காலத்திலும் அரசியலும், நீதிமுறையும் ஒன்று தானோ…???

0Shares
0