நெதர்லாந்தின் புகழ்பெற்ற ஓவியரான ஹிரோனிமஸ் போஷ் வரைந்த The Garden of Earthly Delights நிகரற்ற கலைப்படைப்பாகும். மூன்று பகுதிகளாக உள்ள இவ்வோவியம் 1500களில் வரையப்பட்டது.
கார்டன் ஆஃப் எர்த்லி டிலைட்ஸ் என்ற தலைப்பு போஷ் வைத்ததில்லை என்கிறார்கள். நம்மை முதலில் வசீகரிப்பது அதன் கவித்துவமான தலைப்பே.
புவியிலுள்ள இன்பங்களின் பட்டியல் முடிவில்லாதது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா எனப் பாரதியார் பாடுகிறார். சிற்றின்பங்களில் ஆழ்ந்துவிடும் மனிதன், பேரின்பங்களை மறந்துவிடுகிறான் என்று எல்லாச் சமயங்களும் எச்சரிக்கை செய்கின்றன.
ஆனால் வாழ்க்கை என்பதே இன்பங்களைத் தேடுவதும் அடைவதும் தான் எனப் பெரும்பான்மையினர் நினைக்கிறார்கள். நடந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு எத்தனை வயதானாதலும் சில இன்பங்களின் மீதான ஆசை முற்றுப் பெறுவதேயில்லை.
மனித இன்பங்களின் பட்டியல் மாறிக் கொண்டேயிருக்கிறது. ஓவ்வொரு நூற்றாண்டும் அதற்கான புதிய இன்பங்களை உருவாக்குகிறது. உடலால் ஏற்படும் இன்பங்களை விடவும் மனதால் ஏற்படும் இன்பங்களின் எண்ணிக்கை அதிகமானது.
மகிழ்ச்சியின் தோட்டத்தைப் பற்றிய இந்த ஓவியம் திருச்சபைக்கு ஆதரவாக வரையப்பட்டிருக்கிறது. கடவுள் இல்லாத உலகில் எல்லா இன்பங்களும் அனுமதிக்கபடுகின்றன. அது பாவமான செயல் எனச் சுட்டிக்காட்டவே இதனைப் போஷ் வரைந்திருக்கிறார்.
இன்று நாம் அந்த ஓவியத்தைக் கொண்டாடுவது பாவம், நன்மை தீமை பற்றிய சித்தரிப்பு என்பதற்காக அல்ல. மாறாகக் கற்பனையின் மூலம் விநோத உலகை, இச்சையின் பெருநடனத்தைப் போஷ் எப்படிச் சித்தரித்துள்ளார் என்பதற்காகவே கொண்டாடப்படுகிறது. சிறந்த கலைப்படைப்பாக முன்வைக்கபடுகிறது
ஒரு ஓவியம் அது வயைரப்பட்ட காலத்தில் அடையும் மதிப்பீடும் காலமாற்றத்தில் ஏற்படும் மதிப்பீடும் வேறுவேறானது. ஓவியத்தின் முன் யார் நிற்கிறார்கள், என்ன மனநிலையில் நிற்கிறார்கள் என்பதற்கு ஏற்ப அதன் பொருள் கொள்ளுதல் மாறுபடவே செய்யும்.
போஷின் காலத்தில் இந்த ஓவியத்தை நீதிபோதனையாக எடுத்துக் கொண்டிருக்கவும் கூடும். ஆனால் இன்று இந்த ஓவியம் கலைப்பொருளாக மட்டுமே கருதப்படுகிறது. எல்லா சமயத்தினரும் அதைப் பார்வையிடுகிறார்கள். கலைப்பொருள் பேசும் விஷயத்தைவிடவும் அதை எப்படி வெளிப்படுத்துகிறது என்பதிலே தான் இன்றைய நாட்டம் அதிகமுள்ளது.
மேலும் போஷின் பாதிப்பு புரூகேல், டாலி போன்ற பிரபல ஓவியர்கள் வரைத் தொடர்கிறது என்பதால் கனவுநிலைக்காட்சிகளின் முன்னோடி ஓவியராக அவரைக் கருதுகிறார்கள். கொண்டாடுகிறார்கள்.
ஓவியத்தின் இடது பேனலில் ஆதாமும் ஏவாளும் கடவுளுடன் ஏதேன் தோட்டத்திலிருக்கிறார்கள். இதில் கடவுள் இளைஞராக இருக்கிறார். ஆடை அணிந்திருக்கிறார். ஆடைகளற்ற ஆண் பெண்ணாக ஆதாமும் ஏவாளும் இருக்கிறார்கள். ஆதாமிடம் ஒப்படைப்பதற்காக ஏவாளின் கரம் பற்றி நிற்கிறார் கடவுள். அவர்களை நோக்கும் ஆதாமின் பார்வை வியப்பளிக்கிறது. ஏவாள் ஆதாமைக் கவனிக்கவேயில்லை.
அடுத்த இரண்டு பேனல்கள் ஆதாமின் கனவைப் போலவே தோற்றம் தருகின்றன.
சொர்க்கம் எனத் தலைப்பிடப்பட்ட இந்த இடது பேனலில் பல அடுக்குகளான ஏதேன் தோட்டம் காணப்படுகிறது. அங்கே நீர்நிலைகள் குன்றுகள் உள்ளன. கூட்டமாகப் பறவைகள் பறந்தலைகின்றன. நீர்நிலையைச் சுற்றிலும் விலங்குகள் ஒன்றுகூடியிருக்கின்றன. ஒரு யானையும் ஒட்டகச்சிவிங்கியும் காணப்படுகிறது. பல்லியைக் கவ்வி செல்லும் பூனை. தவளையை விழுங்கும் பறவை. சிறகு முளைத்த மீன்களைக் காணுகிறோம். விநோத விலங்குகளின் தோட்டமாக இருக்கிறது ஏதேன். யானையின் முதுகில் குரங்கு ஒன்று அமர்ந்திருக்கிறது. இரையைக் கொன்று விழுங்கப் போகும் சிங்கம் காணப்படுகிறது. மரத்தைச் சுற்றி ஒரு பாம்பு காணப்படுகிறது.
மனிதன். இயற்கை. விலங்குகள் பறவைகள் யாவும் ஒத்திசைவோடு இருப்பதையே போஷ் வரைந்திருக்கிறார். நல்லுறவின் வலியுறுத்தலாகவே ஓவியம் காட்சியளிக்கிறது. அதே நேரம் விநோதத் தோற்றங்கள் கனவுநிலைப்பட்டது போலவும் உணர வைக்கிறது.
ஏதேன் தோட்டம் பாலின்பத்திற்கு முற்பட்டது. அங்கே பாலுறவு கிடையாது. விலக்கபட்ட கனியைப் புசித்தபின்பே காமம் துவங்கியது. காமத்திற்கு முந்தைய இந்தச் சொர்க்கம் மனிதனை மையமாகக் கொண்டதில்லை. அதன் இன்பங்கள் மனிதன் உருவாக்கிக் கொண்டதுமில்லை.
1450 முதல் 1516 வரை வாழ்ந்த டச்சு ஓவியரான ஹிரோனிமஸ் போஷின் வாழ்க்கைப் பற்றிக் குறைவான தகவல்ளே கிடைத்திருக்கின்றன. அவரது தந்தையும் தாத்தாவும் ஓவியர்கள். ஆகவே இளவயதிலே போஷ் ஓவியம் வரையக் கற்றுக் கொண்டிருக்கிறார். அவர்ப் பயன்படுத்தும் நிறங்களும் அதற்கான வண்ணக்கலவையும் மிக மெல்லிய தூரிகைகளும் குடும்ப ரகசியமாகத் தரப்பட்டவை.
கார்டன் ஆஃப் எர்த்லி டிலைட்ஸ் முதற்பகுதியில் உள்ள கடவுளின் நீல நிறக் கண்களைப் பாருங்கள். எவ்வளவு துல்லியம். குறிப்பாக விலங்குகளின் விந்தையான தோற்றம். அதன் உடலமைப்பை வரைந்துள்ள விதம் ஆச்சரியமளிக்கிறது. மனிதகுலத்தின் ஆசைகள் மற்றும் ஆழ்ந்த அச்சங்கள் பற்றிய ஆழமான நுண்ணறிவு கொண்டவராகப் போஷ் இருந்திருக்கிறார். அதே நேரம் ஆழ்ந்த கிறிஸ்துவ நம்பிக்கைக் கொண்டவராக இருப்பதை உணர முடிகிறது
இந்த ஓவியத்தை இன்பத்தின் பெருவெடிப்பு என்கிறார்கள் கலைவிமர்சகர்கள் ஓவியத்தின் மிகச்சிறந்த பகுதி நடுவிலுள்ள பேனல் தான். இன்று இணையத்தின் உதவியால் அதை விரித்துப் பெரியதாக்கிக் காணும் போது விந்தையுலகினுள் சஞ்சரிப்பது போலவேயிருக்கிறது.
பசியும் காமமும் மனிதனின் ஆதார இச்சைகள். அந்த ஆசைகள் எப்படியெல்லாம் தீர்த்துக் கொள்ளப்படுகின்றன என்பதன் சாட்சியம் போலவே விநோதத் தோற்றங்கள் வரையப்பட்டிருக்கின்றன. குறிப்பாகப் பழங்கள் மனிதர்களை உண்ணுகின்றன. பிரம்மாண்டமான ஸ்ட்ராபெர்ரியைப் பாருங்கள். மனிதர்கள் நிர்வாண உடல்களுடன் ஆசையின் உன்மத்தமேறியவர்களாகக் காணப்படுகிறார்கள்.
மனித உடல்களின் தலைகீழ் நிலையும் கூட்டியக்கமும் கட்டற்ற இன்பங்களின் தூய்ப்பாகவே காட்சி தருகின்றன.
பேனலின் நடுவில் குளம் காணப்படுகிறது. பழங்கள் பிரம்மாண்ட தோற்றம் தருகின்றன. பழம் என்பது இன்றின் குறியீடு. உச்சநிலையைப் பழம் என்றும் கருதலாம். நிர்வாண உடலும் பழமும் வேறில்லைத் தானே.
சிற்றின்பங்களின் விளைநிலம் போலவே நடுப்பகுதி காணப்படுகிறது. பறவைகள், விலங்குகள், கனிகள் மீன்கள். மற்றும் நிர்வாண மனிதர்கள் என யாவும் கட்டவிழ்த்துவிடப்பட்ட நிலையில் இணைந்தும் விலகியும் முயங்கியும் காணப்படுகின்றன. இதில் மனிதர்களை விடவும் பறவைகளும் விலங்களும் உக்கிரமாக இயங்குகின்றன. சிப்பி ஒன்றுக்குள் ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்கிறார்கள். கோளம் ஒன்றினுள் ஆணும் பெண்ணும் மயங்கிகிடக்கிறார்கள். இலைகளால் முடிசூட்டப்பட்ட ஒரு மனிதன் காணப்படுகிறான்
பல்வேறு விதங்களில் இன்பம் தேடும் நிர்வாண உருவங்கள் ஆங்காங்கே தெரிகின்றன. தலையில் மயில் ஏறியுள்ள கறுப்பினப் பெண். விநோத உயிரினங்களில் சவாரி செய்யும் மனிதர்கள். சிறகுகள் கொண்ட மீன்கள் தரையில் ஊர்ந்து போகின்றன.
டால்பின் வால் கொண்ட குதிரை ஒன்று சிறகுகள் கொண்ட மீனின் மீது பயணிக்கிறது. உடைந்த முட்டை வடிவம். மற்றும் மீன்களை அதிகம் காணுகிறோம். பறவைகள் மற்றும் விலங்குகள் சிற்றின்பக் களியாட்டத்தில் உற்சாகமாகக் கலந்து கொள்கின்றன
மனிதர்களை விலங்குகள் தண்டிப்பது போன்ற இந்தக் காட்சிகள் உலகியல் இன்பங்கள் குறித்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாகக் குழப்பத்தையும் அச்சத்தையுமே ஏற்படுத்துகின்றன. உயிரினங்கள் யாவும் காமத்தால் தூண்டப்பட்டுத் தன்னிசையாகச் செயல்படுவதையே இந்தப் பேனல் விளக்குகிறது.
இந்தக் கனவுநிலைப்பட்ட காட்சியில் வெளிப்படும் விநோதம் பார்க்கும் நம்மை பெரிதும் வசீகரிக்கிறது. இந்தக் காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் பின்னும் விவிலிய வாசகங்களும் கதையும் ஒளிந்திருக்கின்றன. இதிலுள்ள சில காட்சிகள் புனிதநூலுக்கு வரையப்பட்ட பக்க ஓவியங்களிலிருந்து பெறப்பட்டிருக்கின்றன. ஓவியத்தில் காணப்படும் இசைக்கருவிகள் நாட்டார் மரபைச் சார்ந்தவை. அது போலவே பழமொழிகளும் சமயவரலாறும் இதில் மாற்றுவடிவம் கொண்டிருக்கின்றன என்கிறார்கள். போஷின் ஓவியத்தில் கொந்தளிப்பான, கட்டுப்பாடற்ற, ஆழமான கற்பனை வீச்சினையே நாம் உணருகிறோம்.
வலதுபக்கப் பேனலில் நாம் காணும் நரக் காட்சிகள் அச்சமளிக்கின்றன.. இருள் சூழ்ந்த வெளி. வேதனையும் கொண்ட மனிதர்கள். தாந்தேயின் நரகத்தை நினைவுபடுத்துகின்றன. நரக வாயில்கள் மற்றும் ரத்தமாக மாறும் தண்ணீர் உடலுறுப்புகளின் கோரமான சிதைவு, பாவத்திற்கான தண்டனைத் தரும் இடமாக நரகம் காணப்படுவதையே உணர்த்துகிறது.
போஷின் இந்த ஓவியம் குறித்து விரிவான விளக்கவுரையை இணையத்தில் கேட்க முடிகிறது. அவை ஓவியத்தை விளக்க முற்படுகின்றன. நான் இந்த ஓவியத்தினை ஆராதிக்க விரும்புகிறவன். ஒவியங்கள் மட்டுமே உள்ள நாவலைப் படிப்பது போலவே இதனை நான் வாசிக்கிறேன். புரிந்து கொள்கிறேன்.
இந்த ஓவியத்தின் முதன்மையான அம்சம் இயல்பு திரிவதாகும். பறவை விலங்குகள் மனிதர்கள் என யாவரும் இயல்பு மாறி விநோத நிலையில் காணப்படுகிறார்கள். உடல் இச்சை அவர்களை அலைக்கழிக்கிறது. உணவைப் போல உடலைப் புசிக்கிறார்கள்.
சொர்க்கத்தில் வீடு என்பது கிடையாது. சொர்க்கம் என்பது பெரிய திறந்தவெளி. தோட்டம் எனச் சொர்க்கத்தை யார் முதலில் கற்பனைச் செய்தார்கள் எனத் தெரியவில்லை. ஏன் சொர்க்கம் ஒரு கடற்கரையாக இல்லை. கானகமாக இல்லை. தோட்டம் என்பதே கட்டுப்பாடுகளும் எல்லையும் கொண்டது தானே. சொர்க்கம் என்பது முழுமையானதில்லை.
போஷின் வேறு ஒவியங்களிலும் புனிதர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். அதிலும் இது போன்ற விசித்திரத் தோற்றங்கள் காணப்படுகின்றன.
பரிச்சயத்தன்மையையும் அதன் விளைவாக ஏற்படும் சலிப்புத்தன்மையையும் நீக்குவதற்கு, பார்வைப் புலன்களின் பிடியிலிருந்து விலகிய புதிய கற்பனையை உருவாக்க வேண்டியிருக்கிறது. அதைப் போஷின் ஓவியங்களில் காணமுடிகிறது என்கிறார் போர்ஹெஸ். கார்டன் ஆஃப் எர்த்லி டிலைட்ஸ் ஓவியம் அதன் சாட்சியமாக உள்ளது.