இன்மையின் சுவை

சுவிஸ் திரைப்படத் தயாரிப்பாளரான வெர்னர் பென்சல் இயக்கிய ஆவணப்படம். Zen for Nothing

2016ல் வெளியான இப்படம் ஜென் மடாலய வாழ்வினைப் பற்றிய சிறப்பான அனுபவத்தைத் தருகிறது.

சுவிஸ் நடிகையான சபீனா டிமோடியோ தனது அகத்தேடலின் காரணமாக ஜப்பானின் மேற்குக் கடற்கரை பகுதியிலுள்ள அந்தாஜி ஜென் மடாலயத்திற்குச் செல்கிறார். அங்கே மூன்று பருவகாலங்களைக் கழிக்கிறார். தியானம் மற்றும் வாழ்வியல் நுட்பங்களைக் கற்றுக் கொள்கிறார்.

ஜென் துறவிகள் என்றால் சதா தியானத்திலிருப்பவர்கள் என்ற பொதுப்புத்திக்கு மாறாக இங்கே துறவிகள் நாள் முழுவதும் ஓடியாடி வேலை செய்தபடி இருக்கிறார்கள். மடாலயத்திற்குத் தேவையான உணவு தயாரிப்பது துவங்கிக் குளிர்காய்வதற்கான மரங்களைச் சேகரிப்பது வரை அத்தனை பணிகளையும் ஆசையோடு செய்கிறார்கள். விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள்.

அவர்களின் ஒருநாள் துவங்குவதைப் படம் அழகாக ஆவணப்படுத்தியிருக்கிறது. கடிகாரம் என்பது அங்கே நேரம் காட்டும் கருவி மட்டுமே. அவர்களிடம் அவசரமில்லை. பதற்றமில்லை. எங்கேயும் ஓட வேண்டிய அவசியமில்லை. சபீனா இந்த விடுபடலை மிகவும் நேசிக்கிறாள். தன்னை முழுமையாக மடாலயப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்கிறாள்.

மர அறுவை இயந்திரத்தை ஓடச் செய்யும் போது அவள் முகத்தில் வெளிப்படும் சந்தோஷம் அதன் அடையாளமே.

படத்தின் துவக்கத்தில் சபீனாவோடு நாமும் பயணம் செய்து மரங்கள் நிறைந்த மலையின் நடுவேயுள்ள அந்தாஜி. மடாலயத்தை நோக்கி நடக்கிறோம். முடிவில்லாமல் நீளும் படிக்கட்டுகளில் அவர் ஏறும் போது நாமும் உடன் ஏறுகிறோம். மடாலயத்தின் சிறிய அறையில் அவர் தங்கிக் கொள்கிறார். அதன் தினசரி நடைமுறைகளைக் கைக்கொள்கிறார். குளிரும் இயற்கையின் பாடலுமான அந்த வாழ்க்கை அவரைப் புத்துணர்வு கொள்ள வைக்கிறது

அன்றாட வாழ்வில் நாம் சலிப்புறும் செயல்கள் யாவும் இங்கே மகத்தான அனுபவத்தைத் தருவதாக மாறுகின்றன. உணவு மேஜையைச் சாப்பிட்டு முடித்தபின்பு சுத்தமாகத் துடைத்து முன்பு எப்படித் தூயதாக இருந்ததோ அது போல விட்டுச் செல்கிறார்கள். துறவிகளுக்குள் நடக்கும் உரையாடலில் அவர்களின் உணர்ச்சி வெளிப்பாடு துல்லியமாக, வெளிப்படையாக இருக்கிறது.

அலைப்பேசியும் தொலைக்காட்சியும் பரபரப்பான செய்திகளும் வாகன நெருக்கடியும் இல்லாத அந்த வாழ்க்கை அவருக்கு இயற்கையின் அதிசயங்களை அடையாளம் காட்டுகிறது. ஆழ்ந்து உணரச் செய்கிறது

படத்தில் நீதிபோதனை எதுவும் கிடையாது- மாறாக ஆழ்ந்த உண்மைகளை எளிமையாகப் போதிக்கிறார்கள். இன்றைய நமது வாழ்க்கையில் சமநிலை கிடையாது. ஆகவே ஏதாவது ஒரு பக்கம் அதிகம் சரிவு கொள்கிறோம். கயிற்றில் நடப்பவன் போலப் பேலன்ஸ் செய்து முன்னேற முடியவில்லை. அதையே ஜென் அவர்களுக்குக் கற்றுத்தருகிறது

இன்னொரு காட்சியில் அவர்கள் ஸ்லோ வாக்கிங் எனப்படும் நடைதியானத்தில் ஈடுபடுகிறார்கள். அதில் ஒவ்வொரு அடியையும் முழுமையாக எடுத்துவைத்து நடக்க வேண்டும். நடத்தல் என்பதையே தியான அனுபவமாக மாற்றுகிறார்கள்.

தன்னைப் போல அந்த மடாலயத்திற்கு வந்துள்ளவர்களுடன் சபீனா நெருங்கிப் பழகுகிறாள். எதிர்பார்ப்புகள் இல்லாத நிலையில் நட்பு கொள்வது அழகாக இருக்கிறது. அந்தாஜி. மடாலயத்தை நடத்துபவர் ஜெர்மானியரான அபோட் முஹோ. அவர் வேடிக்கையாகப் பேசுவதன் மூலம் அரிய உண்மைகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

பெரும்பான்மை திரைப்படங்கள் வன்முறையை அழகியலாக ருசிக்கச் செய்யும் இன்றைய சூழலில் இது போன்ற படங்கள் ஆழமான அமைதியை, ஞானத்தை நமக்கு அறிமுகம் செய்கின்றன.

ஒரு காட்சியில் டிமோடியோ தனது உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள்.அப்போது பிரார்த்தனை மணி ஒலிக்கிறது. அதைக் கவனிக்காமல் உணவு உண்ணுகிறாள். அருகிலிருந்தவர் ஜாடையாகப் பிரார்த்தனை செய்யும்படி சொல்கிறார். புரிந்து கொண்ட அவள் தலையசைத்துப் புன்னகை புரிவதுடன் தனது கிண்ணத்தையும் சாப்ஸ்டிக்ஸையும் கீழே வைத்துவிட்டுப் பிரார்த்தனையில் இணைந்து கொள்கிறாள். அங்கே இருந்தவர்களில் எவரும் அவளுக்கு அறிவுரை கூறவில்லை. மாறாகச் சிறிய ஜாடையின் வழியே புரிய வைத்துவிடுகிறார்கள்.

இப்படமும் அது போன்ற பணியைத் தான் செய்கிறது

0Shares
0