இயற்கையின் காதலன்

In Search of Walt Whitman என்ற அமெரிக்க கவிஞர் வால்டர் விட்மன் பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்தேன்.

அமெரிக்காவின் நிகரற்ற கவிஞரான வால்ட் விட்மன் 1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார்.

சிறு வயதில் அச்சகத்தில் பணியாற்றிய விட்மன் பல்வேறு நாளிதழ்களில் கட்டுரைகள். செய்திக்குறிப்புகள் எழுதியிருக்கிறார்., பதினேழு வயதில் பள்ளி ஆசிரியராக வேலை செய்திருக்கிறார். 27 ஆவது வயதில் புரூக்லின் செய்தி இதழின் ஆசிரியரானார்.

விட்மன் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களை விவரிக்கும் இந்த ஆவணப்படம் இன்றைய தலைமுறைக்கு மகத்தான கவிஞனின் வாழ்க்கையினையும் அவரது காலகட்டத்தின் முக்கிய நிகழ்வுகளையும் நினைவூட்டுகிறது.

வால்ட் விட்மனின் தோற்றம் மிகவும் வசீகரமானது. தாகூரையும் அவரையும் மனம் ஒருசேரவே நினைத்துக் கொள்கிறது. இருவரும் ஒரே திசைப்பயணிகள்.

வால்ட் விட்மனின் பால்யகாலத்தை விவரிக்கும் போது இயற்கை அவருக்கு அறிமுகமான விதத்தையும் இயற்கையோடு அவருக்குள்ள நெருக்கத்தையும் அழகாக விவரிக்கிறார்கள்.

சிறுவயதில் இயற்கையை ஒருவன் அறிந்து கொள்ளும் போது அது ஒரு மாயவெளியாக இருக்கிறது. சூரிய வெளிச்சமும் மரங்களும் பறவைகளின் பாடல்களும் புல்லின் நடனமும் வண்ண வண்ண மலர்களும் வியப்பூட்டும் அழகுடன் தீராத வசீகரத்துடன் அறிமுகமாகிறது. தானும் ஒரு நீர்த்துளி போலச் சிறுவன் உணருகிறான். நீர்ப்பூச்சிகள் குளத்தின் மீது நடப்பது போலத் தானும் நடக்க ஆசைப்படுகிறான். இயற்கைக்கு ரகசிய கதவுகள் இருப்பதைச் சிறுவன் உணருகிறான். அந்தக் கதவு எப்போது திறந்து கொள்ளும் என்றோ, அதன் வழியே எந்த விந்தையைத் தான் அறிந்துகொள்வோம் என்றே அவனுக்குத் தெரியாது.

விட்மனுக்கும் அப்படியான அனுபவமே ஏற்படுகிறது. விட்மனின் தந்தை ஒரு தச்சர் , விவசாயப்பணிகளையும் மேற்கொண்டு வந்தார். தீவிரமான தேசபக்தர். தனது பிள்ளைகளுக்குத் தேசத்தலைவர்களின் பெயர்களை வைத்திருக்கிறார். அம்மாவோடு விட்மன் மிகவும் நெருக்கமாக இருந்திருக்கிறார். விட்மனின் நான்கு வயதில் அவர்களின் குடும்பம் புரூக்லின் இடம்பெயர்ந்திருக்கிறது.

விட்மன் பள்ளியில் வழங்கப்படும் தண்டனைகளைப் பற்றிக் கடுமையாக விமர்சனம் செய்து எழுதியிருக்கிறார். 11 வயதுடன் அவரது பள்ளிப்படிப்பு முடிந்துவிட்டது. வேலைக்குச் செல்லும்படி குடும்பத்தால் நிர்பந்திக்கபட்டிருக்கிறார். சுயமாகக் கற்றுத்தேர்ந்து அமெரிக்காவின் தேசிய கவியாக விட்மன் உயர்ந்த வரலாற்றையும் அவரது காலத்தின் கொந்தளிப்பான நிகழ்வுகளையும் ஆவணப்படம் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது

1838ல் விட்மன் துவங்கிய the Long Islander என்ற செய்தித் தாள் இன்றும் வெளியாகி வருகிறது. அந்த இதழை அவரே அச்சிட்டு வெளியிட்டதுடன் விநியோகம் செய்ய ஊர் ஊராக அலைந்திருக்கிறார்.

1855ல் விட்மன் தனது முதற்கவிதைத் தொகுப்பான Leave of Grass வெளியிட்ட போது பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அந்த கவிதைகள் மிகவும் ஆபாசமானவை, வெறுக்கத் தக்கவை என்று  பலராலும் நிராகரிக்கப்பட்டன  தானே சொந்தமாக இந்தத் தொகுப்பினை வெளியிட முயன்ற சிரமங்களையும் ஆவணப்படம் பதிவு செய்திருக்கிறது.

விட்மனின் கவிதை நூலை வாசித்த எமர்சன் அதைப் பாராட்டி எழுதியிருக்கிறார். இந்தப் பாராட்டு விட்மனை இலக்கிய உலகில் அங்கீகாரம் பெறச் செய்தது. கவிதைத் தொகுப்பின் அடுத்த பதில் விட்மன் எமர்சனின் பாராட்டினை பின்னட்டையில் இடம்பெறச் செய்திருக்கிறார்.

எமர்சனுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்த விட்மன் தனது கவிதைத்தொகுப்பு குறித்து அவருடன் ஆலோசனைகள் மேற்கொண்டிருக்கிறார். பாலுணர்வு கொண்ட கவிதைகளை தொகுப்பில் சேர்க்க வேண்டாம் என்ற எம்ர்சனின் ஆலோசனையை விட்மன் கேட்கவில்லை.

ஒரு கவிஞன் எப்படி உருவாகிறான் என்பதன் புறச்சூழலை படம் அழகாக சித்தரித்துள்ளது. ஆனால் அகத்தில் அவன் எவ்வாறு வளர்ச்சி அடைகிறான். அதன் படிநிலைகள் மற்றும் அவனது தனித்துவமான பார்வைகள் உருவான விதம் பற்றி படத்தில் விவரிக்கப்படவில்லை.

19ம் நூற்றாண்டு கவிஞனாக இருந்தபோதும் அவரது கவிதைக்கான இடமும் அங்கீகாரமும் இருபதாம் நூற்றாண்டில் தான் கிடைத்தது. ஏன் சமூகம் ஒரு கவிஞனை இவ்வளவு தாமதமாக அங்கீகரிக்கிறது என்பது ஆராயப்பட வேண்டிய கேள்வி.

இரண்டு பகுதிகளாக மூன்று மணி நேர அளவில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

0Shares
0