புதிய சிறுகதை
என் பெயர் ராமசேஷன். இதே தலைப்பில் எழுத்தாளர் ஆதவன் நாவல் எழுதியிருப்பதை அறிவேன். எனது கல்லூரி நாட்களில் நான் ஆதவனை விரும்பிப் படித்திருக்கிறேன்.

எனக்கு இந்தப் பெயரை வைத்த என்னுடைய தந்தை ஆதவனைப் படித்ததில்லை. தாத்தாவின் பெயர் என்பதால் எனக்கு வைத்துவிட்டார்.
சொல்லப் போனால் நானும் ஆதவன் போலவே நடுத்தரவயது கொண்ட, விருப்பமில்லாத அரசுத்துறை ஒன்றில் பணியாற்றுகிறவன்.
எனக்குச் சில புத்திசாலித்தனமான கிறுக்குத்தனங்கள் உண்டு. அதில் ஒன்று நானாக எதையும் கற்பனை செய்து கொள்வது. ரோட்டில் ஆம்புலன்ஸ் போகிற சப்தம் கேட்டால் அதில் யார் போகிறார் என்று நானே கற்பனை செய்து கொள்வேன். பக்கத்துவீடு பூட்டப்பட்டிருந்தால் என்ன காரணமாக இருக்கும் என்று கற்பனை செய்வேன்.
இப்படி நிஜத்தை எதிர்கொள்வதை விடவும் கற்பனையில் சஞ்சரிப்பது எனக்கு பிடித்தமானது. இதனை உலகம் முட்டாள்தனம் என்கிறது. மனைவியும் பிள்ளைகளும் கூட அப்படியே நினைக்கிறார்கள். எல்லா முட்டாள்தனங்களையும் நாம் கைவிட்டுவிட முடியாது. சில முட்டாள்தனங்கள் தேவைப்படுகின்றன. சந்தோஷம் தருகின்றன.
இந்த நகரம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு விநோதமானது. இங்கு நடக்கும் குற்றங்களும் அப்படியானதே. சிறியதோ, பெரியதோ குற்றம் நடக்காத நாளேயில்லை. அதில் முதன்மையானது திருட்டு. விதவிதமான திருட்டுகள். விதவிதமான திருடர்கள். நிறையத் திருட்டுகள் வெளியே பேசப்படுவதேயில்லை. புகார் அளிக்கபடுவதில்லை. தண்டிக்கப்படாத குற்றவாளிகள் பெருகிய இடம் நகரம்.
சாலையோரம் நிறுத்திவைக்கபட்டிருந்த ரோடு ரோலரை யாரோ திருடிக் கொண்டு போய்விட்டதாக நேற்று தொலைக்காட்சிச் செய்தியில் சொன்னார்கள், ரோடு ரோலரை எப்படி யாரும் அறியாமல் திருடிக் கொண்டு போக முடியும். அதைத் திருடி என்ன செய்வார்கள். யாரிடம் விற்பார்கள். ஆனாலும் ரோடுரோலர் திருடன் இருக்கத்தான் செய்கிறான்.
நான் சொல்லப் போவதும் ஒரு திருடனைப் பற்றியது தான்.
அவனைக் கடந்த இரண்டு வாரங்களாகப் பின்தொடர்ந்து வருகிறேன். பின்தொடர்ந்து வருகிறேன் என்றதும் என்னைத் துப்பறியும் நிபுணர் என்று நினைத்துவிடாதீர்கள். அவனைப் பற்றிய செய்திகளைப் பின்தொடருகிறேன். சில நேரங்களில் அவன் சென்ற இடங்களுக்குப் போய் வருகிறேன். சில இடங்களுக்கு அவன் வரக் கூடும் என்று சென்றிருக்கிறேன். அந்த வகையில் நான் திருடனின் இரண்டாவது நிழல்.
•••
இரண்டு வாரங்களுக்கு முன்பாக எனக்குத் தெரிந்த ஈ.என்.டி டாக்டர் பழனியப்பன் இறந்து போய்விட்டார். எங்கள் பகுதியில் இருந்த ஒரே ஈ.என்.டி கிளினிக் அவருடையது.
இடதுகாதில் ஏற்பட்ட வலிக்காக அவரிடம் சென்றிருக்கிறேன். இரண்டு முறையும் அவர் நான் எங்கே வசிக்கிறேன், என்ன சினிமா பார்த்தேன் என்பதைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தார். அதை விடவும் என்னைப் பரிசோதனை செய்தபடியே அவர் இரண்டுமூன்று ஜோக்குகளைச் சொன்னார். அவற்றுக்கு என்னால் சிரிக்க முடியவில்லை. ஆனால் ஒரு டாக்டர் இப்படி ஜோக் அடிப்பது பிடித்திருந்தது.
காதில் விட்டுக் கொள்ளச் சொட்டு மருந்தும் ஒரு வார காலத்திற்கு மாத்திரைகளும் எழுதிக் கொடுத்தார். சில நாட்களில் எனது காதுவலி சரியாகிவிட்டது. எங்கள் பகுதியில் அவரைக் கைராசியான டாக்டர் என்றார்கள்.
அவ்வளவு கைராசியான டாக்டர் ஏன் இவ்வளவு சிறிய இடத்தில் மருத்துவமனை நடத்துகிறார் என்று எனக்குப் புரியவில்லை. இரண்டாவது முறை அவரிடம் சென்ற போது டாக்டர் மருத்துவமனையில் இல்லை. மெல்லிசை குழு ஒன்றில் அவர் டிஎம்எஸ் குரலில் பாடக்கூடியவர் என்பதால் கச்சேரிக்குப் போய்விட்டார் என்றார்கள்.
டாக்டர் எப்போது வருவார் என்று தெரியாமல் நிறைய நோயாளிகள் காத்திருந்தார்கள். நானும் அந்த வரிசையில் காத்திருந்தேன். டாக்டர் இரவு பத்து மணிக்கு வந்தார். அன்றைக்கு டாக்டர் மிகவும் உற்சாகமாக இருந்தார். என்ன படம் பார்த்தீர்கள் என்று வழக்கம் போலவே கேட்டார். புதிதாக ஜோக் அடித்தார். பின்பு “அன்புள்ள மான்விழியே“ பாடலை முணுமுணுத்தபடியே ஜெய்சங்கர் படம் என்றார். அது தான் அவரைக் கடைசியாகப் பார்த்தது.
நான் வாசித்த பகுதியில் பழனியப்பனுக்குச் செல்வாக்கு இருந்தது என்பதால் வீதியெங்கும் அஞ்சலி சுவரொட்டிகளை ஒட்டியிருந்தார்கள். அதில் கையில் மைக்குடன் டாக்டர் நின்றிருந்தார்.

டாக்டரின் வீடு எங்கேயிருக்கிறது என்பதை விசாரித்துச் சென்றபோது மண்டிஹவுஸ் என்று நாங்கள் அழைத்த பெரிய வீடு அவருடையது என்பதைத் தெரிந்து கொண்டேன். நிறைய மாமரங்கள் கொண்ட அந்தப் பங்களா மினர்வா தியேட்டர் நோக்கி திரும்பும் சாலையில் இருந்தது.
அந்தப் பங்களாவை இடித்துவிட்டு ஷாப்பிங் மால் கட்டப்போகிறார்கள் என்று பலகாலமாகப் பேசிக் கொண்டார்கள். ஒருவேளை இனிமேல் அப்படி நடக்குமோ என்னவோ.
இளமஞ்சள் நிறத்தில் இரண்டு பெரிய தூண்கள் கொண்ட டாக்டர் வீட்டின் நுழைவாசலை ஒட்டி பத்து பதினைந்து பிளாஸ்டிக் சேர்களைப் போட்டு வைத்திருந்தார்கள். அதில் ஒரு நாற்காலியின் கால் உடைந்து போயிருந்தது. கைப்பிடியில் எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த நபர் நியூஸ் பேப்பரை பாதி மடித்த நிலையில் படித்துக் கொண்டிருந்தார். வீட்டிற்குள் அழுகை சப்தம் எதுவும் கேட்கவில்லை.
ஒரு கிழவர் பிளாஸ்க் ஒன்றினை கையில் எடுத்துக் கொண்டு டீ வாங்குவதற்காக வெளியே போய்க் கொண்டிருந்தார். யாரோ அவசரத்தில் ஒரு செருப்பை வீசி எறிந்து போயிருந்தார்கள். அது ஹோண்டா பைக் அடியில் கிடப்பது தெரிந்தது.
வீட்டின் ஹாலில் டாக்டரின் உடல் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கபட்டிருந்தது. ரோஜாப்பூ மாலை அணிவித்திருந்தார்கள். இறந்தவர் சபாரி சூட் அணிந்து அப்போது தான் பார்க்கிறேன். ஏன் அந்த உடையை அணிவித்தார்கள் என்று புரியவில்லை. டாக்டர் எங்கோ பயணம் புறப்படுகிறவர் போலிருந்தார்.
சரி தான், மரணமும் ஒரு வகைப் பயணம் தானே என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். யாரிடம் துக்கம் விசாரிப்பது என்று தெரியவில்லை. சாவு வீடு என்றவுடன் மனதில் எழுவது செவ்வந்திப்பூக்களும் ஊதுபத்திவாசனையும் தான். ஆனால் டாக்டர் வீட்டில் அப்படி ஊதுபத்தி வாசனை வரவில்லை.
கண்ணுக்குத் தெரியாத ஈரம் சாவுவீடு முழுவதும் பரவி யாவரின் உடையினையும் நெகிழச் செய்திருந்தது. தளர்வான உடைகள் சோகத்தை அதிகப்படுத்துகின்றன.
அங்கிருந்த பெண்களில் டாக்டரின் மனைவி யார் என்று தெரியவில்லை. நாலைந்து பெண்கள் சுவரோரம் அமர்ந்திருந்தார்கள். சுடிதார் அணிந்த ஒரு பெண் தூக்கம் கலையாத கண்களுடன் நின்று கொண்டிருந்தாள். சாவு வீட்டில் பெண்களின் தோற்றம் விநோதமாகி விடுகிறது. அதிகப்படியான சோகம் கொண்டவர்களாகக் காணப்படுவது ஏன் என்பதை யோசித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது தான் வீட்டில் சிறுவர்களே இல்லை என்பது புரிந்தது. ஒருவேளை மாடியில் விளையாடிக் கொண்டிருப்பார்களோ. திண்டுக்கல்லில் கணபதி மாமா இறந்த போது தானும் அக்காவும் பக்கத்துவீட்டில் இருந்த பையன்களுடன் கேரம் ஆடியது நினைவில் வந்து போனது.
எவ்வளவு நேரம் இறந்த உடலை பார்த்துக் கொண்டே நிற்பது என்று புரியாமல் நின்று கொண்டிருந்தேன். சாவு வீட்டில் தெரிந்தவர், தெரியாதவர் என்று பேதமில்லை. யாரைப் பார்த்து சிரிக்கவும் முடியாது. கொட்டாவி விட முடியாது. டாக்டருக்கு தெரிந்த சினிமா நடிகர் ஒருவர் நாலைந்து ஆட்களுடன் வந்து மாலை அணிவித்தார். பிரேமா எங்கே என ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தார். யார் பிரேமா என்று தெரியவில்லை.
அமைதியாக வெளியே வந்து பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து கொண்டேன். பக்கத்தில் அமர்ந்திருப்பவரும் டாக்டரிடம் வந்து போன நோயாளி தானா. எப்படிக் கேட்பது என்று புரியவில்லை.
டாக்டரின் சொந்த ஊர் விருத்தாசலம் என்று பேசிக் கொண்டார்கள். அவர் மனைவி ரெஜினா மகப்பேறு மருத்துவர். விக்டோரியா ஹாஸ்பிடலில் வேலை செய்கிறார். மினர்வா தியேட்டர் டாக்டரின் அப்பா கட்டியது, அவர் அந்தக் காலத்தில் நிறைய ரேஸ் குதிரைகள் வைத்திருந்தார் என நிறையப் புதிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.
டாக்டர் உயிரோடு இருக்கும் போது இதில் ஒன்றை பற்றிக் கூட நான் கேள்விபட்டதில்லை. அறிந்து கொள்ள வேண்டும் ஆர்வமும் எனக்கில்லை. அது ஏன் என்றும் புரியவில்லை.
எனது நாற்காலியை நோக்கி இரண்டு கட்டெறும்புகள் வேகமாக வந்து கொண்டிருந்தன. வெயிலில் ஊரும் எறும்புகள் பித்தேறியது போல நடந்து கொள்கின்றன.
ஒரு வேன் நிறைய ஆட்கள் விருத்தாசலத்திலிருந்து வந்திருந்தார்கள். அவர்கள் ஒரே இடத்தில் செருப்பைக் கழட்டிவிட்டது வியப்பளித்தது. ஆட்டோவிலும், பைக்கிலும் கையில் மாலையோடு ஆட்கள் வந்தபடியே இருந்தார்கள்.
வெயில் ஏற ஏற சாவு வீட்டின் துக்கம் வடிந்துவருவதை உணர்ந்தேன். வெக்கை தாளமுடியால் கசகசப்பும் வியர்வையுமாக ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் துண்டுபேப்பர் ஒன்றை விசிறி போல வீசிக் கொண்டிருந்தார். அவர் முகத்திற்கே அந்தக் காற்று போதவில்லை.
வீட்டிற்குப் போகலாம் என நான் கிளம்பி வெளியே வரும் போது சிவப்பு நிற உடை அணிந்த பேண்ட் வாசிப்பவர்கள் டாக்டர் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். வீடு திரும்பி வந்த போது டாக்டரைப் போலச் சினிமா பாட்டு பாட வேண்டும் என்ற ஆசை எழுந்தது.
குளியல் அறையில் நான் அன்புள்ள மான்விழியே பாடுவதைக் கேட்டு எனது மனைவி குழப்பமடைந்தாள்.
••
அடுத்தநாள் காலை நியூஸ் பேப்பரில் வந்திருந்த செய்தியை மாசிலாமணி காட்டினான்
“சாவு வீட்டில் மோதிரம், பைக் திருட்டு“.
அந்தச் செய்தி டாக்டர் பழனியப்பன் பற்றியதே. டாக்டர் கையில் அணிந்திருந்த நவரத்தினக்கல் மோதிரத்தை யாரோ திருடிவிட்டார்கள். அத்தோடு வெளியே நிறுத்தப்பட்டிருந்த யமஹா பைக் ஒன்றையும் காணவில்லை. திருடனை போலீஸ் தேடி வருகிறது என்று செய்தி வெளியாகியிருந்தது
அந்தத் திருடன் எப்போது சாவு வீட்டிற்கு வந்திருப்பான். ஒருவேளை நான் போன போது அவனும் அங்கேயிருந்தானா. டாக்டர் இப்படி ஒரு மோதிரம் அணிந்திருந்தது என் கண்ணில் படவேயில்லையே. அதை எப்படி அவன் திருடியிருப்பான். இப்படி நானாக எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்தேன். அப்படி நினைப்பது சுவாரஸ்யமாக இருந்தது.
சாவு வீட்டில் திருடுகிற நபர் எப்படியிருப்பான் என மனதிற்குள்ளாக ஒரு சித்திரம் வரைந்து கொண்டிருந்தேன்.
அதன்பின்பு அதே போலச் சாவு வீட்டில் திருடுகிறவனைப் பற்றி நாலைந்து செய்திகளைப் பேப்பரில் படித்துவிட்டேன். அவன் நகரில் எங்கோ வசிக்கிறான். எங்கே சாவு நடந்தாலும் போய்விடுகிறான். துக்கம் கேட்பவர்களில் ஒருவனாக அங்கே இருக்கிறான். விலையுயர்ந்த பொருட்களைத் திருடிக் போகிறான்.
சாவு வீட்டில் ரகசிய காதல் புரிகிறவர் இருக்கும் போது திருடன் இருக்கக் கூடாதா என்ன.
சாவு வீட்டில் திருட்டு நடந்தால் எவரும் உடனே புகார் கொடுக்க மாட்டார்கள் என்று அவன் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறான்.
சாவு வீட்டில் பொருட்கள் அதன் மதிப்பை இழந்துவிடுகின்றன. கடிகாரம் திடீரென மெதுவாகிவிடுகிறது. நடைசப்தம் உரத்துக் கேட்கிறது. துக்கம் கேட்க வருகிற அவசரத்தில் ஒருவர் தனது மூக்கு கண்ணாடியை வீட்டிலே வைத்து மறந்து வந்துவிடுகிறார். செத்துகிடப்பவரின் முகத்தை அவரால் காண முடியவில்லை.
வேறு ஒருவர் டாக்டர் பானிபூரி விரும்பி சாப்பிடுவார் என்று பேசிக் கொண்டிருந்தார். மனிதர்கள் சாவு வீட்டிற்குள் குழப்பமான மனநிலையே கொண்டிருக்கிறார்கள். எதைப்பற்றிப் பேசுவது என்று தெரியாமல் உளறுகிறார்கள். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.
சாவு என்பதே திருட்டு தான். உரிமையாளனுக்குத் தெரியாமல் உயிரை திருடிக் கொண்டு போகும் கள்வன் வந்து போன இடம் தானே சாவு வீடு. என்று தத்துவார்த்தமாக நினைத்துக் கொண்டேன். சாவைப் பற்றி எப்போது யோசித்தாலும் தத்துவம் தானே வந்துவிடுகிறது. தத்துவம் என்ற பழையதுணியை வைத்து பிடிக்காவிட்டால் உண்மையின் சூட்டை தாங்க முடியாதில்லையா.
••
சாவு வீட்டில் திருடுகிறவனை ஒருமுறை நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை எனக்குள் உருவானது.
இதற்காகவே எனக்குப் பழக்கமே இல்லாத இறந்த வீடுகளுக்குப் போய் வரத் துவங்கினேன். அங்கே வந்து போகிறவர்களில் யார் திருடனாக இருப்பான் என்று கவனித்துக் கொண்டேயிருப்பேன்.
சாவு வீடு என்பது திருடுவதற்கு உகந்த சூழல் என்பதால் எவரும் திருடராகி விடுகிறார்களா என்பதும் புரியவில்லை. எல்லாச் சாவு வீட்டிலும் இறந்தவருக்கு உரிய பொருட்களை. பணத்தை, நகையை, சொத்தை உறவினர்களே திருடிக் கொள்கிறார்கள் என்பதை மட்டும் நன்றாக உணர முடிந்தது.
••
சாவு வீட்டில் திருடுகிறவனுக்கு நானாக ஒரு பெயரை வைத்தேன். அவன் பெயர் மர்மன். அவனுக்கு முப்பது வயதிருக்கக் கூடும் என்று வயதையும் உருவாக்கிக் கொண்டேன். அவன் வழக்கமான திருடர்களில் ஒருவனில்லை. அவனுக்கு என்று சில விதிமுறைகள் இருந்தன என நானே அவற்றைப் பட்டியலிட்டேன்.

பூட்டப்பட்டிருந்த எந்த வீட்டிலும் அவன் திருட மாட்டான். இரவில் ஒரு போதும் திருட மாட்டான். இறந்தவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முறையில் ஒரு போதும் நடந்து கொள்ள மாட்டான். திருடிய வீட்டில் தனது நினைவாகப் பச்சை நிற ஹவாய் செருப்பைக் கழட்டி போட்டுவந்துவிடுவான். (திருடன் ஏன் பச்சை நிற ஹவாய் செருப்பை அணிகிறான் என்ற கேள்வி வராமல் இல்லை).
சாவு வீட்டில் திருடுகிறவன் பற்றிய எனது கற்பனையை அலுவலக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட போது அவற்றை உண்மை என்றே நம்பினார்கள். நாலைந்து பேரிடம் இதைப் பகிர்ந்து கொண்டபிறகு நானே அது உண்மையாக இருக்கக் கூடும் என்று நம்ப ஆரம்பித்தேன்.
திருடனைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்காக எனது நண்பனின் தந்தையான ஒய்வு பெற்ற கான்ஸ்டபிள் முத்துமாணிக்கத்தைச் சந்தித்துப் பேசினேன்.
`இது போன்ற திருடர்கள் ஊரை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். அந்தத் திருடன் ஒரு நாள் சாவு வீட்டில் வைத்தே பிடிபடுவான் பாருங்கள்“ என்றார்
சாவு நடக்காத ஊரேயில்லை. அவன் எங்கே போனாலும் பிழைத்துக் கொள்வான். அவன் சாவு வீட்டில் வைத்தே பிடிபடுவான் என்பது விதியா, அல்லது சாபமா
அப்படி நடக்கும் போது மக்கள் ஒன்று சேர்ந்து அவனை அடிப்பார்களா. அல்லது அமைதியாகக் காவலர்களிடம் ஒப்படைத்துவிடுவார்களா
சாவு வீட்டில் உறவினர்களுக்குள் சண்டை வந்து பார்த்திருக்கிறேன். கடன்காரன் கூச்சலிடுவதையும், உடலை எடுத்துக் கொண்டு போக முடியாமல் தடுப்பதையும் கூடக் கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு திருடன் பிடிபட்டு அவனை ஆட்கள் அடித்தார்கள் என்று கேள்விபட்டதேயில்லை.
••
சாவு வீட்டில் திருடுகிறவனைப் பற்றி நியூஸ்சேனலில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பினார்கள்.
அதில் அந்தத் திருடன் சாவு வீடு ஒன்றிலிருந்து தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதோடு முதுகு சொறிய வைத்திருந்த மரக்கை ஒன்றையும் திருடிக் கொண்டு போனான் என்றார்கள். கேட்கும் போது வேடிக்கையாக இருந்தது.
தொடர்ந்து காவல்துறைக்குச் சவால்விடும் அவனைப் பிடிக்கத் தனிப்படை அமைத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்கள்
தனிப்படை ஒவ்வொரு சாவு வீட்டிற்கும் செல்லுமா, சாவு வீட்டை கேமிராவில் கண்காணிப்பார்களா, அல்லது மாறுவேஷத்தில் இருப்பார்களா. அவர்கள் துக்கம் அனுஷ்டிப்பது போலத் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பது சிரமம் இல்லையா. இப்படி எனக்குள் நிறையச் சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் அந்தத் தனிப்படையில் நானும் ஒருவனாக வேலை செய்ய ஆசைப்பட்டேன்.
••
சாவு வீட்டில் திருடுகிறவனைப் பற்றிய புதிய செய்தி ஏதேனும் வெளியாகிறதா என்பதை அறிந்து கொள்வதற்காக எல்லா நாளிதழ்களையும் வாசித்தேன்.
நண்பர்களுடன் உரையாடும் போது வேண்டும் என்றே திருடனைப் பற்றிய பேச்சை எடுப்பேன். அநேகமாக எல்லோருக்கும் சாவு வீட்டில் திருட்டு போன கதை ஒன்று தெரிந்திருக்கிறது. அதைப் பற்றிச் சொல்லும் போது மகிழ்ச்சி அடைகிறார்கள். அதிலும் ஞானதிரவியம் சொன்ன நிகழ்ச்சி தான் நம்ப முடியாதது போலிருந்தது.
ராயபுரத்தில் அந்தத் திருடன் இறந்தவரின் அஸ்தி வைத்திருந்த கலசத்தைத் திருடிக் கொண்டு போய்விட்டான். அஸ்தியை மட்டும் தந்துவிடும்படி வீட்டோர் பேப்பரில் விளம்பரம் கொடுத்தார்களாம். ஞானதிரவியம் உறுதியாக அது நடந்த விஷயம் என்றான்.
சாவு வீட்டில் திருடுகிறவனைப் பற்றி அறிந்து கொள்ள முனைந்த நாளிலிருந்து எனக்குள் மாற்றங்கள் உருவாக ஆரம்பித்தன. குறிப்பாகச் சிறுவயதிலிருந்து சாவு வீடு குறித்து இருந்த பயம் கலைந்து போனது. சாவு வீடு என்பது ஒரு நாடகம். அதில் நாமும் நடிக்க வேண்டும். சில நேரம் அதில் உணர்ச்சிமிகுந்து அழுவார்கள். சில நேரம் அபத்தமான நிகழ்வுகள் அரங்கேறும்.
சாவின் முன்னிலையில் எப்படி நடந்து கொள்வது என்று மனிதர்கள் இன்றுவரை பழகவேயில்லை. இறந்தவரால் கோவித்துக் கொள்ள முடியாது என்பதால் எவ்வளவு அபத்தங்கள் அவரைச் சுற்றி நடக்கின்றன. சாவுச்சடங்குகளை உன்னிப்பாகக் கவனித்தால் நாம் எந்த நூற்றாண்டில் வசிக்கிறோம் என்று சந்தேகம் வந்துவிடுகிறது.

ஒரு நாள் என்னிடம் ஞானதிரவியம் வாட்ஸ்அப் வீடியோ ஒன்றைக் காட்டினான். அதில் சாவு வீட்டில் திருடும் பெண் மந்தைவெளியில் பிடிபட்டாள் என்று காட்டினார்கள்.
அந்தப் பெண்ணின் பெயர் நடனா அலைஸ் நடனசுந்தரி. அந்தப் பெயர் அவளோடு ஒட்டவேயில்லை.
அவளுக்கு இருபத்தைந்து வயதிருக்கும். மஞ்சள் வண்ண ஷிபான் சேலை கட்டியிருந்தாள். பஃப் வைத்த ஜாக்கெட் சுருட்டை முடி கொண்டிருந்தாள். நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு. நான்கு வயது மகளுடன் நடனா சாவு வீடுகளுக்குச் செல்வது வழக்கம். அங்கே துக்கம் கேட்பவள் போலப் பெண்களுடன் உறவாடி பொருட்களைத் திருடிச் சென்றுவிடுவாள் என்று வீடியோவில் காட்டினார்கள்.
“இவ புருஷன் தான் நம்ம ஊர்ல திருடுறவன்“ என்றான் ஞானதிரவியம்
“அது எப்படித் தெரியும்“ எனக்கேட்டேன்.
“யூகம் தான்“ என்றான் ஞானதிரவியம். பின்பு பிடறியை சொறிந்தபடியே “ஆளு அம்சமா இருக்கா“ என்றான்.
குற்ற செய்திகள் பபிள்கம் போன்றதே. அதைச் சுவைக்கச் சுவைக்க இழுபட்டுக் கொண்டேயிருக்கும். உலகின் கற்பனையால் தான் குற்றம் சுவாரஸ்யமாகிறது.
மர்மனின் மனைவி பெயர் நடனா. அவர்களுக்கு நான்கு வயது மகள் இருக்கிறாள் என்று மனதிற்குள் குறித்துக் கொண்டேன்.
அன்று வீடு திரும்பிய பிறகு அந்த வீடியோவை நாலைந்து முறை பார்த்தேன். நடனாவும் அவளது கணவன் மர்மனும் எந்த ஆண்டு எங்கே திருமணம் செய்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.
அவர்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்கள் என்று நானாகக் கற்பனை செய்தேன். இளம் தம்பதிகளாக அவர்கள் சென்னைக்கு வந்தார்கள். வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டார்கள். பலராலும் ஏமாற்றப்பட்டார்கள். முடிவில் ஒரு நாள் இறந்தவர்கள் உடலை வைக்கும் ஐஸ் பெட்டி சப்ளை செய்யும் நிறுவன ஊழியர் மார்டின் சாவு வீட்டில் திருடும் யோசனையை அவர்களுக்குச் சொன்னான். அவன் வழியாகவும் மின்மயானத்தில் வேலை செய்யும் தனபால் உதவியோடும் அவர்கள் இறந்தவர்கள் பற்றிய விபரங்களைச் சேகரித்தார்கள். எந்த வீட்டிற்குத் தனியே போவது. எந்த வீட்டிற்கு மனைவியோடு செல்வது என்று மர்மன் திட்டமிடுவான்.
அவர்கள் சாவு வீட்டில் உறவினர் போலப் பழகுவார்கள். ஓடியோடி வேலைகள் செய்வார்கள். சில நேரம் மர்மன் இறந்தவரிடம் தான் திருட வந்திருக்கிறேன் என்று உண்மையை மெதுவான குரலில் சொல்வான்.
பெரிய மனிதர்கள் யாராவது இறுதி அஞ்சலி செலுத்த வரும் போது அவர்கள் எழுந்து திருடுவதற்கு ஆயுத்தம் ஆகிவிடுவார்கள். சாவு வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் போவது மரபு என்பதால் திருடிய பொருட்களுடன் ரகசியமாக வெளியேறி போய்விடுவார்கள். அவர்கள் மாட்டிக் கொண்டதேயில்லை.
இப்படி அவர்களைப் பற்றிய முழுக்கதை ஒன்றை நானாக மனதில் உருவாக்கிக் கொண்டேன்..
அந்த வாரம் வெள்ளிகிழமை இரவுஎட்டு மணிச் செய்தியில் “சாவு வீட்டில் திருடுகிறவன் பிடிபட்டான்“ என்று தலைப்புச் செய்தியில் காட்டினார்கள். நான் கற்பனை செய்த விஷயங்களிலிருந்து இரண்டு வித்தியாசங்கள் அதிலிருந்தன
ஒன்று பிடிபட்ட திருடனுக்கு வயது ஐம்பதுக்கும் மேலிருந்தது. இரண்டாவது வித்தியாசம் நடனா அவரது மனைவியில்லை மகள். தந்தையும் மகளும் சேர்ந்து திட்டமிட்டுத் திருடியிருக்கிறார்கள். நான்கு வயது சிறுமி அவரது பேத்தி. அவளை ஏன் அழைத்துக் கொண்டு போனார்கள் என்று புரியவில்லை.
இந்தத் திருட்டுக் குடும்பம் திருமழிசையில் தனிவீடு எடுத்து வசித்திருக்கிறார்கள். வீட்டு உரிமையாளர் அவர்கள் மாதவாடகையைச் சரியாகக் கொடுத்தார்கள் என்றார். பக்கத்துவீட்டுகாரர்களுடன் இனிமையாகப் பழகியிருக்கிறார்கள். நடனா பிரியாணி செய்யும் நாளில் தங்களுக்கு மறக்காமல் கொடுத்துவிடுவாள் என்று தொலைக்காட்சியில் பக்கத்துவீட்டுப் பெண் சொன்னாள்.
அவர்கள் ஏன் சாவு வீட்டில் திருடத் துவங்கினார்கள் என்று எவருக்கும் தெரியவில்லை. காவல்துறை தெரிவித்த காரணங்கள் வழக்கமானவையாக இருந்தன.
எல்லோரும் ஒரு விஷயத்தை மறக்காமல் சொன்னார்கள்
“அவர்களைப் பார்த்தால் திருடர்கள் போலத் தெரியவேயில்லை. ஆளை பார்த்து நம்பி விட்டோம். “
எந்தத் திருடனையும் தோற்றத்தை வைத்து கண்டுபிடிக்கவே முடியாது. அது தான் மாநகரின் சிறப்பு. நடனாவும் அவளது தந்தையும் இணைந்து நிற்கும் புகைப்படத்தை நாளிதழில் வெளியிட்டிருந்தார்கள். அதைத் துண்டித்து எனது பர்ஸில் வைத்துக் கொண்டேன்
ஒரு வேளை எனது பர்ஸை யாராவது பிக்பாக்கெட் அடித்தால் அவன் இந்தப் புகைப்படத்தைப் பார்த்து என்ன நினைப்பான் என்று கற்பனை செய்ய ஆரம்பித்தேன்.
மனதில் அது இன்னொரு கதையாக விரிவு கொள்ளத் துவங்கியது.
கற்பனை செய்ய முடியாதவர்களால் நகரில் வசிக்க முடியாது. நிஜம் நம்மை நகரை விட்டுத் துரத்திவிடும்.
***