நண்பர் பாவண்ணன் ,கன்னடத்தில் இருந்து மிகச்சிறந்த இலக்கியப்படைப்புகளைத் தொடர்ச்சியாக தமிழாக்கம் செய்து வருகிறார், அவர் கொண்டாடப்பட வேண்டிய முக்கியத் தமிழ்படைப்பாளி,
சில ஆண்டுகளுக்கு முன்பாக அவரது மொழியாக்கத்தில் வெளியாகி இருந்த சிந்தாமணி கொட்லகெரெயின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன,
கவிதைகள் தரும் பரவசத்திற்காக சிந்தாமணி கொட்லகெரெயிற்கும், தேர்ந்த மொழிபெயர்ப்பினைச் செய்த பாவண்ணன் அவர்களுக்கும் மனம் நிரம்பிய பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
•••
சிந்தாமணி கொட்லகெரெயின் இரண்டு கவிதைகள்
தமிழில் பாவண்ணன்
1. என் வலையில்
முதலில் என் வலையில்
சின்ன மீன்கள் அகப்பட்டன
அவற்றைத் தொடர்ந்து வந்தன
பெரிய பெரிய மீன்கள்
நான் அசையாமல் உட்கார்ந்திருந்தேன்
ஒரு தோணியும் என் வலைக்குள் வந்து சேர்ந்தது
தோணிக்குள் மக்கள் கூட்டம்
அவர்களின் வாகனங்கள்
பார்த்துக் கொண்டிருக்கும்போதே
அவர்கள் தோணியை நிறுத்தினார்கள்
துடுப்பை அழுத்தி
அப்புறம் என் வலைக்குள்
பெரும் புயலின் அரங்கேற்றம்
ஆனந்தத்தோடும் பரவசத்தோடும்
நான் என் வலையைப் பிடித்தே இருந்தேன்
சில கணங்களுக்குள்
ஆறு முழுக்க என் வலைக்குள் வந்துவிட்டது
மெல்ல முழு ஆற்றையும்
என் தோளில் சுமந்தபடி
குன்றின் உச்சியில் இருக்கும் என் வீட்டை நோக்கி
கரையிலிருந்து நடக்கத் தொடங்கினேன்
***********
புலிக்கு ஒரு பெயர்.
தட்டில் இறைச்சி வைக்கிற
சிறுவனைத் தடுத்தது ஒரு நாள்
சர்க்கஸ் புலி
சிறுவனே
உன் முதலாளியிடம் சொல்
எனக்கு ஒரு பெயர் வேண்டும்
சின்னதோ பெரியதோ
கேட்டதும் நினைவுக்கு வர வேண்டும்
புலியின் ரெளத்திரத் தாண்டவம்
அதன் உறுமல்கள்
அதன் சிவப்பு மீசைகள்
பசி மின்னும் வெறி
கண்ணெதிரில் வரவேண்டும்
அப்படிப்பட்ட பெயரை வை
அல்லது
என்னை விடுதலை செய்துவிடு
இவ்வளவும் சொன்ன புலி
இன்று வரைக்கும் கூட
கூண்டுக்குள்ளே
குறுக்கும் நெடுக்கும் அலைகிறது
யார் வந்தாலும் சரி
அழகான
மிருதுவான
பெயர்களை வைத்தால்
காட்டு முயல்களின் காதைக் கடிப்பது போல்
அந்தப் பெயர்களைக் கடித்துத் தின்றுவிடுவேன்
என்ற அது ஆர்ப்பரித்தது
அதனிடம் புதுப்புது பெயர்களை
முன்வைத்து முன்வைத்து சலித்துவிட்டது
அதை இப்பொது வெளியே விட்டால்
நம் சொற்களையும் மொழியையும்
மொழியின் அகராதியையும்
ஒரே மூச்சில் தின்றுவிடக் கூடும்
அதற்காக
கூண்டுக்கு மேலே ஒரு கூண்டு
பாதுகாப்பான பூட்டால் பூட்டி
சர்க்கஸ் குழு மொத்தம்
தள்ளி நின்று பார்க்கிறது
••••