இரண்டு கிழவர்கள்

விகடன் தீபாவளி மலரில் வெளியான சிறுகதை

டெல்லிக்கு விமானத்தில் தான் போக வேண்டும் என்று பட்டாபிராமன் நினைத்தார். பின்பு காந்தி ஒருமுறை கூட விமானத்தில் போனதில்லையே. நாம் ஏன் காந்தி சமாதியைக் காண விமானத்தில் போக வேண்டும் என்று தோன்றியது. உடனே டெல்லி ரயிலில் டிக்கெட் போட்டார்.

காந்தி சமாதியை பார்க்க வேண்டும் என்பதற்காக டெல்லி போகிறேன் என்று மகனிடம் சொன்னால் ஒத்துக் கொள்ளமாட்டான். இந்த வயதான காலத்தில் எதற்காகக் காந்தி சமாதியைப் பார்க்க வேண்டும். பல முறை போய் வந்த இடம் தானே என்று கோவித்துக் கொள்ளுவான்.. ஆனால் அனுமதி கேட்டு போய் வருவதற்குத் தான் என்ன பள்ளிப்பையனா. எழுபத்துமூன்று வயதாகிவிட்டதே என்றும் பட்டாபிராமனுக்குத் தோன்றியது.

அவர் சென்னையில் தனியே வசித்துவந்தார். மகள் அமெரிக்காவில், மகன் மும்பையில். பட்டாபிராமனுக்கு உதவி செய்ய விசாலம் என்ற சமையற்காரப் பெண் இருந்தார். அவர் வீட்டுவேலைகளைப் பார்த்துக் கொண்டார்.

ஒருவேளை மனைவி இருந்திருந்தால் நிச்சயம் அவளுக்குத் தனது ஆசைகள் புரிந்திருக்கும். ஆனால் அவள் இறந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது.. பட்டாபிராமனின் கனவுகளில் அடிக்கடி காந்தி வரத்துவங்கியும் அதே ஆண்டுகள் தான் ஆகின்றன.

உண்மையை சொல்வதென்றால் ஒரே கனவு தான். திரும்பத் திரும்ப வருகிறது. காந்தியின் முன்னால் பட்டாபிராமன் அமர்ந்திருக்கிறார். காந்தி அவரிடம் ஒரு மலரைக் கொடுத்து அது வாடிவிடாமல் பார்த்துக் கொள்ளச் சொல்கிறார். கையில் அந்த மலரை ஏந்தியதும் அது கனமான பொருளைப் போலத் தோன்றுகிறது. சிறிய மலர் தானே எப்படி இவ்வளவு எடை இருக்கிறது என வியப்போடு பார்க்கிறார்.

காந்தி சிரித்தபடியே எல்லா மலர்களும் எடையற்று இருப்பதில்லை என்கிறார்.

அந்த மலரைக் கையில் ஏந்தியபடியே அமர்ந்திருக்கும் போது கவனம் முழுவதும் மலர் மீதே இருக்கிறது. காந்தி அந்த அறையை விட்டு எழுந்து போய்விடுகிறார். நேரம் செல்லச் செல்ல மலர் மெல்ல வாடத்துவங்குகிறது. அதைத் தன்னால் வாடாமல் காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்டு பட்டாபிராமன் சப்தம் எழுப்பும் போது கனவு கலைந்துவிடுகிறது. காந்தி மறைந்து விடுகிறார்

இது என்ன கனவு. ஏன் ஒருவனைக் காந்தி மலரைச் சுமக்கச் சொல்கிறார். பட்டாபிராமனுக்குப் புரியவேயில்லை.

பட்டாபிராமன் காந்தியைப் போலவே லண்டனில் சட்டம் படித்தார். ஆனால் வழக்கறிஞராக பணியாற்றவில்லை.. பத்திரிக்கையாளராகத் தன் வாழ்க்கையைத் துவங்கி பின்பு ஆங்கில நாளிதழ் ஒன்றின் ஆசிரியராகப் பணியாற்றினார். நாலைந்து பத்திரிக்கைகள் அதே பதவி. பின்பு மூன்று ஆண்டுகள் அமெரிக்காவின் பெரிய பதிப்பகம் ஒன்றிலும் தலைமை ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார். அந்த நாட்களில் அவருக்குப் புகழ்பெறுவதும் பணத்தைத் துரத்துவதும் தான் வாழ்க்கை..

அது எப்போது கலைந்தது என்று அவரால் கண்டறிய முடியவில்லை. ஆனால் திடீரென ஒரு நாள் அவர் பத்திரிக்கை ஆசிரியர் பணியை விட்டு விலகி முசோரியிலுள்ள பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்ற ஆரம்பித்தார். அந்த முடிவை அவரது மனைவி புரிந்து கொண்டதுடன் இது தான் உங்களுக்குப் பொருத்தமான வேலை என்று மகிழ்ச்சியோடு சொன்னாள்.

அவர்கள் வீடு மாறி முசோரியில் ஐந்து ஆண்டுகள் வசித்தார்கள். அழகான வாழ்க்கை. பள்ளிக்கூடம் மாணவர்கள் இயற்கையான சூழல். மாலை நேரம் நீண்ட தூரம் நடப்பது. ,இசைகேட்பது என மறக்கமுடியாத நாட்கள். ஆனால் எழுதிப் பழகிய கையால் சும்மா இருக்க முடியாது. திடீரென ஒரு நாள் மும்பையில் இருந்து புதிய பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியாகப் பணியாற்ற அழைப்பு வந்தது. மறுபடியும் பத்திரிக்கைத் துறைக்கே போய்விட்டார்.

இந்த முறை அரசியல்வாதிகளுடன் நெருங்கிப் பழகவும் அவர்களுக்குத் தேவையான விஷயங்களைச் செய்து தரவும் துவங்கினார். மும்பையில் வசதியான வாழ்க்கை. இரண்டு கார்கள். மேல்மட்டது உறவுகள். பார்ட்டி. என வாழ்க்கை பொன்னிறக் கனவில் மிதப்பது போலிருந்தது

ஆனால் இரண்டாயிரத்துப் பதிமூன்றில் நாசிக் செல்லும் போது ஏற்பட்ட சாலை விபத்து அவரது வாழ்க்கையை முடக்கியது. .அந்த விபத்தில் அவர் மட்டும் தான் உயிர்பிழைத்தார். உடன் வந்தவர்கள் அந்த இடத்திலே மரணம். ஒட்டுநர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் இறந்து போனார். ஆனால் பட்டாபிராமனுக்குக் கழுத்து எலும்பு மிகவும் பாதிக்கப்பட்டது. தலை நிற்கவில்லை. தொடர் சிகிட்சைகளுக்குப் எழுந்து நடமாடுவதற்கு ஒரு ஆண்டுகள் ஆனது. நீண்ட நேரம் ஒரே இருக்கையில் அமர்ந்திருக்க முடியாது என்ற நிலை வந்தபோது மகனும் மகளும் அவர் வேலைக்குப் போவதைத் தடுத்துவிட்டார்கள்.

அப்போது தான் சென்னையிலிருந்த மனைவியின் பூர்வீக வீட்டிற்கு இடம் மாறினார்கள். அதன் இரண்டு ஆண்டுகளில் மனைவியும் இறந்து போனதால் அவர் தனது வீட்டிலிருந்தபடியே ஏதாவது இதழ்களுக்குக் கட்டுரைகள் எழுதி வந்தார். எப்போதாவது இளம் பத்திரிக்கையாளர்கள் அவரைத் தேடி வருவார்கள். ஆலோசனை கேட்பார்கள்.

தனிமை வாழ்க்கை பழகிப்போன சூழலில் தான் திடீரென ஒரு நாள் கனவில் காந்தி தோன்ற ஆரம்பித்தார். காந்தி அவரைப் பார்த்துப் பரிகசிப்பது போலவே பட்டாபி உணர்ந்தார். அதன்பின்பு அவருக்குள் தனது கடந்த கால வாழ்க்கை குறித்த கேள்விகளும் குழப்பங்களும் அதிகமாக ஆரம்பித்தது

என்ன மலர் அது. எதற்காக அதைக் காந்தி தன் கையில் கொடுத்து வாடிப்போகாமல் இருக்கச் சொன்னார். அது தன்னைச் சோதிக்கவா. அல்லது பொறுப்புணர்வை உணர்த்தவா, அவருக்குப் புரியவில்லை.

காந்தி இப்படித்தான். யாரை எப்படிச் சோதனைகள் செய்வார் என்று யாருக்குத் தெரியும். சொந்த மனைவி பிள்ளைகளிடம் கூட இப்படித் தானே நடந்திருக்கிறார்

பட்டாபிராமன் விழித்து எழுந்து கொண்டபிறகு நீண்ட நேரம் அந்த மலரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார். ஒருவேளை தனது எழுத்துப்பணி தான் அந்த மலரா. அல்லது சத்தியம் தான் ஒரு மலராக உருக் கொண்டுள்ளதா

மலர்களை வாடிவிடாமல் ஒருவன் எப்படிக் காப்பாற்ற முடியும்.. காந்தியாலும் முடியாதே. பின் ஏன் அப்படி ஒரு பொறுப்பைத் தன்னிடம் கொடுத்தார்.

அந்த மலர் ஏன் கைகளில் ஏந்தியதும் கனமாகிவிட்டது. இதைப்பற்றிக் காந்தி ஏன் பேச மறுக்கிறார். சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே பகலில் இதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார்

முதுமையைத் தைரியமாக, உற்சாகமாக சந்தித்த மனிதர் காந்தி ஒருவர் தான். முதுமையில் தனது மகத்தான செயல்களைச் செய்து காட்டினார். ஒருவேளை அதைத் தான் அந்த மலர் குறிக்கிறதா.

எழுபத்தேழு வயதில் எப்படி அந்த மனிதரால் மதக்கலவரம் நடந்த நவகாளி முழுவதும் சுற்றி அலைய முடிந்தது. வயது தான் அந்த மலரா.. அதைக் காந்தி ஒருவரால் தான் கடந்து செல்ல முடிந்ததா.

தீர்க்கமுடியாத ஒரு புதிரைக் கையில் கொடுத்துப் போனது போல அதைப்பற்றியே பட்டாபிராமன் நினைத்துக் கொண்டிருப்பார்.

இருபது வயதுகளில் ஊர் ஊராகச் சுற்றுவது பிடித்திருந்தது. ஆனால் இந்த எழுபத்திரெண்டு வயதில் எவ்வளவு வேகமாக உறங்கப் போகிறோமோ அவ்வளவு நல்லது என மனது ஏங்க ஆரம்பித்திருந்தது.

பட்டாபிராமனுக்குச் சில நாட்களாகவே இடது கண்ணில் வலியிருந்தது. ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் பின்னிரவில் எழுந்து உட்கார்ந்து எழுதினார் ஒன்றிரண்டு பக்கங்களுக்கு மேல் எழுத இயலவில்லை.

யாருக்காக எழுதுகிறோம் என்ற கேள்வி அவரைத் துன்புறுத்தியது. சுயநலத்தில் ஊறிதிளைத்துப் போன சமூகத்திடம் உண்மையை எப்படிப் பேசுவது.. தன்னைச் சுற்றி நடக்கும் அநீதிகள், வன்முறைகள். மோசடி செயல்களை அவரால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மனதில் கோபம் கொப்பளிக்கிறது. அதை அடக்கிக் கொண்டேயிருந்தால் ரத்த அழுத்தம் கூடிவிடுகிறது. அப்படியான மனநிலைக்கு எழுதுவது மட்டுமே ஆறுதல்.

அவரது மகன் அவருக்கு நேர் எதிரான விருப்பங்கள் கொண்டிருந்தான். காந்தியின் பிள்ளைகளும் அப்படிதானே இருந்தார்கள். நிதிநிர்வாகம் பற்றிய படிப்பை லண்டனில் படித்து அந்த துறையில் பெரிய வேலையை அவனே உருவாக்கிக் கொண்டான். பணம், ஷேர் மார்க்கெட், சர்வதேச சந்தை இது தான் அவனது உலகம்.

அவர் பத்திரிக்கையில் வேலை செய்து சம்பாதித்த பணம் போலப் பத்து மடங்கு அவன் ஒரு வருஷத்தில் சம்பாதித்தான். பஞ்சாபி பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். அவள் மும்பையில் வேலை செய்கிறாள் என்பதால் தான் அவனும் மும்பையில் இருக்கிறான். இல்லாவிட்டால் எப்போதோ ஐரோப்பிய நாடுகளுக்குப் போயிருப்பான். எப்படியும் அது நடக்கத்தான் போகிறது.

ஏன் பிள்ளைகள் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்று பட்டாபிராமனுக்குக் குழப்பமாக இருந்தது. சில நேரங்களில் சொந்தவாழ்க்கையில் தான் ஒரு தோற்றுப்போன மனிதன் என்றே உணருவார். .

அவர்களின் ஒரே மகள் அகிலா படிப்பை விட விளையாட்டில் ஆர்வம். அதுவும் டென்னிஸ் பைத்தியம். அமெரிக்காவிற்குப் படிக்க அனுப்பிய போது அவள் சொன்னாள்

“டாடி, அடுத்தப் பத்து வருஷங்களுக்கு என்னைத் தேடாதீர்கள். உங்களிடம் சொல்லிக் கொண்டே காணாமல் போக விரும்புகிறேன். என்னை நானே கண்டறிய வேண்டியிருக்கிறது. வீட்டிற்குள் அலையும் எறும்பை போல வாழ விருப்பமில்லை. முடிந்தவரைத் தனியே சுற்றியலையப் போகிறேன். விரும்பும் போது நானே உங்களைத் தேடி வருவேன்“

இப்படி சொல்லுமளவு பெண்ணை வளர்த்திருக்கிறோம் என்பது அவருக்குச் சந்தோஷமாக இருந்தது. அவர் மெல்லிய புன்னகையோடு சொன்னார்

“பாவம் உன் மம்மி. அவளுக்குத் திட்டுவதற்கு நீ ஒருத்தி தானே இருக்கிறாய், நீயும் போய்விட்டால் அவள் யாரோ சண்டை போடுவாள், யாரிடம் கோவித்துக் கொள்வாள். யாருக்காகக் குளோப்ஜாமுன் தயாரிப்பாள். “

அதைக் கேட்டு சிரித்த கீதா சொன்னாள்

“நான் சண்டைபோடவும் ஜாமுன் தயாரித்துக் கொடுக்கவும் என் கணவர் இருக்கிறார். நீ உன் இஷ்டம் போலக் கெட்டுத் திரி. ஆனால் எங்கள் பெயரைக் கெடுப்பதைப் போல நடந்து கொள்ளாதே அது போதும்“

“உங்கள் பெயர்கள் அவ்வளவு பலவீனமானதா. நான் மோசமாக நடந்தவுடன் கெட்டுப் போய்விடுவதற்கு. அட்வைஸ் பண்ணாத அம்மா இந்த உலகில் ஒருவர் கூடக் கிடையாது. எனக்கு அது புரியும்“ என ஆங்கிலத்தில் சொன்னாள்.

அன்றிரவு கீதாவிடம் கேட்டாள்

“அகிலா கெட்டு போய்விடுவாள் என நினைக்கிறாயா“

“ அமெரிக்காவில் கேள்விகேட்பார் இல்லாமல் சுற்றினால் கெட்டுப்போகாமல் எப்படியிருப்பாள்“

பட்டாபிராமன் . உற்சாகமாகச் சொன்னார்

“கெட்டுபோவதற்கு அமெரிக்கா போகவேண்டும் என அவசியமில்லை. சென்னையிலே நிறைய வழிகள் இருக்கிறது. அத்தனையும் அவளுக்குத் தெரியும்“

“அவள் விருப்பத்தை நான் தடுக்கவில்லை. ஆனால் அவளைப் பற்றிக் கவலைப்பட நாம் இரண்டு பேர் இருக்கிறோம் என்பதை அவள் மறந்துவிடுகிறாள்“ என்றாள் கீதா

பட்டாபிராமன். சிரித்தபடி சொன்னார்

“நன்றாகக் கவலைப்படுவோம் ஆனால் நம் கவலைகளை அவளுக்குப் பார்சல் மட்டும் பண்ணிவிடவேண்டாம்“

கீதா கோவித்துக் கொண்டாள். பட்டாபிராமன் அவள் கோபத்தை ரசித்தார்.என்ன தான் சண்டையிட்டு கொண்டாலும் தாயும் மகளும் எதிரிகளில்லை. அவர்களுக்குள் ரகசிய ஒட்டுதல் இருந்தது. திடீரென மிக நெருக்கமாகி விடுவார்கள்.

சொன்னது போலவே அகிலா அமெரிக்கா போய்விட்டாள். அவ்வப்போது மெயில் அனுப்பிவைப்பாள். சில நேரம் புகைப்படங்களும் வந்து சேரும்..

கடல்கடந்த பறவை இனி கூட்டிற்குத் திரும்பி வருமா எனத்தெரியாது. பறக்கட்டும். வானம் பெரியது தானே. சுதந்திரமாகப் பறக்கட்டும்.

எப்போதாவது ஷாப்பிங் மாலுக்குப் போகும் போது அகிலா போன்ற ஜாடையில் உள்ள பெண்களைக் காணும்போது கீதா சற்று உணர்ச்சிவசப்பட்டுப் போவாள். அவரோ. ஒவ்வொரு நாளும் காலையில் இன்றைக்கு அவளிடமிருந்து போனோ, மெயிலோ வரக்கூடும் என நினைத்துக் கொள்வார். வராத போது அந்த வருத்தத்தை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்.

ஆச்சரியமாக அன்றிரவு அவர் டெல்லி ரயிலில் ஏறி உட்கார்ந்த போது அகிலா போனில் அழைத்தாள். அமெரிக்காவில் இப்போது மணி எவ்வளவு என யோசித்தார். அகிலா தனது மெக்சிகோ பயணத்தை பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளது குரல் மாறியிருந்தது. பாதிப் பேச்சிலே தொலைபேசி இணைப்புத் துண்டிக்கப்பட்டது. திரும்பக் கூப்பிடுவாள் என நினைத்தார். ஆனால் அழைக்கவில்லை. மனதிற்குள் அவளது குரலை திரும்ப ஒலிக்கவிட்டவாறே ரயிலில் உட்கார்ந்து சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்

ரயிலில் படுத்து உறங்கும் போது காந்தி கனவு வருமா எனத் தெரியவில்லை. இந்த ரயிலில் தான் ஒருவன் மட்டுமே காந்தியைக் காணச் செல்பவன். உலகம் காந்தியை வெறும் பிம்பமாக மட்டும் மாற்றிவிட்டது.

••

ரயிலில் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞன் செல்போனை சார்ஜரில் போட்டுவிட்டு அவரைப் பார்த்துப் புன்னகை செய்தான். பட்டாபிராமன் அதை ஏற்றுக் கொண்டது போலப் பதிலுக்கு லேசாகச் சிரித்தார்

டெல்லியில குளிர் ஜாஸ்தியா இருக்காம்.. நேத்து ஒன்பது டிகிரி என்றான் அந்த இளைஞன்

பட்டாபிராமன் தலையாட்டிக் கொண்டார்

“ டெல்லியில எங்க போறீங்க..“ என்று அந்த இளைஞன் கேட்டார்

“ பழைய பிரண்டு ஒருத்தைரை பார்க்க போறேன்“

“ எங்க இருக்கிறார் உங்க பிரண்ட்“

“ ராஜ்காட்ல“

“ அங்கே தான் காந்தி சமாதி இருக்கு.. “

“ அங்கே தான் போறன்“

“ காந்தி சமாதிக்கா“ என்று சந்தேகமாகக் கேட்டான் அந்த இளைஞன்

“ ஆமாம். “

“ டெல்லியில தான் ஆறு வருஷமா இருக்கேன். ஆனால் போக நேரம் கிடைக்கலை.. காந்தியவா உங்க பிரண்டுனு சொன்னீங்க“

“ ஆமா.. அவர் என்னோட பழைய பிரண்ட்.. என்னைப் போலவே அவரும் ஒரு கிழவர் தானே“

“ எதுக்காகக் காந்தி சமாதிக்கு போறீங்க “

“ காரணம் ஒண்ணுமில்லை.. அங்கே போகணும்னு மனசுல தோணிக்கிட்டே இருந்த்து, அதான் கிளம்பிட்டேன்“

“ அங்கே பாக்குறதுக்கு என்ன இருக்கு.. “

“ காந்தி தான் இருக்கிறார் என்று மெலிதாகச் சிரித்தார் பட்டாபி ராமன்

அதை அந்த இளைஞன் ரசிக்கவில்லை என்பது அவனது முகத்தில் தெரிந்தது.

“ உலகம் மாறிகிட்டு இருக்கு சார்.. உங்களை மாதிரி ஆட்கள் தான் மாறவேயில்லை“ என்றான்

ஏன் அப்படிச் சொன்னான் என்று புரியவில்லை. காந்தியைத் தேடிச் செல்வது அவ்வளவு கேலிக்குரிய விஷயமா என்ன. ஏன் அந்த இளைஞனுக்குக் காந்தி தேவையற்றவராகத் தோன்றுகிறார்.

“ காந்தியோட புத்தகம் ஏதாவது படிச்சிருக்கீங்களா“ என்று அவனிடம் கேட்டார் பட்டாபிராமன்

“ எனக்குப் பாலிடிக்ஸ்ல இன்ட்ரஸ்ட் கிடையாது சார்.. அவர் காங்கிரஸ் தானே“ என்றான்

காந்தியை அரசியல்வாதி என்று சொல்வதை அவரால் ஏற்க முடியவில்லை. அவரை எப்படி அடையாளப்படுத்துவது. அவனுடன் எப்படிப் பேச்சைத் தொடர்வது என்று புரியவில்லை.

தனது செல்போனை எடுத்துக் கொண்டு அவன் எழுந்து கதவை நோக்கி நடந்து போனான். அவனுக்குத் தன்னோடு பேச எதுவுமில்லை. யாரோ ஒரு பைத்தியக்கார கிழவன் என்று நினைத்திருப்பான். நினைக்கட்டுமே. உலகம் முதியவர்களைத் தான் அதிகம் கேலி செய்கிறது. அதில் தான் மட்டும் விதிவிலக்கா என்ன.

அந்த இளைஞன் கேட்ட கேள்வி போல ஏன் காந்தியைத் தேடிச் செல்கிறோம். கனவிற்கு விடைகாணவா. அல்லது தன் வாழ்க்கைக்கு அர்த்தம் தேடியா.. எதற்காக டெல்லி போகிறோம். கடந்து செல்லும் வெளிச்சத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தார். பிறகு படுத்துக் கொண்ட போது காந்தி ரயிலிலும் கடிதங்கள் எழுதினார். ராட்டை நூற்றார். தியானம் செய்தார் என்பது போலப் பல விஷயங்கள் மனதில் ஓட ஆரம்பித்தன.

ரயில் பயணத்தில் அவருக்கு உறக்கம் பிடிக்கவில்லை. தனது செல்போனில் இருந்த காந்தியின் சொற்பொழிவு ஒன்றை கேட்க ஆரம்பித்தார். மெல்லிய குரல். ஆனால் அழுத்தமாகப் பேசுகிறார். இத்தனை மென்மையான குரலை வைத்துக் கொண்டு எப்படி இத்தனை லட்சம் மக்களை ஒன்று திரட்டினார். குரலின் வசீகரம் என்பது அதன் கம்பீரத்தில் இல்லையோ.

பின்பனிக்காலத்தின் இரவு என்பதால் குளிரில் விளக்கு கம்பங்கள் கூட நடுங்கிக் கொண்டிருந்தன இருளை துளைத்துக் கொண்டு ரயில் விரைந்து கொண்டிருந்தது. திறந்து வைத்துவிட்ட வாசனை திரவியபுட்டியிலிருந்து மணம் கசிந்து கொண்டேயிருப்பது போலக் குளிர்கால இரவிற்கேயுரிய விநோத வாசனை காற்றில் கலந்திருந்தது. இரண்டாம் வகுப்புக் குளிர்சாதனப்பெட்டியில் அவரது படுக்கை லோயர்பெர்த் என்பதால் யாரையும் தொந்தரவு செய்யவேண்டிய தேவையில்லை. இருளில் யாரோ எழுந்து கழிப்பறையை நோக்கி போனார்கள். சக்கரை நோயாளியாக இருக்கக்கூடும். நடை தளர்ந்து போயிருந்தது. அப்பர்பெர்த் ஒன்றில் ஒரு ஆள் சாய்ந்து உட்கார்ந்து தனது மடிக் கணிணியில் எதையோ படித்துக் கொண்டிருந்தார். எங்கோ இருட்டில் யாரோ சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மணம் வந்தது. இந்த இரவில் யாருக்குப் பசிக்கிறதோ.

ரயிலில் உறங்க முடியாதவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பது அவருக்கு ஆறுதல் அளித்தது. எவரது செல்போனோ அந்த இரவில் அடித்தது. லதா மங்கேஷ்கரின் மீரா பஜன் ‘நந்த நந்தனு தித்துப் படியா ‘ என்ற பாடலை பாடியது. ரசனையுள்ள ரிங்டோன். ஆணா, பெண்ணா, யாருடைய போன் அது.

குளிர்கால இரவில் லதா மங்கேஷ்கரின் குரலை கேட்பது மயக்கமூட்டுவதாகவே இருந்தது. பாவம் பேதை மீரா காதலனை நினைத்து உருகி உருகி அழிந்து போய்விட்டாள். அந்தப் போன் அடித்துக் கொண்டேயிருந்தது. ஒருவேளை செல்போன் வைத்திருப்பவர் உறங்கியிருக்கக் கூடும்.

பின்னிரவில் யார் அழைக்கிறார்கள். என்ன அவசரம். அல்லது தன்னைப் போல வெறுமையைக் கடக்கமுடியாமல் போன் செய்கிறார்களோ என்னவோ. குளிரில் கைபிடி இரும்பு கம்பிகள் கூட ஜில்லிட்டுப் போயிருந்தன. கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துக் கொண்டார்.

கண்ணை மூடிக் கொண்ட போது திடீரெனத் தனது சொந்த ஊரான மதுரையின் வைகை ஆற்றுப் பாலத்தின் மீது ரயில் போவது போலத் தோன்றியது. மனம் விசித்திரமானது. எங்கே இருந்தபடியே எதை நினைத்துக் கொள்கிறது என யோசித்தபடியே புரண்டு படுத்துக் கொண்டார். ரயில் வேகமெடுத்துப் போய்க் கொண்டிருந்தது.

. நீண்ட பயணத்தின் பிறகு டெல்லி போய் இறங்கும் போது வெயில் அதிமாகவே இருந்தது. டெல்லி நகரில் வாகன நெரிசல் அதிகமாகிவிட்டது. அவரை அழைத்துச் செல்வதற்காகப் பழைய நண்பர் ரிஸ்வி வந்திருந்தார். அந்தக் காரில் ஏறிக் கொண்டதும் உடல்வலி அதிகமாக இருப்பது போல உணர்ந்தார்

ரிஸ்வி காரை மெதுவாகவே ஒட்டிக் கொண்டு சென்றார். சாந்திவிகாரில் இருந்த அவரது வீட்டிற்குச் சென்று வெந்நீரில் குளித்தபோது மிகுந்த களைப்பும் அசதியும் ஏற்பட்டது. பேசாமல் படுத்து உறங்கிவிடலாம் என நினைத்தார். மனதோ காந்தி சமாதிக்குபோய் விட்டு திரும்பி வந்துவிடலாம் என்று குரலிட்டது.

ரிஸ்வியின் மகள் ஸ்வப்னா தான் அவரைக் காந்தி சமாதிக்கு அழைத்துக் கொண்டு போனாள். பெண்கள் காந்தியை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவள் வழியில் தேநீர் குடிக்க ஒரு கடையில் நிறுததினாள். தனது தந்தையை அழைத்துப் போவது போலவே கையைப் பிடித்து அவரை அழைத்துக் கொண்டு போனாள். அந்த நெருக்கம் அவருக்குப் பிடித்திருந்தது.

‘ராஜ்காட் செல்லும் சாலையைப் பிடிப்பதற்குள் நிறைய இடங்களில் போக்குவரத்துத் திசைதிருப்பிவிடப்பட்டிருந்தது. டெல்லியில் எந்தச் சாலையை எப்போது மூடுவார்கள் என யாருக்கும் தெரியாது.

அவரது காரின் அருகில் நின்றிருந்த ஜாகுவார் காரை ஒட்டி வந்த பையனுக்கு இருபது வயதிருக்கக் கூடும். வெளிநாட்டுகாரை ஒட்டிக் கொண்டு போகிறான். யாராவது மந்திரியின் மகனாக இருக்ககூடும். ஒருவேளை மூத்த ஐஏஎஸ் அதிகாரி வீட்டுபிள்ளையாகவும் இருக்ககூடும். யாரிடம் தான் பணம் இல்லை.

அந்தப் பையன் வயதில் இப்படிக் கார் ஒட்டிக் கொண்டு ஜாலியாக ஊர் சுற்ற வேண்டும் எனப் பட்டாபிராமன் ஆசைப்படவேயில்லை. மாறாகச் சதா எதையாவது படித்துக் கொண்டு, காரசாரமாக விவாதித்துக் கொண்டு காலத்தைக் கழித்திருந்தார். பைத்தியக்காரத்தனம். உண்மையில் அந்தப் பைத்தியம் இன்னமும் விடவில்லை தான். எங்கே புத்தகங்களைக் கண்டாலும் கைபரபரக்க தானே செய்கிறது. அச்சில் உள்ளதை வாசிப்பதில் அப்படி என்னதான் ஆனந்தமோ.

அந்தப் பையன் சிக்னல் விழுந்தவுடன் காரை அநாயசமாக ஒட்டிகடந்தான். பட்டாபிராமன். கார் ரிங்ரோட்டை பிடித்தபோது மேற்குவானம் வெளிறிப்போயிருப்பது தெரிந்தது. மேகங்களேயில்லை. டெல்லியில் சில நாட்கள் அபூர்வமான நிறத்தில் மேகங்கள் திரண்டிருக்கும். தங்க பாளம் போலவும் வெண்புகையில் செய்த குதிரைகள் போலவும் தெரியும். ஆனால் அன்றைக்கு உலர்ந்த வானமாகயிருந்தது. ராஜ்காட்டில் நிறையச் சுற்றுலா பயணிகள் வருவதால் பார்க்கிங்கை தொலைவாக வைத்திருந்தார்கள். அங்கே காரை நிறுத்திவிட்டு இறங்கி வரும் போது ஒரு பீகாரி குடும்பம் தரையில் உட்கார்ந்து அலுமினிய தட்டில் ரொட்டியை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

 ராஜ்காட் எங்கும் நினைவிடங்கள். ஆனாலும் காந்திக்கு கிடைக்கும் முக்கியத்துவம் சரண்சிங்கிற்குக் கிடைக்கவில்லை. அவரது சமாதி அருகிலே தானிருக்கிறது. பொதுமக்கள் ஏன் சரண்சிங் சமாதி பக்கம் திரும்புவதேயில்லை.

காந்தி இறந்து போய்ப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அந்தத் துக்கம் மறையவேயில்லை. இப்போதும் யாரோ ஒருவர் அந்தச் சமாதியில் கண்ணீர்விட்டு அழுகிறார். கண்ணீரின் வழியே காந்தியை தொட்டுவிட முடியாதா எனத் துடிக்கிறார். காந்தியின் மரணம் இந்திய வரலாற்றின் திருப்புமுனை. நம்பிக்கையின் மீது விழுந்த பலமான அடி. இன்னமும் இந்தியா அதிலிருந்து விடுபடவில்லை

பட்டாபிராமன் மெதுவாகக் காந்தி சமாதியை நோக்கி நடந்தார். அவர் முன்னே சுற்றுலா பயணிகளின் கூட்டம் போய்க் கொண்டிருந்தது. முக்காடு போட்ட ராஜஸ்தானியப் பெண்கள். தலைப்பாகை சுற்றிய உயரமான ஆண்கள்.. வேகமாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். பட்டாபிராமன். மெதுவாக நடந்து போனார்.

காந்தி சமாதியிலிருந்து திரும்பிய இரண்டு கிழவர்கள் தங்கள் கதர் தொப்பியை கையில் வைத்திருந்தார்கள். கதர் தொப்பி அணிந்தவர்களைக் காணுவது இப்போது அரிதாகிவிட்டது. வட மாநில அரசியல்வாதிகளில் சிலர் தான் கதர் தொப்பி அணிகிறார்கள். சாமானியர்களில் எத்தனை பேர் கதர்குல்லாவோடு காணப்படுகிறார்கள். அது வெறும் தொப்பியில்லை. ஒரு அடையாளம்.

செருப்பைக் கழட்டி போட்டுவிட்டு சலவைக்கல்லால் ஆன காந்தி சமாதியை நோக்கி பட்டாபிராமன் நடக்கத் துவங்கிய போது கண்ணாடிப்பெட்டிக்குள் எரியும் தீபம் கண்ணில் பட்டது. மஞ்சளும் சிவப்பும் வெள்ளையுமான பூக்களைக் கொண்டு சமாதியை அலங்காரம் செய்திருந்தார்கள். வைஷ்ணவ ஜனதோ பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.

காந்தி சமாதியின் சுடரைக் கண்டதும் மனதிற்குள் சொல்லிக் கொண்டார்

“ நான் காந்தியோடு கைகுலுக்கப் போகிறேன். அந்தக் கிழவரின் கைகள் எனக்குத் தேவையாக இருக்கின்றன. அதன் தொடுதல் வழியாக என் துயரங்களைக் கடந்து போக விரும்புகிறேன்“.

பட்டாபிராமனை இடித்துக் கொண்டு முன்னால் போன ஒரு குடும்பம் காந்தி சமாதியை பார்த்து கையெடுத்து கும்பிட்டது. அவர்களுக்குக் காந்தியும் ஒரு தெய்வம். வேறு எப்படிக் காந்தியை புரிந்து கொள்வது.

பட்டாபிராமன் அமைதியாக அந்தச் சமாதியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பூ அலங்காரங்கள். சலவைக்கற்கள் எதையும் காந்தி தன் வாழ்நாளில் வேண்டியதில்லை. ஒருவேளை அவரது ஆசான் டால்ஸ்டாயை போலத் தனது புதைமேடும் எளிமையாகப் புல் முளைத்த இடமாக இருக்க வேண்டும் எனக் காந்தியும் விரும்பியிருப்பாரோ என்னவோ.

காந்தி கொல்லப்படுவார் என இந்தியர்கள் ஒருநாளும் நம்பியதில்லை.

காந்தி ஏன் சுடப்பட்டார். இந்திய அரசியல் வரலாற்றில் அதன்பின்பு எந்தத் தலைவரும் துப்பாக்கிக்குண்டிற்கு இரையானதில்லையே. அதிகாரம் சிலரைத் தூக்கிலிட்டிருக்கிறது. சிலரைச் சிறையில் தள்ளி சாகடித்திருக்கிறது. ஆனால் சாமானிய மனிதன் ஒருவன் கையில் துப்பாக்கி ஏந்தி நேர்நின்று ஒரு மகத்தான மனிதரைக் கொல்வது இது தான் முதல்முறை. எப்படி இந்தச் சம்பவம் சாத்தியமானது.

காந்தியின் மரணத்துடன் சாமானிய மனிதர்களின் மீதான நம்பிக்கையும் புதையுண்டு போய்விட்டதா என்ன.

பட்டாபிராமன் அந்த நெருப்பைப் பார்த்துக் கொண்டேயிருந்தார்

காந்தியின் கையசைவைப் போலவே மெதுவாக அந்தத் தீபம் அசைந்து கொண்டிருந்தது.

நிதானம்.

மிக நிதானம்.

அது தான் காந்தியின் இயல்பு. ஏன் அவர் இவ்வளவு நிதானமாக எதையும் அணுகுகிறார். பரபரப்பும் உணர்ச்சி வேகமும் தானே அரசியல். அதை ஏன் இப்படிக் கனிவுடன் அமைதியுடன் அணுகினார்.

அந்த நெருப்பை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த போது காந்தியின் குரல் அடிமனதிலிருந்து ஒலித்தது

“பட்டாபிராமன். இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சமூகப்பொறுப்பு இருக்கிறது. அதை நான் நினைவுபடுத்து உனக்குச் சங்கடமாக இருந்தாலும் உன் பொறுப்புகளை நீ சரியாகச் செய்திருக்கிறாயா என உன்னிடமே கேட்டுக் கொள்.. பட்டாபி.. நான் இன்னும் பத்தாண்டுகள் இருந்திருந்தால் பிரிந்த இந்தியாவை ஒன்று சேர்ந்திருப்பேன். இப்போது நீ செய்ய வேண்டிய வேலையும் அது தான். “

பட்டாபிராமன் கண்களை மூடியபடியே. மனதிற்குள்ளாகவே காந்தியோடு பேசிக் கொண்டிருந்தார்.

யாரோ பின்னாலிருந்து இடித்து விலகிப் போகும்படி சொன்னார்கள். மனதில் பீறிட்ட சொற்கள் நீருக்குள் மறைந்து போகும் மீன்களெனச் சட்டென மறைந்து போயின.

ராஜ்காட்டை விட்டுக் காரில் வெளியே வந்த போது கழுகுகள் யமுனை ஆற்றின் கரையை வட்டமிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார். கழுகுகள் எப்போதும் டெல்லியை சுற்றிக் கொண்டு தானிருக்கின்றன.

பாவமன்னிப்பு கேட்டு திரும்பும் மனிதனைப் போலப் பட்டாபிராமன் உணர்ந்தார். அவரது மனதில் இப்போது சுமை இறங்கியிருந்தது.

காலார நடந்து புத்தகக்கடையைத் தேடினார். உணவகங்கள். ஐஸ்கீரிம் கடைகள், துணிக்கடைகள். செருப்புகடைகள் இருந்தன. புத்தகக் கடை எதையும் காணமுடியவில்லை.

கடைசியாகச் சிறிய புத்தகக் கடை கண்ணில்பட்டது. அதனுள் ஒரு வயதானவர் முக்காலி ஒன்றில் உட்கார்ந்து ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். பட்டாபிராமனைக் கண்டவுடன் “என்ன புத்தகம் வேண்டும்“ எனக்கேட்டார்

“சும்மா பார்க்கிறேன“ என்றார் பட்டாபிராமன்.

.கடையாள் திரும்பவும் முக்காலியில் உட்கார்ந்து கொண்டார். கடையில் பெருமளவு துப்பறியும் நாவல்கள். பொழுதுபோக்குப் புத்தகங்களே இருந்தன. அதற்கிடையில் கபீரின் கவிதைகள் தொகுப்பு ஒன்று கண்ணில்பட்டது. கபீர் தாசை படிக்க வேண்டியது தான் என அதை விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.

கார் வரை நடந்து போய்க் காரில் உட்கார்ந்து லைட்டைப் போட்டுபுத்தகத்தைப் புரட்டினார்

“சிவுன்டி சாவல் லே சலி, பிச் மே மில் கயி தால்

கஹை கபீர் தோ ந மிலை, இக்லே தூஜி டால்“

அரிசி தூக்கிச் செல்லும் எறும்பு வழியில் காணும் பருப்புக்கு ஆசைப்பட்டால் இரண்டும் இல்லாமல் போகும் அபாயம் உண்டு எனக் கபீர் எச்சரிக்கிறார்.

அந்த எறும்பை போலதான் தானும் இருக்கிறேனா, எறும்பாவது கண்ணில்பட்ட இரண்டை தூக்கிச் செல்லப்பார்க்கிறது. தான் இருபதைத் தூக்கிக் கொண்டு போக முயன்று தோற்றிருக்கிறேன். என்று உணர்ந்தார்.

அந்த எண்ணம் வந்தவுடன் மனது தண்ணீரில் ஊறிக்கிடந்த கம்பளி போலக் கனமாகியது. கார் பார்க்கிங் ஏரியாவை நோக்கி மெதுவாக நடந்தார்.

காந்தி சமாதியை நோக்கி ஒரு பேருந்து வந்து கொண்டிருந்தது. அதிலிருந்த மாணவர்கள் உற்சாகமாகச் சப்தமிட்டார்கள். அவர்களைக் கண்ட பட்டாபி ஏதோவொரு உணர்ச்சிவேகத்தில் தானும் சந்தோஷக் குரல் எழுப்பினார். சாலையில் நின்றிருந்த கான்ஸ்டபிள் வியப்போடு பட்டாபியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

•••

0Shares
0