போலந்து எழுத்தாளர் ஸ்லாவோமிர் மிரோஜெக் பாலத்தில் ஒரு ஓட்டை (THE HOLE IN THE BRIDGE) என்றொரு குறுங்கதையை எழுதியிருக்கிறார்.
ஒரு காலத்தில் ஒரு நதியின் இரு கரைகளிலும் இரண்டு சிறுநகரங்கள் இருந்தன . இரண்டினையும் இணைக்கும் விதமாக ஒரு பாலம் கட்டப்பட்டிருந்தது.
ஒரு நாள் அந்தப் பாலத்தில் ஒரு ஓட்டை ஏற்பட்டது. அந்த ஓட்டையைச் சரி செய்ய வேண்டும் எனப் பலரும் குரல் கொடுத்தார்கள். ஆனால் யார் சரிசெய்வது என்பதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. காரணம் ஒருவரை விட மற்றவர்கள் உயர்வானவர்கள் என இரண்டு நகரவாசிகளும் நினைத்தார்கள்.
`வலது பக்க நகரவாசிகளே பாலத்தை அதிகம் பயன்படுத்துகிறவர்கள் ஆகவே அவர்களே சரிசெய்ய வேண்டும்
` என்றார்கள் இடது நகரவாசிகள். அது உண்மையில்லை. `இடது பக்க நகரவாசிகளே சரி செய்ய வேண்டும்` என வலது நகரவாசிகள் குற்றம் சாட்டினார்கள்.
இவர்கள் சண்டையில் பாலம் சரிசெய்யப்படவேயில்லை. அந்தத் தகராறு நீடித்தது. இதனால் இரண்டு நகரங்களுக்கு இடையே பரஸ்பர வெறுப்பு உருவானது.
ஒரு தடவை பாலத்தைக் கடக்க முயன்ற கிழவர் ஓட்டையில் கால் தடுமாறி விழுந்தார். அவரது கால் எலும்பு முறிந்தது. இந்த விபத்துக்கு எந்த ஊர் பொறுப்பேற்க வேண்டும் என்பதில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டது. .
கிழவர், இடப்புற நகரிலிருந்து வலது பக்கம் நோக்கி வந்தாரா அல்லது வலது புறமிருந்து இடப்புற நகர் நோக்கிச் சென்றாரா என்பதைத் தெரிந்து கொள்ள விசாரணையை மேற்கொண்டார்கள்.
கிழவர் குடிபோதையிலிருந்த காரணத்தால் எந்தப்பக்கமிருந்து வந்தார் என்று அவரால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.
இன்னொரு நாள் பயணியின் வண்டியொன்று பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டையில் சிக்கி அதன் அச்சு உடைந்தது. கோபமடைந்த பயணி வண்டியிலிருந்து இறங்கி, ஏன் அந்த ஓட்டையைச் சரிசெய்யாமல் வைத்திருக்கிறார்கள் என்று கோவித்துக் கொண்டார். இரு நகரவாசிகளும் அது தங்கள் குற்றமில்லை என்றார்கள்.
பயணி அவர்களிடம் ஒரு கோரிக்கையை முன்வந்தார்.
“நான் இந்த ஓட்டையைப் பணம் கொடுத்து வாங்க விரும்புகிறேன். இது யாருடையது என்று சொன்னால் உரிய விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறேன்“
இப்படி ஒரு கோரிக்கையை அவர்கள் இதற்கு முன்பு கேட்டதேயில்லை. அந்த ஓட்டை யாருக்குச் சொந்தம் என்று அவர்கள் யோசித்தார்கள். இருநகரங்களும் அதைத் தங்களுக்கு உரியதென அறிவித்தன
அதைக் கேட்ட பயணி சொன்னார்.
“நீங்கள் தான் ஓட்டையின் உரிமையாளர் என்பதை நிரூபிக்க வேண்டும்“
அதை எப்படி நிரூபிக்க முடியும் என்று அவர்களுக்குப் புரியவில்லை.
பயணியே அதற்கு ஒரு தீர்வையும் சொன்னார்
“ஓட்டையின் உரிமையாளர் எவரோ அவரே அதை மூடுவதற்கு உரியவர்.“
ஓட்டையை மூடுகிறவரே அதன் உரிமையாளர் என்று அறிந்து கொண்ட மக்கள் அவசரமாக பாலத்திலிருந்த ஓட்டையை மூடும் பணியைச் செய்தார்கள்.
பயணி அமைதியாகச் சுருட்டு புகைத்தபடி அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். பாலத்திலிருந்த ஓட்டை அடைக்கப்பட்டவுடன் அவர்கள் அதை விற்பதற்காகப் பயணியைத் தேடி வந்தார்கள்.
பயணி அமைதியாகச் சொன்னார்
“நான் பாலத்திலிருந்த ஓட்டையைத் தான் விலைக்கு வாங்குவதாகச் சொன்னேன். இங்கே ஓட்டை ஏதும் இல்லையே. நான் எதை வாங்குவது. என்னை ஏமாற்ற முயல வேண்டாம்.“
என்றபடி தனது வண்டியில் ஏறிப் போய்விட்டார். இப்போது இரண்டு நகரவாசிகளும் ராசியாகிவிட்டார்கள். பாலத்தைப் பாதுகாக்கிறார்கள், யாராவது பயணி வந்தால் அவனை அடிப்பதற்காகக் காத்துக் கொண்டுமிருக்கிறார்கள் என்று கதை முடிகிறது.
ஸ்லாவோமிர் மிரோஜெக்கின் இக்கதை போலந்தின் அன்றைய அரசியலைக் கேலி செய்கிறது.
எளிய கதை என்றாலும் பாலத்திலுள்ள ஓட்டையை ஒருவன் விலைக்கு வாங்க முயற்சிக்கும் போது கதை புதியதாகிறது.
உண்மையில் துளை என்பது வெறுமை தானே. அதை எப்படி வாங்கவோ விற்கவோ முடியும்.
கதையின் முடிவில் பயணியின் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது. அது முல்லாவின் ஞானம் போன்றது.
கதையில் என்னைக் கவருவது குடிகார கிழவர் எந்தப்பக்கமிருந்து வந்தார் என்று தெரியாத சம்பவம். இந்த நிகழ்வு தான் பயணியின் புத்திசாலித்தனத்திற்கும் மக்களின் சுயநலத்திற்கும் நடுவே பாலமாக அமைகிறது.
ஸ்லாவோமிர் மிரோஜெக் போலந்தின் முக்கியமான நாடக ஆசிரியர், மற்றும் கார்ட்டூனிஸ்ட் ஆவார். இந்தக் கதைக்குள் நடப்பதும் ஒரு நாடகமே. ஓட்டை விழுவது என்ற மையப் பிரச்சனை, அதன் இருபக்க நிலைப்பாடுகள். அதன் அடுத்தக் கட்ட பாதிப்பு. அதற்கான தீர்வு என்று நாடகம் போலவே இந்தக் கதையும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
ஒரே ஆற்றின் கரையில் தான் இரு நகரங்களும் இருக்கின்றன. பாலம் இருநகரங்களையும் இணைக்கிறது. ஆனால் இருநகரவாசிகளின் மனது இணையவேயில்லை. அவர்கள் வீண் பெருமையிலும் சுயநலத்திலும் ஊறிப்போயிருக்கிறார்கள். நகர நிர்வாகமும் மக்களும் ஒன்று போலவே நடந்து கொள்கிறார்கள். போலந்து தேசத்தின் கதையைத் தான் மிரோஜெக் உருவகமாகச் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காகப் போலந்தை விட்டு வெளியேறிப் பல ஆண்டுகள் வெளிநாட்டில் வசித்தவர் மிரோஜெக்
குறுங்கதை என்பது அளவில் சிறியது என்பதால் மட்டுமே சிறப்பாகிவிடாது. அது பேசும் பொருள். கதைமொழி, நுணுக்கமான சித்தரிப்பு. தனித்துவமான முடிவு இவற்றால் தான் சிறப்படைகிறது. மிரோஜெக் கதையின் இன்னொரு வடிவமாகவே சரமாகோவின் The Stone Raft நாவலைச் சொல்லலாம். இரண்டும் சமகால அரசியலையே பேசுகிறது.