நிலம் கேட்டது கடல் சொன்னது வாசிப்பனுபவம்
மீ. சித்ரா ராஜம்.
ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது ,புல்லினும் சிறியது ஆகிய இரண்டு பெரிய கட்டுரைகளை உடையது இந்த நூல். தேசாந்திரியான எஸ்.ரா ஜப்பானியப் பயணத்தின் போது தான் கண்ட ஹிரோஷிமாவையும், ஹீரோஷிமாவின் மீது குண்டுமழை பொழிந்து நிர்மூலமாக்கிய அமெரிக்காவின் வால்டன் குளத்தோடு இயைந்த தோரோவின் இயற்கை வாழ்வியலையும் நம்மோடு பகிர்கிறார்.
ஜப்பானிய மக்களின் நன்றி தெரிவித்தல், பொது இடங்களில் நடக்கும் பண்பு, தேசப்பற்று, மொழிப்பற்று ஆகிய விழுமியங்களை விளக்குகிறார்.
1252ஆம் ஆண்டுச் செய்யப்பட்ட kamakura diabutsu என்ற வெண்கலச்சிலை , Hasedara கோவில் ஆகியவற்றில் தனது மனது விம்மிய அனுபவங்களை நமக்கும் கடத்துகிறார்.
ஜப்பானின் முக்கியப் பிரச்சனை தற்கொலை. மன வெறுமை தாங்காமல் திங்கள்கிழமை அலுவலகம் கிளம்பும் காலை 8 மணி அளவில் யாரோ ஒருவர் மின்சார ரயிலின் முன்னே விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். தனது இறப்பின் வழியே அர்த்தமற்ற இந்த நகர வாழ்க்கையைச் சற்று நேரம் நிறுத்தி வைத்த சந்தோஷம் இந்த மனிதனுக்குக் கிடைக்கிறதாம்.
“நான் மூச்சு விடுகையில் மார்பிலிருந்து வரும் சத்தம் தனிமையானதாக இருக்கிறது
குளிர் காற்றை விடவும்”
தகுபொகு இஷிகாவா என்ற ஜப்பானியக் கவிஞரின் கவிதையை எனக்கு ஞாபகப்படுத்தியது.
ஜப்பானிய வரலாற்றின் ரத்தம் சொட்டிய பக்கங்கள் , ஜப்பான் பேரரசரை மக்கள் கடவுளாகக் கருதுவது, ஜப்பானியர்களின் இயற்கை வழிபாடு,அனமி என்ற சகுரா மலர்கள் பூக்கும் பருவத்தைக் கொண்டாடும் விழா ,ஜப்பானியரின் ரயில் பயணங்கள் ,அவர்களின் உணவு முறைகள் , இரண்டாம் உலகப் போரில் யுத்த விதிகளை மீறிய ஜப்பான் எனப் பல தகவல்களை நமக்குச் சுவாரசியமாகச் சொல்கிறார்.
சாமுராய்கள் எதிரிகளிடம் சிக்கினால் Harakiri என்ற முறையில் Tanto கத்தியைக் கொண்டு இடமிருந்து வலமாக வயிற்றில் வெட்டி இறந்து போகிறார்களாம்.
நம் நாட்டிலும் போர்களில் அரசனுக்காகத் தன்னைப் பலி கொடுத்தவர்கள் வீரர்களாகப் போற்றப்பட்டார்கள். நம் தமிழ்நாட்டில் கூட நவகண்டம் என்னும் பெயரில் தன்னைப் பலி கொடுத்தவர்கள் உண்டு என்ற செய்தி நினைவுக்கு வந்தது. சமூக நோக்கத்தோடு தற்கொலை செய்து கொண்டவர்களைப் போற்றிப் புகழும் கலாச்சாரம் உலகம் முழுவதும் இருக்கிறது.ஆனால் ஒரு கூட்டுநன்மைக்காகத் தற்கொலை செய்து கொண்டவர்களில் இருந்து இன்று உறவுச் சிக்கல்களால் தனிமையால் தற்கொலை செய்து கொள்பவர்களே அதிகம்.
ஹிரோஷிமாவில் போடப்பட்ட லிட்டில் பாய், நாகசாகியில் போடப்பட்ட ஃபேட்மேன் அணுகுண்டுகள் பற்றிய செய்திகள் ,சந்தோஷமாக விடிந்த காலை ,மக்களைத் துயரத்தின் விளிம்பிற்குத் தள்ளிய கோரம், தீப்பற்றி எரியும் உடலுடன் அலறியபடியே ஓடிய மக்கள்,அணுக்கதிர் பாதிப்பினால் நான்கு தலைமுறைகளாக ஊனமாகப் பிறக்கும் குழந்தைகள் ,ஹிரோஷிமாவை மீட்டெடுத்த மக்கள் உழைப்பின் உன்னதம்,அணு வீச்சில் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்களும் வாழ்நாள் முழுவதும் வலியால் துடிக்கும் அவலம் இவற்றை எஸ்.ரா விவரிக்கும் பொழுது நம்மை அறியாமல் கண் கலங்குகிறது.
ஹிரோஷிமா நகரத்தின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹிரோஷிமா சமாதான நினைவகத்தில்(Hiroshima Peace Memorial) எறியும் அணையாத தீபம், சமாதானத்தைச் சொல்லும் மணி , அணு விபத்து குறித்த மாபெரும் காட்சிக்கூடம் ஆகியவை உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
அணு விபத்தினால் பாதிக்கப்பட்டு டஞ்சோ எனப்படும் காகிதக் கொக்குகளைச் செய்தால் ஆயுளை நீட்டிக்கலாம் என்று நம்பிய சடாகோ சசாக்கி என்ற சிறுமியின் நினைவிடம்,அணுவீச்சுக்கு உள்ளாகி சிதிலமான கோள வடிவ கட்டிடம், குண்டுவெடிப்புக்கு முன்பான ஹீரோஷிமாவின் காட்சி அமைப்பு ,ஆகஸ்ட் 6 காலை 8 :15 க்கு உறைந்து போன கடிகாரம் ,உடல் உருகி கரிந்து கரிக்கட்டை போலான உடல்கள்,அணு விபத்தில் உடைந்தும் சிதறியும் கருகியும் போன பொருட்கள் போரின் கோரத்தாண்டவத்தைக் காட்சிப்படுத்துகின்றன.
நினைவகத்தைப் பார்வையிட்ட நாள் மற்றும் நேரத்தை தனது புத்தகங்களில் அங்குள்ள அரக்க சீல் கொண்டு எஸ்.ரா பதித்துக் கொள்ளும் பொழுது அவரின் வார்த்தைகளின் வழி அவரோடு பயணித்த நமது மனங்களிலும் அக்கணம் கனமாகப் பதிகிறது.
சமாதானத்தின் அடையாளமாக அங்கே அடிக்கப்படும் மணி நமது மனங்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
புல்லினும் சிறியது என்ற இந்தக் கட்டுரையும் முதல் கட்டுரை போலவே மிகவும் ஆழமானது.காந்தியின் குருவான Henry David Thoreau இயற்கையோடு இணைந்த தனது அனுபவங்களை Walden or life in the woods என்ற புத்தகமாக எழுதியுள்ளார்.தோரோவின் எழுத்தின் வழியே வால்டர் குளம் உலகப் புகழ் பெற்றிருக்கிறது. தோரோவின் வீடு அவருடைய நினைவுப் பொருட்களோடு பராமரிக்கப்படுகிறது. தோரோவின் இளமைக் காலம்,எல்லன் என்ற பெண் மேல் வந்த காதல் , எமர்சன் உடனான அவருடைய நட்பும் விலக்கமும், தோரோவின் வீட்டுச் சூழல், இயற்கையோடு இயைந்த அவரது தற்சார்பு வாழ்வியல்,நடைப்பயிற்சி ஒரு மெய்த்தேடலாக ,ஒரு தியானமாகப் பரிணமிக்கும் நயம் எல்லாவற்றையும் சுவாரசியமாகச் சொல்கிறார் எஸ்.ரா.
எழுத்தாளர் சுந்தர ராமசாமி,புத்தர் ,காந்தி,J.K இவர்கள் நடையைப் பற்றிய தகவல்களும் புத்தகத்தில் உண்டு.
நடத்தல் ஒரு பிரார்த்தனை. வெர்னர் ஹெர்சாக் என்ற புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் தனது தோழியும் திரைப்பட ஆராய்ச்சியாளருமான லோட்டி எய்ஸ்னர் 78 வயதில் பாரிஸில் மரணப்படுக்கையில் போராடிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து அவர் நலம் பெற ம்யூனிச் நகரில் இருந்து பாரிஸ் வரை நடந்தே வந்திருக்கிறார். அந்த மூன்று வார கால அனுபவத்தை “ஆஃப் வாக்கிங் இன் ஐஸ்” என்ற பெயரில் ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறார் .நட்பின் வலிமை எத்தகையது என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.சிறப்பு என்னவென்றால் ஹெர்சாக்கின் நடைபயணம் லோட்டி எய்ஸ்னருக்குப் புதுவாழ்வு தந்து தனது 87 வது வயது வரை அவர் உயிர் வாழ்ந்தார்.இதைப் படிக்கும் பொழுது பிரார்த்தனைக்காகத் திருப்பதி, பழனி போன்ற கோவில்களுக்கு நடந்து செல்வது நம் நாட்டிலும் மரபாய் இருப்பது நினைவுக்கு வந்தது.
உலகெங்கிலும் உளவியல் சிக்கல்களைப் போலவே மானுட நம்பிக்கைகளும் அன்பும் ஒன்றுதான் என்ற நியதி இதன் மூலம் நமக்குப் புரிபடுகிறது. நடை நம் ஆரோக்கியத்திற்கான மருந்து மட்டுமல்ல ஆன்மாவிற்கான மருந்தும் கூட.
இயற்கை முன்பு மானுட வாழ்க்கை புல்லினும் சிறியது என்பதை நம்மையும் உணரச் செய்யும் அருமையான கட்டுரை.
எஸ்ராவின் எல்லாப் படைப்புகளைப் போலவே இந்தப் புத்தகத்திலும் old path white clouds: walking in the foot steps of Buddha -Thich Nhat Hanh ,Walking -thoreau,Sadako and the thousand paper cranes,Hiroshima போன்ற புத்தகப் பரிந்துரைகளும்
The bridge on the river kwai,seven samurai,kagemusha, Way போன்ற சுவாரசியமான திரைப்படப் பரிந்துரைகளும் உண்டு.
இந்த இரு பயணக் கட்டுரைகள் மூலம் கால இயந்திரத்தில் ஏற்றி யுத்த கால ஹிரோஷிமாவிற்கும் தோரோவின் வால்டனுக்கும் நம்மைக் கூட்டிச் செல்கிறார் தேசாந்திரி எஸ்.ரா