இரண்டு பாதைகள்

இயக்குநர் மிருணாள் சென்னைப் பற்றிய திரைப்படம் Chalchitra Ekhon. அஞ்சன் தத் இயக்கியுள்ளார்.

1981ம் ஆண்டு மிருணாள் சென் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சல்சித்ரா, இப்படத்தில் அஞ்சன் தத் கதாநாயகனாக அறிமுகமானார். வெனிஸ் திரைப்படவிழாவில் அவருக்குச் சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது. சர்வதேச திரைப்பட விழாக்களில் சல்சித்ரா திரையிடப்பட்ட போதும் இந்தியாவில் திரையிடப்படவில்லை.

இந்தப் படத்தில் கிடைத்த புகழால் அஞ்சன் தத் தொடர்ந்து கலைப்படங்களில் நடிக்கத் துவங்கினார். இசையில் இருந்த ஆர்வம் காரணமாக இசையமைப்பாளராகவும் மாறினார். இன்று அவர் வங்காளத்தின் புகழ்பெற்ற திரைக்கலைஞர்.

நாடக உலகில் இருந்த தன்னைக் கண்டுபிடித்துச் சினிமாவில் அறிமுகம் செய்து நடிகராக்கிய மிருணாள்சென்னிற்கு நன்றி செலுத்தும் விதமாகத் தனது வாழ்க்கையில் நடந்தவற்றைத் திரைப்படமாக்கியிருக்கிறார் அஞ்சன் தத். இப்படம் மிருணாள் சென் நூற்றாண்டுவிழாவிற்கான சிறந்த அஞ்சலியாக உள்ளது.

மிருணாள் சென்னின் குடும்பம், அவரது திரையுலக வாழ்க்கை மற்றும் திரைப்பட உருவாக்கத்தைச் சல்சித்ரா எகோன் மிக அழகாக விவரிக்கிறது

இளம்பத்திரிக்கையாளன் ரஞ்சன் கொல்கத்தா நகரைப் பற்றிக் கட்டுரை எழுத விரும்பி இயக்குநர் மிருணாள் சென்னைச் சந்திக்கிறான்.

தனது படங்களை அவன் பார்த்திருக்கிறானா என்று கேட்கிறார் சென்.

ஒரேயொரு படத்தை மட்டுமே பார்த்துள்ளதாகச் சொல்கிறான். கொல்கத்தா நகரைப் பற்றிய அவரது முரண்பட்ட எண்ணங்களை அறிந்து கொள்கிறான் ரஞ்சன். அவனது தோற்றம். பேசும்விதம். மற்றும் அறிவுஜீவித்தனம் மிருணாள்சென்னை வசீகரிக்கிறது.

பெங்காலி அறிவுஜீவிகளில் ஒருவனான ரஞ்சன் நாடக இயக்குரான இருக்கிறான். கோதே இன்ஸ்டிட்யூட்டின் ஆதரவைப் பெற்று நாடகம் நிகழ்த்துகிறான். ஜெர்மனிக்குச் செல்ல வேண்டும் என்பதே அவனது கனவு. கல்கத்தா நகரை அவனுக்குப் பிடிக்கவில்லை. வங்காளத்தின் அப்போதைய ஆளும் இடதுசாரி ஆட்சியின் அலைக்கு எதிராக ரஞ்சன் குரல் எழுப்புகிறான்.

பீட்டர் வெய்ஸின் மராட்/சேட் நாடகத்திற்கான ஒத்திகையில் ஈடுபடும் அவனைத் தேடி வரும் மிருணாள் சென் தனது புதிய திரைப்படத்தில் நடிக்க விருப்பமா என்று கேட்கிறார். ரஞ்சன் சம்மதிக்கிறான். உடனே அவனைத் தனது வீட்டிற்கு அழைத்துவந்து தலைமயிரை வெட்டச்செய்து வேறு உடைகளை அணியவைத்து தனது கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருக்கிறானா என்று பரிசோதிக்கிறார் மிருணாள் சென்.

மிருணாள் சென் எப்படி ஒரு நடிகரை கையாளுவார் என்பதை இப்படத்தில் விரிவாகக் காட்டியிருக்கிறார்கள். அவர் மனதில் இருக்கும் காட்சிகளை நடிகர்களிடம் விவரிக்கிறார். நிஜமான சாலையில். நிஜமான இடத்தில் மக்களின் நடுவே படப்பிடிப்பு நடக்கிறது. டிராமில் ஏறிக் கொண்டு நிஜமாக டிக்கெட் வாங்கிப் பயணிக்கிறான் ரஞ்சன். அதைக் கேமிரா படம்பிடிக்கிறது. டிக்கெட்டை வாயிலிட்டு அவன் மென்று விழுங்கிவிடுவது அழகான காட்சி.

ஒரு திரைப்பட இயக்குநருக்கும் இளம்நடிகனுக்குமான உறவை வெளிப்படுத்தும் விதமாகவும், இரண்டு தலைமுறைகளுக்குள் ஏற்படும் இடைவெளியை, புரிதலை, ஆதர்சங்களை விவரிக்கும் திரைப்படமாகவும் சல்சித்ரா எகோன் உருவாக்கபட்டுள்ளது.

சென்னின் சல்சித்ரா படத்திலிருந்த காட்சிகளை மீண்டும் உருவாக்குவதன் மூலம் அஞ்சன் தத் அந்தக் காலகட்டத்தைச் சிறப்பாகக் கொண்டுவந்துள்ளார்

மிருணாள் சென் முக்கியமான இயக்குநரில்லை. போலித்தனமானவர் என்று அவரைப் பற்றிக் குறைகூறும் நாடக நடிகர்களிடம் சண்டையிடுகிறான் ரஞ்சன். இதன் காரணமாகக் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவனது நாடகக்குழு பிரிந்து போகிறது.

சினிமாவில் அவன் நடித்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரத்திற்கும் அவனது நிஜ வாழ்விற்குமான ஒப்புமைகளை, நெருக்கத்தை உணருகிறான். அவனது வாழ்க்கையே படமாக மாறுவது போலிருக்கிறது.

ரஞ்சன் மீது மிருணாள் கொண்டிருந்த நம்பிக்கையும் அன்பும் படத்தில் நேர்த்தியாக வெளிப்படுத்தபடுகிறது. குறிப்பாக அவன் இரவில் வீடு திரும்பப் பணம் கொடுக்கும் காட்சி, வீட்டில் சாப்பிட்டுப் போகச் சொல்லும் காட்சி, படப்பிடிப்பின் போது அவனிடம் காட்டும் அன்பு என நிறைய நல்ல காட்சிகள் உள்ளன.

பத்திரிக்கை ஆசிரியரை சந்தித்துப் பேசும் காட்சி படமாக்கபடும் போது ரஞ்சன் படும் சிரமங்களும். அவனுக்கு நடிப்பு பற்றி மிருணாள் சென் சொல்லும் விளக்கமும் சிறப்பானது.

படப்பிடிப்பின் போது நடக்கும் நிகழ்வுகளின் வழியே ரஞ்சன் தன்னைப் பற்றியும், தனது மதிப்பீடுகள் பற்றியும் மறுபரிசீலனை செய்யத் துவங்குகிறான். முடிவில் அவன் தன்னை உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்திக் கொள்ளும் போது அவனது பாதை எதுவென முடிவாகிறது.

கொல்கத்தாவின் அரசியல். வங்காளிகளின் பண்பாடு, கலைஇலக்கியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், பத்திரிக்கைச் சூழல். மாநகரவாழ்வின் நெருக்கடிகள் எனப் படம் மிக யதார்த்தமாக உருவாக்கபட்டிருக்கிறது.

சென்னின் ஒளிப்பதிவாளர் கே.கே.மஹாஜன் ரஞ்சனிடம் உரையாடும் காட்சிகள் சிறப்பானவை.

இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரமாக இருப்பது கொல்கத்தா நகரம். அந்த நகரைப் பிடிக்காத ரஞ்சன் படத்தின் கடைசியில் கொல்கத்தா அருமையானது என்பதைப் புரிந்து கொள்கிறான்.

விரலுக்கு இடையில் சிகரெட் புகைந்தபடியே இருக்கும் மிருணாள் சென்னின் தோற்றம் மற்றும் அவரது நடையுடை பாவனைகளை மிக நுணுக்கமாகப் படத்தில் சித்தரித்துள்ளார்கள். கொல்கத்தா நகரையும் அதனைச் சிறப்பாகத் தனது படங்களில் சித்தரித்த மிருணாள் சென்னையும் ஒன்றுசேரக் கொண்டாடுகிறது இப்படம்.

0Shares
0