இரண்டு பார்வைகள்

அப்பாவின் வருகை“ சிறுகதை குறித்த இருவரின் பார்வைகள்

கோ.புண்ணியவான். மலேசியா

அப்பாவின் வருகை சிறுகதையின் நுணுக்கத்தைப் புரிந்துகொள்ளும்போது அலாதியான வாசிப்பின்பம் உண்டாகிறது.

அப்பா எந்த முக்கியக் காரணமாகவும் சண்டிகார் வரவில்லை. தன் மகனைப் பார்க்கவே வருகிறார்.

இக்கதையில் அப்பா தன் மகனுக்குச் சிறு பிராயத்தில் என்னவெல்லாம் செய்தாரோ அதனையே மகனும் அப்பா தனக்குச் செய்ததற்கு ஈடான அன்போடு செய்கிறார். இந்த நுணுக்கம் தான் கதையைக் கலைநயமிக்கதாக்குகிறது.

அப்பாவின் வருகையை வேற்றிடத்தில் வேலை செய்யும் மகன்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. தலைமுறை இடைவெளி, வாழும் சூழலுக்கு அப்பாக்கள் ஒத்துவரமாட்டாரகள் என்பதால். ஆனால் இக்கதை அப்பாவின் வருகையை அனுசரிக்கும் பண்பு நாடகத் தன்மை இல்லாமல் மிக யாதார்த்தமாகவே சொல்லப்பட்டிருக்கிறது.

கடைசி வரியில் ‘அப்படி அப்பா சொன்னவிதம் சிறுவயதில் அவன் சொன்னது போலவே இருந்தது’ என்று குறிப்பிடும்போது அப்பா மகனாகிறார், மகன் அப்பாவாகிவிடுகிறார். நேர்த்தியாகச் சொல்லப்பட்ட கதை.

**

பொன். மாரியப்பன். தூத்துக்குடி.

அப்பாவின் வருகை கதையில் குமாரின் அப்பா தன் மகனை பார்க்கத் தோன்றிய மறுகணமே சண்டிகர் வந்து விடுகிறார். பிரிவால் வாடும் தந்தைக்கு அவனைப் பற்றிய பழைய நினைவுகள் தான் துணை.

கதையில் சண்டிகர் பற்றி அழகாக விவரிப்பு செய்திருந்ததை வாசிக்கும் போது வாசகன் சண்டிகரில் வாழ்ந்த அனுபவத்தைப் பெறுகிறான்.

செல்போன் வந்து விட்ட பிறகு யாரும் கடிதம் எழுதுவதுமில்லை வரி, உண்மையானது.

எதிர்பாராத அப்பாவின் வருகை குமாரை மிகவும் மகிழ்ச்சிப்படுத்துகிறது. அவர்கள் சந்திப்பும் உரையாடலும் மிக இயல்பாக எழுதப்பட்டிருக்கிறது.

குமார் வேலைக்குச் சென்ற இடத்தில் தனியாக இருந்ததினால் சமைக்கக் கற்றுக் கொண்டிருக்கிறான். அப்பாவிற்காகக் குமார் சமைப்பதை பார்க்கும் போது உணவின் வழியே பாசம் வெளிப்படுவதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

“உன்னை விட்டு உங்க அப்பா எப்படி இருக்கப் போறாருன்னு தெரியல ” என்ற வரியை வாசிக்கும்போது எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது.

வளர்ந்த பிள்ளைகளிடம் வெளிப்படையாகப் பேசுவதற்கு எந்தத் தந்தையும் விரும்புவதில்லை. குமார் தனது தந்தையை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறான். நம்பிக்கையூட்டும் நல்ல சிறுகதை.

••

0Shares
0