இரண்டு புகைப்படங்கள்


 


 


 


 


 


 


மேலே உள்ள இரண்டு புகைப்படங்களை பாருங்கள். இரண்டுமே சாவித்திரி தான். ஒன்று திரையுலகில் நடிகையர் திலகமாக புகழ் பெற்று விளங்கிய சாவித்திரி, மற்றது தன்னுடைய மனத்துயரை தாங்கிக் கொள்ள முடியாமல் குடி, போதை மருந்து என்று சரணடைந்து உடல்மெலிந்து தன்னை தானே அழித்துக் கொண்ட சாவித்திரியின் இறுதி நாளின் புகைப்படம்.



இந்த இரண்டு புகைப்படங்களுக்கு இடையில் எத்தனையோ நினைவுகள் ஒளிந்திருக்கின்றன. இதை உற்று பார்க்கும் போது காலம் கருணையற்றது என்பதை சொல்கிறதோ என்று சில வேளைகளில் யோசித்திருக்கிறேன். சில வேளைகளில் எல்லா வெற்றியும் மறக்கபட்டுவிடும். மீதமிருப்பது வெற்றி தந்த வலிகள் மட்டுமே என்றும் தோன்றுகிறது.


பணமும் புகழும் வசதியுமாக வாழ்ந்த சாவித்திரி இப்படி எலும்புகள் துருத்திக் கொண்டிருக்க நோய்கூடாக மாறிப்போனது தான் சினிமாவின் நிஜம். இந்தப் புகைப்படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போது புகழ் வெற்றி எல்லாமும் காற்றில் கரைந்து போய்விடும் புகை போன்றது. அது நிலையற்றது என்பதை  நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது. சினிமாவை தவிர வேறு எந்த துறையிலும் வீழ்ச்சி இவ்வளவு பெரிய புறக்கணிப்பையும் மீளமுடியாத தனிமையும் தருவதில்லை.


இது சாவித்திரி என்ற ஒரேயொரு நடிகைக்கு ஏற்பட்ட நிலைமை மட்டுமில்லை. மாறாக அவள் ஒரு குறியீடு. அவள் அளவிற்கு வெற்றிகளை கண்டவருமில்லை. அவமானத்தை சகித்து கொண்டவருமில்லை. இன்று சாவித்திரி சந்தித்த வேதனைகள் வலிகள் மக்கள் மனதிலிருந்து மறைந்து போய்விட்டன. அவள் தமிழ் நடிகைகளில் ஒரு தாரகையாக மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறாள்.  ஆனால் காலம் அவள் வாழ்ந்த நாட்களில் அப்படி அவளை வைத்திருக்கவில்லை.


அதிலும் சாவித்திரியின் அந்திம நாட்கள் எவருக்கும் ஏற்படக்கூடாதவை. வீழ்ச்சி ஒரு பெண்ணை எந்த அளவு புதைகுழிக்குள் கொண்டு செல்லும் என்பதற்கு அவள் ஒரு உதாரணம். அவள் தனிமையை பகிர்ந்து கொள்ள யாருமில்லை.


திரையுலகின் மூத்த கலைஞர் ஒருவரோடு பேசிக் கொண்டிருக்கும் போது கண்ணீர்மல்க சொன்னார்.  கையில் காசில்லாமல் உடல்நோயுற்று சாவித்திரி தன்னோடு சில  யாராவது பத்து நிமிசங்கள் பேசிக் கொண்டிருக்கமாட்டார்களா என்று ஏங்கியிருக்கிறாள். அவளை ஒரு நிமிசமாவது பார்க்க முடியுமா என்று ரசிகர்கள் ஏங்கிய காலம் போய் தேடிவந்து பார்க்க யாருமற்று போன சாவித்திரி தானாக தன் வசிப்பிடத்தின் அருகில் உள்ள ரிக்ஷாகாரர்களை தேடிப்போய் பேசுவாள்.  கடனுக்காக தன் கார்களை விற்றுவிட்டு ரிக்ஷாவில் அலைந்திருக்கிறாள்.


அவர்களிடம் கையேந்தி யாசிப்பதற்கு கூட அவள் தயங்கியதில்லை. சாலையோரம் அமர்ந்து குடித்திருக்கிறாள்.  கோபத்தில் சொந்த பிள்ளைகளை விரட்டியிருக்கிறாள். சாவை எதிர்பார்த்து காத்திருந்து அது தன்னை நெருங்கிவராமல் போன துக்கத்தில் பலநாட்கள் அழுதிருக்கிறாள்.


அவள் திரையில்  அழுதபோது தமிழகமே அழுதது. ஆனால் வாழ்க்கையில் அவள் அழுதபோது அவளைத் தேற்றுவதற்கு ஒரு ஆள் முன்வரவில்லை


தன்னை அழித்துக் கொண்டாள் சாவித்திரி. அந்த அழிவு அவளைக் காதலித்த மனிதனுக்கு அவளது மனபலத்தை புரிய வைக்கும் முயற்சி. வாழ்க்கை அவளுக்கு எத்தனையோ அரிய பரிசுகளை உல்லாசத்தை துவக்கத்தில் காட்டிவிட்டு முடியும் நேரம் அவளைக் குப்புறத் தள்ளி அவள் மீது ஏறி உட்கார்ந்து பரிகாசமும் செய்தது. சாவித்திரி என்றைக்குமே தன் கவலைகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொண்டதில்லை. தான் விரும்பி அத்தனையும்  பறிகொடுத்துவிட்டு அவள்  வெறும்கையோடு தனித்திருந்தாள்.


ஏன் வாழ்க்கை அவள் மீது இத்தனை வஞ்சகம் செய்தது. எது அவளை இப்படி நிலைதடுமாற செய்தது. அறிந்த காரணங்களை மீறி ஏதோ இருக்கிறது. துர்கனவு போல வாழ்க்கை புரண்டுவிடுவது எதனால் என்று எப்போதுமே என் மனம் யோசித்தபடியே உள்ளது


பாசமலர் படம் பார்க்காத தமிழர்கள் இருக்கமாட்டார்கள். நிச்சயம் உங்களுக்கு வயது முப்பதுக்கு மேல் என்றால் ஒருமுறையாவது பாசமலர் திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள். அந்த படத்தில் சிவாஜியும் சாவித்திரியும் அண்ணன் தங்கையாக நடித்திருப்பார்கள். இன்றும் பாசமுள்ள அண்ணன் தங்கை என்றால் என்ன பாசமலரா என்று கேட்கும் வழக்கம் மக்களிடே இருக்கிறது. அந்த அளவு அந்தப்படம் ஒரு குறியீடு.


அந்தப்படத்தின் கதை கொட்டாரக்கரா என்ற மலையாள எழுத்தாளருடையது. அதை இயக்கியது பீம்சிங். இன்றைக்கும் கை வீசம்மா கை வீசு என்று சிவாஜி உருகி கண்ணீர் மல்கி பேசுவதை கண்டு கண்ணீர்விடுகின்றவர்கள் இருக்கிறார்கள். பாசமலர் தமிழ் சினிமாவுலகில் முக்கியமான படம். அதை பற்றி விரிவாக எழுத எவ்வளவோ இருக்கிறது. ஆனால் நான்  இப்போது கவனம் கொள்ள விரும்பியது சாவித்திரியை.


அந்த படத்தில் சாவித்திரியின் பன்முகப்பட்ட ஆளுமை சிறப்பாக வெளிப்பட்டிருக்கும்.


அந்த நாட்களில் சாவித்திரி சிவாஜி, ஜெமினியோடு தான் அதிகப்படங்களில் நடித்திருந்தார். எம்.ஜி.ஆரோடு மிக குறைவான படங்களே நடித்திருக்கிறார். அது சினிமா ரசிகர்களிடையே விவாதத்திற்குரிய விஷயம்.எம்.ஜி.ஆரோடு நடித்த பரிசு, வேட்டைகாரன், மகாதேவி என்ற மூன்று படங்களிலும் சாவித்திரி மற்ற கதாநாயகிகள் போலின்றி மிக துணிச்சலும் தனித்துவமும் கொண்டவராக தன்னை வெளிப்படுத்தியிருப்பார். அது எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.


அதைவிடவும் அவள் ஒரு படத்தில் எம்.ஜி.ஆர் போலவே பகடி செய்து நடித்தும் காட்டுவாள். அது ரசிகர்களின் கோபத்தை உருவாக்கியது. ஆனால் அவள் ஜெமினியோடு நடித்த போது அவர்கள் உண்மையிலே காதலித்துக் கொண்டிருந்தார்கள். அந்த காதல் ஒவ்வொரு காட்சியில் அவள் முகத்தில் பீறிட்டது.


மிஸியம்மா, மாயாபஜார் என்ற இரண்டு படங்களை சமீபத்தில் பார்த்தேன். இரண்டிலும் ஜெமினியின் நடிப்பை ஊதி தள்ளிவிடுகிறார் சாவித்திரி. அவரது முகபாவம், குறிப்பாக வேதனையை வெளிப்படுத்தும் பாங்கு, சிரிப்பு மற்றும் வெகுளித்தனம் யாவிலும் அவரது பாவங்கள் அற்புதமானவை.


நவராத்திரி, தேவதாஸ், பிராப்தம், களத்தூர் கண்ணம்மா, கை கொடுத்த தெய்வம்  பார்த்தால் பசி தீரும், பாவமன்னிப்பு, கற்பகம் கர்ணன் என்று மாறுபட்ட வேடங்கள் கொண்ட படங்களில் அவரது நடிப்பு தனித்தன்மை மிக்கதாகயிருந்தது.


சாவித்திரி ஆந்திராவின் குண்டுர் மாவட்டத்தில் உள்ள சிறாயூரில் பிறந்தவர். நாடகதுறையில் அறிமுகமாகி அங்கிருந்து சினிமாவிற்கு வந்தவர். எட்டாம் வகுப்புவரை படித்திருக்கிறார். எல்வி. பிரசாத்தின் சம்சாரம் என்ற படத்தில் அறிமுகமானார்.  தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று முந்நூற்று பதினெட்டு படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கிலும்  நான்கு படங்களை


இயக்கியிருக்கிறார். தமிழில் குழந்தை உள்ளம் பிராப்தம் ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார்.


இன்னும் சொல்லப்போனால் அவரது வீழ்ச்சிக்கு காரணமான இருந்தது அவர் இயக்கிய பிராப்தம் என்ற தமிழ் படமே. நாலு வருடங்களுக்கும் மேலாக தயாரிப்பில் நின்று போன அந்தபடம் மிக பெரிய தோல்வியை சந்தித்தது. அதற்காக தனது கார்  வீடு உள்ளிட்ட தன் சொத்துகளை விற்றும் அவரால் கடனை அடைக்கமுடியவில்லை.


அவளை நம்பி பணம் தர எவரும் தயார் இல்லை. அது போலவே அவளை அண்டி வாழ்ந்தவர்கள் உதவிக்கு வரவும் இல்லை. சாவித்திரி இழந்ததை திரும்ப பெற மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஆனால் இப்போது அவர் உச்சநட்சத்திரம் இல்லை. அதனால் அவமதிப்பும் புறக்கணிப்பும் நடந்தன. சகிக்க முடியாமல் குடிக்க துவங்கினார்.


தன் குழந்தைகள் படம் பார்க்க வேண்டும் என்று சாவித்திரி தன்வீட்டில் 16 எம்எம் திரைப்படக்கருவி வைத்திருந்தார். அதுபோலவே கிரிக்கெட் செஸ் விளையாட்டில் அதிக ஆர்வமானவர். ஹாலிவுட் படங்களை தொடர்ந்து பார்த்து திரைக்கலை அறிந்தவர்.  தன்னோடு நடித்த ஜெமினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அங்கிருந்து அவரது வீழ்ச்சி துவங்கியது எனலாம்


ஜெமினிக்கும் பிரபல நாதஸ்வர வித்வான் காருகுறிச்சி அருணாசலத்திற்கும் நல்ல நட்பு இருந்தது. கோவில்பட்டியில் காருகுறிச்சி அருணாசலம் புதிதாக வீடுகட்டி கிரகபிரவேசம் செய்த போது அந்த விழாவிற்கு ஜெமினி சாவித்திரி இருவரும் கோவில்பட்டிக்கு வந்திருந்தார்கள். என் வீட்டோர் யாவரும் அவர்களை அருகில் சென்று பார்த்திருக்கிறார்கள்.


அதைபற்றி என் வீட்டில் பலவருசங்களுக்கு மலரும் நினைவுகள் ஒடிக்கொண்டே இருந்தது. சாவித்திரி தமிழ்பெண்களின் ஒரு குறியீடு போல அடையாளம் காணப்பட்டதற்கு முக்கிய காரணம் அவளது உடல்வாகு மற்றும் அவள் பேசும் தோரணை.  வெட்கப்படும் பெண்ணாக அவளை ஒரு போதும் நினைத்து பார்க்க முடியவில்லை. மாறாக தைரியமும் தனியே எதையும் செய்யும் துணிச்சலும், நேருக்கு நேர் நோக்கும் கண்களுமே அவளது சிறப்பாக இருந்தன.


காருகுறிச்சியின் மறைவிற்கு பிறகு  அவருக்கு சிலை வைத்து கௌரவப்படுத்தியது அவர்கள் தான். மகாகவி பாரதியின் மீது அபிமானம் கொண்டு எட்டயபுரத்தில் குடிதண்ணீர் கிணறு ஒன்றை உருவாக்கி தந்திருக்கிறார் சாவித்திரி.


மகன் மகள் என்று ஆசையோடு துவங்கிய  சாவித்திரியின் வாழ்க்கை அவள் நினைத்தது போல சந்தோஷமாக இருக்கவில்லை. சிறுவயதிலே தந்தையை இழந்தவர் என்பதால் அவருக்கு பாதுகாப்பான ஒரு ஆண்துணை தேவையாக இருந்தது.  அப்பாவின் நெருக்கமும் காதலும் கொண்ட ஒருவரை அவள்மனம் தேடிக்கொண்டேயிருந்தது. அப்படி தான் அவள் ஜெமினியை தேர்வு செய்தாள். ஆனால் அது ஏமாற்றமே அளித்தது.


சாவித்திரியின் வீழ்ச்சி கடன்சுமை, நம்பியவர்கள் அவளை புறக்கணித்தது. மற்றும் மீளமுடியாத மனத்துயரிலிருந்து துவங்குகிறது.  சாவித்திரியை போலவே வேறுவேறு காரணங்களால் அடையாளமற்று போன  நடிகைகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதே சிவாஜி கால கட்டத்தில் கதாநாயகியாக இருந்த காஞ்சனா இன்று கர்நாடகாவில் உள்ள ஒரு கோவிலில் துப்புரவு பணியாளராக சேவை செய்கிறார் என்ற செய்தியை ஒரு முறை வாசித்தேன்.


அறியாத ஒரு இளம்பெண்ணாக சினிமாவில் அறிமுகமாகி புகழ் பணம் வெற்றி என்று வேகவேகமாக உச்சிக்கு சென்ற அவர்களின் வாழ்க்கையில் எழுதப்படாத கதைகள் நிறைய உள்ளன. இவர்களில் எவரும் வாழ்க்கை வரலாற்றை எழுதவேயில்லை. ஒருவேளை அப்படியொரு வரலாறு எழுதப்பட்டால் அது எல்லாபுனைவுகளை விடவும் விசித்திரமாக இருக்கும்


ஜெமினி தன் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார். அதில் சாவித்திரி பற்றி அதிகம் எழுதவில்லை. 


அழகியாக கண்ணை கவரும் சாவித்திரியை விடவும் சாவை எதிர்நோக்கி காத்திருக்கும்  இந்த சாவித்திரியை காணும் போது மனது எதையெதையோ  எழுதச் சொல்கிறது. ஈவா பெரோனை பற்றிய லத்தீன்அமெரிக்க நாவல் ஒன்றிருக்கிறது. அப்படி எழுதப்படவேண்டியது சாவித்திரியின் வாழ்க்கை.
முடிவில்லாத நாவல் ஒன்றின் துவக்க அத்யாயம் போல  தான் அவளைப் பற்றி தெரிந்த யாவும் உள்ளது. இன்னும் எழுதப்படாத அவளது வாழ்க்கையின் சாட்சியாக இந்த புகைப்படம் உள்ளது. அதை உற்று நோக்கும் போது மனது நடுங்குகிறது. நினைவுகள் கொப்பளிக்கின்றன.


மிஸியம்மா படத்தில் வரும் எனையாளும் மேரிமாதா பாடலில் வரும் சாவித்திரியின் முகம் நினைவில் கடந்து போகிறது. கடவுள் கருணையற்றவர் என்று உதடு முணுமுணுத்துக் கொள்கிறது.


சாவித்திரியின் இந்த புகைப்படம் சினிமாவின் மாறாத நிதர்சனம். சினிமாவில் சொல்லப்பட்ட கதைகளை விட அதனுள் சொல்லப்படாத எண்ணிக்கையற்ற கதைகள், உண்மை நிகழ்வுகள் புதையுண்டு கிடக்கின்றன. ப்ரகாசமான வெளிச்சத்தில் மட்டுமே கண்டிருந்த சினிமா கலைஞர்களின் பின்னால் வெளியே பகிர்ந்து கொள்ளபடாத நூறு வேதனைகள்,  நிகழ்வுகள், தீராத தனிமை இருக்கின்றன. இது நடிகர் நடிகை என்று மட்டுமில்லை, சினிமாவின் பல்வேறு துறைகளிலும் அகநெருக்கடி மிகுந்த கலைஞர்கள் நிறைய இருக்கிறார்கள். 


அவர்களின் வேதனைகள்  இருட்டிலே முளைத்து இருட்டிலே புதையுண்டு போய்விட்டன என்பதே இதன் பெரும்சோகம்.


**
ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் உதயம் என்ற மாத இதழில் வெளியான கட்டுரை.


 


 

0Shares
0