இரண்டு முடிவுகள்

Between Two Dawns கடந்த ஆண்டு வெளியான துருக்கி திரைப்படம். இதன் இயக்குநர் செல்மன் நகார். இவரது முதல் படமிது. தொழிற்சாலையில் நடைபெற்ற விபத்துக் காரணமாக அதன் நிர்வாகியின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களையும் விபத்துக்குள்ளான தொழிலாளியின் குடும்ப நிலையினையும் மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறுகதை அளவேயுள்ள சம்பவம். ஆனால் அதனை நேர்த்தியாக, நுட்பமாகப் படம் விவரிக்கிறது.

காதிர் அவரது சகோதரர் ஹலீல் அவர்களின் தந்தை இப்ராகிம் மூவரும் சாயமிடப்பட்ட துணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நடத்திவருகிறார்கள். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வேலை நடந்தாக வேண்டும் என்ற அவசரத்தில் பணியாளர்களை விரட்டுகிறார்கள்.

நீராவி இயந்திரம் ஒன்றில் ஏற்பட்ட பழுதினை சரிசெய்ய முயன்ற தொழிலாளி அதில் சிக்கிக் காயமடைகிறார். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள்.

மருத்துவமனையில் அடிபட்ட தொழிலாளியின் பெயர், அடையாள எண் போன்றவற்றைக் கேட்கிறார்கள். காதிருக்குத் தெரியவில்லை. இப்ராகிம் தலைமை மருத்துவரைப் பார்த்துப் பேசிவிட்டு வருவதாகச் சொல்கிறார். தீக்காயப்பிரிவில் தொழிலாளி அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

தொழிற்சாலைக்குத் திரும்பும் சகோதரர்கள் காப்பீடு மற்றும் ஆலைபாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக இருப்பதற்கான சான்றுகளைச் சரிபார்க்கிறார்கள்

முறையான பாதுகாப்புக் கவசம் அணியாதது மற்றும் வேலையில் குடிபோதையிலிருந்ததால் தொழிலாளி தவறு செய்தாரா? என்ற கோணத்தில் விசாரணை செய்கிறார்கள்.

இதற்கிடையில் காவல்துறை விசாரணைக்கு முன்பாகத் தங்கள் தரப்பைச் சரிசெய்து கொள்ள வழக்கறிஞரின் உதவியை நாடிச் செல்கிறார்கள்

வழக்கறிஞர் இந்த வழக்கினை கோட்டிற்குச் செல்லாமல் முடித்துவிடுவதே நல்லது. ஒருவேளை தொழிலாளி இறந்துவிட்டால் பெரிய காப்பீட்டுத்தொகை தர வேண்டியது வரும் என்பதுடன் அவர்களில் ஒருவர் சிறை செல்ல நேரிடும் என்கிறார். இதைக் கேட்டு காதிர் அதிர்ச்சியடைகிறான்.

தொழிற்சாலையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் கனவிலிருக்கிற காதிர் நேரடியாகத் தாங்களே வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்று நினைக்கிறான். அதற்குப் பொருளாதாரச் சிக்கல் இருப்பதை ஆரம்பத்தில் சுட்டிக்காட்டுகிறார்கள்.

காதிர் ஆயுத்த ஆடையகம் நடத்திவரும் எஸ்மாவைக் காதலிக்கிறான். அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். இதற்காக எஸ்மா வீட்டிற்குச் சென்று அவளது பெற்றோரை முதல் முறையாகச் சந்திக்கத் திட்டமிடுகிறான். அதே நாளில் தான் இந்த விபத்து நடக்கிறது. ஆயினும் அவன் எஸ்மா வீட்டிற்குச் செல்வதை நிறுத்தவில்லை

எஸ்மா வீட்டில் நடப்பது அழகான காட்சி. அவளது தந்தை காதிரை விசாரிக்கும் முறை. காதிர் நிதானமாகப் பதில் சொல்லும்விதம். மற்றும் எஸ்மாவின் தாயிற்கு அவனைப் பிடித்துள்ளது என்பதற்கான அடையாளமான பேச்சு. அவர்கள் ஒன்றுகூடி உண்ணுவது, இறுதியில் காதிர் இசைக்கருவியை மீட்டி பாடுவது என அந்தக் காட்சியில் ஒரு புறம் அவனது தத்தளிப்புக் கவலைகள் மறுபுறம் திருமண ஏற்பாடு. காதல். என இரண்டிற்கும் நடுவே ஊசலாடுவது சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளியின் மனைவி செர்பிலிடமிருந்து ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்துப் பெறுவதற்குக் காதிர் முயற்சிக்கும் காட்சியில் ஏற்படும் குழப்பமும் சண்டையும் நிஜமானது.

வறுமையான குடும்பச் சூழ்நிலையிலும் அவன் தரும் பணத்தை வாங்கிக் கொள்ள அவள் விரும்பவில்லை. தனது கணவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையோடு இருக்கிறாள். நீதி கேட்பதில் உறுதியாக இருக்கிறாள். அந்த நியாயத்தைக் காதிர் புரிந்து கொண்டிருக்கிறான். ஆனால் உண்மையை அவனால் வெளிப்படுத்த முடியவில்லை.

எதிர்பாராத விபத்தின் காரணமாகச் செர்பிலின் வாழ்க்கை மட்டுமில்லை காதிரின் வாழ்க்கையும் திசைமாறிப் போகிறது. அவன் கனவு கண்டது போலத் திருமணம் செய்து கொள்ள முடியாத சூழல் உருவாகிறது. அவசரமாக வெளிநாடு செல்ல முயலும் போது எஸ்மா அதை விரும்பவில்லை. காதிர் சட்டரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சில கடுமையான சவால்களை எதிர்கொள்கிறான்.

காதிரின் மனசாட்சி நேர்மையாகச் செயல்படவே முனைகிறது. ஆனால் சூழ்நிலை அவனை எதிர்நிலைக்குத் தள்ளுகிறது. மருத்துவமனையில் அறிந்து கொண்ட உண்மையைச் செர்பிலிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் காட்சி அபாரமானது.

இக்கட்டான சூழ்நிலை உருவாகும் போது முதலாளிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள எதையும் செய்வார்கள். அவர்களுக்கு உறுதுணை செய்ய வழக்கறிஞர்கள் முன்வருவார்கள். மாட்டிக் கொள்வது நிர்வாகிகள் தான். ஒரு காட்சியில் காதிர் அதை வெளிப்படையாகவே சொல்கிறான். ஆனாலும் நடந்து போன விபத்திற்குத் தான் ஒரு மறைமுகக் காரணம் என்று உணருகிறான். செர்பில் வீட்டில் அவளது பையனுடன் பழகும் விதத்திலும் மருத்துமவனையில் ஒப்பந்தத்தை வாசிக்கும் போது ஏற்படும் தயக்கத்திலும் இதை எளிதாக உணர முடிகிறது.

காதிர் மூலமாகப் பார்வையாளர்களை நோக்கி ஒரு கேள்வி எழுப்புகிறார் இயக்குநர் அது நமது சொந்த ஒழுக்கத்தைப் பற்றியதாகும். நேரிடையாகச் செய்யாத குற்றத்திற்கு ஒருவர் எவ்வளவு பொறுப்பு ஏற்பது என்ற அந்தக் கேள்வி முக்கியமானது. உண்மையாக, கலைநேர்த்தியுடன் அதைப் படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் செல்மன் நகார்.

இறப்புச் செய்தியைத் தெரிவிக்கச் செல்லும் காதிர் செர்பிலிடம் அதைச் சொல்ல முடியாமல் தவிப்பதும், அவள் சமைத்த உணவைச் சாப்பிடத் தயங்குவதும் அவளுக்குச் சொல்லாமலே விஷயம் புரியத் துவங்குவதும் இயக்குநரின் தேர்ந்த கலைவெளிப்பாடாகும்.

ஈரானிய சினிமா பெண்களையும் சிறுவர்களையும் மையமாகக் கொண்டு தொடர்ந்து இயங்குவது போல, இன்றைய துருக்கி சினிமா ஆண்களின் உலகினை, கனவுகளை, நெருக்கடிகளை நிஜமாகச் சித்தரிக்க முயலுவதாகத் தோன்றுகிறது. இந்தக் குவிமைய மாற்றம் துருக்கிய சினிமாவிற்கு தனித்துவத்தை உருவாக்கியிருக்கிறது.

இந்தப் படத்திற்குள் ஆன்டன் செகாவும் தஸ்தாயெவ்ஸ்கியும் கரைந்திருக்கிறார்கள். அவர்கள் படைப்பில் எந்த உண்மையை, நிஜத்தை நெருக்கமாக உணருகிறோமோ அதையே படத்திலும் உணருகிறோம்.

0Shares
0