இரண்டு முடிவுகள்

பஞ்சாபி எழுத்தாளரான தலீப் கௌர் டிவானாவின் இது தான் நம் வாழ்க்கை நாவல் சாகித்திய அகாதமி பரிசு பெற்றது.  இந்நாவலை தமிழாக்கம் செய்திருப்பவர் தி.சா.ராஜு. நேஷனல் புக் டிரஸ்ட் 1992ல் வெளியிட்டுள்ளது. மிகச்சிறிய நாவல். 90 பக்கங்கள். விலை ரூ 21.  இன்றைக்கும் இதே மலிவு விலையில் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கிறது.

••

பஞ்சாப் கிராமம் ஒன்றில் உள்ள நாராயண் அம்லி வீட்டில் கதை துவங்குகிறது. கங்கையில் நீராடச் சென்ற நாராயண் தற்கொலை செய்து கொள்ள முயன்ற பானோ என்ற இளம்பெண்ணைக் காப்பாற்றித் தன்னோடு அழைத்து வந்திருக்கிறான்.

நாராயண் எப்போதும் போதையில் மூழ்கிக் கிடப்பவன். பால்ய விவாகம் செய்து கொண்டு மனைவியை இழந்தவன். தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தைக் கவனித்துக் கொண்டு நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து குடிப்பதும் வெட்டி அரட்டை அடிப்பதுமாக நாட்களைக் கடத்துகிறான்

அப்படிப்பட்ட நாராயண் திடீரென ஒரு புதுப்பெண்ணை அழைத்துக் கொண்டு வந்திருப்பதைப் பற்றி அண்டை வீட்டார் வியப்போடு பேசுகிறார்கள். இந்தப் புது மனைவி யார் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

ஆனால் பானோ என்ற அந்தப் பெண் வந்த முதல்நாளே வீட்டு வேலைகளில் தீவிரமாக ஈடுபட ஆரம்பிக்கிறாள்.

அவளும் கணவனைப் பறி கொடுத்தவள். ஆதரவாக இருந்த சகோதரனும் இறந்துவிடவே தற்கொலை செய்து கொள்ள எண்ணி கங்கைக்குச் சென்றவளை நாராயண் காப்பாற்றுகிறார். அவரால் புதுவாழ்க்கை கிடைக்கக்கூடும் என நம்பி வந்துவிடுகிறாள்

நாராயணின் பக்கத்து வீட்டுப் பெண் ஸந்தி அவளிடம் வந்து நலம் விசாரிக்கிறாள். அவர்கள் உரையாடல் வழியாகப் பானோவின் கடந்தகால வாழ்க்கை விவரிக்கப்படுகிறது

அங்கேயும் குடி தான் முக்கியப் பிரச்சனையாகப் பேசப்படுகிறது. குடித்துக் குடித்துக் குடல் அரித்துப் போன தம்பியைக் காப்பாற்ற இருந்த பணத்தை எல்லாம் பானோவின் குடும்பம் செலவழிக்கிறது. ஆனால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை.

நாவல் முழுவதும் உரையாடல்களின் வழியே தான் நீளுகிறது. கிராமிய வாழ்க்கையை மிக யதார்த்தமாகத் தலீப் கௌர் எழுதியிருக்கிறார்.

நாராயண் தன்னை நம்பி வந்துள்ள பானோவிடம் வீட்டை ஒப்படைக்கிறார். தனக்கு அவள் வழியாக ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆசையைப் பகிர்ந்து கொள்கிறான்.

நாராயண் வீட்டில் பானோவிற்கு உணவும் உடையும் பாதுகாப்பும் கிடைக்கிறது. ஆனால் அவள் விரும்பியது போன்ற சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கவில்லை. அவள் மீது கொண்டுள்ள அனுதாபத்தைத் தாண்டி நாராயண் அவளை உண்மையாக நேசிக்கவில்லை என்பதைப் பானோ உணர்ந்து கொள்கிறாள்

நாராயணின் குடிகார நண்பர்கள் அவளைப் பல்வேறுவிதங்களில் தொந்தரவு செய்கிறார்கள். அவளைப் பற்றி வம்பு பேசுகிறார்கள். நாராயண் அவற்றைக் கண்டுகொள்வதில்லை. ஆனால் அவர்களைச் சமாளிக்கமுடியாமல் பானோ திண்டாடுகிறாள்.

பானோ இரண்டு உலகில் வாழ ஆரம்பிக்கிறாள். உடலளவில் அவள் நாராயணுடன் வசிக்கிறாள். ஆனால் மனதும் நினைவும் கடந்த கால வாழ்க்கையில் இருக்கிறது. இறந்து போன கணவனின் அன்பை நினைத்துக் கண்ணீர் விடுகிறாள். தனது துயரை ஆற்றுப்படுத்திக் கொள்ளச் சாவு வீட்டிற்குப் போய் ஒப்பாரி வைக்கிறாள்.

நாராயணின் பொருளாதார விஷயங்களைச் சரிசெய்ய முயலும் பானோ அதில் ஒரளவு வெற்றி பெறுகிறாள் ஆனால் நாராயணின் சகோதரி வந்து போன பின் பானோவின் வாழ்க்கையில் புதிய நெருக்கடி உருவாகிறது.

தனக்குக் குழந்தை வேண்டும் என்பதற்காக நாராயண் இன்னொரு திருமணம் செய்து கொள்கிறான். புதிய மனைவி வந்தவுடன் பானோ மாறிவிடுகிறாள். அவளால் அந்தப் பெண்ணை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் இயந்திரம் போலவே நடந்து கொள்கிறாள். நாராயண் முடிவை மீறி உடுத்திய ஆடைகளுடன் முட்டாக்கு கூட அணியாமல் பானோ அங்கிருந்து வெளியேறிப் போவதுடன் நாவல் நிறைவு பெறுகிறது

பானோவின் வாழ்க்கை மட்டுமில்லை. அந்தக் கிராமத்திலுள்ள பெண்களின் வாழ்க்கை யாவும் ஒன்று போலதானிருக்கிறது. ஒரு பெண்ணை விலை கொடுத்து வாங்குவதைப் பெருமையாக ஆண்கள் நினைக்கிறார்கள். குழந்தை இல்லாத பெண்கள் துரத்திவிடப்படுகிறார்கள். சமைக்கவும் சுகம் தரவும் பிள்ளைகள் வளர்க்கவும் மட்டும் தான் பெண்கள் என்ற எண்ணம் கொண்ட ஆண்களின் உலகினை தலீப் கௌர் கடுமையாக விமர்சிக்கிறார்.

நாவலின் ஒரு இடத்தில் பானோ தனது துயரத்தை ஒரு பாடலாகவே பாடுகிறாள். அதில் அவள் தனது கஷ்டங்களைப் புரிந்து கொண்டு தனக்காகத் தனது சகோதரன் ஒருவனால் மட்டுமே உதவ முடியும் என்கிறாள். பானோவின் தந்தை அவளைப் பணத்திற்காக ஒருவருக்கு விற்க முயல்கிறார். அது தான் அவளைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுகிறது. ஒரு துன்பத்திலிருந்து விடுபட நினைத்து இன்னொரு துன்பத்தில் சிக்கிக் கொள்கிறாள் பானோ. பெண்களுக்கு இந்த நிலை இன்றும் மாறவேயில்லை.

தலீப் கௌர் சித்தரித்துள்ள உலகம் 75 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அந்தக் கிராமத்தில் காகிதத்தில் பணம் அச்சிடப்படுவதைப் பற்றி வியப்போடு பேசிக் கொள்கிறார்கள். போதையின் உச்சத்தில் கிணற்றைக் கயிறு கட்டி வேறு இடத்திற்கு இழுத்துக் கொண்டு போக முயன்ற நிகழ்வு விவரிக்கபடுகிறது.

தன்னைக் கணவன் எப்படி ஆசையாக அழைப்பான் என்பதைப் பற்றிப் பானோ ஒருமுறை நாராயணிடம் விவரிக்கும் போது அவன் இனி ஒருபோதும் அந்த வார்த்தையை நினைவுபடுத்தாதே என்கிறான். அதற்குப் பானோ மறைந்து போனவர்களின் பேச்சு அவர்களுடன் போய்விடுவதே நல்லது என்கிறாள். அதன்பிறகு அவள் நாராயணிடம் தன் கணவனைப் பற்றிப் பேசுவதில்லை. ஆனாலும் அவன் மனதிற்குள் பயப்படுகிறான். ஒருவேளை கணவன் திரும்ப வந்து அழைத்துக் கொண்டு போய்விடுவானோ என்று கூடக் கவலைப்படுகிறான். இறந்தவர் எப்படித் திரும்பி வர முடியும் என்று பானோ கேட்கிறாள். அவன் யார் வயிற்றிலாவது பிறந்துவந்துவிட முடியும் என்கிறான் நாராயண்.

இவ்வளவு அவள் மீது ஆசை கொண்டிருந்த போதும் முடிவில் அவளை உதறி எறிய நாராயண் தயங்கவேயில்லை

குடும்பம் என்ற சிறிய உலகிற்குள் தான் எவ்வளவு சிக்கல்கள். பிரச்சனைகள். அயராத உழைப்பின் வழியே பானோ போன்றவர்கள் குடும்பத்தை நிலை நிறுத்திவிட முயல்கிறார்கள். அவள் உயர்த்திப் பிடித்த வெளிச்சத்தை நாராயண் போன்றவர்கள் நொடியில் இருள் அடையச்செய்து விடுகிறார்கள்.

பானோ தனது எதிர்காலம் பற்றி எங்குமே கவலைப்படுவதில்லை. தன் உடலை வருத்திக் கொள்வதைப் பற்றிக் கூட அவளிடம் புகாரில்லை. ஆனால் ஏன் தன்னை நாராயண் புரிந்து கொள்ளவில்லை என்பதை நினைத்தே கவலை கொள்கிறாள். வருந்துகிறாள். நடைப்பிணமாகிறாள்.

அவளுக்கு நீதி மறுக்கபடுகிறது. அவள் யாரிடமும் இதைப்பற்றி முறையிடவில்லை. மாறாக அவள் தனது பாதையைத் தானே தேர்வு செய்துகொண்டுவிடுகிறாள். அதில் அவள் அடையப்போகும் துயரங்கள் இதைவிட அதிகமாகவும் இருக்கக் கூடும். ஆனால் அது அவளது தேர்வு

நாவலில் துவக்கத்தில் நாராயணை நம்பி அவனுடன் வருகிறாள். இந்த முடிவு அவள் எடுத்தது. அது போலவே நாராயணை நீங்கி வெளியேறுகிறாள். அதுவும் அவள் எடுத்த முடிவே. இந்த இரண்டுமுடிவுகளுக்குள் ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படியெல்லாம் உருமாறுகிறது என்பதைத் தலீப் கௌர் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

இது தான் அவள் வாழ்க்கை என்று தலீப் கௌர் சொல்லவில்லை. நம் வாழ்க்கை என்கிறார். அந்தச் சொல்லின் வழியே இந்நாவல் மொழி கடந்து என்றும் தொடரும் ஒரு பிரச்சனையின் அடையாளமாக மாறுகிறது

••

பஞ்சாப் பல்கலைகழக பேராசிரியராக பணியாற்றிய தலீப் கௌர் பத்மஸ்ரீ உள்ளிட்ட முக்கிய விருதுகளைப் பெற்றவர். தனது பணி நிறைவிற்குப் பின்பும் இவர் பல்கலைகழக வளாகத்தினுள் உள்ள வீட்டில் வசிக்க அனுமதிக்கப்பட்டார். நோயுற்று மருத்துவ மனையில் அனுமதிக்கபட்ட சூழலில் அவருக்கான மொத்த மருத்துவ செலவையும் பஞ்சாப் அரசே ஏற்றுக் கொண்டது. பஞ்சாப்பின் முக்கிய எழுத்தாளராக கொண்டாடப்படும் தலீப் கௌர் தனது 84 வயதில் 2020ல் காலமானார்.

0Shares
0