இரண்டு மொழிபெயர்ப்பாளர்கள்.

ரிச்சர்ட் பெவேர் மற்றும் லாரிசா வோல்கோகன்ஸ்கி (Richard Pevear and Larissa Volokhonsky) இருவரும் ரஷ்ய இலக்கியங்களின் புதிய மொழியாக்கங்களைச் செய்து வருபவர்கள். தம்பதிகளான இருவரும் இணைந்து Leo Tolstoy,  Fyodor Dostoevsky,Mikhail Bulgakov ,Nikolai Gogol. Boris Pasternak, Anton Chekhov ஆகியோரின் முக்கியப் படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.

தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சசோதரர்கள் நாவல் இதுவரை ஆறு முறை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஆறில் இவர்களின் மொழிபெயர்ப்பே மிகச்சிறப்பானது.

ரிச்சர்ட் பெவேர் ஒரு அமெரிக்கர். பல்கலைகழகப் பேராசியராக ரஷ்ய இலக்கியங்களைக் கற்பித்தவர். ரஷ்ய இலக்கியங்கள் மட்டுமின்றிப் பிரெஞ்சு இலக்கியங்களையும் மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டு கவிதைதொகுப்புகளும் வெளியிட்டிருக்கிறார்

யூதரான லாரிசா வோல்கோகன்ஸ்கி பீட்டர்ஸ்பெர்க்கில் பிறந்தவர்.மெரைன் பயாலஜி படித்தவர். அமெரிக்கா சென்று இறையியலில் ஆய்வு செய்தவர். சமயநூல்களை மொழியாக்கம் செய்யத்துவங்கிய இவர் தனது கணவரின் தூண்டுதலால் இலக்கியங்களை மொழியாக்கம் செய்ய ஆரம்பித்தார். தற்போது பாரீஸில் வசிக்கும் இவர்கள் தங்களின் சிறப்பான மொழியாக்கத்தின் வழியே ரஷ்ய இலக்கியங்களை இளந்தலைமுறை வாசிக்கக் காரணமாக இருக்கிறார்கள்.

ரஷ்ய இலக்கியங்களை ஆங்கிலத்தில் வாசிக்க விரும்புகிறவர்களுக்கு நான் சிபாரிசு செய்யும் மொழிபெயர்ப்பு இவர்களுடையது.

புஷ்கின், டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கி போன்றவர்களை முதலில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் கான்ஸ்டன்ஸ் கர்னெட். இங்கிலாந்தில் பிறந்த இவர் இளம்பெண்ணாக இருந்த போது தனது கணவரின் நண்பரான ஃபெலிக்ஸ் வோல்கோவ்ஸ்கியிடம் ரஷ்ய மொழி கற்று தேர்ந்தவர். அதன்பின்பே ரஷ்ய இலக்கியங்களை மொழியாக்கம் செய்யத்துவங்கினார். இவரது மொழிபெயர்ப்பு கதையைத் திரும்பச் சொல்லும் மொழிபெயர்ப்பு. அதில் எழுத்தாளனின் கவித்துவத்தையோ, மொழிநுட்பத்தையோ காண இயலாது என்கிறார்கள் விமர்சகர்கள்.

David Magarshack மொழியாக்கமும் இத்தகையதே. டேவிட்டும் இங்கிலாந்தை சேர்ந்தவரே

David McDuffன் மொழிபெயர்ப்பு தரமானது. ஜோசப் பிராட்ஸ்கி போன்ற கவிஞர்களை மொழியாக்கம் செய்தவர் என்பதால் தஸ்தாயெவ்ஸ்கியை நுட்பமாக மொழியாக்கம் செய்திருந்திருக்கிறார். ஆனால் இவர்கள் எவரையும் விடத் துல்லியமாக, தஸ்தாயெவ்ஸ்கியின் குரலை அப்படியே ஒலிக்கச் செய்வது போன்ற மொழியாக்கதை செய்தவர்கள் பேவர் மற்றும் லாரிசா ஆவர். நாவலை மொழியாக்கம் செய்வதுடன் எழுத்தாளரைப் பற்றிய கச்சிதமான குறிப்பையும் இவர்கள் எழுவது சிறப்பானது.

Doctor Zhivago நாவலை Max Hayward and Manya Harari இருவரும் இணைந்து மொழிபெயர்த்திருக்கிறார். இந்த மொழிபெயர்ப்பு அற்புதமானது. திரைப்படமாக ஷிவாகோ தரும் மனவெழுச்சியை விட நாவல் அதிகம் பாதிக்ககூடியது.

••

0Shares
0