இரவெல்லாம் சூதாடுகிறவள்

ஃப்லிம் நுவார் (Film noir) திரைப்படங்களின் அழகியல் மிகவும் தனித்துவமானது. அவற்றை வெறும் திரில்லர் படங்கள் என்று வகைப்படுத்திவிட முடியாது.

ஃப்லிம் நுவார் என்பது ஃப்ரெஞ் சொல். இதன் பொருள் இருண்ட உலகைச் சித்தரிக்கும் படம் என்பதாகும். நுவார் திரைப்படங்களில் கேமிராக் கோணங்கள் – இசை – பின்புலம் மிகவும் புதுமையாகயிருக்கும். லோ ஆங்கிள் காட்சிகளைத் திரையில் இத்தனை அழகாகக் காட்டமுடியுமா என்று பிரமிப்பாக இருக்கும்.

குற்றவுலகின் இயல்பினை விவரிக்கும் இந்த வகைப்படங்கள் நாம் பார்த்தறியாத நிழல் மனிதர்களை, விசித்திரமான குற்ற நிகழ்வுகளை, அதன் பின்னுள்ள மனநிலையைத் திரையில் வெளிப்படுத்துகின்றன.

நுவார் படங்களின் நாயகர்கள் பெரும்பாலும் அந்நியர்கள். அவர்கள் வெளியிலிருந்து வருபவர்கள். தற்செயலாகவோ, திட்டமிட்டோ குற்றவுலகிற்குள் நுழைகிறார்கள். சிக்கிக் கொள்கிறார்கள்.

இந்தப்படங்களில் தீமை செய்யும் கதாபாத்திரங்களுக்கும் குடும்பமிருக்கும். வீட்டில் அவர்கள் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவார்கள். மனைவியுடன் ஷாப்பிங் செல்லுவார்கள். கிறிஸ்துமஸ் கொண்டாடுவார்கள். இப்படிக் குற்றவாளிகளின் இயல்புலகத்தை மாறுபட்ட விதத்தில் சித்தரிக்கின்றன.

படத்தின் கதாநாயகனை நல்லவன் என்று நம்மால் வரையறை செய்ய முடியாது. சந்தர்ப்பமே அவனை வழிநடத்துகிறது. பல நேரம் கதையின் முடிவில் தீமையே வெல்கிறது. கதாநாயகனே காட்டிக் கொடுக்கிறான். கொலை, கொள்ளை என்பதையெல்லாம் இப்படங்களில் சர்வ சாதாரணமாகத் திட்டமிடுகிறார்கள். செயல்படுத்துகிறார்கள்.

துப்பறியும் நிபுணர் பல நேரங்களில் தோற்கடிக்கப்படுகிறார். கவர்ச்சியான, சூழ்ச்சியான பெண் கதாபாத்திரங்களே அதிகம் இடம்பெறுகிறார்கள். அவர்கள் பணத்திற்காக எதையும் செய்யத் தயங்குவதில்லை. இது போலவே சட்டத்தை நிலை நிறுத்த வேண்டிய காவலர்கள் களவிற்கு உடந்தையாக இருக்கிறார்கள். அல்லது அவர்களே குற்றம் செய்கிறார்கள்

இப் படங்கள் இரவு வாழ்க்கையை விசித்திரமாகக் காட்டுகின்றன. குறிப்பாக நீளும் நிழல்கள் உலவும் வீதிகள். பாதி இருட்டு கொண்ட அறைகள். உன்னதச் சங்கீதம் கேட்கும் மதுவிடுதிகள். பிரகாசமாக எரியும் தெருவிளக்குகள். இருண்ட குடோன்கள். துறைமுகங்கள். அழகான உடை அணிந்த கொலையாளிகள் என அந்த உலகம் முற்றிலும் புதியது.

குற்றத்தைத் திட்டமிடுகிறவர்கள் சதா குடித்துக் கொண்டும் சாப்பிட்டபடியும் இருக்கிறார்கள். திடீரென அவர்கள் காரில் கிளம்பிப் போவதும் பரஸ்பரம் ஒருவரையொருவர் சந்தேகப்படுவது, காட்டிக் கொடுப்பது, கொலை செய்வது இயல்பாக நடந்தேறுகின்றன.

1940 துவங்கி 1958 வரை நுவார் படங்கள் ஹாலிவுட்டில் பெரும் புகழ் பெற்றிருந்தன. இதன் பாதிப்பு ஜப்பானிய சினிமாவிலும் எதிரொலித்தது. இன்று வரை நுவார் படங்களின் மாறுபட்ட வகைமைகள் உருவாக்கபட்டே வருகின்றன.

Femme Fatales என்றழைக்கபடும் கவர்ச்சியான, சூது செய்யும் பெண்கள் இப்படங்களில் இடம்பெறுகிறார்கள் அவர்கள் ஆபத்தைத் தேடிச் செல்பவர்கள். காதலிப்பது போல நடித்து ஏமாற்றுகிறவர்கள். பணத்திற்காகக் கொலையும் செய்பவர்கள்.

இந்த நுவார் புகைப்படங்களில் ஒன்று தான் The Lady Gambles

1949 ஆம் ஆண்டுப் படமாகும், மைக்கேல் கார்டன் இயக்கியது

படத்தின் துவக்கத்திலே ஒரு பெண் சிலரால் மிக மோசமாகத் தாக்கப்படுகிறாள். மயங்கிக் கிடந்த அவளைக் காவலர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு போகிறார்கள். அங்கே வரும் பத்திரிக்கையாளர் டேவிட் பூத் அந்தப் பெண் தனது மனைவி ஜோன் என்று சொல்லி அவளது கடந்தகாலக் கதையை நினைவு கொள்ள ஆரம்பிக்கிறான்.

சிகாகோவைச் சேர்ந்த டேவிட் பூத் தனது மனைவி ஜோனுடன் லாஸ் வேகாஸில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான்.. அங்குள்ள கேசினோ ஒன்றுக்குச் செல்லும் ஜோன் ரகசியமாக அங்கு நடப்பதைப் புகைப்படம் எடுக்க முயல்கிறாள். அதை அறிந்த கேசினோ உரிமையாளர் காரிகன் அவளைத் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்கிறான். அவள் உண்மையை வெளிப்படுத்தவே பறிமுதல் செய்யப்பட்ட அவளது கேமிராவை ஒப்படைக்கிறான்.

ஜோனுக்குச் சூதாட்டத்தில் மிகுந்த ஆர்வமிருப்பதைக் காரிகன் அறிந்து கொள்கிறான். மறுமுறை கேசினோவிற்கு வருகை தரும் ஜோனுக்கு உதவிகள் செய்கிறான். அன்று ஜோன் சூதாட்டத்தில் 600 டாலர்களை இழக்கிறாள். அந்தப் பணம் போன ஏமாற்றத்தில் எவரிடமாவது கடன் வாங்கி மீண்டும் சூதாடத் துடிக்கிறாள். இதற்காகக் காரிகனிடம் கடன் கேட்கிறாள். அவன் சூதாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று சொல்லித் துரத்திவிடுகிறான். அவள் பணம் கேட்டு மன்றாடுகிறாள். வேறுவழியின்றிக் கேமிராவை விற்றுப் பணம் பெறுகிறாள்.

எதிர்பாராமல் சூதாட்டத்தில் வெற்றி அவள் பக்கம் திரும்புகிறது. இழந்த பணத்தை மீட்கிறாள். அன்றிலிருந்து சூதாட்ட விடுதியே வாழ்க்கை என உருமாறுகிறாள். அவளைப் பயன்படுத்திக் கொள்ளும் காரிகன் பணக்காரர்களுடன் நடக்கும் தனிப்பட்ட சீட்டு விளையாட்டில் அவளைக் கலந்து கொள்ள வைத்து இரவு முழுவதும் சீட்டு விளையாட வைக்கிறான்.

அதில் நிறையப் பணம் சம்பாதிக்கிறாள். பணம் கிடைத்தவுடன் அவளது வாழ்க்கை மாறுகிறது. நடவடிக்கைகள் மாறுகின்றன. இரவில் சூதாடுவதால் பகலில் உறங்குகிறாள். ஆடம்பரமான உடைகள் வாங்குகிறாள். கணவனுக்குத் தெரியாமல் அவள் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபடுகிறாள்.

ஒரு நாள் இதை அறிந்து கொண்ட டேவிட் பூத் அவளைப் பின்தொடர்ந்து கண்காணித்து உண்மையை அறிந்து கொள்கிறான். அவள் சீட்டு விளையாட்டில் தோற்றுக் களைத்துப் போய்த் தனியே அமர்ந்திருக்கிறாள்.

அவளை அழைத்துக் கொண்டு மெக்சிகோவுக்கு இடம் மாறிப் போய்விடுகிறான் டேவிட். அங்கே கணவனுடன் புதிய வாழ்க்கையை வாழுகிறாள் ஜோன். மகிழ்ச்சியான நாட்கள். ஒன்றாகக் கடற்கரையில் நீந்திக் களிக்கிறார்கள்.

ஆனால் எதிர்பாராமல் மறுபடியும் சூதாட்ட வாழ்க்கைக்குள் பிரவேசிக்கிறாள். இந்த முறை அதிர்ஷ்டம் அவளுக்குக் கைகொடுக்கவில்லை. சூதின் வலையில் சிக்கிக் கொண்டதன் விளைவாக அவள் சிலரால் தாக்கப்படுகிறாள். அவளது முடிவு என்னவானது என்பதே படத்தின் மீதக்கதை.

தஸ்தாயெவ்ஸ்கி தனது சூதாடி நாவலில் சூதாட்டத்தின் பின்னுள்ள வசீகரத்தை, ஏமாற்றத்தை, விடுபட முடியாத பதற்றத்தைத் துல்லியமாக எழுதியிருப்பார். அப்படி ஒரு சூதாடியாகவே ஜோன் சித்தரிக்கப்படுகிறாள்.

மரபான ஹாலிவுட் படங்களின் கதாநாயகிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் ஜோன். நுவார் படங்களின் கதாநாயகி எப்படியிருப்பார் என்பதற்கு ஜோன் சிறந்த உதாரணம். கேசினோவில் அவள் நடந்து கொள்ளும் விதமும், தனிப்பட்ட சீட்டாட்ட நிகழ்வில் வெற்றி பெறும் போது ஏற்படும் சந்தோஷமும் மிக அழகாக வெளிப்படுத்தப்படுகின்றன.

டேவிட் பூத் தன் மனைவியை இரவில் சூதாட்ட க்கூடத்தில் தேடி அலையும் போது அவளைப் போலப் பல பெண்கள் இரவெல்லாம் சூதாடுவதைக் காணுகிறான். என்ன உலகமிது என்று குழப்பம் அடைகிறான். ஊரெங்கும் சூதாட்ட விடுதிகள். இரவெல்லாம் சூதாடுகிறவர்கள்.

தோற்றுப்போய்த் தனியே உட்கார்ந்திருக்கும் ஜோனைக் கண்டதும் அவன் வருத்தமே அடைகிறான். ஆறுதலாகப் பேசி தன்னுடன் அழைத்துப் போகிறான்.

அவர்கள் திருமண வாழ்க்கை சூதாட்டத்தால் சீர்கெடுகிறது. பல நேரம் ஜோனைக் கண்டித்த போதும் அவள் மீது அன்பு கொண்டவனாகவே டேவிட் நடந்து கொள்கிறான். தனது மொத்த சேமிப்பை அவள் சூதாட்டத்தில் விட்டபிறகே அவளை விட்டு ஒதுங்குகிறான்.

ஏதோ ஒருவகை வெறி அவளைப் பற்றிக் கொண்டிருப்பது போலவே ஜோன் நடந்து கொள்கிறாள். அவளாக விரும்பினாலும் சூதாடுவதிலிருந்து விடுபட முடியவில்லை. ஒரு குற்றம் அடுத்த குற்றங்களுக்கு அழைத்துச் செல்லும் என்பது ஜோன் விஷயத்தில் உண்மையாகிறது. போதை அடிமையைப் போல அவளுக்குக் கைகள் நடுங்குகின்றன. பதற்றம் கொள்கிறாள். பகடையை அவள் வீசி எறியும் போது அதிர்ஷ்ட தேவதை தன் தோளில் கையைப் போட்டிருப்பது போலவே நினைக்கிறாள்.

கேசினோ உரிமையாளர் காரிகன் முதல் சந்திப்பிலே அவளது உள் நோக்கத்தை உணர்ந்து கொண்டுவிடுகிறான். அவளைப் பயன்படுத்தி அவன் பெரும்பணம் சம்பாதிக்கிறான். அவனுக்கு ஜோன் ஒரு பகடைக்காய் மட்டுமே.

தான் செய்வது தவறு என்று ஜோன் உணரவேயில்லை. அவளிடம் குற்றவுணர்ச்சியே கிடையாது. அவள் மிகுந்த விருப்பத்துடன், வேகத்துடன் சூதில் ஈடுபடுகிறாள். அதிர்ஷ்டம் தன் பக்கம் இருப்பதாக நம்புகிறாள். அது தான் அவளது பலவீனம். தோற்றுப்போன தருணத்திலும் தன்னிடம் விளையாடப் பணமில்லையே என்று தான் ஏங்குகிறாள். வருந்துகிறாள்.

சூதாட்டத்தின் முன்பு ஆண் பெண் என்ற பேதமில்லை. ஒரு வெற்றி அடுத்தடுத்த தோல்விகளுக்கு வழிவகுக்கும் எனச் சூதாடிகள் அறிந்தும் அதை விட்டு விலகுவதில்லை. அவர்கள் கற்பனையில் வாழுகிறார்கள். விழித்தபடியே கனவு காணுகிறார்கள். உண்மையை உணரத்துவங்கும் போது வாழ்க்கை அவர்கள் கதையை முடித்துவிடுகிறது

••

0Shares
0