இருநூறு ஆண்டுகாலக் கதை

“யாமம்” வாசிப்பனுபவம்

இர. மௌலிதரன்.

ஒரு ஊரின் வரைபடம் வேண்டும் என்றால் அந்த ஊரின் எழுத்தாளனை தான் நாம் கேட்க வேண்டும். ஏனெனில் அவன் ஒருவன் மட்டுமே அந்த ஊரை அங்குலம் அங்குலமாக அளந்தும், அனுபவித்தும், தனக்குள் ஆழமாகப் புதைத்து வைத்திருப்பான். இப்படி ஒரு கிராமமோ, ஒரு நகரமும் ஒருவன் நினைவில் இருந்தால் அது சாத்தியம். ஆனால் அதுவே ஒரு நாடு முழுவதும் ஒருவன் இப்படித் தனக்குள் வரைபடமாக வரைந்து வைத்திருக்கிறான் என்றால் அது அசாதாரணம். அப்படி இந்தியாவையே தனக்குள் அளந்து, புதைத்து வைத்திருப்பவர் தான் எஸ்ரா. காலச்சக்கரத்தில் பின்னோக்கி சென்று அங்கு வாழ்ந்த மனிதர்களையும் அவர்கள் மண்ணையும் அவர்கள் உணர்வுகளையும் அப்பட்டமாக அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளார் இந்த நாவலில். இது எப்படிச் சாத்தியம்? ஒருவேளை இவர் கூடுவிட்டு கூடுபாயும் வித்தை அறிந்தவரோ? அல்லது காலச்சக்கரத்தில் பின்னோக்கிச் செல்லும் இயந்திரம் ஏதேனும் உள்ளதோ? எஸ் ரா விற்கு மட்டுமே அது வெளிச்சம். யாமம்- மனித மனங்களை மயக்கும் ஒரு வகை வாசனை திரவம். இந்தத் தலைப்பு இக்கதைக்கு மட்டுமல்லாமல் எஸ் ரா வின் எழுத்துக்கும் பொருந்தும்.

பிரிட்டிஷ் வணிகக் கப்பல் இந்திய கரையைத் தொடுவதோடு கதை தொடங்குகிறது 1600 களில். ஒரு முகலாய மன்னனின் சுயநலத்தால் இந்தியாவையே ஆங்கிலேயர்கள் கையில் தாரை வார்த்துக் கொடுப்பதில் தொடங்கி 200 ஆண்டுகாலக் கதை இந்த நாவல். இதனைக் கதை என்றழைப்பதை விடக் குறுங்காவியம் என்றே அழைக்கவேண்டும். இதனுள் நான்கு வெவ்வேறு கதைகள் வேறு வேறு திசையில் சென்றாலும் அவற்றை இணைக்கும் ஒரே புள்ளி மதராபட்டினம் மட்டுமே. அந்தக் கதைகளுடன் சேர்ந்து கிழக்கு இந்திய கம்பெனியின் கோட்டையான மதராபட்டினமும் நம் கண் முன் விரிகிறது.

யாமம் என்ற வாசனை திரவியம் தயாரிக்கும் கரீமும் அவனது மூன்று மனைவிகளும் எப்படி இந்த மதராபட்டினம் மண்ணில் வாழ்ந்து வீழ்ந்து இறுதியில் கரீம் சொத்து இழந்து காணாமல் போக, மூத்த மனைவி காலராவில் இறந்து போக, மீதி இரண்டு மனைவிகளும் தன் சொந்த ஓர் சென்று பஞ்சம் பிழைக்க, அவன் யாமம் வடித்த ஒற்றைச் செங்கலில் ஒட்டிய அதன் வாடையுடன் அவர்கள் கொத்தடிமைகளாக உப்பளம் சென்றடைகிறது அவர்கள் கதை.

அப்பாவின் அக்கிரமத்தால் அம்மாவை இழந்து, தன் நங்கை சித்தியின் துணையோடு அரும்பாடு பட்டு தன் தம்பி திருச்சிற்றம்பலத்தை நல்ல நிலைமைக்குக் கொண்டு சென்று, மணம் முடித்து, கணித மேற்படிப்புக்கு லண்டன் நகரம் அனுப்பிவைத்துச் சந்தோசமாக மதராபட்டினத்தில் வாழ்ந்து வந்த பத்ரகிரி ஒரு கட்டத்தில் தன் தம்பியின் மனைவி மேல் சபலம் கொண்டு தானும் சீரழிந்து தன் தம்பியின் கனவையும் சீரழித்து இறுதியில் அவன் சொந்த ஊருக்கே ஒரு நாடோடியாகச் சென்றடைகிறான்.

மதராபட்டினத்தில் உள்ள எலிசபெத் என்ற சட்டைக்காரிக்காகத் தன் பரம்பரை சொத்து அனைத்தையும் விட்டு கொடுத்து தனக்கென ஒரே ஒரு மலையை மட்டும் வாங்கிக்கொண்டு அதையும் அந்தப் பெண்ணிற்கே எழுதி கொடுத்துவிட்டு தன் காட்டில் தானே ஒரு துறவியாக வாழ தொடங்குகிறார் கிருஷ்ணப்பா கரையாளர்.அவருக்குத் தெரியவில்லை வருங்காலத்தில் அந்த மலை தான் தமிழகத்தின் முதலும் பெரியதுமான தேயிலை தோட்டமாக மாறப்போகிறது என்று.

தன்னைப் பெற்ற தாய் பிச்சை கேட்காத குறையாகத் தன்னை நோக்கி கெஞ்சியும் மண்டியிட்டு புலம்பியும் தன் சிறு வயதிலே துறவு பூண்ட பண்டாரம். தான் தினமும் வணங்கும் சிவபெருமான் தான் நாய் ரூபத்தில் தனக்குக் காட்சியளித்துள்ளார் என்று நம்பி அந்த நாய்க்கு நீலகண்டம் என்று பெயரிட்டு அதன் பின் சென்றே தன் வாழ்க்கையைக் கழித்து இறுதியில் மதராபட்டினத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒரு அறையில் தன்னைத் தானே அடைத்துக்கொண்டு அரூபமாக மறைந்து விடுகிறார்.

இந்த நான்கு கதைகளில் வரும் மாந்தர்களும் எந்த இடத்திலும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவேயில்லை. ஆனால் இந்த நான்கு கதைகள் மூலம் எஸ் ரா நம் வாழ்வின் நான்கு முக்கிய உணர்வுகளை விளக்குகிறார். பேராசை, சபலம் , அமைதி, ஆன்மீகம். இந்த நான்கு நம் அனைவர்க்குள்ளும் உள்ளவைகளே, ஆனால் அதன் வெளிப்பாட்டின் அளவுதான் ஒருவரிடம் இருந்து மற்றொருவரை வேறுபடுத்துகிறது. இந்த நான்கும் வாழ்க்கை வண்டியின் நான்கு சக்கரங்கள் போல அளவுக்கு மீறாமல் இருந்தால் அந்த வண்டியும் அதன் பயணிகளும் பயணத்தைச் சீராகப் பயணிக்க முடியும்.

0Shares
0