இரும்புக்கை மாயாவி

பள்ளிநாட்களில் நான் படித்த காமிக்ஸ் புத்தகங்கள் தற்போது புதுப்பொலிவுடன் மீண்டும் புதிய பதிப்பாக வெளிவந்துள்ளன. முத்துகாமிக்ஸ் வெளியிட்ட காமிக்ஸ் புத்தகங்களின் ரசிகன் என்ற முறையில் இவற்றை மீண்டும் வாசிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

குறிப்பாக நேற்றிரவு இரும்புக்கை மாயாவியின் நாச அலைகளை வாசித்தேன். முதல்முறையாகப் படித்த போது அடைந்த சந்தோஷம் இன்றும் அப்படியே இருப்பது வியப்பளித்தது.

இரும்புக்கை மாயாவி பற்றி ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். புத்தரின் கார்டூன் மொழி என்ற அச்சிறுகதை எஸ்.ராமகிருஷ்ணன் தொகுதி 1 ல் உள்ளது. அக்கதையை இன்று மீண்டும் வாசித்த போது எனது மனதில் காமிக்ஸ் புத்தகங்கள் எவ்வளவு ஆழமான பாதிப்பை உருவாக்கியுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

தமிழில் வெளியாகும் காமிக்ஸ் புத்தகங்களுக்கெனத் தனி வாசகர் வட்டமிருப்பதை அறிவேன். அவர்கள் காமிக்ஸ் புத்தகங்களைத் தேடித்தேடி வாங்குகிறார்கள். இணையத்தில் காமிக்ஸ் குறித்து சிறப்பாக எழுதுகிறார்கள். அரிய காமிக்ஸ் புத்தகங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.  அவர்களுக்கு எனது பாராட்டுகள்.

இன்றைய பள்ளி சிறார்கள் தமிழ் காமிக்ஸ்களை அதிகம் வாசிப்பதில்லை. அதை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். ஆரம்ப நிலை வாசிப்பிற்குக் காமிக்ஸ் புத்தகங்கள் பெரிதும் துணை சேர்க்க கூடியவை.

காமிக்ஸ் சித்திரங்கள் குறித்து இதுவரை யாரும் விரிவாக எழுதவில்லை. அவை அற்புதமான கோட்டோவியங்கள். அது குறித்து விரிவாக எழுத வேண்டும் என்பது எனது நீண்டகால ஆசை.

மறுபதிப்பு கண்டுள்ள இந்தக் காமிக்ஸ் புத்தகங்கள் தரமாக வெளியிடப்பட்டுள்ளன . இதன் விலையும் மிகக் குறைவே.

லயன்  மற்றும் முத்துகாமிக்ஸ் மறுபதிப்புகளைச் சிறப்பாக வெளியிட்டு வரும் பிரகாஷ் பப்ளிஷர்ஸ்க்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள்

காமிக்ஸ் புத்தகங்களை வாங்க

89, சேர்மன் P.K.S.A.A 3 ரோடு, அம்மன் கோவில்பட்டி, சிவகாசி. 626 189

போன் 04562 -272649

செல்- 9842319755

www.lioncomics.in

0Shares
0