இருள் விலகும் கதைகள்

இன்று எழுதி வரும் இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளை மையப்படுத்தி விஜய் மகேந்திரன் தொகுத்துள்ள சிறுகதை தொகுப்பு இருள்விலகும் கதைகள். இதை தோழமை பதிப்பகம் வெளியீட்டுள்ளது.

நான் வாசித்து அறிந்தவரை இந்திய மொழிகளிலே தமிழில் தான் சிறுகதை அதன் உச்சபட்ச சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறது. பல்வேறு விதமான கதை சொல்லும் முறைகள், கதைமொழி, வடிவ சோதனைகள், பின்நவீனத்துவன எழுத்து முறை, தலித்திய, பெண்ணிய சிந்தனை சார்ந்த சிறுகதைகள் என்று தமிழ் சிறுகதைகள் உலகின் சிறந்த சிறுகதைகளுக்குச் சமமாக எழுதப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு பத்தாண்டிலும் சிறுகதையின் போக்கு திசைமாற்றம் கொள்கிறது. புதுமைபித்தனின் துவங்கி இன்று எழுதிக் கொண்டிருக்கும் இளம்படைப்பாளி வரை சிறுகதை அடைந்துள்ள மாற்றமும் வளர்ச்சியும் அபரிமிதமானது.

நல்ல சிறுகதைகள் இன்று அதிகம் எழுதப்படவில்லை. வெளியான போதும் கவனம் பெறுவதில்லை என்ற பொதுக்குற்றசாட்டை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்வதில்லை. இரண்டாயிரத்திற்கு பிறகு எழுதத்துவங்கிய இளம் எழுத்தாளர்களில் பலர் நல்ல சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு என தனித்துவமான கதை சொல்லும் முறையும் கதைக்களமும் இருக்கிறது. எனது ஒரே குறை அவர்கள் தொடர்ந்து எழுதுவதில்லை என்பது மட்டுமே

விஜயமகேந்திரன் இலக்கிய வாசிப்பிலும் எழுத்திலும் தீவிரமாக இயங்கிவருபவர். அவர் வா.மு.கோமு, சுதேசமித்ரன், ஷாராஜ், கே.என்.செந்தில், ஹரன் பிரசன்னா, எஸ். செந்தில்குமார், பாலை நிலவன், லட்சுமி சரவணக்குமார், சிவக்குமார் முத்தய்யா, விஜய மகேந்திரன், புகழ், என். ஸ்ரீராம் ஆகியோரின் சிறுகதைகள் கொண்ட இந்த தொகுப்பை உருவாக்கியிருக்கிறார். சமகால சிறுகதைப் போக்கின் குறுக்குவெட்டு தோற்றத்தை இந்தக் கதைகளின் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது என்பது இத்தொகுப்பின் விசேசம்

இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஒரு முன்மாதிரி மட்டுமே. இதற்கு வெளியில் நம்பிக்கை தரும் சிறுகதை எழுத்தாளர்களாக மனோஜ், பவா.செல்லதுரை, காலபைரவன், அசதா, தமிழ்மகன், திருச்செந்தாழை, சந்திரா, ஹசீன், திசேரா, உமா சக்தி, லதா.(சிங்கப்பூர்) பாலமுருகன் (மலேசியா), போன்றவர்களை குறிப்பிடலாம்.

இன்றைய சிறுகதையின் பலம் அதன் கதை சொல்லும் முறை. கதாபாத்திரங்களை உருவாக்கி அதன் பின்னே நிகழ்ச்சிகளைத் தொடரச் செய்யும் சம்பிரதாய கதைசொல்லல் இன்று புறந்தள்ளப்பட்டுவிட்டது. கதை சொல்லும் குரலும் அது சுட்டிகாட்டும் இடைவெட்டு நிகழ்ச்சிகளும். அந்த நிகழ்வின் வழி வெளிப்படும் மனநிலையின் தீவிரமும். மொழித்தளங்களுமே இன்று சிறுகதையின் முக்கிய அம்சங்கள். 

இந்ததொகுப்பில் அப்படி மாறுபட்ட கதை சொல்லும் முறைகளும் கதைமொழியும் காணமுடிகிறது.

வா.மு.கோமுவின் நல்லதம்பியின் டைரி குறிப்புகள் கதை அதன் சொல்லும் முறையால் பகடியும், அக எள்ளல்களும் கொண்டதாக உள்ளது. வா.மு. கோமுவின் சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். அவரது எழுத்தின் பலம் அதன் பளிச்சிடும் நகைச்சுவை. அது அசலானது. பலநேரங்களில் வாசிப்பவனை வாய்விட்டுச் சிரிக்க வைக்ககூடியது. அடிநிலை மக்களின் வாழ்விலிருந்து எழும் அந்த பகடியை கோமு சிறப்பாக கையாளத் தெரிந்தவர். அவரது கதாபாத்திரங்கள் வாழ்வின் உன்னதங்களை விடவும் அன்றாடச் சிரமங்களையும், அதிலிருந்து உருவாகும் அபத்த நிலைகளையும் முன்வைப்பவர்கள். இக்கதையிலும் நல்லதம்பி என்ற மையக்குரல் வழியாக இடைவெட்டி செல்லும் அபத்தமும் வலியை மறைத்துக் கொண்ட பகடியும் அழகாக வெளிப்பட்டுள்ளது.

சுதேசமித்ரன் இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். தொடர்ந்து இணையத்திலும் சிற்றிதழ்களிலும் எழுதி வரும் தீவிர படைப்பாளி. அவரது சிறுகதையின் துவக்கமே கதையின் மையதொனியை அழகாக வெளிப்படுத்துகிறது. பழனியை ஒரு மாபெரும் சவரக்கத்தி போல அவர் உருவகப்படுத்துவதும் அதன் ஊடாக வெளிப்படுத்தும் அங்கதமும் இந்த கதையின் தனிச்சிறப்பு. கதை இயங்கும் தளத்தை விவரிக்கும் கேலியும், பழனி ஒரு வணிக மையமாகிப்போன அபத்த சூழலும் கதையில் நுட்பமாக பதிவு செய்யபட்டுள்ளது.

ஷாராஜ் வடக்கன் தரையில் அம்மாவின் பரம்பரை வீடு என்ற சிறுகதைதொகுப்பை வெளியிட்டிருக்கிறார். வெல்க்கம் ட்டு வேலந்தாவளம் என்ற சிறுகதை கேரள தமிழக பார்டரில் உள்ள கள்குடிக்கு பெயர்போன வேலாந்தாவளம் என்ற இடத்தை பற்றியதாக விவரணை கொள்கிறது. கதை குடி சூழலையும். குடிக்க வரும் மனிதர்களின் விசித்திர மனப்போக்குகளையும் விவரிக்கிறது. இக்கதையின் ஆதார குரலும் பகடியே. ஒரு விவரணப்படம்போல கள்குடியின் சூழலை விவரிக்கும் இக்கதை படிப்பவரை சூழலின் உள்ளாக சுழலவிடுகிறது. ஷாராஜ் கதை சொல்லியின் குரல்வழியாக வெளிப்படுத்தும் கள்குடித்த மனிதர்களின் சுயவெளிப்பாடு குறிப்பிடத்தக்கது

கே. என்,. செந்திலின் கதைகளை புனைகளம் உயிர்எழுத்து இரண்டிலும் வாசித்திருக்கிறேன். உயிர்வதை என்ற இந்த சிறுகதை அடர்த்தியான மொழியில் காதலில் தோற்றுப்போன மனநிலையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. பதின்வயதிலிருந்துபெண்கள் மீதான ஈர்ப்பில் அவர்களின் காதலுக்காக ஏங்கி அது மறுக்கபட்டு சுயஅழிவாக உருமாறும் நிலையை கதை விவரிக்கிறது. தனிமையும் புறக்கணிப்புமே கதையின் மைய உணர்ச்சிகள். அதை செந்தில் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்

ஹரன்பிரசன்னா இணையத்தில் தொடர்ந்து எழுதிவருபவர். கவிஞர். இவரது வெளிச்சம் சிறுகதை பாவா என்ற மனிதரின் மரணத்தையும் அதை தொடர்ந்து குடும்பத்தினரின் அபத்தமான மனநிலையையும் விவரிக்கிறது. சீட்டுவிளையாட்டு, ஒருவரையொருவர் குத்திகாட்டுதல் என்று இரண்டு தளங்களின் ஊடே உரையாடல்களின் வழியே கதை நீள்கிறது. இயல்பான உரையாடல்கள், சூழல் மறந்து செயல்படும் குடும்ப மனிதர்கள் என்று ஹரன்பிரசன்னா இயல்பாக எழுதியிருக்கிறார். கதையின் சிறப்பு அதன் உள்ளார்ந்த அங்கதமே.

எஸ். செந்தில்குமார் போடிநாயக்கனூரை சேர்ந்தவர்.இரண்டு சிறுகதைத்தொகுதிகள் வெளியாகி உள்ளன. ஜி. சௌந்திரராஜன் கதை என்ற நாவலை எழுதியிருக்கிறார். பத்தாண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் தேர்ந்த கதைசொல்லி. இவரது பெரும்பான்மை கதைகள் அன்றாட வாழ்வின் ஊடாக வெளிப்படும் விந்தை மற்றும் விசித்திர சம்பவங்களை விவரிக்க கூடியது. காமம், புறக்கணிப்பு, வீழ்ச்சி போன்றவை உருவகங்களாக இவரது கதைகள்தொடர்ந்து இடம்பெறுகின்றன. 

அறியப்பட்ட ஒன்றின் அறியப்படாத பகுதிகளை நோக்கியும், எளிய சம்பவங்களின் வழியே விந்தையை உருவாக்கி காட்ட விழைவதுமே இவரது சிறுகதைகளின் சிறப்பம்சம். அது ஜெயக்கொடி என்ற இக்கதையிலும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. கற்பனையான நாவல் ஒன்றினை மையப்படுத்திய இக்கதை நிஜம் கற்பனை இரண்டின் ஊடுகலப்பு எப்படி நடக்கிறது என்பதை விவரிக்கிறது.

பாலைநிலவன் இளம்கவிஞர்களின் முக்கியமானவர். பறவையிடம் இருக்கிறது வீடு என்ற கவிதைதொகுப்பு முக்கியமானது. ரோஸ்நிறம் என்ற சிறுகதை விடுதி ஒன்றிற்கு பாலுறவு கொள்வதற்காக ஒரு பெண்ணை அழைத்து செல்லும் ஆணின் கோணத்திலிருந்து விவரிக்கபடுகிறது. அந்த பெண் விரும்பி அவனுடன் படுத்துக் கொள்ள முன்வருகிறாள். இருவருமாக ஒரு விடுதியில் தங்குகிறார்கள்.

பெண்ணின் உடைகளை களைந்த போது அவள் அடிவயிற்றில் பிரசவத்தின் போது கீறிய தழும்புகள் இருப்பதை காண்கிறான். அந்த குற்றவுணர்ச்சி அவன் பாலுந்துதலை தடை செய்கிறது. கதை ஒரே புள்ளியின் ஆழத்தினை நோக்கி செல்கிறது. மௌனமும் பாலுறவின் மீதான பதட்டமும் கொண்ட கதை சொல்லும் முறையில் அடங்கிய குரலில், பாதி சொல்லியும் சொல்லாமலும் விட்டுவிவரிப்பதால் சிறப்பாக வந்திருக்கிறது

லட்சுமி சரவணக்குமார் கவிதை, சிறுகதை இரண்டிலும் இயங்கிவருபவர். இவரது மரணத்திற்கான காத்திருப்பில் என்ற சிறுகதை சாவு குறித்த ஆழ்ந்த தவிப்பையும் மனஅவஸ்தைகளையும் வெளிப்படுத்துகிறது. சூழலை நுட்பமாக விவரிக்கிறார். கதையின் வடிவம் துண்டிக்கபட்டு முன்பின்னாக சிதறுகிறது. கவித்துவ எழுச்சி கொண்ட வரிகளும், தீவிர மனநெருக்கடியின் மீது நகரும் நிகழ்வுகளும் இக்கதையின் முக்கிய அம்சம்.

சிவக்குமார்முத்தையா தீராநதி, புதிய பார்வை இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். செறவிகளின் வருகை என்ற இவரது கதை இந்த தொகுப்பில் உள்ள கதைகளின் தொனியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மிக அற்புதமாக எழுதப்பட்ட சிறுகதையிது. நெல் முற்றிய வயலில் வந்திறங்கி நெல்மணியை தின்று போகும் செறவி எனும்பறவைகளின் வருகையை பற்றி விரியும் இக்கதை இயற்கையின் விசித்திரத்தையும் அதை மனிதர்கள் எதிர்கொள்ளும் போராட்டத்தையும் விவரிக்கிறது. இது போன்ற சம்பவம் ஒன்றை நானே நேரில் கண்டிருக்கிறேன். பறவைகளின் கூட்டம் மொத்தமாக வயலை அழிப்பதும் அதை தாளமுடியாமல் மனிதர்கள் உக்கிரம் கொள்வதும் சிறப்பாக கதையாக்கபட்டிருக்கிறது.

விஜயமகேந்திரன் கணையாழி அம்ருதா இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நகரத்திற்கு வெளியே என்ற இவரது சிறுகதை ப்ரியா என்ற இளம்பெண்ணின் அகதவிப்பை விவரிக்கிறது. வெகுஜன வார இதழ்களில் வெளியாகும் கதைகள் போன்றதே இக்கதையும். மிதமிஞ்சிய ஆங்கில சொற்கள், மேலோட்டமான கதை சொல்லும் முறை, வலிந்த உரையாடல்கள் இவை ஒன்று சேர்ந்து கதையை தீவிரம் கொள்ளவிடாமல் தட்டையாக்கி விடுகின்றன. 

புகழ் கதா விருது பெற்ற சிறுகதையாசிரியர். விவசாய நிலம் ஒன்றை பள்ளிகட்டிடம் கட்ட தர முன்வந்த காலவாயன் என்ற விவசாயி மனநிலையை கதை விவரிக்கிறது. கவனிப்பார் அற்று போன கிராமிய சூழலும் அதன் மீதான கோபமுமே கதையின் மையமாகிறது. குறைவான உரையாடல்கள். மனநிலையை நுட்பமாக விவரிக்கும் விவரணைகள் இதன் தனிச்சிறப்பு.

என். ஸ்ரீராம் கொங்குவட்டார மக்களின் வாழ்க்கையை சிறுகதையாக எழுதி வருபவர். வெளிவாங்கும்காலம், மாட வீடுகளின் தனிமை என்ற சிறுகதைகள் தொகுதி வெளியாகி உள்ளது. குதிரை வண்டிக்காரனும் ஒன்பது குழந்தைகளும் என்ற சிறுகதை இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்ட அன்று ஒரு சிறுநகரில் ஏற்பட்ட நெருக்கடிகளை விவரிக்கிறது.

இந்திரா காந்தியின் மரணத்தை தொடர்ந்து பேருந்துகள் ஒடாமல் நிறுத்தபடுகின்றன. கடை அடைக்கபட்டு நகரம் வெறிச்சோட துவங்கிய நேரத்தில் கிராமத்திலிருந்து படிக்க வந்த பள்ளி பிள்ளைகள் வீடு திரும்ப வழியில்லாமல் அல்லாடுகிறார்கள். ஒரு குதிரைவண்டிக்காரன் அவர்களை பாதுகாப்பாக தன் வண்டியில் அழைத்து போகிறான். கிராமத்தில் பிள்ளைகளை விட்டுவிட்டு இரவில் அவன் தனித்து திரும்புகிறான். இரவில் பாதுகாப்பாக குதிரைவண்டிகாரனை அங்கேயே தங்க சொல்லாமல் ஏன் மறந்து போனோம் என்று ஒரு பெண் வருத்தபடுகிறாள். யதார்த்தமான கதை விவரணûயும், பள்ளிசிறார்களின் பதட்டமும் நன்றாக எழுதப்பட்டுள்ளது.

இந்த தொகுப்பின் பெரும்பான்மை கதைகள் அடித்தட்டு மக்களின் அன்றாட உலகை விவரிக்கின்றன. பகடி, புறக்கணிப்பு, சுயம்சிதறிப்போவது இவை தான் பெரும்பான்மை கதைகளின் மையகுரல். ஒரு தொகுப்பாக இன்றுள்ள சிறுகதைகளின் போக்குகளை அறிந்து கொள்வதற்கு இருள்விலகும் கதைகள் முன்மாதிரியாக உள்ளது. அவ்வகையில் இதை தொகுத்த விஜயமகேந்திரன் பாராட்டிற்குரியவர்.

***

0Shares
0