இருவர்

The Zoo Story என்ற எட்வர்ட் ஆல்பியின் நாடகத்தை முப்பது வருஷங்களுக்கு முன்பு மதுரையில் பார்த்தேன். யதார்த்தா பென்னேஸ்வரன் உருவாக்கம் என்று நினைவு. பின்பு இந்த நாடகத்தின் ஆங்கில வடிவத்தைப் பெங்களூரில் ஒருமுறை பார்த்திருக்கிறேன். மறக்க முடியாத நாடகமது.

இன்றுள்ள நாடகக்குழுவினர் யாரும் ஏன் இந்த நாடகத்தை மறுபடியும் நிகழ்த்தவேயில்லை என்று தெரியவில்லை. ஆனால் இரண்டே கதாபாத்திரங்கள் கொண்ட அழுத்தமான நாடகமது.

நியூயார்க் நகரத்தின் பூங்காவில் பீட்டர் , ஜெர்ரி எனும் இருவர் சந்தித்துக் கொள்கிறார்கள். ,பீட்டர் வசதியானவர். பதிப்பகம் ஒன்றில் நிர்வாகியாக வேலை செய்கிறவர்.. நாற்பது வயதானவர். ஒரு ஞாயிறு மதியம் பூங்காவில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார். ஜெர்ரி இதற்கு நேர் உலகைச் சேர்ந்தவன். முப்பது வயது மிக்கவன்.தனிமையால் பீடிக்கப்பட்டவன்.

ஜுவிலிருந்து திரும்பி வரும் ஜெர்ரி முன் அறிமுகமற்ற பீட்டருடன் உரையாடத்துவங்குகிறான்.அவரது வாழ்க்கையை விமர்சனம் செய்கிறான். தன் கதையைக் கேட்கும்படி கட்டாயப்படுத்துகிறான். விருப்பமற்ற போதும் பீட்டர் அவனது வாழ்க்கை கதையைக் கேட்கத்துவங்குகிறான். ஒரு கட்டத்தில் இந்த உரையாடல் எரிச்சலாக உருமாறுகிறது,. பீட்டரை அந்தப் பெஞ்சில் இருந்து விரட்ட முயல்கிறான் ஜெர்ரி. அந்த முயற்சியில் தன்னிடமிருந்த கத்தியை எடுத்து பீட்டரை மிரட்டுகிறான். ஜெர்ரியோடு சண்டையிட மறுக்கிறான் பீட்டர். முடிவு என்னவாகிறது என்பதே நாடகம்.

ஜுவிற்குப் போய்வந்த ஜெர்ரியின் நினைவே நாடகத்தின் முக்கியப் படிமம். அந்த அனுபவத்தை ஜெர்ரி பகிர்ந்து கொள்வதில்லை. மாறாக நாய் ஒன்றைப் பற்றிய நினைவைப் பகிர்ந்து கொள்கிறான். அது ஒரு ஞாயிறு மதியம் என்பது முக்கியமானது. தனிமையில் பீடிக்கபட்ட எவரும் ஜெர்ரி போலவே தான் நடந்து கொள்வார்கள்.

பொதுவான உரையாடல்கள் மட்டுமே பொதுவெளியில் அனுமதிக்கபடுகின்றன. ஜெர்ரி அதை மீறுகிறான். அவன் சொந்த வாழ்க்கையை திறந்து காட்டுவதுடன் பிறர் வாழ்க்கையிலும் எளிதாகப் பிரவேசிக்கிறான். கேள்வி கேட்கிறான். கச்சிதமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் பீட்டர் இதனால் அவதிப்படுகிறான். அத்துமீறல் என்று நினைக்கிறான்.

தனிமனித வாழ்க்கை. மிருககாட்சிசாலை. வளர்ப்புப் பிராணிகள். அன்பு செலுத்தும் முறை என்று நாடகம் இரண்டு மனிதர்களின் உரையாடல் வழியே வாழ்க்கையின் நெருக்கடிகளை, அபத்த நிலைகளைக் கேள்விக்கு உட்படுத்துகிறது.

எட்வர்ட் ஆல்பி அமெரிக்காவின் புகழ்பெற்ற நாடக இயக்குநர். இவரது புகழ்பெற்ற நாடகம் Who’s Afraid of Virginia Woolf?, 1952ல் வெளியான இந்நாடகம் பின்பு திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டது.

0Shares
0