இலக்கிய வேதாளம்


எழுதத் துவங்கிய நாள் முதல் இன்று வரை நூற்றுக்கணக்கான இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். நானே நிறையக் கூட்டங்களையும் நடத்தியிருக்கிறேன்.

வெற்றிகரமாக ஒரு இலக்கியக் கூட்டத்தை நடத்த முடிந்த ஒருவரால் வாழ்வில் எதையும் சாதித்துவிட முடியும் என்றே தோன்றுகிறது. காரணம் அந்த அளவு இலக்கியக் கூட்டம் நடத்துவது சள்ளையான பிரச்சனைகளும் மனவெறுமையும் ஏற்படுத்திவிடக்கூடியது.

சில வருடங்களின் முன்பாக திண்டுக்கல்லில் உள்ள தன்னார்வ அமைப்பு லத்தீன் அமெரிக்க இலக்கியம் குறித்து பேசுவதற்காக ஒரு முறை என்னை அழைத்திருந்தார்கள்.ஒரு வார காலம் மார்க்வெஸ், போர்ஹே. கார்பெந்தர்,ப்யூக், ஆக்டோவியா பாஸ் என்று தேடித்தேடி படித்து பதினாலு பக்கத்திற்கு ஒரு கட்டுரையும் எழுதி தயார் செய்து கொண்டேன். ஞாயிற்றுகிழமையில் பாலர்பள்ளியொன்றில் கூட்டம் நடத்தப்படுவதாகத் தபால் வந்திருந்தது.

பேருந்தில் பயணம் செய்து திண்டுகல்லில் இறங்கி தேநீர் குடித்து அந்தப் பள்ளியைத் தேடியபோது அப்படியொரு பள்ளியை எவரும் அறிந்திருக்கவில்லை. ஆங்காங்கே விசாரித்து அலைந்த போது புறநகர் ஒன்றில் அது போல ஒரு பள்ளி இருப்பதாகத் தகவல் கிடைத்தது.

இலக்கியக் கூட்டத்திற்குத் தாமதமாகப் போகிறோமே என்ற குற்றவுணர்வோடு அவசர அவசரமாக டவுன்பஸ் பிடித்து புறநகரில் போய் இறங்கிக் கூட்டம் நடக்கும் பள்ளிக்குப் போன போது இரும்புக் கதவு திறந்து கிடந்தது. தன்னார்வ அமைப்பு ஒன்றில் பெயரில் ஊதா நிற பேனர் தெரிந்தது.

கூட்டம் ஆரம்பமாகயிருக்கும் என்ற நினைப்பில் கட்டுரையை கையில் பிரித்து வைத்தபடியே வேகவேகமாக உள்ளே சென்றேன். ஆனால் வகுப்பறையில் யாருமேயில்லை. அதே ஊதா நிற பேனர் தனியே தொங்கிக் கொண்டிருந்தது. கூட்டம் ஒருவேளை ரத்தாகிவிட்டதா என்ற சந்தேகத்துடன் காலியான இருக்கைகளைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தேன்.

காலை பத்தரை மணிக்கு ஆரம்பமாக வேண்டிய கூட்டம் அப்போது மணி பனிரெண்டாகியிருந்தது. ஆனால் இன்னும் துவங்கவேயில்லை. காலி பெஞ்சுகள் என்னை ஏளனம் செய்யத் துவங்கின. ஒரு ஆள் கூடவா வரவில்லை என்றபடியே அங்குமிங்கும் தேடினேன்.

பள்ளியின் வாட்ச்மேனோடு இலக்கிய கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த நண்பர் வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார். அவர் என்னைப் பார்த்து சிரித்தபடியே இப்பதான் வந்தீர்களா என்று கேட்டபடியே ஞாயிற்றுகிழமையில்லையா ஆட்கள் வருவதற்கு கொஞ்சம் தாமதமாகும் ஆனால் வந்துருவாங்க என்று நம்பிக்கையோடு சிரித்தபடியே வகுப்பறைக்கு அழைத்துப் போனார்.

சுவரை வெறித்து பார்த்தபடியே உட்கார்ந்திருந்தேன். அவர் சங்க கணக்குவழக்குகளை சரிபார்த்து கொண்டிருந்தார். மதியம் இரண்டரை மணி வரை காத்திருந்த போதும் ஒரு ஆள் கூட வரவேயில்லை. அப்படித்தான் நடக்கும் என்று முன்கூட்டியே அறிந்தவர் போல கூட்டம் நடத்துபவர் யாரும் வரலை என்று சிரித்தபடியே சொன்னார். எனக்கு ஆத்திரமாக வந்தது.

அவர் தன்னிடமிருந்த எண்பது பக்க கட்டுரை நோட்டு ஒன்றை என்னிடம் கொடுத்தபடியே ஜனங்களை நாம போயி கையைப் பிடிச்சி இழுத்தா கூட்டிகிட்டு வரமுடியும் சொல்லுங்க என்றபடியே நோட்டில் என் முகவரியும் கையெழுத்தும் போடச் சொன்னார். கூட்டம் நடந்து முடிந்ததற்கான சாட்சி அது என்று பிறகு தான் தெரிந்தது.

கையொப்பமிட்டபடியே நான் அந்த நோட்டின் முந்திய பக்கங்களைப் புரட்டினேன். இதுவரை பதினாறு கூட்டங்கள் நடத்தியிருக்கிறார். அதில் ஒரு கூட்டத்திற்கு ஒன்பது பேர் வந்திருக்கிறார்கள். அது தான் அதிகபட்சமான நபர்கள் கலந்து கொண்ட கூட்டம்.

விடுமுறை நாளில் பள்ளியில் நடத்தப்படும் இலக்கியக் கூட்டங்களுக்கு என்றே தனிமரபு இருக்கிறது போலும். ஆட்கள் வந்தால் தான் ஆச்சரியம் அடைவார்கள் என்று நினைத்துக் கொண்டு பசியோடு நின்று கொண்டிருந்தேன்.

வாசிக்கபடாத என் கட்டுரையை என்ன செய்வது என்று வேறு தெரியவில்லை. இதற்கு தானா இத்தனை பில்டப் செய்தாய் என்று மார்க்வெஸ், போர்ஹே போன்றவர்கள் என்னைப் பரிகாசம் செய்வது போலவே இருந்தது.

குறைந்த பட்சம் அமைப்பாளராவது என் கட்டுரையை வாசிக்கச் சொல்லிக் கேட்பார் என்ற இறுதி நம்பிக்கை எனக்கிருந்தது. அவரோ வகுப்பறையைப் பூட்டி சாவியை வாட்ச்மேனிடம் கொடுத்துவிட்டு தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்படத் தயரானார்.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் வேதாளத்தை முருங்கை மரத்திலிருந்து இறக்கி தன் தோளில் சுமந்து செல்லத் துவங்கினான் என்று அம்புலிமாமா கதைகளில் படித்த வாசகம் அவரைப் பார்த்த போது நிஜம் என்று தெரிந்தது.

பசி ஒருபக்கம் மறுபக்கம் கையில் ஊருக்குத் திரும்பிப் போக மட்டுமே காசிருந்தது எப்படி பணம் கேட்பது என்றும் தெரியவில்லை. அந்த நபர் தன் இலக்கியப் பணி முடிந்து விட்டதான சந்தோஷத்தில் சைக்கிளில் புறப்பட்டு போனார்.

அந்த இலக்கிய கூட்டங்களின் பதிவு நோட்டை அவர் என்ன செய்வார் என்று யோசிக்க துவங்கினேன். என்மீதே எனக்கு ஆத்திரமாக வந்தது. யாராவது ரோட்டில் போகின்ற ஒருவரைப் பிடித்துநிறுத்தி மார்க்வெஸ் பற்றி பேசினால் என்ன என்று கூடத் தோணியது. பிறகு லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களை கண்டபடி திட்டியபடியே சாலையில் நடந்து போகத் துவங்கினேன்.

மனது கொதித்துக் கொண்டேயிருந்தது. ரோட்டில் ஒட்டப்படும் சினிமாப் போஸ்டரை கூட பத்து பேர் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். ஆனால் நவீன இலக்கியம் பற்றி பகிர்ந்து கொள்ள ஆள் இல்லையா ?

நல்லவேளையாக எனது உறவினரின் கடை திண்டுக்கல்லில் இருந்தது. அவரைச் சந்தித்து சும்மா ஒரு வேலையாக வந்ததாக பொய் சொல்லி அவர் செலவில் சாப்பிட்டுவிட்டு பஸ்ஏறினேன். வீட்டுக்கு வந்து பத்து நாட்களுக்குப் புத்தகத்தை திறந்தாலே கோபம் பொங்கியது. பிறகு சில நாட்களில் அடுத்த கூட்டம் எங்கே நடக்கிறது என்று தேட துவங்கினேன்.

காரணம் இலக்கிய கூட்டங்கள் பழகிவிட்டன. பல ஊர்களில் கூட்டம் நடத்த வேண்டிய ஆளை நான் வீடு தேடிப் போய் கூட்டி வந்திருக்கிறேன். தேநீர் வாங்கித் தந்திருக்கிறேன். அதில் ஒருவர் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்க தேர்வாகி படப்பிடிப்பில் இருந்தார். அவரை வெளியே அழைத்துவிட்ட எரிச்சலில் எனக்காக ஏற்பாடு செய்யபட்ட இலக்கிய கூட்டத்தினை அங்கேயே ரத்து செய்தது தனி விஷயம்.

ஆனால் சில இலக்கிய சந்திப்புகள் மனதில் அழியாத நினைவுகளாகப் படிந்து விடுகின்றன.

திருவரங்கம் என்ற ஊர் விழுப்புரம் அருகில் உள்ளது. கோவிலையொட்டியே ஆறு ஒடுகிறது. அந்த ஆற்றின் நடுவில் உள்ள பெரிய மணல்திட்டில் பௌர்ணமி நாள் ஒன்றின் இரவில் மிகச்சிறிய இலக்கியக் கூட்டம் நடந்தது. எனது நாவலான உப பாண்டவம் பற்றி பேசுவதற்காக நண்பர்கள் காலபைரவன், அசதா, கண்டராதித்தன் மற்றும் அவரது நண்பர்கள் என ஒன்று கூடியிருந்தோம்.

ஆற்றின் தண்ணீரினுள் இறங்கி மணல் திட்டிற்கு போய் சேர்ந்த போது வானில் நிலா எழுந்திருந்தது. சீராக ஒடிக் கொண்டிருந்த தண்ணீரில் நிலா வெளிச்சம் ஊர்ந்து போய்க் கொண்டிருந்தது. பேச்சு நாவல் கவிதை எனத் துவங்கி உலக இலக்கியம் வரை நீண்டு போய்க் கொண்டேயிருந்தது. அவரவர் இயல்புக்கு ஏற்ப ஆற்றின் மணல் திட்டில் படுத்துக் கொண்டபடியே பேசிக் கொண்டிருந்தோம்.

நிலா வெளிச்சம் நீக்கமற்று நிலவெளியெங்கும் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. திடீரென நாங்கள் மட்டுமே இந்த இரவில் தனித்திருப்பது போன்ற அபூர்வமான தன்மை உருவானது. யாரும் யாருடனும் பேசிக் கொள்ளாத நிமிசம் கூடியது.

யாவரும் ஆற்றில் ஒடும் தண்ணீரின் சப்தத்தை கேட்டபடியே படுத்துக்கிடந்தோம். பிறகு ஒவ்வொருவராக ஆற்றில் இறங்கிக் குளித்தோம். குளிரும் ஈரமும் உடலைப் புத்துணர்வு கொள்ளச் செய்தது. தலை துவட்டக் கூட சோம்பல் பட்டபடியே சாப்பிடுவதற்காக கொண்டுவந்திருந்த ரொட்டித் துண்டுகளையும் காரசேவையும் சாப்பிட்டோம்.

விடிகாலையின் நிலவு சொல்லில் அடங்காதது. திருவரங்கம் கோவில் தொலைவில் காலத்தின் அழியாத சாட்சியாக நின்றிருந்தது. நவீன தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள் பற்றிய உரையாடல் திரும்பத் துவங்கியது. நிலா வெளிச்சத்தின் ஊடே மாபெரும் நிலப்பரப்பு ஒன்றினுள் சிலர் மட்டும் தீவிரமாகப் பேசி விவாதித்து கொண்டிருந்த அந்த நிமிசம் நெருக்கமானதாகவும் உண்மையான அக்கறை கொண்டதாகவும் இருந்தது.

விடிகாலை வரை அங்கேயே பேசிக் கொண்டிருந்தோம். நான் கடந்து வந்த எத்தனையோ பௌர்ணமி இரவுகளில் இது போன்ற குளிர்ச்சியும் நெருக்கமும் கொண்ட இந்த இரவும் என்றும் மறக்க முடியாதது. விடிகாலையின் மென்னொளி வானில் பரவத் துவங்கிய போது பறவைகளின் சப்தம் கேட்டது. ஆற்றின் வேகம் திடீரென அதிகமானது. தொலைவில் ஆற்றில் குளிக்க வரும் முதல் மனிதன் தென்படத் துவங்கினான்.

தூக்கம் அப்பிய முகத்தோடு பைக்கில் புறப்பட்டு கிராமத்திலிருந்த அசதாவின் வீட்டின் முன்புள்ள வேம்படியில் கயிற்றுகட்டிலை போட்டு கொண்டு பகல் முழுவதும் தூங்கினோம். மாலையில் அவர்களிடமிருந்து விடைபெறும் போது எவ்வளவு இனிமையான சந்திப்பு என்று திரும்ப திரும்ப பேசிக் கொண்டேயிருக்கும் படியாக அமைந்தது.

சில நேரங்களில் சந்தோஷமாகவுல்ம் பல நேரங்களில் கோபமாகவும் உள்ள இலக்கிய கூட்டங்களின் நிலைமை தலைமுறை தலைமுறையாக இப்படியே தானிருக்கிறது. ஒரு வேளை இப்படி இருப்பது தான் ஆரோக்கியமோ என்னவோ?

லட்சக்கணக்கில் பணம் செலவழித்து சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் இலக்கிய பிம்பங்களின் விழாக்களை விட இந்தக் கூட்டங்கள் உண்மையானவை. சிறிய ஊர்களில் ஒன்றிரண்டு பேரை வைத்து நடத்தபடுகின்ற முயற்சிகள் எவ்வித சுயலாபமும் அற்றவை. அடையாளம் கண்டு உத்வேகபடுத்தபட வேண்டியவை.

திருவண்ணாமலையில் பவாசெல்லத்துரையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல இலக்கிய நிகழ்வுகள் தமிழ் சூழலில் மிக முக்கியமானவை. அதுபோலவே கவிஞர் கலாப்ரியா குற்றாலத்தில் ஆண்டு தோறும் நடத்தி வரும் கவிதைப்பட்டறையும் புதிய இலக்கிய போக்கினை உருவாக்கப் பெரிதும் காரணமாக இருந்து வருகிறது.

ஒவ்வொரு இலக்கியக் கூட்டமும் வேதாளத்தைச் சுமந்தபடியே செல்லும் விக்ரமாதித்யன் கதை தான். இன்றும் இலக்கியக் கூட்டங்களுக்கு போவது என்றால் மனது உற்சாகம் கொள்ளத் தான் செய்கிறது.

என்ன செய்ய வேதாளம் என்னையும் மயக்கி வைத்திருக்கிறதே ?


 


 

0Shares
0