– குறுங்கதை
சுப்பையாவிற்கு திருமணமாகிய நாட்களில் தான் இந்த பழக்கம் உருவானது. அப்போது சாலைத் தெருவில் குடியிருந்தார். ரெட்டை யானை முகப்பு போட்ட வீடு. வீட்டில் அவர்களையும் சேர்த்து இருபத்தியொரு பேர் இருந்தார்கள். இரண்டு அண்ணன், அண்ணி, ஆச்சி, சித்தி சித்தப்பா என்று யாவரும் ஒன்றாக வாழ்ந்தார்கள். அதற்கிருந்த ஒரே காரணம் அவர்களது கோவில்கடைகள்.
கோவிலின் மண்டபத்தில் அவர்களுக்கு மூன்று கடைகளிருந்தன. ஒன்று படக்கடை , காலண்டர். சுவாமி படங்கள், குங்குமம் விபூதி விற்பது. இன்னொன்று வளையல் கடை மூன்றாவது இருந்த கடை கல்கண்டுபால் விற்பது. இதை மூன்றையும் நிர்வாகம் செய்வதற்காக ஆட்கள் தேவைப்பட்டார்கள். அதற்காகவே அவர்கள் ஒன்றாக இருந்தார்கள்.
சுப்பையாவுக்கு தாழையூத்தில் பெண் எடுத்தார்கள். கல்யாணம் ஆனது என்ற பெயர் தானே தவிர அவர்களால் பெண்டாட்டியோடு தனித்திருந்து பேச நேரம் கிடைப்பதேயில்லை. ஒரு வேளை பேசிக் கொண்டாலும் அடுத்தவர் காதிற்கு கேட்காமல் பேசுவது சாத்தியமேயில்லை.
சாப்பாடு பரிமாறும் போது வேணாம் போதும் என்று சொல்வது தான் அவர் உபயோகித்த அதிகமான வார்த்தைகள். சுப்பையா தான் படக்கடையை கவனித்து வந்தார். உண்மையில் அதில் கவனிப்பதற்கு என்று தனியே எதுவுமில்லை. சாமிக்கு பயந்தவர்கள் இருக்கும் வரை உறுதியான வியாபாரம். பொம்பளைகள் இருக்கும் வரை குங்குமம் மஞ்சள் விற்பனை. பிறகு என்ன?
கடையை திறந்து வைத்தவுடன் அவர் தினமணியை பிரித்து வைத்து படிக்க ஆரம்பித்தால் சாப்பிட வீடு வரும்போது தான் முடிப்பார். அப்படி ஒரு நாள் வீடு நோக்கி வந்து கொண்டிருக்கும் போது பாலத்தின் அருகில் தான் அந்த யோசனை உண்டானது.
இந்த சள்ளையை எத்தனை நாள் கொண்டு கழிக்கிறது. பேசாம நாமளா ஒரு பாஷையை உண்டாக்கினா என்ன? யோசித்தவுடன் பளிச்சென்றிருந்தது. வீடு வரும்வரை அந்த பாஷையை பற்றியே நினைத்து கொண்டிருந்தார். அன்றிரவு மனைவியிடம் அந்த யோசனைய சொன்னார். அவள் உங்க இஷ்டம் நாலும் யோசிச்சி செய்யுங்க என்றாள். இது வழக்கமாக அவர் எதை பற்றி கேட்கும் போது அவள் சொல்வது தான் என்பதால் மறுநாள் கடைக்கு போகும்வழியில் கவனமாக சைக்கிளை லாலாகடை அருகில் நிறுத்தி செந்தில்விலாசில் எண்பது பக்க நோட்டு ஒன்றை வாங்கி கொண்டார்.
கடையில் போய் உட்கார்ந்தவுடன் கர்மசிரத்தையாக தான் உருவாக்க போகின்ற மொழியை பற்றி யோசிக்க துவங்கினார். முதலில் அதற்கு என்ன பேர் வைப்பது என்று யோசனை எழுந்தது. சாமி பெயரிலே இருக்கட்டும் என்று நெல்பா என்று அந்த பாஷைக்கு பெயரிட்டார்.
அதற்கு எழுத்து வடிவம் வேண்டுமே என்று முடிவு செய்து அவராக அ ஆவன்னா போல எழுத்தை உருவாக்கினார். அது போலவே அதற்கு என்று ஒலி குறிப்பு வேண்டும் என்று உச்சரிப்பும் உருவாக்கினார். கடையில் இருந்த நேரங்களில் எல்லாம் ஒவ்வொரு பொருளுக்கும் அவர் நெல்பாவில் எப்படி வரும் என்று நோட்டில் எழுத துவங்கினார். தினசரி அவர் கணக்கு நோட்டு போட்டு எழுதி வருவதை கண்ட மணியம்பிள்ளை சுப்பையாவின் தகப்பனாரிடம் உம்மபிள்ளை ரொம்ப கணக்காக வியாபாரம் பண்றான் என்று புகழ்ந்து தள்ளினார்.
ஒரு மாசத்திற்கு நோட்டு நிரம்பி போகும் அளவு வார்த்தைகள் அதிகமாகின. அந்த நோட்டை பர்வதத்திடம் தந்து மனப்பாடம் செய்துவிடும்படியாக சொன்னார். அவளுக்கு இந்த மனுசன் வேற கோட்டி புடிச்சி அலையுறானே என்று எரிச்சலாக வந்தது. ஆனாலும் வழியில்லாமல் அந்த பாஷையை பழகிவிட்டாள்.
அதை சோதித்து பார்ப்பதற்காக சாப்பாடும் போடும்போது நெல்பா பாஷையில் அவர் கேட்பார். அவளும் நெல்பாவில் பேசுவாள். இரவில் படுக்கையில் கொஞ்சுவது கூட நெல்பாவிற்கு மாறிப்போனது. அதன்பிறகு அவர் பெரிய நோட்டாக வாங்கி நெல்பாவிற்கான சொற்களை சேகரிக்க துவங்கினார். ஒரு வருசத்திற்குள் அந்த பாஷை அவர்கள் ரெண்டு பேருக்கும் அத்துபடியாகியது.
வீட்டில் உள்ளவர்கள் மீது ஆத்திரமானால் கூட வெளிப்படையாக நெல்பாவில் பர்வதம் திட்டுவாள். யாருக்கும் அவள் என்ன சொல்கிறாள் என்று புரியாது. சுப்பையா மிகுந்த சந்தோஷமானார். உலகில் தங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த மொழி இருக்கிறது என்பது பெரிய விஷயமில்லையா.
ஒரு நாள் கடை திறப்பதற்காக வந்த சுப்பையாவின் அப்பா கடையில் வைத்திருந்த நெல்பா நோட்டுகளை புரட்டி பார்த்துவிட்டு இந்த எழவை கூட்டுறதுக்காகவா கடைக்கு உன்னை வச்சிருந்தேன் என்று கோவித்து கொண்டு எல்லா நோட்டுகளையும் கடையின் முன்னால் போட்டு எரித்ததோடு எல்லோரிடமும் சொல்லியும் காட்டினார். சுப்பையாவிற்கு ஆத்திரமாக வந்தது. ஆனால் கடையை நம்பி பிழைப்பதால் மனதிற்குள்ளாக நெல்பாவில் திட்டிக் கொண்டார்.
இது நடந்த இரண்டாம் வருசம் சுப்பைவின் அப்பா இறந்து போகவே கடை பாகம் பிரிக்கபட்டது. சண்டை போட்டு படக்கடையை தன்வசமாக்கி கொண்டு சாந்தி நகரில் வேறு வீடு பார்த்து குடிபோய்விட்டார் சுப்பையா.
வீடு மாறியதும் செய்த முதல்வேலை இனிமேல் வீட்டில் நெல்மாவில் தான் பேச வேண்டும் என்றார். அதன்பிறகு அவர் மட்டுமில்லாது அவரது பிள்ளைகள், பெண்கள் யாவரும் அதை கற்றுக் கொண்டார்கள். எப்போதாவது வீட்டில் சண்டை நடக்கும் போது அவர்கள் நெல்மாவில் கத்தி சண்டையிடுவார்கள். அருகாமை வீட்டில் ஒருவருக்கும் ஒன்றுமே புரியாது.
ஒரு முறை பங்குனி உத்திரத்திற்கு திருசெந்துர் போவதற்கு பர்வதம் கிளம்பிய போது சுப்பையா கடையில் வேலையிருப்பதாக போக கூடாது என்று தடுத்தவுடன் அவள் கோபத்தில் மடமடவென நெல்மாவில் கத்தினாள். ஆனால் அவள் பேசியதில் பாதி சொற்கள் என்ன வென்று அவர் அறிந்தேயிருக்கவில்லை அவளிடம் எப்படி போய் அர்த்தம் கேட்பது என்று யோசனையும் வலியுமாக கடைக்கு போனார். ஒரு உண்மை அவருக்கு புரிந்திருந்தது. அவள் தனக்காக மட்டும் அந்த மொழியில் சிறப்பு சொற்கள் நிறைய உருவாக்கி கொண்டுவிட்டாள் . இதை வளர விட்டால் தனக்கு தான் ஆபத்தாக முடியும் என்று நினைத்தார்.
அன்றிரவே வீட்டில் யாரும் இனிமேல் நெல்மாவில் பேசக்கூடாது என்று உத்தரவிட்டார். சில நாட்களுக்கு அவர்களுக்கு சங்கடமாக இருந்தது. ஆனால் சுப்பையாவின் கோபத்திற்கு பயந்து நெல்மாவை மறந்து போனார்கள். நல்லவேளை பிரச்சனை முடிந்தது என்று தன் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பியிருந்தார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மதியம் தலைவலி அதிகமாகி அவர் வீடு திரும்பிய நேரம் பர்வதமும் அவரது மகனும் ஏதோவொரு பாஷையில் பேசிக் கொண்டிருந்தார்கள். என்ன பேசுகிறார்கள் என்று ஒருவரியும் புரியவில்லை, அவர்கள் சரளமாக பேசிக் கொண்டார்கள். சுப்பையா தன் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே குடிக்க தண்ணீர் கேட்டார். உள்ளே மகள் சிரிப்போடு அதே புரியாத பாஷையில் தன் அண்ணனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். சுப்பையாவிற்கு எரிச்சலாக வந்தது.
அந்த நிமிசம் அவர் தன் அப்பாவை நினைத்து கொண்டார். புத்தி கெட்டு போயி தெரிந்த பாஷையை என்ன எழவுக்கு மாத்தினோம் என்று அவர் மீதே அவருக்கு கோபம் கோபமாக வந்தது. ஆனால் அதை எந்த பாஷையில் சொல்வது என்று புரியாமல் திகைத்துபோயிருந்தார்.
**