இளம்வாசகி

எனது நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து என்ற சிறார் நூலுக்கு பதினோறு வயது சிறுமி ரியா எழுதியுள்ள விமர்சனம்.

உன் அன்பான வாசிப்பிற்கு நன்றி ரியா.

••

பெயர் : ரியா ரோஷன்

வகுப்பு : ஆறாம் வகுப்பு

வயது :11

இடம் :சென்னை

புத்தகம் :நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து

ஆசிரியர்:எஸ். ராமகிருஷ்ணன்

பதிப்பகம் :தேசாந்திரி

விலை : Rs.70

சனிக்கிழமை நான் புத்தக கண்காட்சிக்கு சென்றேன். நான் வாங்கிய புத்தகங்களில் ஒரு புத்தகத்தின் அட்டைப்படம்  என்னை மிகவும் கவர்ந்தது. அதுதான்  எஸ்.ரா அவர்களின் ‘நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து’.இந்த புத்தகத்தையே முதலாவதாக படித்து புத்தக விமர்சனம் எழுதலாம் என்று முடிவு செய்தேன்.இந்த புத்தகம் இப்போது தான் வெளிவந்து இருக்கிறது. சரி கதைக்கு உள்ள போகலாமா?

கதை :-

மேக்கரை என்ற ஊரில் இருக்கும் அரசு பள்ளியில் என்ன இலவச கல்வி மற்றும் இலவச உணவு இருந்தாலும்  மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பெற்றோர்கள் ஐந்து மாடிக்கட்டடம் உள்ள விக்டோரியா ஆங்கில பள்ளிக்கே பிள்ளைகளை அனுப்ப விரும்பினார்கள். இதை தெரிந்த அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் பழனியப்பன் வெவ்வேறு கிராமங்களுக்குப் போய் மாணவர்களை தங்கள் பள்ளியில் சேர்க்கும் படி கேட்டார். அதற்கு பெற்றோர்கள் முதலில் ஒரு பேருந்தை ஏற்பாடு செய்தால் தான் நாங்கள் எங்கள் பிள்ளைகளை அனுப்புவோம் என்று சொல்கின்றார்கள். பழனியப்பனும் ஒத்துக்கொண்டு இந்த அரசு பள்ளியில் படித்த சுந்தரம் ஐ.ஏ.எஸ் மற்றும் பிற பழைய மாணவர்களிடம்  உதவி கேட்கிறார். அவர்களின்  உதவி மூலம் ஒரு பஸ்ஸையும், டிரைவரையும் ஏற்பாடு செய்கிறார். இது தெரிந்த விக்டோரியா பள்ளியின் நிர்வாகி ராஜலக்ஷ்மி அரசு பள்ளிக்கு எதிராக பல சதிவேலைகள் செய்கிறார். அவர் முன்னாள் MLA வின் மனைவி. அதிகார   பலத்தோடு  அரசு பள்ளியை எதிர்க்கிறார்.இந்த அரசு பள்ளிக்கும் விக்டோரியா பள்ளிக்கும் நடக்கும் போட்டியே இந்த கதை.

இந்த கதையில் எனக்கு பிடித்த விஷயங்கள் :-

1. சேது என்ற மாணவனும் மற்ற மாணவர்களும் ஒரு கோப்பையை வென்று இருப்பார்கள். அதை சேது தன் தாயிடம் காண்பிக்க வேண்டுமென ஆசைப்படுவான். அவன் கோரிக்கையை ஏற்று தலைமை ஆசிரியர் பழனியப்பன்,பரிசு வென்றவர்களின் அம்மாக்களை பாராட்டு விழாவிற்கு  அழைப்பார்.  சேது தன் தாயிடம்  காண்பிக்கும் அன்பும் மரியாதையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

2. அரசு பள்ளியில் படித்து நிறைய பேர் பெரிய ஆள் ஆகி இருக்கிறார்கள். நாம் அரசு பள்ளியில் தமிழ் வழி கல்வியில்  படித்தால் சாதிக்க முடியாது என்று இல்லை. நாம்  எந்த பள்ளியில் படித்தாலும்  சாதிப்பது நம் கையில் தான்.

3. சேதுவின் தந்தை ஒரு முன்னாள் ராணுவ வீரர். அதனால் அவரையே இந்த பஸ்சுக்கு டிரைவர் ஆக போட்டுவிடலாம்,குழந்தைகளை பத்திரமாக கொண்டு போய்விடுவார் என்று தலைமையாசிரியர் பழனியப்பன் சொல்லுவார். இந்தக்கதையில் ராணுவத்தின் முக்கியத்துவமும் இருக்கும்.

4. இந்த அரசு பள்ளியின் மாணவர்கள் குளத்தை சரி செய்வது, இயற்கை வேளாண்மை, கிராமப்புற தள்ளுவண்டி நூலகம் போன்ற நல்ல வேலைகளை செய்கிறார்கள்.

நன்றி

ரியா ரோஷன்

0Shares
0