இவான் துர்கனேவின் மகள்

ரஷ்ய எழுத்தாளர் இவான் துர்கனேவ் தனது வாழ்நாளில் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் மூன்று குழந்தைகளின் தந்தையாக இருந்தார். இவர்கள் அவரது திருமணமற்ற காதல் உறவில் பிறந்தவர்கள். இதில் பெலகோயா எனப்படும் பாலினெட் அவரால் மகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டாள். மற்ற இரண்டு பிள்ளைகளையும் தனது வாரிசுகள் என்று டயரியில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

இவான் துர்கனேவ் அதிகம் காதலையும் சாகசங்களையும் எழுதியவர். வேட்டையில் கொண்டிருந்த ஆர்வத்திற்கு இணையாகக் காதலில் ஈடுபட்டவர். அவரை விட வயதில் அதிகமுள்ள பெண்களைக் காதலித்திருக்கிறார். விரும்பிய பெண்ணை அடைய முடியாது என்று அறிந்த போதும் அவளுக்காகவே கடைசிவரை வாழ்ந்திருக்கிறார். உண்மையில் அவரது அம்மாவிடமிருந்து பெறமுடியாத அன்பை வேறு பெண்களிடம் தேடியிருக்கிறார். கடைசி வரை அந்த அன்பு கிடைக்கவேயில்லை.

துர்கனேவின் கதைகள் துல்லியமான கோட்டுச்சித்திரங்கள் போன்றவை. குறிப்பாகக் கதாபாத்திரங்களின் மனவோட்டத்தை, புறச்சூழலை மிகத்துல்லியமாகச் சித்தரிக்கக்கூடியவர். படித்த, சுதந்திர எண்ணம் கொண்ட அன்றைய ரஷ்ய இளைஞர்களை அவரே தனது கதைகளில் சித்தரித்தார்.

முதற்காதல் அவரது மிகச்சிறந்த குறுநாவல். இதில் விவரிக்கபடுவது அவரது சொந்த வாழ்வில் நடந்த நிகழ்வுகளே. கதையை மிகவும் அழகாக எழுதியிருக்கிறார்.

நாற்பது வயதான விளாதிமிர் பெட்ரோவிச் தனது முதற்காதலின் நினைவுகளை விவரிப்பதாகக் கதை துவங்குகிறது

என்னால் கதைசொல்ல முடியாது. அதில் நான் தேர்ந்தவனில்லை. ஆனால் சுருக்கமாக, என் நினைவில் உள்ள அனைத்தையும் எழுதி வந்து உங்களுக்குப் படிக்கிறேன் என்று விளாதிமிர் பெட்ரோவிச் சொல்கிறார்.

தனது காதல் நினைவுகளை நேரில் சொல்வதை விடவும் எழுதுவதையே துர்கனேவ் விரும்புகிறார். கதையில் வரும் விளாதிமிர் பெட்ரோவிச் அவரது புனைவு வடிவமே.

நினைவுகளைச் சொல்வதற்கும் எழுதுவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. சொல்லும் போது நினைவின் பின்னுள்ள உணர்ச்சிகளை முழுமையாக வெளிப்படுத்த இயலாது. குறிப்பாகத் தவிப்பை, நிராகரிப்பின் வலியைப் பேச்சால் முழுமையாக விவரித்துவிட முடியாது. எழுதும்போது அதே நினைவுகள் துல்லியமடைவதோடு அந்த நினைவின் மகிழ்ச்சியும் துயரும் அசலாக வெளிப்படுகின்றன. அதிலும் குறிப்பாகக் காதல் நினைவுகள் எழுத்தில் தான் வலிமையடைகின்றன.

எழுத்தாளர்களுக்குத் தனது சொந்தவாழ்க்கையும் அதன் சுகதுக்கங்களும் ஆதாரமான கச்சாப்பொருளாகின்றன. சிலர் அதை மட்டுமே வாழ்நாள் முழுவதும் எழுதுகிறார்கள். பலர் தனது கற்பனையோடு சொந்த அனுபவத்தைச் சிறிது சேர்த்துப் படைக்கிறார்கள். துர்கனேவிடம் இந்த இரண்டு போக்குகளையும் காண முடிகிறது. அவரது புகழ்பெற்ற கதாநாயகன் பஸரோவ் இதற்குச் சிறந்த உதாரணம்.

டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கியை விடவும் இவான் துர்கனேவ் தனது காலத்தில் மிகவும் புகழ்பெற்றிருந்தார். விருந்தில் அவரைச் சுற்றியே இளம்பெண்கள் வட்டமிட்டார்கள். இணைந்து நடனமாடினார்கள். தஸ்தாயெவ்ஸ்கி அப்படி ஒரு விருந்தினைப் பற்றி எழுதியிருக்கிறார். பத்திரிக்கைகள் துர்கனேவைக் கொண்டாடின. அவரது கதைகளுக்கு அதிகமான சன்மானம் வழங்கப்பட்டிருக்கிறது. டால்ஸ்டாயின் மனைவி சோபியாவிற்கு ஒருவகையில் துர்கனேவ் உறவினர். மருத்துவரான சோபியாவின் தந்தையும் துர்கனேவின் தாயும் குடும்ப நண்பர்கள்.

உலகின் சிறந்த காதல்கதைகளில் ஒன்றாகக் கருதப்படும் முதற்காதல் இப்படித்தான் துவங்குகிறது.

அப்போது எனக்கு வயது பதினாறு. இது 1833 கோடையில் நடந்தது. நான் என் பெற்றோருடன் மாஸ்கோவில் இருந்தேன்.

Varvara Petrovna 

தன்னைக் கவனிக்காத அம்மாவைப் பற்றியும் தனது தந்தையின் தோற்றம் மற்றும் செயல்களைப் பற்றியும் விளாதிமிர் பெட்ரோவிச் கதையில் குறிப்பிடுகிறார். துர்கனேவின் புனைவுலகில் இரண்டு வகையான பெண்கள் சித்தரிக்கபடுகிறார்கள். ஒருவகை அவரது அம்மாவைப் போல வசதியான, அதிகார திமிர் கொண்ட. அகம்பாவமான பெண்கள். ஆண்களை அடக்கி ஆள நினைப்பவர்கள். மற்றவர்கள் அவர் காதலித்த அழகிகளைப் போல வசீகரமானவர்கள். புரிந்து கொள்ள முடியாதவர்கள். வயதில் மூத்தவர்கள். காதலை ஏற்கவும் நிராகரிக்கவும் முடியாதவர்கள்.

முதற்காதல் கதையில் வரும் பதினாறு வயது பையன் புத்தக உலகில் சஞ்சரிக்கிறான். புத்தக வசனங்களை உரக்கச் சொல்கிறான். காதல்கனவுகள் கொண்டிருக்கிறான். தன்னைச் சுற்றிய உலகை ஆச்சரியத்துடன், கற்பனையுடன் எதிர்கொள்கிறான் காரணமில்லாத சோகத்தால் பீடிக்கபட்டிருக்கிறான். குதிரை சவாரியிலும் வேட்டையிலும் நாட்டம் கொண்டிருக்கிறான். இது தான் இளம் துர்கனேவின் உலகம்.

ஒரு நாள் அவனது பக்கத்துவீட்டு ஜன்னலில் புதிதாக ஒரு இளம்பெண்ணின் முகம் தோன்றுகிறது. அந்தப் பெண்ணால் வசீகரிக்கப்படுகிறான். அங்கே ஒரு இளவரசியின் குடும்பம் தங்கியிருப்பதை அறிந்து கொள்கிறான். அந்த இளவரசி ஜாசிகின் வசதி இழந்தவள். அதிகாரத்தை எப்படியாவது பெற வேண்டும் என்று துடிப்பவள். இதற்கான வழிதெரியாதவள். அவளது கணவர் இளவரசர் ஜாசிகின் நீண்டகாலம் பாரிஸில் வசித்தவர். அங்கே பெரும் பணக்காரராக இருந்தார், ஆனால் அவரது சொத்துக்கள் அனைத்தையும் சூதாடி இழந்து போனார். ஆகவே ஜாசிகின் குடும்பம் வறுமையில் வாடியது.

ஒரு நாள் தோட்டத்தில் உலவிக் கொண்டிருக்கும் போது புதிய குரல் கேட்டு விளாதிமிர் பெட்ரோவிச் திரும்புகிறான். அங்கே கோடு போட்ட இளஞ்சிவப்பு நிற உடையில், தலையில் வெள்ளை நிற கர்சீஃப் அணிந்த உயரமான, மெலிந்த உடல்கொண்ட இளம் பெண் நிற்பதைக் காணுகிறான். அவளுடன்; நான்கு இளைஞர்கள் சுற்றி நெருக்கமாக இருக்கிறார்கள், அவள் சிறிய சாம்பல் பூக்களால் அவர்களின் நெற்றியில் அடித்து விளையாடுகிறாள். அந்த நேர்த்தியான விரல்கள் தனது நெற்றியில் பட்டால் போதும் உலகில் உள்ள அனைத்தையும் அந்த இடத்திலேயே அவளுக்குக் கொடுத்துவிடுவேன் என்று மனதிற்குள் நினைத்துக் கொள்கிறான். அந்தப் பெண் ஒரு கணம் அவனைப் பார்த்துச் சிரிக்கிறாள். அவனது ரத்தம் சூடாகிறது.

அவளிடம் எப்படி அறிமுகமாவது என்பதைப் பற்றியே இரவெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறான். காலையில் மீண்டும் ஜன்னல் வழியே பக்கத்துவீட்டினைப் பார்க்கிறான். அவளைக் காணமுடியவில்லை. இதற்கிடையில். இளவரசி ஜாசிகின் அவனது அம்மாவிற்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். அதில் விளாதிமிர் பெட்ரோவிச் தனது வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுக்கிறாள். அம்மாவின் அனுமதியோடு அந்த வீட்டிற்குச் செல்கிறான் விளாதிமிர்

முதல்நாள் தான் பார்த்த பெண் இளவரசியின் மகள் என்பதை அறிந்து கொள்கிறான். விளையாட்டுதனமிக்க அவளால் வசீகரிக்கபடுகிறான். மீதான காதலை வெளிப்படுத்த முடியவில்லை. அவளை விட்டு விலகிப் போகவும் முடியவில்லை. முதற்காதலின் இன்பத்தை, அவஸ்தைகளைத் துல்லியமான சித்தரிப்புடன் துர்கனேவ் எழுதியிருக்கிறார்.

அவள் தன்னுடைய கையில் ஒரு புத்தகம் வைத்திருந்தாள். அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள், தனது வட்டமான வைக்கோல் தொப்பியின் அகலமான நீல நிற ரிப்பனை பின்னால் தள்ளி, என்னைப் பார்த்து, மெதுவாகச் சிரித்தாள், மீண்டும் புத்தகத்தின் மீது கண்களைத் திருப்பினாள். அவளுடன் என்னால் பேச இயலவில்லை. மாலை மற்றும் மறுநாள் முழுவதும் நான் ஒருவித மனச்சோர்வடைந்து தனிமையில் கழித்தேன். என்னால் எதையும் வாசிக்க முடியவில்லை. பாடப்புத்தகத்தின் வரிகளும் பக்கங்களும் வெறுமனே என் கண்களுக்கு முன்னால் புரண்டு சென்றன. ஆத்திரத்துடன் புத்தகத்தை வீசி எறிந்தேன்.

இதை வாசிக்கும் போது காட்சிகள் திரையில் காணுவது போல நம் கண்முன்னே தோன்றிமறைகின்றன. இந்த நுட்பமான விவரிப்பும் உணர்ச்சி வெளிப்பாடும் தான் துர்கனேவினை இன்றும் நிகரற்ற படைப்பாளியாகக் கொண்டாடச் செய்கிறது

இக் கதையில் வரும் தந்தை இளம்பெண்ணால் ஈர்க்கப்படுகிறார். காதலிப்பதில் மகனுடன் போட்டியிடுகிறார் அந்தத் தந்தையின் தோற்றம் இயல்புகளை விளாதிமிர் வெறுக்கிறான். இந்தக் காட்சிகள் துர்கனேவ் வாழ்வில் உண்மையாக நடந்தேறியவை.

மத்திய ரஷ்ய மாகாணமான ஓரியோலில் ஸ்பாஸ்கோய்-லுடோவினோவோ என்ற மிகப்பெரிய பண்ணையைக் கொண்ட பிரபுவின் குடும்பத்தில் பிறந்தவர் இவான் துர்கனேவ். அவரது அம்மா வர்வாரா பெட்ரோவ்னா ஆடம்பரமான வாழ்க்கையை விரும்பியவள். அவளது உடைகள் மற்றும் அலங்காரத்திற்காக நிறையச் செலவு செய்தவள். அடிக்கடி உடைகள் வாங்குவதற்காகவே மாஸ்கோ சென்றுவரக் கூடியவள்.

அவர்களுக்குச் சொந்தமாக முப்பதாயிரம் ஏக்கர்  நிலமும் 11 கிராமங்களும் இருந்தன. அந்தக் கிராமத்திலுள்ள வயல்கள் மட்டுமின்றி அங்கே பாடும் பறவைகளும் கூடத் தனக்குச் சொந்தமானவை என்று வர்வாரா குறிப்பிடுகிறாள்.

தன்னைவிட வயதில் குறைந்த. உறவினரான குதிரைப்படை அதிகாரி செர்ஜி நிகோலாவிச்சை மணந்து கொண்டாள். அவர்களிடம் 5000 பண்ணை அடிமைகள் வேலை செய்தார்கள். ஆறு குதிரைகள் கொண்ட கோச் வண்டிகள் இருந்தன. தனக்கெனச் சொந்தமாக ஒரு இசைக்குழுவை வைத்திருந்தாள். அதில் சிறந்த இசைக்கலைஞர்கள் இருந்தார்கள். இது போலவே மருத்துவர் , நாடக நடிகர்கள் மற்றும் தனி ஆசிரியர்களையும் வேலைக்கு வைத்திருந்தாள். அவளது தாத்தா காலத்தில் கட்டப்பட்ட சிறிய தேவாலயம் ஒன்றும் அந்தப் பண்ணையினுள் இருந்தது.

வர்வாரா பெட்ரோவ்னாவின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் துர்கனேவ். வர்வாராவை விடவும் அவளது கணவன் செர்ஜி துர்கனேவ் வசதி குறைந்தவர். ஆகவே அவளது அதிகாரத்தை மீறித் தனித்துச் செயல்பட முடியவில்லை

துர்கனேவ் என்ன படிக்க வேண்டும் எங்கே படிக்க வேண்டும் என்பதில் வர்வாரா மிகவும் கண்டிப்புடன் இருந்தார். ஆரம்பக் கல்விக்காக மாஸ்கோ தனியார் உறைவிடப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர்களது வீட்டில் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழியில் பேசுவது மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. ஜெர்மன் சென்று உயர்படிப்பு படித்த இவான் துர்கனேவ் தன்னை ஒரு ஐரோப்பியக் கனவான் போலவே உணர்ந்தார் வாழ்நாள் முழுவதும் அப்படியே நடந்து கொண்டார்.

அம்மாவின் கட்டுப்பாட்டில், ஆதிக்கத்தில் வளர்ந்தவர் என்பதால் அவரது கதையில் வரும் கதாநாயகிகளும் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவே சித்தரிக்கப்பட்டார்கள்.

ஐரோப்பாவிற்குச் சென்று கல்வி பெற்றவர் என்பதால் அவரது கண்ணோட்டத்திலும் செயல்களிலும் மேற்குலகின் பாதிப்பு அதிகமிருந்தது. பைரனின் கவிதைகளால் வசீகரிக்கப்பட்டு கவிதை நாடகம் எழுதுவதில் ஆசை கொண்டிருந்தார். பெலின்ஸ்கி மற்றும் லெர்மன்தேவ் படைப்புகள் மீது கொண்ட ஈடுபாடு அவரைப் புனைவெழுத்தை நோக்கித் திருப்பியது

1841 ஆம் ஆண்டில் தனது பண்ணைக்குத் திரும்பிய போது துர்கனேவின் வயது 20. அந்தப் பண்ணையில் தையல்காரியாக இருந்த இளம்பெண் துன்யாஷா எனும் அவ்தோயா மீது காதல் கொண்டார். அவளுடன் நெருங்கிப் பழகினார். இதனால் துன்யாஷா கர்ப்பமானாள். அவளையே திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் அவரது அம்மா வர்வாரா பெட்ரோவ்னா இதனை ஏற்கவில்லை.

பெலகோயா

துர்கனேவை பண்ணையிலிருந்து பீட்டர்ஸ்பெர்க்கிற்கு அனுப்பி வைத்ததோடு துன்யாஷாவை உடனடியாகத் தனது ஸ்பாஸ்கோய் பண்ணையிலிருந்து வெளியேற்றி மாஸ்கோவிற்கு அனுப்பி வைத்தார். அங்கே துன்யாஷாவின் மகள் பெலகோயா ஏப்ரல் 26, 1842 இல் பிறந்தார். அதன்பிறகு துன்யாஷாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

வர்வாரா பெட்ரோவ்னா அனுமதியின்றி அவளது பண்ணை அடிமைகள் யாரும் திருமணம் செய்து கொள்ள முடியாது: பலரும் அவளது அனுமதி பெற்றே திருமணம் செய்து கொண்டார்கள். பிள்ளை பெற்றுக் கொள்வதற்கும் அவளது அனுமதி அவசியம். அப்படி அனுமதி கேட்காமல் பெற்ற பெண்களைத் தனது பண்ணையிலிருந்து துரத்திவிடுவதே அவளது வழக்கம்.

அம்மாவை எதிர்த்து எதுவும் செய்யமுடியாத துர்கனேவ் தனது மகளை நேரில் சென்று காணவேயில்லை. பெலகோயாவிற்கு எட்டுவயதாகும் போது துர்கனேவ் அவளைக் காணச் சென்றார். தனது மகளாக அவளை ஏற்றுக் கொண்டு தன்னோடு பாரீஸ் அழைத்துச் சென்றார்

அங்கே தனது காதலியும் புகழ்பெற்ற பாடகியுமான பாலின் வியர்டோட்டின் வீட்டில் அவளது குழந்தைகளுடன் இணைந்து வளரும்படி செய்தார்

பிரெஞ்சு பண்பாட்டில் வளர்ந்த பெலகோயா எனும் பாலினெட்டிற்குச் சொந்த மொழி மறந்து போனது. அவள் பிரெஞ்சு பெண்ணாகவே வளர்ந்தாள். அவளுக்கும் பாலின் குடும்பத்திற்கும் இடையில் மோதல் ஏற்படவே அவளை உறைவிடப்பள்ளி ஒன்றில் சிலகாலம் தங்கிப் படிக்க வைத்தார். பாலினெட்டிற்குப் பதினாறு வயதாகும் போது தன்னுடன் அழைத்துத் தங்க வைத்துக் கொண்டார்.

அவளது 17வது வயதில் திருமணத்தை நடத்தி வைத்தார். இளம் தொழில்முனைவோரான காஸ்டன் ப்ரூவரை அவள் திருமணம் செய்து கொண்டாள். துர்கனேவ் அவளுக்காக நிறைய வரதட்சணையும் கொடுத்திருக்கிறார். சுவிட்சர்லாந்தில் வசித்த அவளது வாழ்க்கை நெருக்கடிகள் பற்றித் துர்கனேவ் தனது ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார். கணவருடன் கருத்துவேறுபாடு கொண்டு பிரிந்த பாலினெட் துர்கனேவின் ஆதரவில் வாழ்ந்து வந்தார். தன் தந்தையின் மீதான வெறுப்பையும், வளர்ப்புத் தாயின் மீதான வெறுப்பையும் தன் வாழ்நாள் முழுவதும் பாலினெட் கைவிடவில்லை. 1919ம் ஆண்டுத் தனது 77 வயதில் பாலினெட் இறந்து போனார்

பாலின் வியர்டோட்

பாடகி பாலின் வியர்டோட் மூலம் துர்கனேவிற்கு ஒரு பெண் மற்றும் ஒரு பையன் பிறந்தார்கள். அந்தக் குழந்தைகளை உலகம் அறிய அவர் அறிவிக்கவில்லை. காரணம் பாலின் வியர்டோட் திருமணமானவள். அவளது கணவன் லூயிஸ் வியர்டோட் நாடக அரங்கின் உரிமையாளர். நடிகர் மற்றும் ஒரு பயண எழுத்தாளர். அவன் துர்கனேவிற்கும் தனது மனைவிக்கும் உள்ள காதல் உறவை நன்கு அறிவான். ஆனாலும் அவன் பாலினை விட்டு விலகிப்போகவில்லை.

பாலின் தனது குழந்தைக்கு யார் தந்தை என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்றாள். ஆகவே அக் குழந்தைகளுக்குக் காட்பாதராகத் தான் இருக்க விரும்புவதாகத் துர்கனேவ் அறிவித்தார். அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டது. துர்கனேவ் தனது மகன் மற்றும் மகளுக்குத் தனது சொத்தில் பங்கு கொடுத்திருக்கிறார்.

இளமையில் தான் கொண்டிருந்த காதல் மற்றும் அந்தக் காதலிகள் மூலம் பெற்றெடுத்த பிள்ளைகளைப் பற்றிய உண்மைகளைத் துர்கனேவ் மறைக்கவில்லை. ஆனால் அன்றைய சமூகச்சூழல் அவரது குடும்பக் கௌரவம் இதனை வெளிப்படையாக அறிவிக்க முடியாமல் செய்திருக்கிறது.

டால்ஸ்டாயின் தங்கை மரியா துர்கனேவ் மீது காதல் கொண்டிருந்தாள். தனது கணவனை விடுத்து துர்கனேவுடன் சேர்ந்து வாழ விரும்பினாள். இதனை டால்ஸ்டாய் ஏற்கவில்லை. துர்கனேவ் தான் இதற்குக் காரணம் என்று அவர் மீது கோபம் கொண்டிருந்தார்

வேறு ஒரு தருணத்தில் துர்கனேவை சந்தித்த போது அவர் தனது மகளை உலகம் அறிய ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தினார். டால்ஸ்டாயிற்கும் இது போலக் கள்ள உறவில் பிறந்த பிள்ளைகள் இருந்தார்கள். அவரும் அவர்களை அங்கீகரிக்கவில்லை. ஆனால் துர்கனேவின் மகள் பெலகேயாவை சட்டப்பூர்வமாக ஏற்க வேண்டும் என்று சண்டையிட்டார்.

இதனால் ஆத்திரமான துர்கனேவ் டால்ஸ்டாயை டூயலுக்கு வரும்படி சவால்விட்டார். நேரடியாகத் துப்பாக்கியால் சுட்டுச் சண்டையிடும் இந்தச் சவாலின் மூலம் தனது கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வது அன்றைய வழக்கம், இது போன்ற டூயலில் தான் கவிஞர் புஷ்கின், எழுத்தாளர் லெர்மன்தேவ் இறந்து போனார்கள். துர்கனேவின் சவாலை டால்ஸ்டாய் ஏற்றுக் கொண்ட போதும் இந்தச் சண்டை நடக்கவில்லை. துர்கனேவ் மன்னிப்பு கேட்டு விலகிக் கொண்டார்.

1857 இல் டால்ஸ்டாய் பாரீஸுக்கு வந்த போது அங்குள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்குத் துர்கனேவ் அழைத்துச் சென்றார். பாரீஸ் நகரின் கேளிக்கைகளையும் கலையரங்குகளையும் அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் ரஷ்யா திரும்பிய டால்ஸ்டாய் துர்கனேவை தொல்லை கொடுப்பவர், திமிர்பிடித்தவர் என்றே எழுதியிருக்கிறார்

ஆரம்பம் முதலே தஸ்தாயெவ்ஸ்கியை துர்கனேவிற்குப் பிடிக்கவில்லை. அது போலவே துர்கனேவ் ருஷ்யாவிற்கு எதிராக எழுதுகிறார் என்ற எண்ணம் தஸ்தாயெவ்ஸ்கிக்கு இருந்தது. ஆகவே பரஸ்பரம் சண்டையிட்டுக் கொண்டார்கள்.

1867 இல் ஒரு நண்பருக்கு எழுதிய கடிதத்தில் தஸ்தாயெவ்ஸ்கி, “இந்தக் கேடுகெட்ட தாராளவாதிகள் ரஷ்யாவைத் துஷ்பிரயோகம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள்” என்று துர்கனேவைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அப்போது துர்கனேவ் பிரான்சில் வசித்து வந்தார், அத்தோடு “துர்கனேவ் நீங்கள் ஒரு தொலைநோக்கியை வாங்கிக் கொள்ளுங்கள் இல்லாவிட்டால் உண்மையான ரஷ்யாவைப் பார்க்க முடியாது” எனவும் எழுதியிருக்கிறார். அதே நேரம் துர்கனேவின் “A Nest of Gentlefolk” நாவலை உலகத்தரமான படைப்பு. அசாதாரண சாதனை என்றும் தனது டயரியில் தஸ்தாயெவ்ஸ்கி எழுதியிருக்கிறார்.

துர்கனேவ் “A Sportsman’s Sketches.” எனச் சிறுகதைகளின் தொகுப்பினை 1852ல் வெளியிட்டார். இதில் அரசு எதிர்ப்பு அதிகம் வெளிப்படுவதாகக் கருதிய தணிக்கை துறை அது குறித்து ஜார் மன்னருக்குக் கடிதம் எழுதியது. துர்கனேவை உடனே கைது செய்யும்படி உத்தரவு வந்தது. அதன்படி துர்கனேவ் கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார். அத்தோடு தொடர்ந்து பல மாதங்கள் காவல்துறையில் கண்காணிப்பிலும் வைக்கப்பட்டிருந்தார். அவரது பண்ணையிலிருந்து நாற்பது மைல்களுக்கு மேல் செல்ல அவர் அனுமதிக்கப்படவில்லை.

துர்கனேவ் எப்போதும் தனது கோட் பாக்கெட்டில் இரண்டு கடிகாரங்களை வைத்திருப்பார். இரண்டினையும் எடுத்துப் பார்த்துச் சரியான நேரத்தை அறிந்து கொள்ளுவார்.

டால்ஸ்டாய் வீட்டிற்குச் சென்றிருந்த போது அவரது பிள்ளைகளுக்கு ஜூல்ஸ் வெர்னைப் பற்றிய கதைகளைச் சொல்லியிருக்கிறார். அவர்களுடன் இணைந்து நடனமாடியும் உற்சாகப்படுத்தியிருக்கிறார். இதனை டால்ஸ்டாயின் மகள் தனது நினைவுக்குறிப்பில் பதிவு செய்துள்ளார்

வர்வாரா பெட்ரோவ்னா நடத்தும் விருந்துகள் மிகவும் ஆடம்பரமானவை. அதில் கலந்து கொள்ளப் பிரபுக்களும் ராணுவ அதிகாரிகளும் அழைக்கப்படுவது வழக்கம் இந்த விருந்திற்காக மாஸ்கோவிலிருந்து சமையற்காரர்கள் அழைக்கப்படுவார்கள். வர்வாரா வெளியூர் செல்லும் போது ஆறு வண்டிகளில் வேலைக்காரர்கள். சலவை செய்யும் பெண்கள், பட்லர்கள், குமாஸ்தாக்கள், பணிப்பெண்கள் உடன் செல்லுவது வழக்கம்.

பணக்கார குடும்பத்தில் வளரும் பிள்ளைகளின் தனிமை விநோதமானது. துர்கனேவ் அந்தத் தனிமையால் பீடிக்கப்பட்டிருந்தார். பண்ணை அடிமைகளுடன் நெருங்கிப் பழகுவதோ, உரையாடுவதோ கூடாது என்று அம்மாவால் தடுக்கப்பட்டிருந்தார். ஆனாலும் அவர் பண்ணை அடிமைகளின் துயர வாழ்க்கையை மிக நெருக்கமாக உணர்ந்திருந்தார். அவற்றைத் தனது கதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜெர்மனியில் பயின்ற துர்கனேவ் தத்துவத்தில் தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்தார். ஜார் அரசின் உயரதிகாரியாகச் சில காலம் பணியாற்றியிருக்கிறார்

பீட்டர்ஸ்பெர்க்கில் நடந்த ஒபரா இசைநிகழ்ச்சியில் போது பாடகி பாலின் வியர்டோட் குரலால் வசீகரிக்கபட்டு அவள் மீது காதல் கொண்டார். அவளது இசைநிகழ்ச்சி நடக்கும் இடங்களுக்கெல்லாம் சென்றார். அவள் திருமணமானவள். இரண்டு குழந்தைகளின் தாய். தனது கணவனுடன் ரஷ்யா வந்திருக்கிறாள் எனத் துர்கனேவ் அறிந்த போதும் அவள் மீது கொண்ட காதலைக் கைவிடவில்லை.

அவளுடன் நெருங்கிப் பழகுவதற்காகவே பாரீஸ் சென்றார். சில காலம் பாரீஸிலும் பின்பு பாடன்பாடனிலும் வசித்தார். பணக்கார இசை ரசிகரான துர்கனேவை அவள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாள். மணவாழ்க்கையில் சலிப்புற்றிருந்த அவளுக்குத் துர்கனேவின் காதல் தேவைப்பட்டது. ஆகவே அவருடன் நெருக்கமாகப் பழகினாள். ஆனால் விவாகரத்து பெற்றுக் கொண்டு அவரைத் திருமணம் செய்ய முன்வரவில்லை.

வியர்டோட் குடும்பத்தில் ஒருவர் போலவே துர்கனேவ் வாழ்ந்தார், அவள் குடியிருந்த வீதியிலே வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கிக் கொண்டார். லூயிஸ் வியர்டோட் தனது மனைவியின் காதல் உறவில் தலையிடவில்லை. பாலின் தனது வீட்டில் நடைபெறும் விருந்தில் இவர் எங்கள் ரஷ்ய நண்பர் துர்கனேவை அறிமுகம் செய்வது வழக்கம்

“என்னால் உன்னிடமிருந்து விலகி வாழ முடியாது, உனது நெருக்கத்தை நான் எப்போதும் உணர வேண்டும், வாழ்நாள் முழுவதும் அதை அனுபவிக்க வேண்டும். என்று அவர் பாலினுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

பாலின் மீது கொண்ட தீவிரக்காதல் அவரது வாழ்வைப் புரட்டிப் போட்டது. முப்பது ஆண்டுகள் அவளுக்கு அருகிலே வசித்து வந்தார். ஆனால் கடைசி வரை அவள் துர்கனேவைத் திருமணம் செய்து கொள்ளவில்லை.

பாலின் வியர்டோட் விருப்பத்திற்கு ஏற்ப பெரிய மாளிகை ஒன்றை அவளுக்காகக் கட்டிக் கொடுத்திருக்கிறார். அவளது பிள்ளைகளுக்கு நிறையப் பணம் செலவு செய்திருக்கிறார். அவளது ஆலோசனையின் பெயரில் தனது குடும்பச் சொத்துகளைப் பிரித்துத் தரும்படி சகோதரனுடன் வழக்கு தொடுத்தார் துர்கனேவ். அவருக்குக் கிடைத்த பெரும்பங்கை தனக்கு எழுதித் தரும்படி மாற்றிக் கொண்டாள் பாலின். துர்கனேவ் மறைவிற்குப் பின்பு இந்த உரிமை குறித்து வழக்குத் தொடரப்பட்டது.

பாலின் அவரை ஏமாற்றிவிட்டாள் என்று ஒருமுறை கூடத் துர்கனேவ் நினைக்கவுமில்லை. எழுதவுமில்லை. இந்தக் காதலுறவினை துண்டித்துக் கொண்டு ரஷ்யா திரும்பி வாருங்கள் என்று நண்பர்கள் அழைத்த போதும் துர்கனேவ் வரவில்லை.

இந்தக் காதலை எப்படிப் புரிந்து கொள்வது என உலகிற்குத் தெரியவில்லை. அதை உலகிற்கு விளக்க வேண்டிய அவசியம் தனக்கில்லை என்று துர்கனேவ் உறுதியாக இருந்தார்.

பாலின் வியர்டோட் வேறு ஆண்களுடன் நெருங்கி பழகினாள். அது போலவே துர்கனேவ் மரியா என்ற நாடக நடிகையுடன் நெருக்கமாகப் பழகினார். ஆனாலும் அவருக்குப் பாலின் மீது கொண்டிருந்த காதல் குறையவில்லை.

ஜார்ஜ் சாண்ட், குஸ்தாவ் ஃப்ளாபெர்ட், மாப்பசான் , எமிலி ஜோலா, அல்போன்ஸ் டாடெட் மற்றும் ஹென்றி ஜேம்ஸ் என அன்று புகழ்பெற்றிருந்த எழுத்தாளர்கள் பலருடன் துர்கனேவ் நெருங்கிப் பழகியிருக்கிறார். 1878 இல் பாரிஸில் நடைபெற்ற சர்வதேச இலக்கிய மாநாட்டில் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 1879 ஆம் ஆண்டில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி அவரைச் சிறப்பித்தது

துர்கனேவின் பிற்காலப் படைப்புகள் அவர் எதிர்பார்த்த கவனத்தைப் பெறவில்லை. இதனால் மிகுந்த மனவருத்தம் அடைந்தார்.  தனது பழைய நண்பர்களை விட்டுபிரிந்தது தவறு என உணர்ந்து மீண்டும் அவர்களுடன் தொடர்பு கொண்டார். இறந்து போன தனது சகோதரனுக்காக வருந்தினார். அவரது கடைசி நாட்கள் வேதனையும் துயரநினைவுகளுமாக கழிந்தன.

செப்டம்பர் 3, 1883 இல், துர்கனேவ் முதுகுத் தண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது உடலை ரஷ்யா எடுத்துச் செல்வதா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டது.. பாலின் குடும்பத்தினர் துர்கனேவ் வசித்த பாடன்பாடனிலே அடக்கம் செய்ய வேண்டும் என்றார்கள். அது துர்கனேவ் குடும்பம் ஏற்கவில்லை. பாரீஸில் உள்ள ரஷ்யத் தேவாலயத்தில் துர்கனேவின் இறுதிச் சடங்கு நடைபெற்றது அதில் முக்கிய எழுத்தாளர்கள் கலைஞர்கள் என ஐநூறு பேர் கலந்து கொண்டார்கள். பின்பு அவரது உடல் ரயில் மூலம் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கிற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கே தேசிய மரியாதையுடன் வோல்கோவ்ஸ்கி கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

ஒரு மென்மையான நபர் ஒரு போதும் பழிவாங்குதலை நாடுவதில்லை; தீயவற்றுடன் சமரசம் செய்து கொள்ளவோ அல்லது தனது ஆன்மாவில் எந்தத் தார்மீக விட்டுக்கொடுப்பும் செய்யவோ முடியாமல் தனது வழியில் செல்கிறார். அவரது துயரங்கள் எளிதாக விவரிக்க முடியாதவை, ஆனால் இறுதியில் நீங்கள் அவற்றை உணர்ந்து கொள்வீர்கள், அவருடன் துன்பப்படுவீர்கள் என்று தஸ்தாயெவ்ஸ்கி தனது நாட்குறிப்பு ஒன்றில் எழுதியிருக்கிறார். இதுவே துர்கனேவ் பற்றிய சரியான மதிப்பீடாகும்.

••

உதவிய நூல்கள்

Turgenev: A Biography by Henri Troyat

Turgenev : His Life and Times- Leonard Schapiro

Turgenev: A Life – David Magarshack- 1954.

0Shares
0