உதயம்.

ஜெயகாந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு உதயம்.

1952 முதல் 54 வரை அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இந்த நூலை அவரே அச்சுக் கோர்த்து பவானி பிரஸ் எனும் அச்சகத்தில் டிரெடில் மிஷினில் தானே அச்சிட்டிருக்கிறார். இப்படி ஒரு எழுத்தாளரின் முதற் தொகுப்பு அவராலே அச்சடிக்கப்பட்டிருப்பது ஆச்சரியமானது.

அட்டை ஓவியம் வரைந்திருப்பவர் ஓவியர் ஆனந்தன். இந்தத் தொகுப்பில் சாந்தி பூமி, சுமை பேதம், கண்ணன் பிறந்தான், உதயம் பிழைப்பு மீனாட்சி ராஜ்யம், காந்தி ராஜ்யம் என ஏழு சிறுகதைகள் உள்ளன.

ரிக்‌ஷாக்கார மருதையாவிற்குப் பூர்வீகம் தென்னாற்காடு ஜில்லாவைச் சேர்ந்த விக்கிரவாண்டி எனத்துவங்கும் சுமை பேதம் கதையில் மனுசன் மாட்டையும் குதிரையையும் காட்டி மட்டமாவா பூட்டான். மாடு வலிக்கறதெங்காட்டியும் குதிரை வலிக்கற வண்டி ஒஸ்தின்னா மனுஷன் இஸ்க்கற வண்டி எல்லாத்தியுங் காட்டியும் ஒஸத்தி இல்லியா சாமி என்று கேட்கிறான் மருதையா. ரிக்‌ஷா ஒட்டுகிறவர்களைப் பற்றி ஜேகே நிறையக் கதைகள் எழுதியிருக்கிறார். அந்த வாழ்க்கையை விவரிக்கும் முதற்கதை என்றே இதைச் சொல்ல வேண்டும்

அந்தக் கதையில் மருத்தையா தன் கை ரிக்‌ஷா  வண்டியில் ஏறுகிறவர்களைத் தான் மனிதனாகவே மதிப்பதில்லை. அவர்கள் நம்மை மனிதனாக நினைக்காத போதும் நாம் மட்டும் ஏன் அவர்களை மனிதனாக நினைக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை அது ஒரு மூட்டை தான் என்கிறான்.

இந்தக் கதைகள் புதுமைப்பித்தனின் பாணியில் எழுதப்பட்டிருக்கின்றன. ஜேகே கதைகளுக்கே உரித்தான உணர்ச்சிப்பூர்வமான உரையாடல்கள். விவாதங்களை ஆரம்பக் கதைகளிலே காணமுடிகிறது.

காந்தி ராஜ்யம் கதையில் காந்தி கண்ட கனவு என்னவானது என்பதை விமர்சனப்பூர்வமாக எழுதியிருக்கிறார். மீனாட்சி ராஜ்யம் புதுமைபித்தனின் பொன்னகரம் கதையினை நினைவுபடுத்துகிறது.

ஆரம்பத்தில் தவளைக் குஞ்சுகள் மீன் குஞ்சுகளைப் போல தானிருக்கும் அது போலவே எனது ஆரம்பக் காலக் கதைகள் என்று  பெர்னாட்ஷா சொன்னாராம். இதை சற்றே மாற்றி புதுமைப்பித்தன்  இவை மீன் குஞ்சுகளாக தோற்றமளிப்பினும் பின்னால் உருவாகப்போகும் தவளையை  உள்ளடக்கிக்  கொண்டிருக்கும் தவளைக் குஞ்சுகள் தாம் என்று ஆரம்பக் காலக் கதைகளைப் பற்றி எழுதியிருக்கிறார். அதையே தானும் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது என முன்னுரையில் ஜெயகாந்தன் குறிப்பிடுகிறார்.

இந்த தொகுப்பு 1954ல் வெளியாகியுள்ளது. அதன் மறுபதிப்பு 1995ல் வந்திருக்கிறது. எத்தனை ஆண்டுகள் இடைவெளி பாருங்கள். முதற்தொகுப்பிலே ஒரு எழுத்தாளன் அடையாளம் காணப்பட்டு அங்கீகாரம் பெற்றுவிடுவது அபூர்வமானது. சிலருக்கே அப்படி நடந்திருக்கிறது.

0Shares
0