உதிர்ந்த பற்கள்.

மைக்கேல் ஜோஷெங்கோ (Mikhail Zoshchenko) ரஷ்யாவின் புகழ்பெற்ற நகைச்சுவை எழுத்தாளர். அரசியல் நையாண்டிக் கதைகள் எழுதியவர். இதன் காரணமாக ரஷ்ய எழுத்தாளர் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்.

1895ல் உக்ரேனில் பிறந்தவர். அவரது தந்தை ஒரு ஓவியர். அம்மா நாடக நடிகை. ஏழு வயதிலே ஜோஷெங்கோ கவிதைகள் எழுத துவங்கினார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர். முதல் உலகப்போரின் காரணமாகத் தனது படிப்பைப் பாதியில் கைவிட்டு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். போரின் போது விஷவாயு தாக்கியதால் இவரது உடல் நலம் மோசமாகப் பாதிக்கபட்டது. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட இதயக் கோளாறு காரணமாக ராணுவத்திலிருந்து விடுவிக்கபட்டார்.

ஜோஷ்செங்கோ பூட்மேக்கர் முதல் இரவுக்காவலாளி வரை பல்வேறு சிறிய வேலைகளைச் செய்திருக்கிறார்.இவர் எழுத்தாளராக மாறியது தற்செயலே

கலை வெளிப்பாட்டின் மீதான அரசின் கட்டுப்பாடுகளை எதிர்த்த ஜோஷ்செங்கோ தனது கண்டனத்தை நகைச்சுவையோடு வெளிப்படுத்தினார். அவரது சில சிறுகதைகள் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளன.

தன்னைப் பற்றி அவர் எழுதிய குறிப்பு வேடிக்கையானது.

நான் எங்குப் பிறந்தேன் என்று கூட எனக்குத் தெரியாது. பொல்டாவாவில் என்று. ஒரு ஆவணம் ஒன்று சொல்கிறது, இல்லை பீட்டர்ஸ்பர்க்கில் என மற்றொரு ஆவணம் சொல்கிறது, இரண்டு ஆவணங்களில் ஒன்று போலியானது. எது போலியானது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம், ஏனென்றால் அவை இரண்டும் மிகவும் மோசமாக உருவாக்கப்பட்டதே,. ஆண்டுகள் கூடக் குழப்பம் உள்ளது. ஒரு ஆவணம் 1895 என்றும், மற்றொன்று 1896 என்றும் கூறுகிறது இரண்டையும் நம்ப முடியாது.

அதிகாரத்தின் அர்த்தமற்ற சட்டங்களாலும் கெடுபிடிகளாலும் சாமானியர்கள் எவ்வாறு கஷ்டப்பட்டார்கள் என்பதைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். ஆன்டன் செகாவின் கதைகளை நினைவூட்டும் எழுத்துமுறை.

அரசு எதிர்ப்புக் கதைகள் காரணமாக ஆட்சியாளர்களின் கோபத்திற்கு உள்ளானார். அவரது புத்தகங்கள் வெளியாவதில் தடை ஏற்பட்டது.

அவரது கதை ஒன்றில் வீடு கிடைக்காத தம்பதிகள் ஒரு வீட்டின் குளியல் அறையில் வசிக்கிறார்கள். இன்னொரு கதையில் குண்டுவீச்சில் மிருக்காட்சியில் இருந்த குரங்கு தப்பி நகரில் அலைகிறது. வரிசையில் காத்திருக்கிறது. மனிதர்களின் போலித்தனமான செயல்களைக் கேலி செய்யும் ஜோஷெங்கோ ஸ்டாலின் ஆட்சியின் போது மிகுந்த மனச்சோர்விற்கு உள்ளானார்.

அவரது இந்தப் பல் விவகாரம் சிறுகதையில் எகோரிச் என்பவருக்குத் திடீரென ஒரு பல் விழுந்துவிடுகிறது. ஒரு பல் தானே போனால் போகட்டும் என்று நினைக்கிறார். ஆனால் ஒரே வருஷத்துக்குள் ஆறு பற்கள் விழுந்துவிடுகின்றன. பயந்து போன அவர் உடனடியாகப் பல்மருத்துவமனைக்குச் செல்கிறார். அவர் ஏற்கனவே இன்சூரன்ஸ் செய்து வைத்துள்ளார். ஆகவே இலவசமாகப் பல்செட் பொருத்திவிடலாம் என்கிறார்கள்.

ஆனால் ஒரு நிபந்தனை அவருக்கு எட்டுப் பற்கள் விழுந்திருந்தால் மட்டுமே இலவசமாகப் பல்செட் பொருத்தமுடியும். என்கிறது மருத்துவமனை. அவருக்கோ ஆறு பற்கள் தான் விழுந்திருக்கிறது.

இது என்ன முட்டாள்தனமான சட்டம் என்று கோவித்துக் கொள்கிறார்.

இன்னும் இரண்டு பற்கள் விழுந்தவுடன் வாருங்கள். அதிர்ஷடமிருந்தால் விரைவில் விழுந்துவிடும் என்று இனிமையாகப் பேசி மருத்துவமனையினர் அனுப்பி வைக்கிறார்கள்

அடுத்தசில மாதங்களில் இன்னும் இரண்டு பற்கள் விழுகின்றன. இப்போது எட்டுப் பற்கள் இல்லாத காரணத்தால் உடனே பல்செட் பொருத்திவிட வேண்டும் என மருத்துவமனைக்குப் போகிறார்

மருத்துவமனை அவரை வரவேற்கிறது. இன்ஷுரன்ஸ் பேப்பர்களைச் சரிபார்க்கிறது

காம்ரேட் ஒரே வரிசையில் எட்டுப் பற்கள் விழுந்தால் மட்டுமே புதிய பல்செட் பொருத்த சட்டம் அனுமதிக்கிறது “என்கிறார்கள்.

அப்படி விழவில்லை என்கிறார் எகோரிச்.

“அப்படியா? நாங்கள் ரொம்ப வருத்தப்படுகிறோம். எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கையை விரித்துவிடுகிறார்கள்.

இப்போது அவர் திரவபானம் மட்டுமே ஆகாரமாகக் கொள்கிறார். அத்தோடு தினசரி மூன்று முறை பல்விளக்கவும் ஆரம்பித்துவிட்டார் என்று கதை முடிகிறது

சோவியத் சிஸ்டம் மட்டுமில்லை. உலகெங்குமே இன்சூரன்ஸ் கம்பெனிகள் வைத்திருக்கும் சட்டங்களையும் நடைமுறையினையும் நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. எகோரிச் போல இருக்கும் பற்களைக் காப்பாற்றிக் கொள்வது தான் ஒரே தீர்வு.

••

.

0Shares
0