உயர்த்திப் பிடித்த வெளிச்சம்

ஜெயகாந்தன் மறைந்துவிட்டார் என அறிந்த மறுகணம் அவர் வீட்டில் இருந்தேன். கம்பீரமான குரலில் வரவேற்கும் ஜெயகாந்தன் அங்கு இல்லை. அவரது உடலே கிடத்தப்பட்டிருந்தது. அந்த மௌனம், பெரும் துக்கத்தை உருவாக்கியது. தாங்க முடியாத மனவலியோடு அவரது வீட்டு வாசலில் இரவெல்லாம் அமர்ந்திருந்தேன். சலனமற்ற நீண்ட இரவு. நினைவுகள் கொப்பளிக்கின்றன. ஜே.கே. வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். மனம் அதில் ஒன்றமுடியாமல் தத்தளித்தது. இந்த இழப்பு எளிதானது அல்ல. எத்தனையோ வாசகர்களைப்போல நானும் அவரது வாசகன். அவர் எனது ஞானத்தந்தை. கண்ணீர் சிந்துவதற்கு மேலாக ஒன்றைச் செய்ய வேண்டும் எனத் தோன்றுகிறது. என்ன செய்வது எனத்தான் தெரியவில்லை.

அந்த வீதியே ஜெயகாந்தனின் இருப்பால் அழகுடையதாக இருக்கும். சென்னைக்கு வந்த புதிதில் பல நாட்கள் அவரது வீட்டைக் காண்பதற்காகத் தயங்கித் தயங்கி அந்த வீதியில் நடந்திருக்கிறேன். கொட்டகை போட்ட மாடியில் இருந்து படி வழியாக ஜெயகாந்தன் கீழே இறங்கி வருவதை தெருவில் பராக்கு பார்ப்பதுபோல கண்டிருக்கிறேன். நெருங்கிப் போய் அறிமுகம் செய்துகொள்ளும் தைரியம் வர நீண்ட நாட்களானது.

மரணத்தைப் பற்றி அவருக்குப் பயமே இல்லை. அவருடன் பேசும்போது ஒருமுறை சொன்னார்…

‘வயதானால், சாவு நிச்சயம். அது வரும்போது வரட்டும். இருக்கிற வாழ்க்கையை இன்பமாக அனுபவிப்பதுதான் முக்கியம்’ எனச் சொல்லிவிட்டு, தனது மீசையைத் திருகியபடியே ‘இன்பம் என்றால் என்னவென்றே பலருக்கும் தெரியாது. அது பொன்னால் கிடைப்பது இல்லை, புகழால் கிடைப்பது இல்லை, பெண்ணோ, பொருளோ தருவது இல்லை. தன்னை அறிதலில் ஓர் இன்பம் இருக்கிறது பாருங்கள்… அந்த இன்பமே உயர்வானது. தன்னை அறிந்தவன் தவறுகளை மறைத்துக்கொள்ள மாட்டான். சரி, தவறு என்பதெல்லாம் அவரவர் வாழும் சூழ்நிலையும் வளர்ந்த விதமும் கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் உருவாக்கியவை. உங்கள் சரி, எனக்குத் தவறு. மீறுதல் ஓர் உரிமை, ஓர் எழுச்சி. அதைச் செய்து பார்த்தவன்தான் உணர முடியும். வேடிக்கை பார்ப்பவனால் ஒருபோதும் மீறலைப் புரிந்துகொள்ள முடியாது’ என்றார்.

எனது வீடே ஜெயகாந்தனின் ரசிகர்களாக இருந்தார்கள். விகடனிலும் தினமணி – கதிரிலும் வெளியான அவர் கதைகள், தொடர்கள் குறித்த வாதப்பிரதிவாதங்கள் வீட்டில் நடக்கும்.

ஓர் எழுத்தாளன் குறித்து இப்படி வியந்து வியந்து பேசுகிறார்களே என ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டிருப்பேன். அப்படித்தான் ஜெயகாந்தன் கதைகளை ஆசையோடு வாசிக்கத் தொடங்கினேன்.

பள்ளி நாட்களில் எனது அண்ணனின் வகுப்பு ஆசிரியராக இருந்த எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி, ஜெயகாந்தனின் நண்பர். ஜெயகாந்தன் போலவே மீசையும் வைத்திருப்பார். பேசுவதும் அப்படியே இருக்கும். தமிழ் ஆசிரியராக இருந்த அவரது வீட்டில் ஜெயகாந்தனுடன் எடுத்த புகைப்படம் இருக்கும். ஜெயகாந்தனைப் பற்றி அவர் பேசத் தொடங்கினால், வியப்பான செய்திகள் வந்துகொண்டே இருக்கும். அதில் ஒன்று, மிக மோசமாக சினிமா பாடல் ஒன்றை எழுதிய கவிஞனை அடிப்பதற்காக பாண்டிபஜாரில் ஜே.கே. துரத்திக்கொண்டு ஓடினார் என்பது. அதைச் சொல்லும்போது தனுஷ்கோடி ராமசாமி நடித்தே காட்டுவார். ஒரு நாடகம் பார்ப்பதுபோலவே இருக்கும். அத்துடன் ஜெயகாந்தன் மிகுந்த கோபக்காரர். அரசியல் தலைவர்கள்கூட அவரைக் கண்டு பயப்படுவார்கள் எனச் சொல்லிச் சொல்லி, ‘ஜே.கே. என்றாலே கலகக்காரர்’ என்ற பிம்பம் மனதில் உருவாகியிருந்தது. நேரில் கண்டு பழகியபோது அவர் எத்தனை அன்பும் அக்கறையும்கொண்ட மகத்தான மனிதர் என உணர்ந்தேன்.

ஜெயகாந்தன் ஒரு ரசவாதி. வாசிக்கும் எவரையும் தன் எழுத்தின் வலிமையால் உருமாற்றிவிடுவார். ஜே.கே-யின் சிந்தனைகள், படிப்பவர் மனதில் ஆழமாக உறைந்துவிடக் கூடியவை. உரத்த சிந்தனையும் உணர்ச்சிபூர்வமான அனுபவங்களும் ஒன்றிணைந்த கதைகளை அவர் எழுதினார். சமூகத்தின் போலியான மதிப்பீடுகள், கற்பிதங்கள், வரம்புகளைக் கடுமையாக விமர்சனம் செய்த எழுத்து அவருடையது. சென்னைத் தமிழை இலக்கியமாக்கிய பெருமை அவரையே சாரும். பிளாட்பாரத்தில் வாழும் அடிநிலை மக்களின் வாழ்க்கையை, அதன் அவலங்களை உரக்கச் சொன்னவர் ஜெயகாந்தன்.

‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலில் வரும் ஹென்றிக்கு நிகரான ஒரு கதாபாத்திரம், இன்று வரை தமிழில் எழுதப்படவே இல்லை. ஜெயகாந்தன் எழுத்தின் உச்சம் இந்த நாவல்.

பேச்சிலும் ஜெயகாந்தன் நிகரற்றவர். அவரைப்போல மேடையில் கம்பீரமாக, உணர்ச்சிபூர்வமாகப் பேசக்கூடிய எழுத்தாளர் எவரும் இல்லை.

‘கும்பல் என்பது கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும் சர்வாதி காரத்தையும், நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும் சத்யாகிரகத்தாலும் சந்திக்கும்’ என ஜெயகாந்தன் பேசிய உரையே இதற்குச் சான்று. பாரதியைப் பற்றி ஜே.கே. பேசும்போது கூட்டம் கண்ணீர் சிந்தும் என்பார்கள்.

ஜே.கே. ஒரு பன்முகப்பட்ட கலைஞன் என தனுஷ்கோடி ராமசாமி வியந்து பேசும்போது, வாழ்வில் ஒருமுறையாவது ஜே.கே-யைச் சந்தித்துவிட முடியாதா என ஏங்கியிருக்கிறேன்.

80-களில் ஒருமுறை, மதுரையில் ஜெயகாந்தன் பேச இருக்கிறார் எனக் கேள்விப்பட்டுச் சென்றிருந்தேன். மேடையில் நின்று அவர் கைகளை வீசிப் பேசுகிற விதம், அனல் தெறிக்கும் சொற்கள், ஆவேசமூட்டும் குரல், வாதங்களை எடுத்துவைக்கும் ஞானம்… ஜெயகாந்தனின் அந்தப் பேச்சை என்னால் மறக்கவே முடியவில்லை. ஞானோபதேசம் போல கேட்டுக்கொண்டிருந்தேன்.

ஜெயகாந்தனைப் போல தன் வாழ்நாளிலே சகல விருதுகளும் அங்கீகாரங்களும் நண்பர்கள் பட்டாளமும் பெருமையும் புகழும் அடைந்த இன்னோர் எழுத்தாளன் இலக்கிய உலகில் கிடையாது. ஒரு கம்யூனிஸ்ட்டாகவே அவர் எப்போதும் இருந்தார். இடதுசாரிகளின் நிலைப்பாட்டை விமர்சனம் செய்திருக்கிறார். ஆனால், இடதுசாரிச் சிந்தனைகளை அவர் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததே இல்லை.

எழுத்தாளன் என்பவன் கதைகள், கட்டுரைகள் மட்டும் எழுதுகிறவன் அல்ல…அவன் ஒரு சிந்தனையாளன்; களப் போராளி; போராட்டக் குணமுள்ளவன் என அவனது சமூகக் கடமைகளை உணர்த்தியவர் ஜெயகாந்தன்.

ஒரு களப் போராளியாக அவர் எத்தனையோ போராட்டங்களில் நேரடியாக இறங்கிச் செயல்பட்டிருக்கிறார். பணத்தாலோ, அதிகாரத்தாலோ, எழுத்தை விலைக்கு வாங்க முடியாது. எழுத்தாளன் மிகுந்த சுயமரியாதைகொண்டவன். அவனது திமிர், ஞானத்தால் உருவானது. சுயசிந்தனையும் சுயமரியாதையும் கொண்டவன், எவனுக்கும் அடிபணிந்து போக மாட்டான் என, எழுத்தாளர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு ஜெயகாந்தனே அடையாளமாக இருந்தார். அவர் உருவாக்கித் தந்த அங்கீகாரமும் கௌரவமும்தான் இன்றும் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டுதலாக உள்ளன.

தனது வலிகள், வேதனைகள், தோல்விகள் குறித்து ஜெயகாந்தன் ஒருபோதும் புலம்பியவர் அல்ல. மாறாக அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டு எழுத்து சாமுராய் போல அவர் ஆவேசத்துடன் பெருங்கோபமும் பேரன்பும்கொண்ட கலைஞனாகவே எப்போதும் நடந்துகொண்டார்.

ஜே.கே. ஓர் அழியாச்சுடர். அந்த வெளிச்சம்தான் என்னைப் போன்ற ஒருவனை ஏதோ ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் இருந்து எழுதுவதற்கு அழைத்து வந்தது.

எனது ‘உலக சினிமா’ நூல் வெளியீட்டு விழாவுக்கு ஃபிலிம் சேம்பரில் காரைவிட்டு இறங்கி உள்ளே வரும்போது ஜெயகாந்தன் எனது கைகளைப் பற்றிக்கொண்டு, ‘உலக சினிமா வேறு… சினிமா உலகம் வேறு. உலக சினிமாவைப் புரிந்துகொண்ட உனக்கு, சினிமா உலகை எளிதாகப் புரிந்துகொள்ள முடியாது’ என்றார். எவ்வளவு பெரிய உண்மை, எத்தனை எளிதாகச் சொல்லிவிட்டார்.

அன்று மேடையில் அவர் பேசிய உரை அற்புதமானது. அவரோடு ஒரே மேடையில் அமர்ந்திருக்கிறேன், பேசுகிறேன் என்பது, ஒரு கனவு நனவாகிவிட்டதைப்போல சந்தோஷமாக இருந்தது.

இன்னொரு நாள் மதியம் அவரைக் காணச் சென்றிருந்தேன். வீட்டின் மாடியில் இருந்த கொட்டகையில் யாரோ ஒரு பேராசிரியருடன் பேசிக்கொண்டிருந்தார். உரத்த குரலில் சண்டை போடுவதுபோலவே இருந்தது அந்தப் பேச்சு. கண்கள் சிவக்க, உதடு துடிக்க மீசையை முறுக்கியபடியே ஜெயகாந்தன் சொன்னார்… ‘தம் மொழி மீது அன்புகொண்டவர்களுக்குப் பிற மொழி மீது வெறுப்பு வராது. எனக்குத் தமிழ் மீது அபிமானம் உள்ளது; பற்று இல்லை. பற்றானது, விட்டுப்போவதாகும். ஆனால், அபிமானம் விட முடியாதது. தேசமே கடன் வாங்கும்போது, மொழி கடன் வாங்குவது சரியானதே!’

எதிரில் இருந்த பேராசிரியர் வாய் அடைத்துப்போய் உட்கார்ந்திருந்தார். அவரது சபை, படித்தவர்களின் சபையாக மட்டும் இருந்தது இல்லை. ரிக்ஷாக்காரர் தொடங்கி பேராசிரியர் வரை அத்தனை பேரும் சமமாக அமர்ந்து அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். சாக்ரடீஸ் தனது சிந்தனைகளை மாணவர்களுடன் உரையாடுவார். அவர்கள் அது குறித்து விவாதிப்பார்கள் என வாசித்திருக்கிறேன். அதை ஜெயகாந்தன் வடிவில் நேரில் பார்த்திருக்கிறேன்.

எழுத்து, பேச்சு, செயல்பாடு… என தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டுக்காக தன் மொத்த வாழ்க்கையை அர்ப்பணித்த மகத்தான கலைஞன் ஜெயகாந்தன்.

‘கடவுள் ரொம்பக் கேவலமான கொலைகாரன். ‘சாவு’னு ஒண்ணு இருக்கும்போது பாசம் என்ற ஒண்ணை உண்டாக்குவானா?’ என ஜெயகாந்தன் கதையில் ஒரு பெண் குருவி கேட்கும். ஜே.கே-யின் மறைவு உருவாக்கிய வலியில், அதே குருவியைப்போலவே நானும் தவித்துக்கொண்டிருக்கிறேன்!

–          ஆனந்தவிகடன் இதழில் வெளியானது

0Shares
0