மண் பொம்மை காளிந்தீசரண் பாணிக்ராஹியின் நாவல். ஒரிய மொழியில் எழுதப்பட்ட இந்நாவலை ரா. வீழிநாதன் தமிழாக்கம் செய்திருக்கிறார். நான் அறிந்தவரை மூன்றோ நான்கோ ஒரிய நாவல்கள் தான் இதுவரை தமிழில் வந்துள்ளன. ஒரியச் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று நேஷனல் புக் டிரஸ்ட் மூலம் வெளியாகியுள்ளது. சமகால ஒரிய இலக்கியப் படைப்புகள் அதிகம் தமிழில் வெளியாகவில்லை. ஆங்கிலத்தில் சில வாசிக்கக் கிடைக்கின்றன. ஒரியக் கவிதைகள் பெற்ற கவனத்தை ஒரிய கதைகள் பெறவில்லை என்றே தோன்றுகிறது.

காளிந்தி சரண் பாணிகிராஹி கவிஞர், நாவலாசிரியர், நாடகாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். 1930களில் ஒடியா இலக்கியத்தில் முற்போக்கு மார்க்சிய இயக்கங்கள் தீவிரமாக வளர்ச்சிகொண்ட போது அதை உருவாக்கிய பகபதி சரண் பாணிக்ராஹி இவரது தம்பி

ஆங்கிலத்திலும் எழுதிய பாணிக்ராஹி இரண்டு ஆங்கில இதழ்களின் ஆசிரியராக இருந்திருக்கிறார். அவரது மூத்த மகள் நந்தினி சத்பதி ஒடிசாவின் முதலமைச்சராக விளங்கியவர்.
Matira Manisha என்ற இவரது புகழ்பெற்ற நாவலை மிருணாள் சென் திரைப்படமாக எடுத்திருக்கிறார். இந்த நாவலின் தமிழாக்கம் தான் மண்பொம்மை.
அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்படும் பாகப்பிரிவினையை விவரிக்கும் இந்த நாவல் காந்தி யுகத்தில் ஒரிய கிராமங்கள் எப்படியிருந்தன என்பதை மிக நுண்மையாகச் சித்தரித்துள்ளது.
பதான் பாடா கிராமத்தில் வசிக்கும் சாம்பதான் ஊரில் யார் எந்த வேலைக்குக் கூப்பிட்டாலும் முதல் ஆளாகப் போய் நிற்பான். மனதிற்குப் பட்டதைத் தைரியமாகப் பேசக்கூடியவன். ஊரில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் அவனது பங்கில்லாமல் எதுவும் நடக்காது. மண்குடிசையில் வசிப்பவன். அந்த வீட்டினை அவன் தான் கட்டினான்.
ஊரில் இரண்டு பேர்களுக்குள் சண்டை வந்துவிட்டால் சாம்பதான் குறுக்கே புகுந்து ஒருவரின் காலையும் மற்றவனின் கையினையும் கெட்டியாகப் பிடித்துக் கொள்வான். சோறு தண்ணீர் இல்லாமல் காலை முதல் மாலை வரை இப்படியே உட்கார்ந்திருப்பான். சாம்பதான் செத்தபிறகு அவரவர் மனப்படி சண்டைபோட்டுக் கொள்ளலாம் என்று அறிவுரை சொல்வான்.
இப்படி அடுத்தவர் வீட்டில் சண்டை போட்டாலே குறுக்கிடும் சாம்பதான் குடும்பத்திற்குள்ளே சச்சரவு உருவாகிறது. அது எப்படி வளர்ந்து பிரிவனையாகிறது என்பதை நாவல் அழகாக விவரிக்கிறது
சாம்பதானின் மனைவி கடும் உழைப்பாளி. இரண்டு மருமகள்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போதும் அவளாக வீட்டுவேலைகளை இழுத்துப் போட்டுச் செய்கிறவள். அவள் தனது மூத்தமகனை மலைமுழுங்கி என்றும் இளையவனைப் பித்துக்குளி என்று செல்லமாக அழைக்கிறாள். இரண்டு மருமகளையும் சமமாக நடத்துகிறாள். அது மூத்த மருமகளுக்குப் பிடிக்கவில்லை. மருமகள்களுக்குள் சண்டை வரும் போது கிழவி சண்டை போட்டால் வீடு இரண்டு பட்டுவிடும் என்று எச்சரிக்கை செய்கிறாள். அவளது மரணத்தின் பின்பு அவளது வாக்குப் பலித்துவிடுகிறது.
சாம்பதான் இறக்கும் போது மூத்த மகன் பர்ஜுவிடம் இளையவன் சக்டியோடு சண்டைபோடாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும். நிலத்தைப் பங்கு போடக்கூடாது. வீட்டில் இரண்டு அடுப்பு எரியக் கூடாது என்று சத்தியம் வாங்குகிறான்
இதன்படியே பர்ஜு நடந்து கொள்ள முயற்சிக்கும் போது அவனது மனைவி சிறிய விஷயங்களுக்குக் கூடக் குறை சொல்வதுடன் சக்டி மனைவியோடு வீண் சண்டை போடுகிறாள்.

சக்டி ஒரு உழைப்பு சோம்பேறி. சூதாடி. ஆகவே தனக்குரிய சொத்தைப் பங்கு போட்டுத் தரும்படி அண்ணனிடம் சண்டை போடுகிறான்.
தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி முடியாத பர்ஜு வாய்மூடி மௌனியாகிறான். ஒரு நிலையில் தம்பி கேட்டயாவையும் அவனுக்கே தந்துவிடவும் முயலுகிறான்.
குடும்பத்திற்குள் நடக்கும் இந்தச் சகோதர சண்டையை ஊரில் சிலர் வளர்த்துவிடுகிறார்கள். அடுத்தவரின் வீழ்ச்சியை ரசிப்பது காலம் காலமாகவே தொடரும் மனோவிகாரம் என்பதையும் நாவல் பதிவு செய்திருக்கிறது.
நாவலை வாசிக்கும் போது ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகக் கிராமங்களிலும் இது போலச் சொத்துப் பிரிப்பதில் சகோதரர்கள் போட்டுக் கொண்ட சண்டையும் வழக்குகளும் நினைவில் வந்து போயின.
ஊரில் அண்ணனுக்குக் கிடைக்கும் மரியாதையும் கௌரவமும் தனக்குக் கிடைப்பதில்லையே என்று சக்டி நினைக்கிறான். அதைக் காட்டிக் கொள்ளாமல் சொத்தை பிரிப்பதில் குறியாக இருக்கிறான். மனைவியின் பேச்சைக் கேட்டு அண்ணனுடன் தகராறு செய்கிறான். இதைப் பர்ஜு புரிந்து கொள்வதுடன் ஒதுங்கிப் போகவே முயலுகிறான்.
பாகப்பிரிவினை என்பது விதியின் விளையாட்டு அதிலிருந்து தப்ப முடியாது என்று ஜதுதலேயி என்ற கதாபாத்திரம் சொல்கிறது.
விதி தான் காரணமா இல்லை மனிதர்கள் தனது அறியாமையால். சகவாச தோஷத்தால் இப்படி நடந்து கொள்கிறார்களா, தர்மம் அழிந்து போய்விட்டதா என்பதைப் பாணிக்ராஹி பல இடங்களில் விவாதிக்கிறார்.

அண்ணன் மகள் திருமணத்திற்குச் சக்டி போகக் கூடாது என்று அவனது மனைவி தடுக்கிறாள். அவளது கோபத்திற்குப் பயந்து அவனும் போகாமல் நின்றுவிடுகிறான். அது மன உறுத்தலைத் தருகிறது. ஆனால் ஊர்மக்கள் பர்ஜு தனது மகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தினான். அதற்கான செலவு பற்றிச் சக்டிக்கு எதுவும் தெரியாது என்று குத்திக்காட்டும் போது அவன் கோபம் கொள்கிறான். அண்ணன் தம்பிகளின் சண்டையை வீட்டுப் பெண்கள் வளர்த்தெடுக்கிறார்கள். வீடு நரகமாகிப் போகிறது.
பர்ஜுவை வழிநடத்துவது அவன் கேட்டறிந்து பின்பற்றும் ராமாயணம் மற்றும் பழங்கதைகள். ஆனால் சக்டிக்கு இது போலப் புராணங்கள், கதைகள் எதிலும் நம்பிக்கை கிடையாது. அவன் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கிறான்.
காளிந்தீசரண் பாணிக்ராஹியின் நாவலில் அந்தக் காலத்தில் ஒரு திருமணம் நடத்திவைக்க நூறு ரூபாய் செலவானது என்பதும், அந்தத் திருமணத்தில் என்ன நகை போட்டார்கள். விருந்தில் பூரியும் பாயாசமும் எப்படியிருந்தது என்பது போன்ற விவரணைகள் துல்லியமாக எழுதப்பட்டிருக்கின்றன.
வறுமையும் குடும்பக் கஷ்டங்களையும் மீறி உறவுகளுக்குள் ஏற்படும் சிடுக்குகள். வம்பு வழக்குகள் முக்கியமாகின்றன. சக்டியின் மனைவிக்கும் பர்ஜுவின் மனைவிக்கும் இடையில் காரணமில்லாமலே வெறுப்பும் கசப்பும் உருவாகிறது. அவர்கள் ஒரே கூரையின் கீழே வாழ முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். பர்ஜு குடும்பச் சண்டையைத் தாங்க முடியாமல் மௌனமாகிவிடுவது முக்கியமான தருணம். அவனது மௌனம் சண்டையை நிறுத்திவிடுகிறது. மனைவிக்குக் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் சக்டியால் ஒரு போதும் இப்படி நடந்து கொள்ளமுடியாது. தெரியாது. அவன் நாவலின் இறுதியில் தான் சுய உணர்வு கொள்கிறான்.
அந்தக் கால மனிதர்களை இனி காணமுடியாது என்று நாவலில் ஒரு வரி வருகிறது. அந்த மனிதர்களை மட்டுமின்றி அந்தக் கிராமங்களையும் இனிகாண முடியாது.
அந்தக் காலக் கிராமத்தில் அறியாமையும் சாதிக்கொடுமைகளும் உழைப்பு சுரண்டலும் பெண் அடிமைத்தனமும் இருந்தன. அதைக் கடந்து சமூகம் இன்று முன்னேறியிருக்கிறது. இது போன்ற நாவலைப் படிக்கும் போது இந்தியச் சமூகம் கடந்து வந்த தொலைவை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
ஒரிய நாவலுக்கும் தமிழ் வாழ்க்கைக்கும் பெரிய வேறுபாடில்லை. பெயர்கள் இடத்தை மாற்றிவிட்டால் இது ஒரு தமிழ் நாவலே.