உயிர்கொல்லி

சனிக்கிழமை கோவையில் நடைபெற்ற என்டோசல்பான் உள்ளிட்ட உயிர்கொல்லிகளுக்கு எதிரான கருத்தரங்கில் கலந்து கொண்டேன், இயற்கை வேளாண்மை அறிஞர் நம்மாழ்வார், மார்க்சிய அறிஞர் எஸ்.என்.நாகராஜன். எழுத்தாளர் நாஞ்சில்நாடன்  உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டார்கள்,

இயல்வாகை என்ற சூழலியல் அமைப்பு இந்த உயிர்கொல்லி மருந்துகளுக்கு எதிராக ஒரு விழிப்புணர்வு பயணத்தை நடத்துகிறது, அதில் கலந்து கொண்ட அத்தனை பேரும் இளைஞர்கள், உணர்ச்சிமயமாக அவர்கள் சூழலியல் சார்ந்து பேசுவதும் தீவிரமாகச் செயல்படுவதையும் காணும் போது உத்வேகமாக இருந்தது,

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக பள்ளிச் சிறுவர்கள் உயிர்கொல்லிகளின் பாதிப்பு குறித்து ஒவியங்கள் வரைந்தார்கள், ஒவ்வொன்றும் அற்புதமான ஒவியங்கள்,  அன்றைய விழாவில் நம்மாழ்வார் பேசியதே சமீபத்தில் நான் கேட்ட ஆகச்சிறந்த சொற்பொழிவு, அந்த ஒரு உரையை தமிழகம் முழுவதும் கேட்கச் செய்தால் போதும் உயிர்கொல்லி மருந்துகளுக்கான எதிர்வினை பற்றி எரியத் துவங்கிவிடும்

பூச்சி மருந்து என்ற சொல்லே தவறானது, அது மருந்தில்லை, உயிர்கொல்லி, ஆகவே அதை மருந்து என்று சொல்வதே அபத்தமானது, உயிர்கொல்லி மருந்துகளை அரசும் வேளாண்மை அதிகாரிகளும் வணிக கம்பெனிகளின் விற்பனை தந்திரங்களுக்காக அனுமதிக்கிறார்கள், ஆகவே இது ஒரு தீவிரமான அரசியல் பிரச்சனை, என்று நம்மாழ்வார் விவசாயத்தின் ஆதார வளங்களையும் அதை தொடர்ந்து நாம் எப்பயெல்லாம் சீரழித்து வருகிறோம் என்பதையும் அறச்சீற்றத்துடன்  பேசியது மிக ஆழமான உரையாக இருந்தது.

பாலிடால் போன்ற உயிர்கொல்லிகளை குடித்துப்  பூச்சிகளை விட நிறைய மனிதர்களே செத்துப் போனார்கள், இன்று விவசாயத்தில் பயன்படுத்தபடும் பெரும்பான்மை உயிர்கொல்லிகளின் பின்விளைவுகள் மிக மோசமானவை, அந்த தானியங்களை உண்ணும் தாயின் பாலில் கூட நஞ்சு கலந்திருக்கிறது என்பதே உண்மை, இயற்கை பூச்சிகளை உருவாக்குவதன் வழியே ஒரு சமனநிலையை உருவாக்குகிறது , அதைப் புரிந்து கொள்ள வேண்டும்,

ஏன் இன்று விதையே இல்லாத பழங்களைச் சாப்பிட நாம் விரும்புகிறோம் விதைகளின் மீது எதற்காக நமக்கு இவ்வளவு வெறுப்பு. ஒரு திராட்சைக்குள் சிறிய விதை இருப்பதைக் கூட நம்மால் சகித்து கொள்ள முடியவில்லை, அதற்கு என்ன காரணம், விதைகளை வெறுப்பது என்பது ஒரு மோசமான மனநிலை, அது அபாயகரமானது என்பதைச் சுட்டிக்காட்டி. விவசாயத்துறையில் நடைபெற்ற சீரழிவுகளுக்கு முக்கிய காரணம் பன்னாட்டு வணிக்கம்பெனிகளின் நலனிற்காக நமது விவசாயத்துறையும் விஞ்ஞானிகளும் தங்களை ஒப்புக்கொடுத்ததே, என்பதைப் பற்றி விரிவாகப்பேசினேன்

அரங்கு நிரம்பிய கூட்டம், அன்றிரவு முழுவதும் நம்மாழ்வாரின் உரை மனதில் ஒடிக்கொண்டேயிருந்தது, அந்தக் குரல் வெறும் விவசாயின் குரல் மட்டுமில்லை, அது கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக கொஞசம் கொஞ்சமாக சீரழிந்து வரும் விவசாயத்துறை சார்ந்த அறத்தின் குரல், அதன் உள்ளே நம் மூதாதையர்களின் குரலும் ஆவேசமும் பெருங்கோபமும் அடங்கியிருக்கிறது, அதை கண்டுகொள்ளவும் முன்னெடுத்து செல்லவும் வேண்டியது நம் அனைவரின் பொறுப்பாக இருக்கிறது

•••

0Shares
0