அகிரா குரசேவாவின் ட்ரீம்ஸ் திரைப்படத்தில் வான்கோவின் ஒவியம் ஒன்றினைப் பார்வையிடும் ஒருவன் அந்த ஒவியத்திற்குள் சென்று அதே நிலக்காட்சிகளை நேரில் காண்பதுடன் வான்கோவைச் சந்தித்துப் பேசுவான்.
அக்காட்சியில் ஒவியன் வான்கோவாக நடித்திருப்பவர் இயக்குனர் மார்டின் ஸ்கார்ஸசி. வான்கோவின் ஒவியம் உயிர்பெற்றுக் காட்சியாக விரியும் அற்புதத்தைத் திரையில் கண்ட போது சிலிர்ப்பாகயிருந்தது. அதே அனுபவத்தை ஒரு முழுத் திரைப்படமாகத் தந்தால் எப்படியிருக்கும் என்பதன் உதாரணமே சமீபத்தில் வெளியாகியுள்ள The Mill and the Cross.
நெதர்லாந்தின் புகழ்பெற்ற ஒவியரான பீட்டர் புரூகலின் (Pieter Bruegel the Elder) The Procession to Calvary என்ற ஒவியம் எப்படி வரையப்பட்டது என்பதைப் பற்றிய இந்தத் திரைப்படம் புரூகேலின் ஒவியம் குறித்த ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்தக்கூடியது.
The Girl With the Pearl Earring திரைப்படத்தை ஒவியம் குறித்து வெளியான திரைப்படங்களில் மிக முக்கியமானதாகக் கூறுவேன், அதை விடவும் சிறப்பான ஒளிப்பதிவும், அரங்க அமைப்பும், கலை நுட்பமும் கொண்டதாகத் தி மில் அண்ட் தி கிராஸ் உருவாக்கபட்டுள்ளது
மறுமலர்ச்சிகால ஒவியரான புரூகேல் 1525 நெதர்லாந்தில் உள்ள பிரெடா என்னுமிடத்தில் பிறந்தவர். இது டச்சு நகரான பிரெடாவைக் குறிப்பதாகவும் சிலர் கூறுகிறார்கள், இவர் சுயமாக ஒவியம் வரையக்கற்றுக் கொண்டவர், பீட்டர் கோக் வான் ஏல்ஸ்ட் என்பவரிடம் ஒவிய நுட்பங்களைக் கற்றிருக்கிறார். அந்த நாட்களில் ஏல்ஸ்டின் மகள் Mayken மீது காதலாகி அவளையே புரூகல் திருமணம் செய்துகொண்டார்.
புரூகேலினை ஒவிய உலகில் விவசாயி புரூகேல் என்றே அழைக்கிறார்கள், விவசாயிகளுடன் நெருங்கிப்பழகி அவர்களின் அன்றாட உலகைக் காட்சிப்படுத்தியவர் என்பதே இதற்கான காரணம்.
புரூகேலின் ஒவியங்கள் தனி மனிதர்களைச் சித்தரிப்பவையில்லை, அவை ஒரு உலகை கண்முன்னே காட்டுகின்றன, அதில் நூற்றுக்கணக்கான மனிதர்கள் இடம்பெறுகிறார்கள், பெரிய நிலக்காட்சியே அதன் மையம், அதன் ஊடாகப் பல்வேறு நிலைகளில், பல்வேறு செயல்களில் ஈடுபடும் மனிதர்கள் காட்சிபடுத்தப்பட்டிருக்கிறார்கள், ஒவ்வொரு ஒவியமும் ஒரு நாவலைப் போன்றதே, அத்தனை கதாபாத்திரங்கள், நிகழ்வுகள். உணர்ச்சிபூர்வமான வெளிப்பாடுகள்.
புரூகேலின் ஒவியங்களில் மயங்கிய பிரபல ரஷ்ய இயக்குனர் ஆந்த்ரேய் தார்க்கோவெஸ்கி தனது Solaris படத்தில் புரூகேலின் Hunters in the Snow ஒவியத்தைக் காட்சிபடுத்தியிருக்கிறார் அழியாத நினைவுகளின் குறியீடு போலவே ஒவியம் சித்தரிக்கபட்டிருக்கிறது.
விவசாயப்பணிகள், பழமொழிகள், அறுவடை, நடனம், திருமண விருந்து, வேட்டை, பைபிள் காட்சிகள், பேபல் கோபுரம் எனப் புரூகேல் வரைந்த ஒவியங்கள் அத்தனையும் தனித்த வண்ணங்களாலும் அலைவுறும் இயக்கத்தாலும். நுட்பமான சித்தரிப்பாலும் நம்மை வியப்பூட்டக்கூடியவை.
தி மில் அண்ட் தி கிராஸ் படத்தில் புரூகேல் ஏன் இந்தக் காட்சிகளை இவ்விதம் உருவாக்குகிறார், இந்த ஒவியங்கள் எதைக் குறிப்பாக உணர்த்துகின்றன என்பது அழகாகக் காட்சிப்படுத்தபட்டிருக்கிறது. இந்தப் படத்தை எப்படி ஒரு படப்பிடிப்பு தளத்திற்குள்ளாகவே உருவாக்கினார்கள் என்ற இணைப்பு வீடியோவை பார்த்த போது சினிமா தொழில்நுட்பத்தின் அடுத்தக் கட்ட சாதனை இதுவென உணர முடிகிறது
Netherlandish Proverbs என்ற ஒவியத்தில் தனது காலத்தில் நெதர்லாந்தில் புகழ்பெற்றிருந்த 112 பழமொழிகளைப் புரூகேல் காட்சிபடுத்தியிருக்கிறார், colonial blue உடன் crimson red வண்ணம் கலந்த இந்த ஒவியத்தை அவரது மேதமைக்குச் சான்றாகக் கூறலாம்
புரூகேலின் காலத்தில் தான் கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் (Protestant Reformation) துவங்கியது, கத்தோலிக்கத் திருச்சபையின் செயல்களைக் கண்டித்து மார்ட்டின் லூதர் கேள்விகள் எழுப்பினார். இதன் விளைவாகத் திருச்சபை கடுமையான விமர்சனங்களைச் சந்திக்க நேர்ந்தது. அதை தொடர்ந்து திருச்சபை முன்வைத்த கோட்பாடுகள், நம்பிக்கைகள், சடங்குகள் குறித்த வாதபிரதிவாதங்கள் தீவிரமாக நடைபெற்றன, அந்தப் பின்புலமே புரூகேலின் சமய ஒவியங்களில் காணப்படும் சீர்திருத்த கண்ணோட்டத்திற்கு முக்கியக் காரணங்களாகும்
The Blind Leading the Blind என்ற புரூகேலின் ஒவியம் அவரது மதசார்பற்ற பார்வைக்குச் சான்று, மத்தேயுவின் வசனம் ஒன்றில் if the blind lead the blind, both shall fall into a pit என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது, அதனைப் புரூகேல் காட்சியாக வரைந்திருக்கிறார், கடவுள் மட்டுமே மனிதனின் வழிகாட்டி என்பதைக் கூறவே மத்தேயு இதனைப் பயன்படுத்துகிறார், ஆனால் புரூகேலிடம் கடவுள் மையமாக இடம்பெறவில்லை, மாறாகக் குருடர்களின் பதற்றமும் தடுமாற்றமும் முதன்மையாக்கபட்டிருக்கிறது. இந்த ஒவியத்தில் ஆறு பார்வையற்றவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்தபடி கடந்து போகிறார்கள், பார்வையின்மையின் பல்வேறுவிதங்கள் இதில் காட்சிபடுத்தபட்டுள்ளன, ஒருவருக்கு லூகோமா, இன்னொருவருக்குக் கண் தோண்டி எடுக்கபட்டிருக்கிறது, இன்னொருவருக்கு மூடிய கண்கள், அவர்களது முகபாவங்களிலே என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பது துல்லியமாகச் சித்தரிக்கபடுகிறது,
புரூகேலின் காட்சிக்கோணங்கள் அலாதியானவை, அவர் காட்சியின் ஊடே மேல்கீழ், முன்பின் என்ற இயக்கத்தை எப்போதும் உருவாக்குபவர், இந்த ஒவியத்திலும் அது போன்ற மேல்கீழ் இயக்கம் இடம்பெற்றுள்ளது, பார்வையற்றவர்களின் ஆடைகள், கையிலுள்ள ஊன்றுகோல், மோதிய பதற்றம், மோதி விழுந்தவனின் நிலை என இந்த ஒவியம் குழப்பமான நிலையினை ஒரு புறமும் சலனமற்ற தேவாலயம் மரங்கள் என மறுபக்கமும் கொண்டிருக்கிறது , இந்த சமநிலையை ஒவியத்தை தனித்துவமானதாக்குகிறது
.இது போலவே சிறார் விளையாட்டுகள் அத்தனையும் Children’s Games என்ற ஒவியத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார் புரூகேல்
இவ்வோவியம் குழந்தை பருவத்தின் அடையாளமாக உருவாக்கபட்டுள்ளது, இதில் சில சிறுவர்கள் விளையாட்டுப் பொருட்களை வைத்து ஆடுகிறார்கள், சிலர் ஒருவரையொருவர் துரத்தியும் தாவியும் விளையாடுகிறார்கள், வேறுவேறு வயதுள்ள இக் குழந்தைகள் அனைவரிடமும் மிதமிஞ்சிய உற்சாகம் காணப்படுகிறது, அவர்கள் விளையாடும் இடம் ஒரு பொது மைதானம்,
இந்த ஒவியத்தை மனிதர்களின் அத்தனை செயல்களும் கடவுளின் முன்னால் வெறும் குழந்தை விளையாட்டுகளே, அதைக் குறிப்பதற்காகவே புரூகேல் வரைந்துள்ளார் எனவும் சில விமர்சகர்கள் கூறுகிறார்கள்,
இந்த ஒவியத்தின் மேல் பக்கம் சிறார்கள் ஆற்றில் குதித்து விளையாடுவதும் இடம்பெற்றுள்ளது, நீந்துதலும் ஒரு விளையாட்டே, நிலக்காட்சி ஒவியத்தின் சிறப்பே வெறும் கண்ணால் காணமுடியாத தொலைவை, அகன்ற பார்வை வெளியை உருவாக்கிக் காட்டுவதாகும், இந்த ஒவியத்தில் வரும் வீதியின் கடைகோடி அப்படியான ஒரு பார்வைவெளியை நமக்கு அறிமுகம் செய்கிறது.
இந்த ஒவியத்திலுள்ள 80 விளையாட்டுகளைத் தற்போது அடையாளம் கண்டுபிடித்திருக்கிறார்கள், அவை மீண்டும் நெதர்லாந்து பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. குழந்தைகள் விளையாட்டின் தொகுப்பு என மட்டும் இந்த ஒவியத்தை நாம் கருத முடியாது, காரணம் இந்த ஒவியத்தில் குழந்தைகள் விளையாடும் தருணத்தில் எப்படி அதீத சந்தோஷத்திற்கும் தீவிர வன்முறைக்கும், கோபத்திற்கும் தள்ளப்படுகிறார்கள், விளையாட்டு எப்படி இம்சையாக உருமாறுகிறது, விளையாட்டின் ஊடாகச் செயல்படும் வன்முறை எப்படிக் குழந்தைகளை மகிழ்ச்சிபடுத்துகிறது என்பதையும் புரூகேல் சித்தரித்திருக்கிறார். இந்த ஒவியம் பதினாறு முறைகளுக்கு மேலாக நகலெடுக்கபட்டிருக்கிறது, ஒவ்வொன்றும் இதே ஒவியத்தின் மாறுபட்ட வடிவங்களே
புரூகேலின் Peasant Dance ஒவியம் பற்றிக் கவிஞர் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ சிறந்த கவிதை ஒன்றினை எழுதியிருக்கிறார், அக்கவிதை In Brueghel’s great picture, The Kermess, the dancers go round, they go round எனத் துவங்குகிறது. விவசாயிகளின் நடனத்தை மட்டுமின்றிக் காமம் குரோதம், இச்சைகள் போன்றவை எவ்வாறு நடனத்தின் போது வெளிப்படுகின்றன என்பதும் இந்த ஒவியத்தில் சித்தரிக்கபடுகிறது,
தி மில் அண்ட் தி கிராஸ் படம் 1563ம் ஆண்டு Flanders ல் புரூகேல் வசிப்பதில் இருந்து துவங்குகிறது.
தனது ஒவியங்களுக்கான காட்சிபடிமங்களை அவர் எவ்வாறு அன்றாட வாழ்விலிருந்து எடுத்துக் கொள்கிறார் என்பதை விவரிக்கத் துவங்குகிறது. சிலந்தி வலை ஒன்றில் இருந்து தனது ஒவியத்திற்கான உந்துதலை எடுத்துக் கொள்ளும் புரூகேல் எப்படிச் சிலந்தி வலை விரிந்து கொண்டே போனாலும் அதன் மையமாகச் சிலந்தி உள்ளதோ அப்படித் தனது ஒவியத்திற்கும் ஒரு மையமிருக்கிறது, அதைச்சுற்றி நுட்பமான வலை போலக் காட்சிகள் பின்னபடுகின்றன என்பதைத் தனது ஒவியத்தின் வழியே அவர் வெளிப்படுத்திக்காட்டுகிறார்.
ஒவியத்தினுள் புரூகேல் பிரவேசிப்பதும் நாம் ஒவியமாக கண்ட காட்சி அப்படியே திரையில் இயக்கம் பெறுவதும் அபூர்வமான தருணம்
ஏசுநாதர் சிலுவையில் அறையப்படுவதற்காக கல்வாரி மலைக்கு சிலுவை சுமந்து செல்லும் காட்சியை புரூகேல் The Procession to Calvary என்ற ஒவியமாக வரைந்திருக்கிறார், இந்த ஒவியத்தில் இயேசு முதன்மையாக சித்தரிக்கபடவில்லை, மாறாக குழப்பமான சூழலில் அவர் மறைக்கபட்ட உருவமாகவே சித்தரிக்கபடுகிறார், அந்தக்காலத்தைய ஆடை ஆபரணங்கள் வாத்தியங்கள், குதிரைப்படை வீரர்கள், போர்க்கவசங்கள், ஈட்டிமுதலாய ஆயுதங்கள், தீப்பந்தம் ஏந்துவோர், அடிமைகள், குதிரைகளின் நகர்வு தீப்பந்தங்களின் செந்நிறஒளி என பறவைக்கோணம் போல அகன்ற நிலக்காட்சி இந்த ஒவியத்தில் சித்தரிக்கபடுகிறது. புரூகேல் வரைந்த மிகப்பெரிய ஒவியங்களில் இதுவே இரண்டாவது. பாறைகள் விசித்திரமான தோற்றத்தில் காட்சி தருகின்றன. குற்றவாளிகளைச் சிலுவையில் நடைபெறுவது அந்தக் காலத்தில் வழக்கமான ஒன்று என்பது போல இதன் பார்வையாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், இயேசுவோடு சேர்த்து சிலுவையில் அறையப்பட இருந்த இரண்டு திருடர்கள் தங்கள் பாவமன்னிப்பை கேட்கிறார்கள், இருவர் முகமும் ஒன்று போலிருக்கிறது, அண்டக்காக்கை இறந்த உடல் ஒன்றைக் கொத்தித் தின்கிறது, புனித மரியாளும் ஜானும் ஒவியத்தின் மைய நிகழ்வை விட்டு விலகி ஒரமாகத் துக்கத்தில் ஆழ்ந்து போயிருக்கிறார்கள். ஒரு பெரும் துயரநாடகம் ஒன்றின் வேறுவேறு காட்சிகள் போலவே ஒவியம் வரையப்பட்டிருக்கிறது
The Mill எனும் அரவை இயந்திரம் எவ்வாறு காலத்தின் குறியீடு போலாகிறது, அதன் சுழலும் விசிறிகள் எப்படிச் சிலுவையின் மாற்றுவடிவம் போலச் சித்தரிக்கபடுகிறது என்பதும், மில்லர் எனப்படும் இயந்திரத்தை இயக்குபவன் எப்படிக் கடவுளின் பிரதிநிதி போலச் சித்தரிக்கபடுகிறான் எனவும் புரூகேல் கூறுவது அவரது ஒவியத்தைப் புரிந்து கொள்வதற்கான புதிய வெளிச்சத்தைத் தருகிறது
படத்தின் இயக்குனரான Lech Majewski ஒரு ஒவியர் என்பதால் புரூகேலை சிறப்பாக உள்வாங்கிக் கொண்டு இயக்கியிருக்கிறார், கலைவிமர்சகரான Gibson புரூகேல் பற்றி எழுதிய The Mill and the Cross கட்டுரையை அடிப்படையாகக் கொண்டே இப்படம் உருவாக்கபட்டிருக்கிறது
புரூகேல் காலத்தில் புகழ்பெற்ற ஒவியர் போஷ் (Bosch). அவரது ஒவியங்களை நகலெடுப்பதைப் புரூகேல் சிலகாலம் செய்திருக்கிறார், ஆகவே அந்தப் பாதிப்பினை புரூகேலிடம் காணமுடியும். அடர்வண்ணங்களைப் பயன்படுத்துகிற விதத்திலும், உருவங்களைச் சித்தரிப்பதிலும், ஒவியத்தினை விசித்திரமான பாணியில் உருவாக்குவதிலும் புரூகேல் தனியான பாணி கொண்டவராக விளங்கினார். இவரது ஒவியங்களை figurative anthologies என அழைக்கிறார்கள்
பெரும்பான்மையான இவரது ஒவியங்கள் பிரௌன், கிரே , அல்லது அடர் மஞ்சள் நிறத்தில் தீட்டப்பட்டுள்ளன. அவற்றின் ஊடாக அடர்சிவப்பு, நீலம் பச்சை போன்ற வண்ணங்களைத் திறமையாக அவர் கைக்கொண்டிருப்பதையும் காணமுடிகிறது
புரூகேல் 44 வயதில் இறந்துபோனார். அதைத் தொடர்ந்து அவரது மகன்கள் பீட்டர் மற்றும் ஜேன் அவரைப் போலவே ஒவியர்களாக உருவானார்கள்.
புரூகேலின் ஒவியம் எப்படி உருவாகிறது என்பதை மட்டுமின்றி ஒவியங்களின் நுட்பத்தைப் புரிந்து கொள்ள ஒரு பார்வையாளன் எந்த அளவு தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் The Mill and the Cross வெளிப்படுத்துகிறது
Grand Prix உள்ளிட்ட பல முக்கியப் பரிசுகளைப் பெற்றுள்ள இத்திரைப்படம். ஒவியம் குறித்த ஆர்வம் கொண்டவர்கள் அவசியம் காண வேண்டிய ஒன்று.