ஜோகிந்தர் பால் – உருதுக்கதை
என் நாவலில் வரும் கதாநாயகனும் கதாநாயகியும் என்மீது அதிருப்தி கொண்டிருந்தார்கள்
நாவலின் கடைசியில் தான் அவர்கள் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என நான் செய்திருந்த முடிவு அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
அவர்கள் சரியான சந்தர்ப்பம் வருவதாகக் காத்திருந்தார்கள். முடிவில் ஒருநாள் நாவலில் இருந்து வெளியேறி மறைந்து போய்விட்டார்கள். நாவலின் பிரதி முழுவதும் தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவேயில்லை
எப்படிக் கண்டுபிடிப்பது, எங்கே போயிருப்பார்கள், எனக்குக் கவலை உண்டானது
அவர்களைக் கண்டுபிடிக்கமுடிந்தால் உடனடியாகத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன், ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்கமுடியவில்லை, வேறு வழியின்றி அவர்களைத் தேடுவதைக் கைவிட்டேன்
ஆச்சரியம், பல வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் நகரவீதியில் இருவரையும் சந்தித்தேன்,
அவர்கள் எனக்கு வணக்கம் தெரிவித்து என்னை அவர்களின் வீட்டிற்கு அழைத்துப் போனார்கள்
நாவலிலிருந்து வெளியேறி போன மறுநிமிஷமே அவர்கள் திருமணம் செய்து கொண்டுவிட்டார்கள், மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகச் சொன்னார்கள்
தாங்களாக அமைத்துக் கொண்ட மகிழ்ச்சியான வாழ்க்கையில் வாழ்ந்து வரும் அவர்களிடம் என் நாவலுக்குள் திரும்ப வருவீர்களா எனக் கேட்க மனம் வரவில்லை
**